பெண்கள் தினவிழா (2013)

சென்னையில் DB SCHENKER என்ற MNC நிறுவனமொன்றில் 08-03-2013, வெள்ளி அன்று பெண்கள் தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1/2 மணிநேரம் நான் பேசிய உரையின் சாராம்சம்…

அன்பு, அறிவு, ஆற்றல் இவையனைத்தையும் ஒருங்கிணைத்து தன்னுள் அடக்கி இந்த அகிலத்தையே ஆட்டிப் படைக்கின்ற மாபெரும் சக்தியே பெண்கள். ஆனால் அந்த பேருண்மை அவளுக்கு தெரிகிறதா என்று யோசித்துக்  கொண்டிருந்த போது என் கண்களில் ஒரு கதை தென்பட்டது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு மாதபத்திரிகை ஒன்றில் வெளிவந்த ஒரு கதை.

கடவுள் பெண்ணைப் படைத்துக் கொண்டிருந்தார். ஒரு வார காலம் ஆகியும் படைத்து முடிக்கவில்லை. வானத்தில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தேவதை கடவுளிடம் கேட்டது. ‘ஒரு பெண்ணைப் படைக்க நீங்கள் ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்?’. அதற்கு கடவுள்  பதில் சொன்னார்:

‘நீ என்ன இவளை சாமான்யப் படைப்பு என்று கருதி விட்டாயா? இவள் உடம்பில் நான் முன்னூருக்கும் மாறுபட்ட பாகங்களைப் பொருத்த வேண்டும்…

வெறும் தண்ணீரைக் குடித்துக் கொண்டும், வீட்டில் எல்லோரும் சாப்பிட்ட பின் மிச்சம் மீதியை சாப்பிட்டுக் கொண்டும் உயிர் வாழ்பவளாக இருக்க வேண்டும்…

ஒரே சமயத்தில் மூன்று நான்கு குழந்தைகளை மடியில் தவழ விட்டுக் கொள்பவளாக இருக்க வேண்டும்…

அவளின் ஒரே ஒரு பாச முத்தத்தினால் குழந்தைகளின் அழுகை, ஆத்திரம், ஆங்காரம், கோபம், பிடிவாதம் போன்று எல்லா விதமான உணர்வுகளுக்கும் வடிகாலாக இருக்க வேண்டும்…

ஆனால் இதை அத்தனையையும் செய்வதற்கு அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்க வேண்டும்….

கடவுள் சொல்லிக் கொண்டே போக தேவதை ஆச்சர்யத்தினால் விழியை விரித்துப் பார்த்தது. உடனே கடவுள் சொன்னார், ‘என்ன இதற்கே மலைத்து விட்டாயா…இன்னும் கேள் இவளைப் பற்றி…’ என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார்.

‘அவள் தனக்கு உடம்புக்கு வந்து விட்டது என்று சொல்லி படுக்கவே மாட்டாள். தனக்குத் தானே குணப்படுத்திக் கொள்வாள்…’

‘ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட தொடர்ந்து உழைப்பாள்…’

‘இவள் பார்வைக்கு மிருதுவானவள்…ஆனால் மனதளவில் வலிமையானவள்…இவளது எதையும் தாங்கும் சக்தியை உன்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது…’

‘சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும் தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும் கொண்டவள்…’

இதற்குள் தேவதை கடவுள் படைத்துக் கொண்டிருந்த பெண் உருவத்தின் கன்னத்தில் வழிந்த ஈரத்தை கவனித்தது. தொட்டுப் பார்த்து விட்டு பதறியது. ‘கடவுளே…இங்கு பாருங்கள் ஈரக் கசிவு… மெதுவாக படையுங்கள்…’.  கடவுள் சிரித்துக் கொண்டே தொடர்ந்தார்.

‘அது ஈரக் கசிவு இல்லை தேவதையே…அது தான் பெண்ணின் கண்ணீர் துளி…அந்தக் கண்ணீர் துளி தான் அவளது ஒட்டு மொத்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு…அவளது சுகம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம், தனிமை, துயரம், அன்பு, பெருமை அத்தனையையும் அந்த கண்ணீர்த் துளிதான் வெளிப்படுத்துகிறது…’

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவதைக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம். கடவுள் மேலும் தொடர்ந்தார்.

‘பெண்ணால் மட்டும் தான் அழ வேண்டிய நேரத்தில் கூட அழகாய் சிரிக்கவும், பாடவும் முடியும்.’

‘அவளால் மட்டுமே நெருக்கடியான பரபரப்பான சூழ்நிலையிலும் சிரிக்க முடியும்.’

‘அவளால் மட்டுமே சந்தோஷம் பொங்கும் வேளையில் கண்ணீர் சிந்த முடியும்.’

‘அவளால் மட்டுமே மற்றவர்கள் சாப்பிடுவதற்காக தான் பட்டினி கிடக்க முடியும்.’

‘அவளால் மட்டுமே ஒரு சின்ன அணைப்பு, ஒரு குட்டி முத்தம் கொடுத்து ரணமாகிய உள்ளங்களுக்கு மருந்திட முடியும்.’

‘அவளால் மட்டுமே உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரது சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி, துயரங்களை பாதியாக்க முடியும்.’

‘தன் குழந்தைகளின் சாதனைக்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வடித்து மேலும் ஊக்கப்படுத்த முடியும்.’

‘ஐயோ…என்னால் இந்த இழப்பைத் தாங்க முடியவில்லையே என்று உடைந்து கொண்டிருக்கும் போதே, தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளால் வாழ்க்கையை எதிர் நோக்க முடியும்.’

கடவுள் பெண்ணின் பெருமையை இப்படி அடுக்கிக் கொண்டே போக, தேவதை கேட்டது.  ‘அப்படியானால் நீங்கள் படைக்கின்ற பெண்ணிடம் குறை ஏதும் இல்லையா?’.

இதற்கு கடவுள் சொன்னார்.

‘இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்த வாழ்க்கையின் ஆதார சுருதியாக விளங்கும் இப்பெண்ணிடத்திலும் ஒரு குறையுண்டு. அது என்னவென்றால்…தன்னிடம் இருக்கின்ற அற்புத ஆற்றலை அவள் அடிக்கடி மறந்து விடுகிறாள்…’

தேவதைக்கு புல்லரித்தது. ஆச்சர்யத்தில் வாயடைத்து நின்றது. தேவதைக்கு மட்டுமல்ல படித்துக் கொண்டிருக்கும் நமக்கும் புல்லரிக்கிறது தானே. இக்கதையில் சொல்லியிருக்கின்றபடி, பெண்ணைப் பற்றிய உண்மையை நம்மில் யாராலாவது மறுக்க முடியுமா? முடியாதல்லவா?

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண்…

பொதுவாகவே நம் நாட்டில் பெண்களை பூமிக்கும், காற்றுக்கும், ஆற்றுக்கும், கடலுக்கும், புயலுக்கும், நெருப்புக்கும் ஒப்பிட்டு அவர்களை தெய்வீகத் தன்மை வாய்ந்தவர்களாகவே உருவகப்படுத்தி வருகின்றனர். நம் நாட்டில் பெண்களுக்கு என்றுமே மிக உயரிய இடம் தான்.

ஆனாலும், பெண்ணைத் தெய்வமாகக் கருதி பாரத மாதா, பூமித் தாய்  என்றெல்லாம் புகழ்ந்து பாடும் நம் இந்தியத் திருநாட்டில் தான், அதே பெண்களுக்கு எதிராகக் காலம்காலமாக பல்வேறு கொடுமைகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக சதி, பால்ய விவாகம், தேவதாசி முறை போன்றவற்றில் தொடங்கி, கருவிலிருக்கின்ற குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதை அழிக்கின்ற ஈவு இரக்கமற்ற செயல்கள், பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து விடுகின்ற கொடூர செயல்கள், வரதட்சணைக் கொடுமையினால் இளம் பெண்களை உயிரோடு தீயிட்டுக் கொலை செய்கின்ற கொடும்பாவச் செயல்கள் வரை நம் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. இன்றும் பல இடங்களில் இத்தகைய கொடூரச் செயல்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மண்ணெண்ணெய் விட்டு கொளுத்திய நாட்கள், ஸ்டவ் வெடித்து இறப்பாக மாறி, கேஸ் லீக்காகி கருகியதாய் உயர்ந்து, இன்று ஆசிட் வீச்சில் வந்து முடிந்திருக்கிறது பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள்.

மங்கையராய் பிறப்பதற்கு  மாதவம் செய்திட வேண்டுமம்மா! – என்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள்.  இப்படி உயர்த்திப் போற்றிப் பாடப்பட்ட நம் நாட்டுப் பெண்களின் நிலையை இதிகாச புராண காலத்தில் இருந்து ஆழ்ந்து நோக்கினால் ஒரு பேருண்மை புரியும். எல்லா காலகட்டங்களிலேயும் பெண்கள் வீரத்திலும், கல்வியிலும், அறிவிலும், கலைகளிலும் ஆண்களுக்கு இணையாகவே இருந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களின் சக்திகள் அனைத்தையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிய ஆண் வர்க்கம், அவர்களை பின்வைத்து தாங்கள் முன்னேறியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்று பொதுவாக சொல்வார்கள். குழந்தைகளுக்கு கசக்கும் மாத்திரைக்கு சர்க்கரையைத் தடவிக் கொடுத்து விழுங்கச் சொல்லும் ஏமாற்று வித்தைப் போல, இதையே சொல்லி பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து வெளிச்சம் போட்டுக் காட்டாமல், தாங்கள் மட்டுமே  எல்லா துறைகளிலும் முக்கியத்துவம் பெற்றவர்களாய் விளங்க ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் ஆண்கள்.

எங்கே இவர்களை வெளியில் விட்டால் நமக்கு அடங்கி நடக்க மாட்டார்களோ, நம்மை எதிர்த்துப் பேசுவார்களோ, நம்மை மீறி சென்று விடுவார்களோ என்றெல்லாம் பயந்த ஆண்கள், பெண்களைப் புகழ்வது போல வஞ்சப் புகழ்ச்சியாக புகழ்ந்து, அவர்களை வீட்டிற்குள் அடங்கிக் கிடக்குமாறு செய்தார்கள். ஆனாலும், இந்த ஆதிக்கத்தையும் மீறி போராடி எத்தனையோ பெண்கள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதற்கு ஆதாரப் பூர்வமான தக்கச் சான்றுகள் உள்ளன.

இன்றைய பெண்கள் ‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்’ என்ற நிலையையும் மீறி தன்னையும் வெற்றிபெறச் செய்து கொண்டு, தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் வெற்றியடையச் செய்கிறாள் என்பது தான் உண்மை.

பெண் புத்தியே ’பெரும்’ புத்தி! – ஆய்வு முடிவு!

‘பெண் புத்தி பின் புத்தி’ என்று நம்மூரில் சொல்வார்கள்… அதற்கு அர்த்தம், பின்னாளில் வரக் கூடியதையும் சிறப்பாக கணிக்கக் கூடியவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். ஆம். ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை சிறிதாக இருந்தாலும், அதற்கு திறன் அதிகமாக உள்ளது என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஸ்பெயினின் மேட்ரிட் பல்கலைக்கழகங்களை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு புலனறியும் தேர்வுகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் 18 முதல் 27 வயது கொண்ட 59 பெண்கள் மற்றும் 45 ஆண்கள் பங்கேற்றனர்.

ஆய்வு முடிவு விவரம் இதுதான்: ஆண்களின் மூளையை விட பெண்களின் மூளை 8 சதவீதம் சிறியதாக உள்ளது. ஆனால், ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளைக்கு திறன் அதிகமாக உள்ளது. இதனால்தான் ஆண்களை விட பெண்கள் திறமையானவர்களாக விளங்குகின்றனர்.

அழகு Vs அறிவு

பெண்களின் மீதான வன்முறை என்ற சொல் நம் காதில் விழுந்தவுடன், குடிகாரக்கணவன் மனைவியை அடித்து துன்புறுத்துவதும், ஈவ் டீசிங் செய்வதும், பலாத்காரம் செய்வதும் தான் நம் கண்களில் தோன்றுகிறது. மாறாக, ஏழே நாள்களில் சிகப்பழகு என்று பெண்களுக்கான முகத்தில் பூசும் கிரீம்களின் விளம்பரம் நம் கண்களில் தோன்றுவதில்லை. உண்மையில் முதலாவதைக் காட்டிலும் இரண்டாவதிலே தான் அதீத வன்முறையும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகம்.

