எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர்

அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு  மிக முக்கியக்காரணம்.

12 வயதில் இருந்தே எழுதத் தொடங்கியதால், என்  21 வயதுக்குள் கல்லூரி மேற்படிப்பு முடிப்பதற்குள்ளேயே கோகுலம், சாவி, கல்கி, மங்கையர்மலர், ராஜம், சுமங்கலி, விஜயபாரதம், கலைமகள், அமுதசுரபி என முன்னணி பத்திரிகைகளில் நான் எழுதிய 100-க்கும் மேற்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளிவந்து பத்திரிகை உலகம்   என்னை  எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தி இருந்தது. எதையும் எழுத்தில் திறம்படச் சொல்லும் திறனும் எனக்குள் வளர்ந்திருந்தது.

காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு தொழில்நுட்பம் சார்ந்தும், மனித வாழ்வியல் குறித்தும் எழுத ஆரம்பித்தேன். தொழில்நுட்பக் கட்டுரைகள், தொடர்கள் என மீண்டும் பத்திரிகை உலகம் என் திறமைக்கு களம் ஏற்படுத்திக்கொடுத்தது.

2000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொடர்கள், 100-க்கும் மேற்பட்ட புத்தகங்கள், நூற்றுக்கணக்கில் மேடைபேச்சுகள் என என் தொழில்நுட்ப  அறிவையும், வாழ்வியல் கருத்துக்களையும்  பல்வேறு தளங்களில் பரப்பி வருகிறேன்.

எங்கள் காம்கேர் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு, அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்கள் வடிவமைத்தல், ஆவணப் படங்கள் வெளியிடுதல், புத்தக வடிவமைப்பு என நான்கு துறைகள் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு துறை மூலமும் நான் பெறுகின்ற தொழில்நுட்ப அனுபவங்களை, புத்தகமாக எழுதி வெளியிட்டு வருகிறேன்.

எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கு நாங்கள் பயன்படுத்தும்  சாஃப்ட்வேர்கள் குறித்து  பத்திரிகைகளில் எழுதி வருகிறேன்.  இதன் மூலம் தொழில்நுட்பம் மிக எளிதாக சாமானியர்களையும் சென்றடைகிறது.

‘இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி  ஓர் அறிமுகம்’ – இது தமிழில் வெளியான என் முதல் தொழில்நுட்பப் புத்தகம். ‘An Easy Way to Learn C Language’ – என் முதல் ஆங்கிலத் தொழில்நுட்பப் புத்தகம். அப்போது என் வயது 25.

உங்கள் முன் உள்ள ஒரு கம்ப்யூட்டருடன், நான் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டு,  நான் வழிகாட்டிய  படங்களுடன்  கம்ப்யூட்டரில் செய்துபார்த்துக்கொண்டே வரலாம். ஆசிரியர் இல்லாமலேயே எந்த ஒரு சப்ஜெக்ட்டிலும் மாஸ்ட்டராகிவிடலாம்.

ஏராளமான விளக்கப்படங்களுடன், செயல்முறை வழிகாட்டுதல்களோடு மல்டிமீடியா புத்தகம் போல எழுதுவதே என் எழுத்தின் அடையாளம்.

தற்போது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறேன். சூரியன் பதிப்பகம் வாயிலாக நான் எழுதியுள்ள கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் தமிழில் கலக்கலாம், ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம் போன்றவை தமிழ் பதிப்பக உலகில் முதன் முதலில் தமிழில் வெளியான  மொபைலுக்கான புத்தகங்கள்.

மனதை Format செய்யுங்கள், குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட், திறமையை பட்டைத் தீட்டுங்கள், இப்படிக்கு அன்புடன் மனசு, படித்த வேலையா பிடித்த வேலையா,  என மனித மனங்களை ஆராய்ந்து வாழ்வியல் குறித்து பல்வேறு நூல்களை எழுதி உள்ளேன்.

இப்படியாக  தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியலுக்காக  நான் எழுதிய பல புத்தகங்கள்  பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாகவும்,  தமிழகமெங்கும் உள்ள அனைத்து நூலகங்களிலும் உள்ளன.

இபுக்ஸ்களை எங்கள் காம்கேர் வெளியீடாக வெளியிட்டு வருகிறோம். அவை அமேசான் கிண்டிலில் கிடைக்கும்.

இடையில் 2003-ம் ஆண்டில் இருந்து சில வருடங்கள் ‘டிஜிட்டல் ஹைவே’ என்ற  கம்ப்யூட்டர் மாத இதழுக்கு ஆசிரியராக  இருந்து, அந்தந்த இதழுக்குப் பொருத்தமான  ‘மல்டிமீடியா சிடி’ வடிவமைத்துத் தரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன்.  அந்த பத்திரிகையின் அச்சு பிரதி மற்றும் டிஜிட்டல் பிரதி தயாரிப்புகள் இரண்டுமே காம்கேரின் பணிகளுள் ஒன்றாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டில் இருந்து தேசிய சிந்தனைக் கழகம் வாயிலாக வெளிவரும் காண்டீபம் என்ற காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் பொறுப்பில் இருக்கிறேன்.

 

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாக இருந்து வருகிறேன். வருடந்தோறும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமான தொழில்நுட்ப கருத்தரங்குகளையும்,  குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு  ஒர்க்‌ஷாப்புகளையும் நடத்தி  வருகிறேன்.

 

 

(Visited 94 times, 1 visits today)