அனிமேஷன் கருத்தரங்கு (2001)

சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக் கொண்டிருந்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் 2000-ம் வருடம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த நேரம். எங்கள் முதல் கார்ட்டூன் அனிமேஷன் படைப்பு ‘தாத்தா பாட்டி கதைகள்’.

இரண்டு குழந்தைகள் நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அந்த தாத்தா பாட்டி தங்கள் பேரன் பேத்திகளை ஒவ்வொரு இடத்துக்கு அழைத்துச் சென்று கதைகள் சொல்வதைப்போல அமைத்திருந்தோம்.

சிடிக்கள் குறைந்தபட்சம் 300 ரூபாய் விற்றுக்கொண்டிருந்த அந்த காலத்தில் நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தியதாலும் நம் நாட்டு கலாச்சாரப் பண்பாட்டை வலியுறுத்தும் நல்ல தரமான தயாரிப்பாக இருந்ததாலும் அந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் எங்கள் சிடி, விற்பனையில் சாதனை படைத்தது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் எங்கள் அனிமேஷன் படைப்புகளை வைத்து ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பார்வையாளர்கள் அனைவரும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள். அதில் பெரும்பாலானோர் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் பெருமிதத்தோடு தாத்தா பாட்டி கதைகள் சிடியை காட்சிப்படுத்தினேன். அது குறித்த என் அனுபவங்களையும் பேசினேன்.

அதுவரை அமைதியாக இருந்த பேராசிரியர்கள் என்னை உலுக்கி எடுக்காத குறைதான். கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள்.

‘அது எப்படி நீங்கள் தாத்தா பாட்டியை கிராமத்தில் வசிப்பதாகவும், பெற்ற பிள்ளைகள் நகரத்தில் வசிப்பதாகவும் காட்டி இருக்கிறீர்கள்… அப்போ தனிக்குடித்தனம்தான் சிறந்தது என்பதை இப்படி நாசூக்காகச் சொல்கிறீர்களா?’

‘பிள்ளைகளோடுதானே அப்பா அம்மா இருக்க வேண்டும். நீங்கள் அப்பா அம்மாவை கிராமத்தில் அனாதையாய் விட்டுவிட்டு பிள்ளைகள் நகரத்தில் வசிப்பதுபோலவும், பேரன் பேத்திகள் விடுமுறைக்கு வருவதுபோலவும் அமைத்திருக்கிறீர்களே?’

‘தனிக்குடித்தனத்தை வலியுறுத்தி கூட்டுக் குடித்தனத்தை எதிர்க்கும்விதமாக இருப்பது வருந்தத்தக்கது… கொஞ்சமாவது சமுதாய நல்லெண்ண நோக்கில் செயல்படுங்கள்…’

இப்படி நான் ஏதோ சொல்லக் கூடாத விஷயத்தை சொல்லி இருப்பதைப்போலவும், தவறான விஷயத்தை கான்செப்ட்டாக எடுத்துக்கொண்டதைப் போலவும் அவர்கள் விவாதித்தபோது முதலில் கொஞ்சம் பயந்துதான் போனேன். ஆனால்… சில நிமிடங்களில் சுதாகரித்துக்கொண்டேன்.

ஒரு பேராசிரியரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

‘சார்… உங்களோடு பிறந்தவர்கள் எத்தனை பேர்…’

‘3 பேர்…’

‘அதில் நீங்கள் சென்னையில் பணி புரிகிறீர்கள்… மற்ற இருவரும் எங்கிருக்கிறார்கள்?’

‘ஒரு தம்பி பட்டுக்கோட்டையில் கடை வைத்திருக்கிறார்… அண்ணா கிராமத்தில் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கிறார்…’

‘அப்பா அம்மா எங்கிருக்கிறார்கள்’

‘என் அண்ணாவுடன் கிராமத்தில்…’

‘அப்போ நீங்களும், உங்கள் தம்பியும் விடுமுறைக்கு உங்கள் பிள்ளைகளோடு கிராமத்துக்குச் செல்வீர்கள்தானே. ஒரு வீட்டில் 3 பேர் இருந்தால் மூன்று பேருடனும் அந்த அப்பா அம்மா இருக்க முடியாதல்லவா? அதே கான்செப்ட்டில்தான் நான் அந்தக் கதையை அமைத்திருக்கிறேன்…’ என்று சொன்னபோது சபை அமைதியானது.

இந்த கருத்தரங்குதான் பின்னாளில் எங்கள் பத்மகிருஷ் அறக்கட்டளை மூலம் நாங்கள் நடத்துகின்ற அனைத்து ஒர்க்‌ஷாப்புகளுக்கும் அடிகோளியது.

இந்த கருத்தரங்கில் அறிமுகமான  பேராசிரியர் டாக்டர். ஆர். ஜெயசந்திரன் (இரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி) அவர்களின்  தொடர்பு,  ஸ்ரீபத்மகிருஷ் அமைப்பின் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கும் அடித்தளமானது.

(Visited 40 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari