சமூக வலைதளங்களில் பெண்கள் அடிமையாகிறார்களா? (தினமலர் செப் 23, 2018)

பெண்கள் ஏன் ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைதளங்களில் அடிமை ஆகிறார்கள்?

வீட்டில் கணவன் குழந்தைகள் என வட்டத்துக்குள் தாங்கள் எதிர்பார்த்த அன்பும் அன்யோன்யமும் கிடைக்காத சூழலில் அது ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைக்கும்போது தங்களையும் அறியாமல் அதற்கு முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

தான் எத்தனை அழகாக உடை அணிந்திருந்தாலும்  ‘நன்றாக இருக்கிறது… சூப்பர்’ என ஒற்றை வார்த்தைப் பாராட்டாத கணவனை விட, ஒரு புரொஃபைல் பிச்சர் போட்டவுடன்  சூப்பர், அட்டகாசம், அற்புதம் என ஆயிரக்கணக்கில் கொட்டும்  லைக்குகள் உண்மையில் மதுவை விட மயக்கத்தைக் கொடுக்கக் கூடியது.

கணவன் / பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

பொதுவாக ‘அம்மா தோசை மாதிரி, அப்பா தோசைக் கல் மாதிரி,  ‘அம்மாவின் அன்பு வெளியில் தெரியும், அப்பாவின் பாசம் வெளியே தெரியாது; என்றெல்லாம் சொல்லி சொல்லி குழந்தைகளை அப்பாக்களிடம் இருந்து தள்ளி வைத்துக்கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டன.  அப்பா அம்மா என்றில்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவருமே தங்கள் அன்பை வெளிக்கட்டித்தான் ஆகவேண்டிய சூழல்.

ஏனெனில் எல்லோருக்குமே வேலை இருக்கிறது. டென்ஷன் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் இருக்கிறது. அவற்றில் இருந்து மனம் ரிலாக்ஸ் ஆவதற்கு ஒரே ஆயுதம் அன்பு மட்டுமே. இளைஞர்களாக இருந்தால் அந்த அன்பு வீட்டில் அப்பா அம்மாவிடமோ, திருமணம் ஆனவர்களாக இருந்தால் கணவன் மனைவியிடமோ கிடைத்தால் பிரச்சனை இல்லை.

அதுவே தடம் மாறி அலுவலகத்திலோ அல்லது சக நண்பர்களிடத்திலோ அத்துமீறி கிடைக்கும்போதுதான் குழப்பம் ஏற்படுகிறது.

ஸ்மார்ட் போன் மற்றும் சமூக வலைதளங்களில் எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்?

‘பெட்ரூமையே இணையத்துக்கு கொண்டுவருவதால் உண்டாகும் சிக்கல்களே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்’ என்று சொல்கிறார்கள்.

செல்ஃபீ, பர்சனல் ஸ்டேட்டஸ் அப்டேட், யதார்த்தமான கணவன் மனைவி அன்னியோன்யத்தை சமூகவலைதளங்களில் அத்துமீறியத்தனமாக வெளிப்படுத்துதல்,  ‘எங்கள் நட்பு’ அவ்வளவு புனிதம் என பிறர் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் தங்கள் ஆண் நட்புகள் குறித்து பெண்களும், பெண் நட்புகள் குறித்து ஆண்களும் பதிவிடும் மிக பர்சனல் தகவல்கள் என நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சிக்கல்களையும் சேர்த்து இன்னும் நம் வாழ்க்கையை சிக்கலாக்கிக்கொள்ள வேண்டாமே.

எந்த அளவுக்கு தகவல்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தலாம்?

தனிமனித ஒழுக்கம் குறைந்து வருவதுதான் இன்றைய சூழலில் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும் அச்சாணி.

ஆணாக இருந்தால் தங்கள் பெண் நட்புகள் குறித்தும், பெண்ணாக இருந்தால் தங்கள் ஆண் நட்புகள் குறித்தும் அத்துமீறி எழுத்தில் வடித்து பொது தளத்தில் பதிவு செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும் என்பது தெரிந்தும் சமூக வலைதளங்கள் கொடுக்கும் போதையில் அந்த தவறை தொடச்சியாக செய்துவருகிறார்கள்.

தங்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல, பிறர் வாழ்க்கையையும் அவர்கள் குழி தோண்டி புதைக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு திருமணம் பேசியபோது, அந்த நண்பரின் பெண் சிநேகிதியின் ஃபேஸ்புக் பதிவினால் அந்த நண்பரின் திருமணம் நின்றுபோனது.

தான் அந்நியோன்யமாக அந்த நண்பருடன் பழகியவிதம், இரவு தூக்கம் வராமல் இருந்தாலோ  அல்லது ஏதேனும் மன வருத்தம் இருந்தாலோ போனிலோ கூப்பிட்டு பேசி அழுது ஆறுதல் அடையும்விதம், பைக்கில் செல்வது, ஓட்டலில் சாப்பிடுவது, இரவு வீட்டுக்கு தினமும் கொண்டுவிடுவது, சண்டை போடுவது, பிறகு சமாதானம் அடைவது என ஆரம்பித்து அவர்கள் அந்நியோன்யத்தை படிப்பவர்கள் யாருக்குமே அருவருப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது அந்த பதிவு.

தடம் மாறி பயணிக்கும் நல்ல விஷயங்கள்

உண்மையான நட்போ, அன்போ இருந்தால் அதை பொதுவெளியில் புகைப்படமாகவோ எழுத்து வடிவிலோ அல்லது வேறு எந்த வடிவிலும் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்காது.

கணவன் மனைவியாகவே இருந்தாலும் உண்மையான காதல் இருப்பவர்கள் தோளில்கூட கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. நம் தாத்தா பாட்டியோ, அப்பா அம்மாவோ பொது வெளியில் பார்த்திருப்போமா அல்லது தொட்டுப் பேசித்தான் பார்த்திருப்போமா?

நட்பு, காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு, பெண்ணியம் எல்லாமே இன்று பெரும்பாலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தடம்மாறி பயணிப்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.

பொதுவாகவே நம் சமூகத்தில் அக்கம் பார்த்து பேசவும், அந்நிய மனிதர்களிடம் அந்தரங்க விஷயங்களை பேசாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட நாம் இன்று முகமே தெரியாத ஆயிரக்கணக்கானவர்களுடன் நித்தம் பேசி பழகுகிறோம். அவர்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்காக போராடுகிறோம். மல்லுக்கு நிற்கிறோம்.

எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம்?

மொபைல் போன் மற்றும் லேப்டாப்புகளில் கேமிரா மீது ஸ்டிக்கர் ஏதேனும் வைத்து மறைத்து, தேவைப்படும்போது அதை நீக்கி புகைப்படம் வீடியோ எடுக்கலாம். ஏனெனில் நம்மை அறியாமலேயே கேமிரா மூலம் ரெகார்ட் ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

ஸ்மார்ட் போன்களை சர்வீஸுக்குக் கொடுக்கும்போது, மற்றவர்களிடம் நம் போன்களை பயன்படுத்த அனுமதிக்கும்போது, போன் தொலைந்துபோகும் சமயங்களில், நம் குழந்தைகளிடம் கேம்ஸ் விளையாட நம் ஸ்மார்ட் போனை கொடுக்கும் நேரங்களில் நம் போனில் உள்ள தகவல்கள் லீக் ஆகவும், டெலிட் ஆகவும், தவறுதலாக ஷேர் ஆகவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கண்களுக்கே தெரியாமல் எங்கு வேண்டுமானாலும் பொருத்தப்படும் மைக்ரோ கேமிராக்கள் பெருகிவிட்ட இந்த நாளில் நக இடுக்கில் கூட கேமிராவை வைத்து அசால்டாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து ஆப்கள் மூலம் அவற்றை வேறு மனிதர்களின் உடலில் பொருத்தி ஆபாசமாக்கும் அழிவு சக்திகள் பெருகிவிட்டன.

மைக்ரோ கேமிராக்கள் பெருகிவிட்ட இன்றைய சூழலில் பியூட்டி பார்லர்களில், துணிக்கடைகளில் உள்ள ட்ரையல் அறைகளில், ஓட்டலில் தங்கும் அறைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

ஒருவர் போனில் பேசும்போதே அது தானாகவே ரெகார்ட் ஆகும் தொழில்நுட்பங்களும், பேசும்போதே அதை குழந்தைக் குரலில், ஆண், பெண், வயதான பாட்டி தாத்தா குரலில் பேசுவதைப் போல குரல் மாற்றம் செய்யும் ஆப்களும் வந்துவிட்டன.

இணையத்தில் ஏராளமான ஆப்கள் கொட்டிக் கிடக்கின்றன. புகைப்படங்கள், எழுத்துக்களை, குரல்களை வைத்தே அவற்றை வீடியோவாக மாற்றவும், முகத்தை மாற்றவும், குரலை மாற்றவும் செய்ய முடிகிறது. அதிகம் படிக்காத மக்கள்கூட அவற்றை அநாயிசமாக பயன்படுத்துகிறார்கள்.

நம்மை அறியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் லீக் ஆவது ஒருபுறம் இருக்க, நாமே நம்மைப் பற்றிய தகவல்களை வலிந்து பொதுவெளியில் கொட்டிக்கொண்டிருக்கிறோம்.

கண்ணாடிக் கூண்டுக்குள் நாம் பயணிக்கிறோம். சின்ன கல் விட்டு எறிந்தால்கூட அது  நம்மை சிதைத்துவிடும் என்பதை உணர்ந்து, நம்மை நாம் பாதுகாப்போம். பின்னர் பிற கண்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து சிந்திப்போம்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
செப்டம்பர் 23, 2018

(சமூக வலைதளங்களுக்கு பெண்கள் அடிமையாகிறார்களா.. என்ற கோணத்தில் நான் எழுதி தினமலர் நாளிதழில் சண்டேஸ்பெஷலில் திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு எடிஷன்களில் மட்டும் செப்டம்பர் 23, 2018 அன்று வெளியான கட்டுரை… என்னிடம் அவர்கள் முன்வைத்த கேள்விகளின் அடிப்படையிலான கட்டுரை.)

தினமலர் பத்திரிகையில் கட்டுரையை வாசிக்க… 2309_spl 1st page

(Visited 53 times, 1 visits today)
error: Content is protected !!