செல்போன் இன்டர்நெட் விழிப்புணர்வு மற்றும் தொழில் ஆலோசனை முகாம் (2013)

அவள் விகடன் நடத்திய செல்நெட் 2013  நிகழ்ச்சியில் ‘மொபைல் போன் இன்டர்நெட் விழிப்புணர்வு மற்றும் தொழில் ஆலோசனை’ முகாம் மார்ச் 16,  2013 -ல் ஜெருசலம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.  அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நான் ஆற்றிய உரையின் சாராம்சம்…

ATM டெபிட் கார்ட் / கிரெடிட் கார்ட்

 1. செக்கியூரிடிகள் இல்லாத ஏ.டி.எம் சென்டர்களுக்கு செல்ல வேண்டாம்.
 2. CCTV காமிரா இல்லாத ஏ.டி.எம் சென்டர்களை தவிர்க்கவும்.
 3. திருடர்கள் Skimmer என்ற கருவியை ஏ.டி.எம் டெபிட் கார்டை பொருத்தும் இடத்தில் நம் கண்களுக்கே தெரியாமல் வைத்திருப்பார்கள். அதில் நம் கார்டை பொருத்தியவுடன் நம் கார்ட் எண் உட்பட எல்லா தகவல்களும் அந்த கருவியில் பதிவாகிவிடும். உதாரணத்துக்கு ஒரு நாளைக்கு 500 வாடிக்கையாளர்கள் அந்த ஏ.டி.எம் சென்டருக்கு வருகை தந்தால், அத்தனை வாடிக்கையாளர்களது டெபிட் கார்ட் தகவல்களும் அவர்கள் ஸ்கிம்மர் கருவிக்குள் பதிவாகி விடும். ஒரே நாளில் அவர்கள் திருடர்கள் விடுவார்கள். எனவே, டெபிட் கார்டை ஏ.டி.எம் இயந்திரத்தில் சொருகும் முன் ஏதேனும் வித்தியாசமாக தென்படுகிறதா என்று கவனிக்கவும்.
 4. ஏ.டி.எம் இயந்திரத்தில் எண்களை அழுத்தும் பொது கைகளால் மறைத்துக் கொண்டு அழுத்தவும். ஏனெனில் திருடர்கள் தங்கள் காமிராக்களை அந்த அறையில் எங்காவது பொருத்தி நம் டெபிட் கார்டின் பின் எண்ணை படம் பிடித்து விடுவார்கள்.
 5. ஏ.டி.எம் இயந்திரத்தில் டெபிட் கார்டு மாட்டிக் கொண்டு விட்டால், உடனடியாக கான்சல் பட்டனை தொடர்ந்து 3 முறை அழுத்துங்கள். வெளியே வந்து விடும்.
 6. இதுபோல கார்டு போட்டு பணம் வரவில்லை என்றாலோ அல்லது பணம் எடுத்த பிறகு கார்டு வரவில்லை என்றாலோ அல்லது கார்டு, பணம் இரண்டுக்குமே பாதகம் என்றாலோ பதட்டப்படாமல், எந்த வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்துகிறோமோ, அந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்து டெபிட் கார்ட் எண்ணை ப்ளாக் செய்ய வேண்டும். அடுத்து சைபர் க்ரைம் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு எழுத்துப் பூர்வமான புகார் அளிக்கலாம்.
 7. நம் கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளின் எண் மற்றும் CVV எண்களையும் மற்ற விவரங்களையும் கேட்டு நமக்கு இமெயில் வந்தாலோ/எஸ்.எம்.எஸ் வந்தாலோ அல்லது போன் செய்தாலோ எக்காரணத்தைக் கொண்டும் கொடுக்க வேண்டாம்.
 8. கார்டுகளைப் பயன்படுத்தும் போது கீழ்க்காணும் விவரங்களை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

கார்ட் முன் பக்கத்தில் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும் எண்

வங்கியில் அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொள்ளும் போதே ஃபோன் பேங்கிங்கையும் உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்தவுடன் தகவல் நம் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ் ஆக அனுப்பப்படும்.

கார்ட் பின் எண்

கார்டின் பின்பக்கத்தில் ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கும் CVV(Card Verification Value) எண்

கார்ட் Expiry Date

கார்ட் வைத்திருக்கும் வங்கி அக்கவுண்ட் எண்

கார்ட் வைத்திருக்கும் வங்கியின் கஸ்டமர் கேர் எண் மற்றும் தொலைபேசி எண்

அங்கு நாம் கொடுத்திருக்கும் நம்மைப் பற்றிய Identification-கள். உதா:Date of Birth, Election Voter Id, Ration Card Id, Passport Number etc.,

நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள்

 1. டெபிட்கார்ட் மற்றும் கிரெடிட் கார்டின் தகவல்கள் ஸ்கிம்மர் கருவியில் பதிவு செய்யப் படுகின்றன.
 2. ஸ்கிம்மரில் இருந்து தகவல்கள் ரீடர் என்ற கருவி மூலம் கம்ப்யூட்டரில் பதிவாக்கப்படுகின்றன.
 3. பின்னர் அந்த தகவல்கள் இமெயில் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.(Vice Versa… இதுபோல வெளிநாடுகளில் இருந்தும் தகவல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்படுகின்றன)
 4. இந்தத் தகவல்களின் அடிப்படையில் புதிதாக டெபிட்/கிரெடிட் கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஸ்கிம்மர் மூலம் சேகரிக்கப்பட்ட கார்ட் எண் மற்றும் பிற விவரங்கள் என்கோடிங் செய்யப்படுகின்றன.
 5. இவற்றை வைத்துக் கொண்டு மற்றவர்கள் அக்கவுண்ட்டில் இருந்து ஆன்லைன் பர்சேஸ், ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்தல் போன்றவை கனஜோராக நடைபெறுகின்றன.

