திறமைக்கு அங்கீகாரம்

கூகுள் நிறுவனத்தின் Adsense, Adword போன்ற வசதிகள் மூலம், இன்டர்நெட்டில் வருமானம் பெற முடியும். அண்மையில் கூகுள் ஆட்சென்ஸ் சேவையில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு உள்ளது. அதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் சார்பில் ‘Google தமிழ்’ என்ற நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் மார்ச் 13, 2018-ல் நடைபெற்றது.

2003 ஆம் ஆண்டு கூகுள் ஆட்சென்ஸை அறிமுகப்படுத்திய காலத்திலேயே, அதைப் பயன்படுத்திப் பார்த்து, அதுகுறித்த விரிவான ஆய்வுக் கட்டுரையை எழுதினேன். அதைத் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அனைத்து மீடியாக்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி இருந்தேன். 2015 ஆம் ஆண்டு ‘தி இந்துவில்’ தொடர்ச்சியாக ஒருவருட காலம் நான் எழுதி வந்த ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற கட்டுரைத் தொடரிலும் பதிவு செய்தேன்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் தன்னை அப்டேட் செய்துவருபவரும், காம்கேரின் மீடியா துறை டைரக்டராக பொறுப்பில் இருப்பவருமான என் அப்பாவுடன் (திரு. கிருஷ்ணமூர்த்தி) அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.

நேற்றைய நிகழ்ச்சியில் பத்து வருடங்களுக்குப் பிறகு நான் நேரில் சந்தித்த ஒரு திறமைசாலி திரு. செங்கோட்டை ஸ்ரீராம். ஆன்மிகம், தொழில்நுட்பம் என இரண்டிலும் தன் முழு திறமையையும் கொட்டி அதையே தன் புரொஃபஷனாக எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் தன் குறிக்கோள்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல்  எல்லாவிதத்திலும் இன்றைய இளைஞர்களுக்கு ரோல்மாடலாக வாழ்ந்துவரும் இவர் கலைமகள், மஞ்சரி, தினமணி, விகடன் என  ஒரு ரவுண்டு வந்தவர். இப்போது http://dhinasari.com/ என்ற ஆன்லைன் பத்திரிகையையும், http://deivatamil.com/ என்ற ஆன்மிக இணையதளத்தையும் நிர்வகித்து வருகிறார். இவரும் கூகுள் ஆட்சென்ஸை பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்.

அடுத்து தமிழ் கற்றுக்கொடுப்பதற்காகவே தமிழ் மொழிக் கூடம் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் திரு. சீனிவாசஸ் பார்த்தசாரதி மற்றும் விகடகவி  App Magzine -ன் நிர்வாகத் தலைமை வகிக்கும்  மேப்ஸ் (திரு. எம்.ஏ. பார்த்தசாரதி) அவர்களையும் சந்தித்தேன்.

இடைவேளையில் அப்பா என்னை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ‘இன்னும் கொஞ்சம் நகர்ந்து நில்லுங்கள்… புகைப்படம் நன்றாக வரும்’ என்ற குரல் கேட்க நாங்கள் திரும்பிப் பார்த்தோம்.

முகம் முழுவதும் மலர்ச்சியுடன் ஒரு சிறிய கேள்விக்குறியோடு ‘நீங்க… காம்கேர் விஜயலஷ்மி மேடம் தானே…’ என்று கேட்டார் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர்.

நான் உற்சாகமாகி, ‘காம்கேர்’ சரி, விஜயலஷ்மி அல்ல… புவனேஸ்வரி. காம்கேர் புவனேஸ்வரி’ என்றேன்.

‘ஓ. சாரி… என் பெயர் சிவபெருமாள்… 10 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் தயாரித்திருந்த அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்ற ஆவணப்படத்தை படத்தை யு-டியூபில் பார்த்தேன். 2007-ம் ஆண்டு என நினைவு… அந்த நேரத்தில் நான் ஆவணப்படங்கள் எடுக்கும் முயற்சியில் இருந்தேன். ஆவணப்படங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து உங்கள் அனுபவங்களை தெரிந்துகொள்ள உங்களை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்க போன் செய்தேன். தொடர்புகொள்ள முடியவில்லை… யு.எஸ். சென்றிருந்தீர்கள்… இப்போது பரம்பரா என்ற நிறுவனத்தை தொடங்கி ஆவணப்படங்கள் எடுத்து வருகிறேன்…’

நான் மேலும் உற்சாகமாகி, ‘என் பெயர் மறந்து போனாலும் என் நிறுவனத்தின் பெயரை நினைவு வைத்துள்ளாரே என்ற நெகிழ்ச்சியில் அப்படியா…’ என்று நெகிழ்ந்த வேளையில் மேலும் மகிழ்ச்சியில் என்னை திக்குமுக்காட வைத்தார்.

‘நான் விகடனில் போட்டோஜர்னலிஸ்டாக பணி புரிந்தேன். பிறகு அவுட்லுக்கில் பணிபுரிந்த காலகட்டத்தில் இன்ட்ர்நெட் பழகியதே உங்கள் புத்தகத்தை படித்துத்தான்… அது இருக்கும் 15 வருடங்களுக்கு மேல்…’ என்று சொன்னதோடு காம்கேர் வாயிலாக நாங்கள் வெளியிட்ட இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – இன்டர்நெட் எல்லோருக்கும் என்ற புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டார்.

இதைவிட வேறென்ன வேண்டும் இன்றைய தினத்தை மகிழ்விக்க?

எத்தனை வருடங்கள் கடந்தால் என்ன? என் எழுத்தும், கிரியேடிவிடியும், திறமையும் எனக்கு அடையாளமாக இருக்கிறதே…

இறையருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதால் இறைவனுக்கு நன்றி சொல்லி, திரு. சிவபெருமாள் அவர்களின் ஆவணப்படங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற மனதார வாழ்த்தி விடைபெற்றேன்.

இன்று என் திறமைக்கு மகுடம் சூட்டப்பட்ட மற்றொரு நாள்….

அன்புடன்

காம்கேர் கே.புவனேஸ்வரி

மார்ச் 13, 2018

(Visited 125 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon