ஆஃபீஸ் டைம்

சுமார் 15 வருடங்களுக்கு முன் காம்கேரில் எனக்கு பர்சனல் அசிஸ்டெண்டாகப் பணிபுரிந்த ஹரி என்பவர் இன்று என்னை நேரில் சந்திக்க வந்திருந்தார். துபாயில் பணிபுரிந்துவிட்டு இப்போது சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகச் சொன்னார்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரையும்  நினைவில் வைத்திருக்க ஒரு Tag வைத்திருப்போம். அதுபோல இன்று சந்திக்க வந்திருந்த ஹரிக்கு என் மனதில் வைத்திருந்த Tag மிகவும் சுவாரஸ்யமானது.

என் 21 வயதில் படித்து முடித்துவிட்டு சென்னை வந்து காம்கேர் ஆரம்பித்தபோது தினமும் காலை 6 மணிக்கே அலுவலகம் சென்றுவிடுவேன். காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை இரண்டு ஷிப்ட்டுகளில் வேலை நடக்கும். நான் சீக்கிரம் வருவதாலேயே என்னுடன் பணிபுரிபவர்களும் சரியான நேரத்துக்கு வரப்பழகினார்கள். கொஞ்சம் தாமதமானாலும் அவர்கள் சங்கடப்படுவது அவர்கள் முகத்திலேயே தெரியும்.

அப்போது என் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர்தான் ஹரி. +2 முடித்துவிட்டு தொலைதூரக் கல்வியில் இளங்கலை அறிவியல் படித்துக்கொண்டிருந்தார்.

ஒருநாள் அவர் என்னிடம், ‘ஏன் மேடம் 6 மணிக்கெல்லாம் வந்துவிடுகிறீர்கள். உங்கள் ஆஃபீஸ் தானே. லேட்டா வரலாம் தானே…’ என்றார்.

இந்தக் கேள்விதான் ஹரிக்கு என் மனதில் வைத்திருந்த Tag.

யாரோ நடத்தும் பள்ளிக்கூடம், கல்லூரிக்கெல்லாமே நான்தான் முதலில் செல்வேன். காம்கேர் என்னுடைய சாம்ராஜ்ஜியம். இதற்கு மட்டும் நான் எப்படி லேட்டா  வரமுடியும்?’ என்று பதில் சொன்னேன்.

இன்று பேசிவிட்டு விடைபெறும்போது ‘மேடம் இப்பவும் 6 மணிக்கு வந்துடறீங்களா ஆஃபீஸுக்கு…’ என்ற கேள்வியை மறக்காமல் கேட்டார்.

‘இல்லை… அதுக்கும் இன்னும் சீக்கிரமே…’ என்றேன்.

‘மேடம்….’ என ஆச்சர்யப்பட்டார்.

‘ஆமாம்… காலை 3 மணிக்கே மனதளவில் காம்கேரில் ஆஜர் ஆகிவிடுவேன். 7 மணிக்கு நேரடியாக அலுவலகத்தில் ஆஜர் ஆவேன்…’ என்றபோது ‘நீங்க மாறவே இல்லை மேடம். இதுதான் உங்கள் வெற்றிக்குக் காரணம்…’ என்று முகம் முழுவதும் பூரிப்பாகச் சொல்லிவிட்டு சென்றார்.

காம்கேரில் இருந்து முன்னேறியவர்களிடம் இருந்து ஏதேனும் ஒரு தொலைபேசி அழைப்பு, ஏதேனும் ஒரு நேரடி சந்திப்பு, ஏதேனும் ஒரு இமெயில்… இப்படி ஏதேனும் ஒன்று நித்தம் மனதை இதமாக்குவதற்கு…

அன்பு சூழ் உலகு!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
செப்டம்பர் 19, 2018

 

(Visited 9 times, 1 visits today)
error: Content is protected !!