இமெயிலில்

 1. ஏதேனும் வங்கியில் இருந்து இமெயில்களில் உங்கள் கார்டுகளின் பின் எண், CVV எண் போன்றவற்றைக் கேட்டாலோ அல்லது ஆன் லைன் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டை கேட்டாலோ கொடுக்கக் கூடாது. உடனடியாக அந்த இமெயில் முகவரியில் உள்ள வங்கியின் வெப்சைட் முகவரி https:// என்று தொடங்கியிருக்கிறதா என்று பார்க்கவும். https என்பது Hypertext Transfer Protocol Secure என்று பொருள்படும். அப்படி இல்லை என்றால் அது பொய்யான ஏமாற்று இமெயில் என்று பொருள். மேலும் https:// என்று வந்திருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
 2. உங்கள் இமெயில் முகவரிக்கு 10000 யு.எஸ் டாலர் பரிசு விழுந்துள்ளது. உடனடியாக கீழ்க்காணும் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புக என்று கூறி உங்கள் வங்கி அக்கவுண்ட் விவரங்கள், ஆன் லைன் பாஸ்வேர்ட் விவரங்கள், டெபிட், கிரெடிட் கார்ட் விவரங்கள் போன்றவற்றை கேட்டு இமெயில் வந்தால் கண்ணை மூடிக் கொண்டு டெலிட் செய்து விடுங்கள். 1 நிமிடம் கூட சபலப்படாதீர்கள். நீங்கள் கலந்து கொள்ளாத இமெயில் முகவரி போட்டிக்கு யார் பரிசு கொடுப்பார்கள் ஏமாற்றுக்காரர்களைத் தவிர? அதுவும் முகத்தில் கரியை பூசும் பரிசை?
 3. உங்கள் இமெயிலில் இருந்து தேவையில்லாத ஆபாச தகவல்கள், புகைப்படங்கள், இமெயில்கள் உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு தானாகவே அனுப்பி வைக்கப்படும். அதை உங்கள் எதிரிகள் தான் செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. வைரஸ்கள் கூட தானாகவே உங்கள் இமெயிலில் இருந்து இமெயில்களை அனுப்பி வைக்கும். அதற்கு தான் பயன்படுத்திய பிறகு இமெயில், ஃபேஸ்புக், ப்ளாக், டிவிட்டர் போன்ற வெப்சைட்டுகளில் இருந்து சைன் அவுட் செய்து கொண்டு வெளியேற வேண்டும். இல்லை என்றால் ஏதேனும் வைரஸ் உங்கள் சைட் தகவல்களை நாசமாக்கிவிடும்.
 4. இண்ட்ட்நெட்டில் ஏராளமான் ஸ்பை சைட்டுகள் உள்ளன. அவை நான் சைன் அவுட் செய்யாமல் திறந்தே வைத்திருக்கும் வெப்சைட்டுகளின் தலைப்பைப் போல தன் பெயரை மாற்று உங்கள் கண்களை ஏமாற்றும். நாமும் தெரியாமல் அந்த ஸ்பை சைட்டுகளைக் கிளிக் செய்வோம். திரும்பவும் யூசர் நேம், பாஸ்வேர்ட் கேட்கும். நாமும் டைப் செய்வோம். உடனடியாக அவர்கள் கைகளுக்கு நம் பாஸ்வேர்ட் சென்று விடும். இது நம் கவனத்துக்கு வரவே வராது ஏனெனில் அவர்கள் நம் பாஸ்வேர்டை உடனடியாக பயன்படுத்தி நம் தகவல்களை திருட மாட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு தான் தங்கள் வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள். எனவே கவனமாக இருக்க வேண்டும்.
 5. நம் இமெயிலில் இருந்து இமெயில் அனுப்புவதைப் போல இமெயில்களை அனுப்புவதற்கு ஏராளமான வெப்சைட்டுகள் உள்ளன. நம் அனுமதியின்றி நாம் அனுப்புவதைப் போலவே நம் இமெயில் முகவரிகளைக் கொடுத்து இமெயில்கள் அனுப்பி நம் பெயரை கெடுக்கின்ற செயல்களும் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே கவனமாக இருக்க வேண்டும்.
 6. இமெயில் பாஸ்வேர்களை யாருக்கேனும் தெரிந்து விட்ட்து என சந்தேகப்பட்டால் உடனடியாக மாற்றி விடுவது நல்லது.
 7. நம் கம்ப்யூட்டரைத் தவிர வேறெங்கும் சென்று இமெயில் செக் செய்தால், உடனடியாக நம் கம்ப்யூட்டருக்கு சென்று பாஸ்வேர்டை மாற்றிவிட வேண்டும்.
 8. இமெயில் முகவரி உருவாக்கும் போது Alternate Email ID, Secret Question மற்றும் Mobile Number போன்றவைகளை கொடுத்திருப்போம். அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்போது தான் நம் இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் நாம் மறந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ திரும்பப் பெற முடியும்.
 9. இமெயில்களில் மிரட்டல்கள், ஆபாச கடிதங்கள் வந்தால் உடனடியாக அந்த இமெயில்களை ப்ளாக் செய்து விடலாம்.
 10. மேலும் Sparm-ஆக அந்த இமெயில்களை மார்க் செய்து விடலாம்.
 11. மிகவும் தொந்திரவாக இருந்தால் சைபர் க்ரைமில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் போது கீழ்காணும் விவரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இமெயில்களை டெலிட் செய்யக் கூடாது

அப்படியே ஃபார்ட்வேர்டும் செய்யக் கூடாது

இன்பாக்ஸில் அந்த இமெயில் மீது மவுசை வைத்து Right Click செய்தால், View Message Source என்ற விவரம் கிடைக்கும். அதை கிளிக் செய்தால் இமெயிலின் ஹெடர் பகுதிக்கான கோடிங் கிடைக்கும். அதை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் இமெயில் எந்த ஐபி முகவரியில் இருந்து, எந்த கம்ப்யூட்டரில் இருந்து வந்துள்ளது போன்ற விவரங்கள் இருக்கும்.

அடுத்து இமெயிலை திறந்து அதையும் ஒரு ப்ரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் சிடியில் காப்பி செய்து கொள்ள வேண்டும்.

சைபர் க்ரைமிற்கு ப்ரிண்ட் எடுத்த ஹார்ட் காப்பி, சிடியில் காப்பி செய்த சாஃப்ட் காப்பி இரண்டையும் கொடுத்து எழுத்துப்பூர்வமான புகார் அளிக்க வேண்டும்.

சைபர் க்ரைம் இதனடிப்படையில் அந்த இமெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு விசாரணை செய்வார்கள்.

சமூக வலைதளங்களில்

 1. ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், ஆர்குட், யு-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டல்கள் வந்தால் உடனடியாக எந்த வெப்பக்கத்தில் அது பப்ளிஷ் ஆகியுள்ளதோ, அதை பிரிண்ட் எடுத்தும், சிடியில் காப்பி செய்தும் எழுத்துப் பூர்வமான புகாருடன் சைபர் க்ரைமிடம் கொடுத்தால் அவர்கள் அந்த வெப்சர்வருக்கு தெரிவித்து அதை நீக்கச் செய்வார்கள். சம்பந்தப்பட்ட நபருடைய அக்கவுண்ட்டை முடக்கச் செய்வார்கள். குற்றத்தின் வீரியத்துக்கு ஏற்ப சிறை தண்டனையும் கிடைக்கும்.
 2. தேவையில்லாத தகவல்கள், புகைப்படங்கள், தொலைபேசி எண்கள் போன்றவற்றை கொடுக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.
 3. முகம் தெரியாத நபர்களுடன் நட்பை ஏற்காமல் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பேசிக் கொண்டிருபதையும் தவிர்க்க வேண்டும்.

மொபைல் போனில்

 1. நம் மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் செய்வதைப் போல அதே மொபைல் எண்ணில் இருந்து மொபைல் போன் இல்லாமலேயே வெப்சைட் மூலம் இமெயில் அனுப்ப இயலும். இதற்காகவே நிறைய வெப்சைட்டுகள் உள்ளன. இதில் நம் மொபைல் எண்ணுக்கு அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொண்டால் அதற்காக ஒரு பாஸ்வேர்ட் கிடைக்கும். நம் மொபைல் எண்ணையும், பாஸ்வேர்டையும் பயன்படுத்தி, அந்த வெப்சைட்டில் இருந்து எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப முடியும். எனவே அந்த பாஸ்வேர்ட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொலைந்து விட்டாலோ அல்லது பிறருக்கு தெரிந்து விட்டாலோ ஆபத்து தான். தாறுமாறான செய்திகளையும், தகவல்களையும் நீங்கள் அனுப்புவதைப் போல பிறருக்கு அனுப்பி வைப்பார்கள். ஆபத்து தான். எனவே கவனமாக இருங்கள்.
 2. அதுபோல மொபைல் போனை சர்வீஸூக்குக் கொடுக்கும் போது, சிம்கார்ட், மெமரி மற்றும் பாட்டரி இவற்றை எடுத்து வைத்துக் கொண்டு தான் கொடுக்க வேண்டும். மேலும் போன் மெமரியில் தகவலகள், தொலைபேசி எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் இவை இருந்தால் டெலிட் செய்து விட்டு கொடுக்கவும். இல்லை என்றால் உங்கள் தகவல்களும் மற்ற விவரங்களும் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
 3. மொபைல் போன் வாங்கும் போதே Anti Theft சாஃப்ட்வேரையும் வாங்கி மொபைலில் இன்ஸ்டால் செய்து விட வேண்டும். அப்போது அது இரண்டு வேறு மொபைல் எண்களை கேட்கும். அப்போது நம் அம்மா, அப்பா அல்லது நெருங்கிய உறவினர்களின் மொபைல் எண்களைக் கொடுத்துக் கொண்டால், நம் மொபைல் போன் தொலைந்து போய், வேறு நபர்கள் திருடி விட்டால் அவர்கள் நம் சிம் கார்டை அல்லது மெமரி கார்டை வேறு போனில் மாற்றும் போதோ அல்லது கம்ப்யூட்டரில் தகவல்களை டவுன்லோட் செய்ய முயலும் போதோ, நாம் கொடுத்துக் கொண்ட இரண்டு மொபைல் எண்களுக்கும் தொலைந்த அந்த போனில் இருந்த தகவல்களும், மற்ற விவரங்களும் பதிவாகி விடும். அப்போது அவர்கள் நமக்கு தகவல் கொடுப்பார்கள்.
 4. உடனடியாக நாம் மொபைல் சர்வீஸ் புரொவைடரின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்து நம் மொபைல் எண்ணை ப்ளாக் செய்து விடலாம். நம்முடைய அதே எண்ணுக்கு வேறு சிம்கார்ட் வாங்கிக் கொள்ள முடியும்.

வெப்சைட் திருடப்பட்டால்

உங்கள் வெப்சைட் hack செய்யப்பட்டால் உடனடியாக அந்த வெப்சைட்டை பராமரிக்கின்ற வெப்சர்வருக்கு போன் செய்து தகவல் சொல்ல வேண்டும். அவர்கள் மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வெப்சைட்டின் ஐபி முகவரியுடன் எழுத்துப் பூர்வமாக ஒரு புகார் கடிதத்தை சைபர் க்ரைமில் கொடுக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சர்வீஸ் கொடுக்கும் போது…

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் சர்வீஸ் கொடுக்கும்  போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹார்ட் டிஸ்க் பழுதை நீக்க சர்வீஸ் கொடுத்தால், அதில் தகவல்களை ரெகவரி செய்யும் போது நீங்கள் பதிவு செய்து வைத்திருக்கின்ற அனைத்து தகவல்களையும் அவர்கள் எடுக்க முடியும். எனவே மிகவும் பிரைவசியாக தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அவற்றில் இருந்தால் டேட்டா ரெகவரி செய்யும் போது கூடவே நீங்களும் இருக்க வேண்டியது அவசியம்.

Dressing Room, Hotel Camera…

துணிக் கடைகளில், ஓட்டல்களில் இன்னும் பல இடங்களில் கண்களுக்குத் தெரியாத காமிராக்களைப் பொருத்தி வைத்திருப்பதையும், அதன் மூலம் புகைப்படமும், வீடியோ காட்சிகளையும் எடுத்து தவறாக இண்டர்நெட்டில் உலவ விடுகின்ற செய்திகளை நாம் படித்து வருகிறோம். இதில் இருந்து தப்பிக்க Jamer என்ற சாஃப்ட்வேர் உதவுகிறது. இதனை நம் மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்துக் கொண்டால், அது காமிரா சிக்னல்களை தடுக்கிறது. அதாவது, காமிரா நம்மை படம் பிடிக்காமல் தடுக்கும்.

குழந்தைகளை பாதுகாக்க…

குழந்தைகளை தவறான வெப்சைட்டுகளை பார்வையிடாமல் தடுப்பதற்கு பேரண்டல் சாஃப்ட்வேர்கள் உள்ளன. அவற்றில் ஏதேனும் ஒன்றை குழந்தைகள் பயன்படுத்துகின்ற கம்ப்யூட்டர்/லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்து கொண்டு, அவர்கள் என்னென்ன வெப்சைட்டைப் பார்வையிட வேண்டும் என்பதையும், எதையெல்லாம் பார்வையிடக் கூடாது என்பதையும் அதில் செட்டிங் செய்து கொண்டால் குழந்தைகளை கண்காணிக்க முடியும். அவர்கள் பார்வையிடக் கூடாத வெப்சைட்டுகளை பெற்றோர் உதவியின்றி அவர்களால் பார்வையிட இயலாது. அவர்கள் பாஸ்வேர்ட் கொடுத்து அவற்றை பார்க்க அனுமதி கொடுத்தால் மட்டுமே பார்வையிட முடியும்.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

மீடியா செய்திகள்

“வீட்டிலிருந்தே வேலை… ஆன்லைனில் சம்பளம்!” செல் நெட் – 2013.  அவள் விகடன் நடத்திய செல்நெட் 2013  நிகழ்ச்சி பற்றிய  செய்தி  9-th April 2013 -ல் வெளியானது. செய்தியின் சாராம்சம்…

ஐ.டி. நிறுவனம் நடத்தும் ‘காம்கேர்’ கே.புவனேஸ்வரி… இணையம், செல்போன், பேங்க் கிரெடிட் கார்டுகள் குறித்த நுணுக்கமான விஷயங்களை வெளிச்சமிட்டார்.

இன்டர்நெட் மற்றும் மொபைல் போன்கள் மூலமாக விளையும் தீங்குகளை விளக்கும் வகையில், ‘மெய்பொருள்’ எனும் குறும்படத்தை எடுத்துள்ளது தமிழகக் காவல்துறையின் ‘சைபர் க்ரைம்’. இத்திரைப்படத்தையும் புவனேஸ்வரி திரையிட்டுக் காட்டியது… மாணவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதாகவே இருந்தது! கூடவே, தொழில் வாய்ப்புகள் பற்றியும் புவனேஸ்வரி தந்த டிப்ஸ்கள் அருமை!

”விளம்பரங்கள் எல்லாமே பத்திரிகைகளில் வந்து கொண்டிருப்பது ஒருபுறமிருக்க… இன்றைக்கு இன்டர்நெட் மூலமாகவும் அவை வர ஆரம்பித்துள்ளன. குறிப்பாக ஃபேஸ் புக் போன்ற தளங்கள் இதற்கான ஊடகமாக இருக்கின்றன. இத்தகைய விளம்பரங்களை எல்லாம் வீட்டிலிருந்தபடியே மாணவர்களும், இல்லத்தரசிகளும் வடிவமைக்க முடியும். அதேபோல, தமிழ் டி.டிபி. வேலைக்கு தற்போது அதிகமாக வாய்ப்புகள் இருக்கின்றன. வெப் டிசைனிங்கூட வீட்டிலிருந்தே செய்ய முடியும். இந்த வேலைகள் தொடர்பான விவரங்கள், சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் வெப் சைட்டிலேயே இருக்கும். வேலையை முடித்துக் கொடுத்தால், அதற்குரிய சம்பளம் ஆன்லைன் மூலமே நம் கணக்குக்கு வந்துவிடும். இத்தகைய கம்பெனிகள் நம்மிடம் எந்தச் சூழ்நிலையிலும் பணம் கேட்பதில்லை” என்றெல்லாம் வழிகாட்டிய புவனேஸ்வரி,

”அதேசமயம், ‘மொபைல் பேஸ்டு ஜாப்… நீங்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்’ என்று கூவிக்கூவி அழைக்கும் விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. ஒரு விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள் என்று கண்டறிவதற்காக… நானே நேரில் சென்றேன். ‘500 ரூபாய் கொடுத்து ரிஜிஸ்டர் செய்யுங்கள். நாங்களே வேலை தொடர்பாக தொடர்பு கொள்வோம்’ என்றார்கள். அதன்படியே செய்துவிட்டு மூன்று மாதங்களாக காத்திருந்தும் எந்தப் பதிலுமில்லை. இப்படிப்பட்டவர்களிடம் ஏமாறாமலிருப்பதும் முக்கியம். பொதுவாக, வேலை தருகிறேன் என்று சொல்லி நம்முடைய பணத்தை கேட்டாலே உஷாராகிவிட வேண்டும்” என்கிற எச்சரிக்கையையும் கொடுக்கத் தவறவில்லை.

(Visited 41 times, 1 visits today)
error: Content is protected !!