சிகப்புத்தான் அழகு என்பதும், அழகுதான் பெண்களுக்கான தேவை என்பதைக் காட்டிலுமான வன்மம் வேறென்னவாக இருக்க முடியும்? அழகுதான் பெண்களின் அடிப்படைத்தேவை என்றானால், அறிவும் அன்பும் மட்டுமே நிரம்பிய பெண்களுக்கு பொது வெளியில் இடம் கிடையாதா? என்கிற கேள்வி எழுகிறது.

‘ஆணை அவனது பலம் மற்றும் திறமையாலும், பெண்ணை அவளது அழகு மற்றும் கவர்ச்சியாலும்  எடைபோடுவது தான் காலங்காலமாக நடந்து வருகிறது. அந்த மனோபாவம் மாற வேண்டும்.

பெண்களும் அவர்கள் திறமைகளால் மட்டுமே அடையாளம் காணப்பெற வேண்டும். உடலின் எடை, உயரம், நிறம் மற்றும் இன்ன பிற கவர்ச்சிகளினாலோ, வெளிப்புற அலங்காரங்களினாலோ அடையாளம் கண்டுகொள்ளப்படக் கூடாது.

எந்த ஒரு பெண் இந்த மனநிலையை அடைந்து மனதளவில் முதிர்ச்சி அடைகிறாளோ அவளே உண்மையில் மிகவும் சுதந்திரமான பெண் ஆவாள். ஒவ்வொரு பெண்ணும் இந்த மனநிலையை அடையும் போது ஒட்டு மொத்த பெண்ணினமும் சுதந்திரம் அடைந்து விட்டதாகக் கருதலாம்’.

ஒருவிதத்தில், பெண்ணின் உலகை மிகக் குறுகியதாக்கியவள் பெண்ணே ஆவாள். உடல் அலங்காரத்திற்கும், புற அழகிற்கும் அளவற்ற முக்கியத்துவம் அளிக்கும் போது, ஆண் உருவாக்கிய கூட்டிற்குள் அவள் தானே சிக்கிக் கொள்கிறாள். சமூகத்திலிருந்து எதைப் பெறலாம் என்று சிந்திக்காமல், சமூகத்திற்கு எதைக் கொடுக்க முடியும் என்று பெண் சிந்திக்க வேண்டும். இந்த மனோபாவம் ஏற்பட்டால் அவளால் நிச்சயமாக முன்னேற முடியும்.

தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, மம்தா பேனர்ஜி, சுஷ்மா சுவராஜ், ஷீலா தீக்ஷித், மீரா குமார் போன்ற பலர் இன்றைய அரசியல் வாழ்வில் போராடி ஜெயித்துக் கொண்டிருக்கிரார்கள்.

இவர்களை போன்று இன்று எத்தனையோ பெண்கள் தங்கள் கல்வியினால் கிடைத்த பேரறிவினால் வேலை, தொழில், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என  பல்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இலட்சியப் பெண்கள்

இலட்சியம் என்றால் என்ன? தங்களுக்கென்று ஒரு கொள்கை, தங்களுக்கென்று ஒரு நேர்மையான பாதை, தங்களுக்கென்று ஒரு நேர்வழி. இவைகளை அனைத்தையும் ஒருங்கே பெற்ற பெண்களை இலட்சியப் பெண்கள் என்று சொல்லலாம்.

கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இறுதி வரை அவனைத் திருத்த போராடியப் இலட்சியப் பெண்களின் உண்மைக் கதைகள் ஏராளமாக உள்ளன.

கைக் குழந்தையோடு, கைவிட்டுச் சென்ற அல்லது இறந்து விட்ட  கணவனாக இருந்தாலும், மறுமணம் செய்து கொள்ளாமல், குழந்தைக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்பணித்து விட்டு வாழ்ந்த இலட்சியப் பெண்களின் கண்ணீர் கதைகள் ஆயிரம் உள்ளன.

அ..னா, ஆ..வன்னா பள்ளிப் படிப்புக்கூட வழியில்லாத கிராமப் பெண்கள், தங்கள் கணவனோடு இணைந்து விடியற்காலையிலேயே வயல்வெளிக்குச் சென்று வயல்வெளியில் மழையிலும், வெயிலிலும் நாள் முழுவதும் வேலை செய்து குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து வந்த இலட்சியப் பெண்களின் நிஜக்கதைகள் ஆயிரம் ஆயிரம் உள்ளன.

வேலை/தொழில் சார்ந்த சாதனை என்பது பணம் சார்ந்த விஷயம் அல்ல. அது செயல் சார்ந்த விஷயம். தங்கள் கல்வி அறிவினால் பணம் மட்டுமே சம்பாதிக்கின்ற இயந்திரமாகியுள்ள இன்றைய பெண்கள், அன்றைய பெண்கள் தங்கள் வீரம், விவேகம், கல்வி போன்றவற்றால் நாட்டிற்காகப் போராடிய கதைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேலைக்குச் செல்லுதல் அல்லது சொந்தமாக தொழில் செய்தல் என்பது  அலுவலகங்களுக்கு செல்லுதல், பணம் சம்பாதித்தல் என்று மட்டும் பொருளல்ல. சுயமாக தங்கள் காலில் தாங்கள் நிற்கின்ற தைரியத்தையும், எந்தச் சூழலையும் சந்திக்கின்ற மனோபாவத்தையும், எந்த சூழலிலும் தங்கள் சுயத்தை இழந்து விடாமல் இருக்கின்ற கட்டுப்பாட்டையும் அது  கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும்  தங்கள் மகளை இலட்சிய பெண்ணாக வளர்க்க வேண்டும்.
அறிவியலுக்கு கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்று…
அரசியலுக்கு இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்று…
மனித நேயத்திற்கு அன்னை தெரசா  போன்று…
பலர்  வளர்க்கப்பட  வேண்டும்.உருவாக்கப்பட வேண்டும்…

பெண்களுக்கான சட்ட திட்டங்கள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பெண்களுக்கு ஆதரவாக எத்தனையோ சட்ட திட்டங்கள் வந்திருந்தாலும், வரதட்சணைக் கொடுமை, பால்ய விவாகம்,  பாலியல் வன்முறை, பெண் சிசுக் கொலை போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்பதை ஊடகங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் இருந்து தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிகிறதல்லவா?

என்ன காரணம் என்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நன்கு புரியும். பெண்களுக்குச் சட்டம் மட்டுமே  பாதுகாப்பைக் கொடுத்து விட முடியாது. சட்டத்தின் மூலம் எந்த ஒரு சமூகக் குற்றங்களை ஓரளவுதான் திருத்த முடியும். சமுதாயம் திருந்த வேண்டும். அதற்கு மக்கள் ஒவ்வொருவரும் மனதளவில் மாற வேண்டும்.

கல்வி, வேலை, தொழில் இப்படி எல்லா வித்திலும் சுதந்திரம் பெற்றுள்ள இந்த காலகட்டத்தில் தான் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். வீக்கர் செக்ஸ் என்று பெண்களை முடக்கிப் போட்டக் காலத்தில் இருந்து பலர் போராடி பெற்ற இந்த சுதந்திரக் காற்றை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இன்று கல்வி அறிவு பெருகியுள்ளது. தனி நபர் வருமானமும் அதிகரித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் குறைந்துள்ளது. ஆனால்,  மக்களின் பேராசை,  மனக்கட்டுப்பாடு  இல்லாத சூழல், அந்நிய கலாச்சார மோகத்தினால் நம் பண்பாட்டுச் சீரழிவு, பணம் மட்டுமே பிரதானம் என்கின்ற  மனோநிலை போன்றவை மிக அதிகமாக கண்ணுக்கெட்டா தூரம் வரை பெருகி படர்ந்து மூலை முடுக்கெல்லாம் போய் உட்கார்ந்து விட்டது.  இதன் காரணமாய் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டன என்பதை உறுதியாகச்  சொல்லலாம்.

பெண்களின் உரிமை போராட்டம்

அமெரிக்காவில் மாரதான் ஓட்டப்பந்தயத்தில் 1967-ம் ஆண்டு கேதரின் என்ற ஒரு பெண் கலந்து கொண்ட போது, அதன் ஒருங்கிணைப்பாளர்கள் அவரை பெண் என்பதால் ஓட அனுமதி இல்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, அவரை கீழே தள்ளி விடவும் முயற்சித்தனர். ஆனாலும் அவருடைய சக நண்பர்களின் உதவியுடன் துணிச்சலாக ஓட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. ஆனால்  1974 ஆம் ஆண்டு திரும்பவும் மாரதானில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இது பொருளாதாரத்தில் வளர்ந்த நாடான அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியாகும்.

ஒரு இதிகாச கதை ஒன்று. ஒரு பெண்மணி, பலனை எதிர்பாராது பிறருக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யும் சேவையெனக் கருதி, அதில் மனமகிழ்ச்சி அடைந்து வந்தார். அந்நாட்டின் மதத்தலைவர்கள் அவரை ஒரு அர்ச்சகராக (புரோகிதையாக) நியமித்தார்கள். அந்நாட்டில் ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுவே முதல் முறையாகும். அவரைத் தங்கள் கூட்டத்தில் சேர்த்ததை மற்ற அர்ச்சகர்கள் சிறிதும் விரும்பவில்லை. அதுமட்டுமல்ல. அவர்களுக்கு அளவற்ற கோபமும் வந்தது. ஆனால், பணிவும், நிஷ்டையும், ஆன்மீகிக அறிவும் நிறைந்த அந்தப் பெண் அர்ச்சகர் மிக விரைவில் பிரசித்தி அடைந்தார். எல்லோரும் அவரைப் புகழ ஆரம்பித்தனர்.

இதனால் அர்ச்சகர்களின் பொறாமை ஆதரித்தது. ஒருமுறை, அருகிலிருந்த தீவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ள அர்ச்சககள் அனைவரும் புறப்பட்டனர். வேண்டுமென்றே அவர்கள் பெண் அர்ச்சகரை அழைக்கவில்லை. ஆனால், படகில் ஏறியபோது அந்தப் பெண்மணி படகில் அமர்ந்திருப்பதை அவர்கள் கண்டனர். ”இங்கேயும் இது வந்துவிட்டதா?” என்று அவர்கள் முணுமுணுத்தனர். தீவை அடைவதற்கு இரண்டு மூன்று மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். சுமார் ஒருமணி நேரம் கழிந்தபோது படகு நின்றது. படகின் சொந்தக்காரன் பரிதவிப்புடன், ”நாம் நன்றாக மாட்டிக்கொண்டோம். டீசல் தீர்ந்துவிட்டது. போதுமான அளவு டீசல் எடுத்துவர நான் மறந்து விட்டேன். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வேறு படகு எதுவும் வருவதாகவும் தெரியவில்லை” என்றான். செய்வதறியாமல அனைவரும் திகைத்தனர். அப்போது அந்தப் பெண் அர்ச்சகர் முன்வந்து, ”சகோதரர்களே, கவலை வேண்டாம். நான் சென்று டீசலுடன் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் படகிலிருந்து இறங்கி, கரையை நோக்கி நீரின்மீது நடக்க ஆரம்பித்தார். இந்தக் காட்சியைக் கண்ட அர்ச்சகர்கள் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர். சட்டென சுதாரித்துக்கொண்ட அவர்கள் பரிகாசம் நிறைந்த குரலில், ”பார்த்தீர்களா, அவளுக்கு நீச்சல் கூடத் தெரியவில்லை” என்றனர்.

இதுவே பெரும்பாலான ஆண்களின் மனோபாவம். பெண்ணின் சாதனைகளை அலட்சியமாகக் காண்பதும், அவற்றைக் குறைகூறுவதும் ஆணின் இயல்பாகும். ஆணின் இயல்பு மட்டுமல்ல. பெண்களின் சிந்தனையும் இதுவாகவே உள்ளது.

ஒரு பெண் வெற்றி பெற்றால், மற்றவர்களை விட திறமையாக இருந்தால் ‘ஹாங்…அதுக்கு காரணம் இது தான்..’ என்றெல்லாம் சொல்லி அவளை மட்டப்படுத்துகின்ற குணத்தை பெண்கள் முதலில் தங்களிடம் இருந்து விலக்க வேண்டும். அப்போது தான் ஆண்களிடம் நாம் எதிர்பார்க்க முடியும்.

ஒரு செயலை செய்ய முடியாததிற்கு காரணங்களைச் சொல்வது என்பது, பொறுப்பை தட்டிக் கழிப்பதற்காகவும், இயலாமையை வெளிக்காட்டாமல் இருப்பதற்காகவும் தான். ஆணோ, பெண்ணோ, ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்பாடுபட்டாவது செய்து முடிக்க முடியும். முடிந்தால் முடியாததே கிடையாது.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

(Visited 378 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon