திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் @ பாரதிய வித்யாபவன் (2014)

எம்.டி.எஸ் அகடமியும் (Rainbow HRD NGO, Chennai), நேரு யுவ கேந்திரா (Ministry of Youth Affairs & Sports, Govt. of India) மற்றும்  சென்னை பாரதிய வித்யாபவன் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்திய பர்சனாலிட்டி டெவெலப்மென்ட் ஒர்க்‌ஷாப்பில் மே 6,2014  அன்று  அவர்களுக்காக திறமைக்கு ஏற்ற படிப்பும், வாழ்க்கையும் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரையின் சாராம்சம்…

பண்பாடும், பாதுகாப்பும் படிக்கின்ற குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். அந்த பாதுகாப்பும், பண்பாடும்  உங்கள் அனைவருக்கும் கடவுளின் அருளால் கிடைத்திருக்கிறது. இது உங்கள் அதிர்ஷ்டம்.  இப்போது நீங்கள் படிக்கின்ற கல்விக்கு இன்றைய கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முன்பெல்லாம், அதாவது 15-20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கதை எழுதுவது, பாட்டுப் பாடுவது, படம் வரைவது, பரத நாட்டியம் ஆடுவது …. இது போன்ற திறமைகள் எல்லாம் ஏதோ பொழுது போகாதவர்கள் செய்கின்ற வேலையாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ இது போன்ற திறமைகள் இருப்பவர்களுக்கு நல்ல வரவேற்பு. கம்ப்யூட்டரில் பாட்டுப் பாடுவது, கம்ப்யூட்டரில் படம் வரைவது, கம்ப்யூட்டரில் கதை,கட்டுரைஎழுதுவது  இது போன்ற திறமைகள் இருப்பவர்களை சாஃப்ட்வேர் துறை  காசு கொட்டிக் கொடுத்து வரவேற்கிறது.

சரி… திறமை என்றால் என்ன? நம்ம கிட்ட என்ன திறமை இருக்கு என்று தெரிந்து கொள்வதே ஒரு கலை தான். சரி நம்மிடம் உள்ள திறமையை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்று இப் போது பார்ப்போமா?

நாம் தினமும் எத்தனையோ வேலைகளை செய்கிறோம்… விளையாடுகிறோம்… பாடப் புத்தகங்களை படிக்கின்றோம்… நோட்டுப் புத்தகங்களில் எழுதுகின்றோம்,  பாடங்களுக்குத் தேவையான படங்களை வரைகின்றோம். இப்படி பலதரப்பட்ட வேலைகளில்,  நமக்கு எந்த வேலையை செய்யும் போது மனதுக்கு பிடித்திருக்கிறதோ, நம் மனம்  திருப்தி அடைகிறதோ, அந்த வேலை தான் நம் திறமை. உதாரணத்துக்கு, உங்களில் கோபி என்ற மாணவனுக்கு நோட்டில் படம் வரையும் போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். சுரேஷ் என்கிற மாணவனுக்கு  தானாக கட்டுரைகள் எழுதும் போது அவரது மனம் திருப்தி அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு மாணவர்களில் கோபிக்குள் படம் வரையும் திறமை இருக்கிறது. சுரேஷீக்குள் எழுதும் திறமை இருக்கிறது. இப்படித்தான் நம் திறமைகளை கண்டறிய வேண்டும்.

அடுத்ததாக, நம் திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்வது என்று பார்ப்போமா? படம் வரையத் தெரிந்தால் தினமும் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அல்லது வாரந்தோறும் ஏதேனும் ஒரு நாள் என்ற கணக்கில் படம் வரைந்து கொண்டே இருக்க வேண்டும். வரைந்தவைகளை அடுக்கி சேமித்துக் கொண்டே வர வேண்டும். கொஞ்ச  நாள் கழித்து தொடக்கத்தில் வரைந்த படங்களையும், தற்போது வரைகின்ற படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல மாற்றம் தெரியும்.

அது போலவே எழுதும் பழக்கம் உள்ளவர்கள், தங்களைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களை கவனித்து அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதிப் பழகலாம். எழுதுவதை சேமித்துக் கொண்டே வர வேண்டும்.

இது போல எழுதுவதையும், வரைவதையும் உங்கள் ஆசிரியர்களிடம் காண்பித்து, கருத்து கேட்டு உங்கள் திறமைகளை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

நாளடைவில் உங்கள் திறமை உங்களை அறியாமல் அழகாக மெருகேறிக் கொண்டே வரும்.

அடிப்படையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு விட்டால், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்கள் மூலமும், உங்கள் கல்வி மூலமும் அவைகளை இந்த உலகம் அறிய வைக்கலாம். பணமும் சம்பாதிக்க முடியும்.

இப்போதெல்லாம் எத்தனையோ மாணவ மாணவிகள் கம்ப்யூட்டரில் எம்.ஸி.ஏ, எம்.எஸ்.ஸி என்று பட்டம் பெற்றிருந்தும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்களுக்கு கம்ப்யூட்டர் மட்டும் தான் தெரிந்திருக்கின்றது. இன்றைய நவீன கம்ப்யூட்டர், இண்டர்நெட்  யுகத்தில் கம்ப்யூட்டரையும், புத்தகப் படிப்பையும் தவிர எழுதும் திறமை, பாடும் திறமை, படம் வரையும் திறமை என்று பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

ஆம். இன்று கம்ப்யூட்டரில் படம் வரையத் தெரிந்திருப்பவர்கள், பாட்டுப் பாடத் தெரிந்திருப்பவர்கள், எழுதத் தெரிந்திருப்பவர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

சரி, பேப்பரில் படம் வரைவது பற்றித் தெரியும், கதை-கவிதை எழுதுவது பற்றித் தெரியும்… அதெப்படி கம்ப்யூட்டரில் படம் வரைவது? கதை-கவிதை எழுதுவது? என்று நீங்கள் எல்லோரும் யோசிப்பது எனக்குப் புரிகின்றது… அதை புரிய வைக்க இப்போது நான் என் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தயாரித்த குழந்தைகளுக்கான ”தினம் ஒரு பழம்” என்ற அனிமேஷன் சிடியை போட்டுக் காண்பிக்கின்றேன். பொறுமையாகப் பாருங்கள். பிறகு நான் விளக்குகிறேன்.

இப்போது நீங்கள் பார்த்த அனிமேஷன் சிடியில்  என்னென்ன திறமைகள் எல்லாம் இருந்தது? படம் வரையும் திறமை….அனிமேஷன் செய்யும் திறமை… நன்றாக உச்சரிக்கும் திறமை…. பிறகு  எழுதும் திறமை… இப்படி எல்லா விதமான திறமைகளும் இருப்பதை கவனித்தீர்களா?

இது போன்ற வேலைக்கு இன்று ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏன்? நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இன்று மாணவர்களுக்கு கம்ப்யூட்டரும், அது சார்ந்த படிப்பும் நன்கு தெரிகிறது… ஆனால் அடிப்படைத் திறமை இல்லை.

இந்த சிடி  கம்ப்யூட்டரில் ஃப்ளாஷ், கேக் வாக், போட்டோ ஷாப் போன்ற   சாஃப்ட்வேர்களினால் உருவாக்கப்பட்டது. கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களைக் கற்றுக் கொள்ள ஓரிரு மாதங்கள் தான் ஆகும்…ஆனால் திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துக் கொள்ள வருடங்கள் ஆகும். எனவே நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை கற்கும் நேரங்களில் உங்கள் திறமை உங்கள் வாழ்க்கைக்கு கை கொடுக்கும்.

இதற்கு நான் என்னையே உதாரணமாக எடுத்துக் கொண்டு விளக்குகிறேனே…

10 வயதில் எழுதும் திறமையைக் கண்டு பிடித்தேன். பிறகு வளர்த்துக் கொள்ளத் தொடங்கினேன்.  நன்றாக கற்பனை செய்தேன். கடுமையாக உழைத்தேன். கற்பனையும், கனவும் நிஜமானது. இன்று ஏராளமான புத்தகங்கள், கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன். சொந்தமாக பப்ளிகேஷனும் வைத்துள்ளேன். பல பல்கலைக்கழகங்களுக்கு எனது புத்தகங்கள் பாட புத்தகமாக உள்ளது… இது என் திறமைக்குக் கிடைத்த வெற்றி.

நான் உங்கள் இல்லத்தில் ஸ்வாமிஜிகளைக் காணக் காத்திருந்த ஒரு சிஒல நொடிப் பொழுதுகளில் அறிவிப்புப் பலகை என் கண்ணில் பட்டது. இந்த இல்லத்து old Students  அமெரிக்கா, கனடா போன்ற மேலை நாடுகளில் இன்ஜினியர்களாகவும், டாக்டர்களாகவும் பணி புரிந்து வருவதாகவும், அவர்கள் உங்களுக்காக நன்கொடை அளித்து வருவதாகவும் போட்டிருந்தார்கள். அவர்களைப் போல நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல பெரிய நிலைக்கு வருவீர்கள்… நீங்களும் உங்களை வளர்த்த இந்த இல்லத்துக்கு எல்லா விதமான உதவிகளும் செய்து உதவுவீர்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவார்.

எனவே, நீங்கள் அனைவரும் உங்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறிந்து, யாகம் போல  வளர்த்துக் கொண்டே இருங்கள். கடுமையான உழைப்பு கண்டிப்பாக வெற்றியைத் தேடித் தரும். நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்று, வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துகிறேன்.

கருத்தும், எழுத்தும் : காம்கேர் கே. புவனேஸ்வரி

மீடியா செய்திகள்

(Visited 302 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari