குரு தட்சனை

நேற்று ஒரு புது சாஃப்ட்வேர் இம்ப்ளிமெண்ட் செய்தோம். மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் நாங்கள் தயாரித்துள்ள அது குறித்த தகவல் விரைவில்.

மூன்றுமாத உழைப்பு.

பொதுவாக பிராஜெக்ட் தொடக்கத்தில் காம்கேரில் உள்ள நம்பிக்கை பிள்ளையாருக்கு பூஜை செய்து ஆரம்பிப்போம். முடித்து இம்ப்ளிமெண்ட் செய்த பிறகும் அப்படியே.

இந்த முறை நாங்கள் முதன் முதலில் காம்கேர் நிறுவனம் தொடங்கிய இடத்துக்கு அருகே உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வரலாம் எனத் தோன்றவே, அப்பா அம்மாவுடன் அந்த கோயிலுக்குச் சென்றேன்.

அங்கிருந்த குருக்கள் என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்து ‘எப்படி இருக்கீங்க மேடம்…’ என்ற போதுதான் என் கவனம் அவர் முகத்தின் மீதே திரும்பியது.

என்ன ஆச்சர்யம். அவர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் காம்கேரில் நடத்திய ஒரு ஒர்க்‌ஷாப்பில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டவர்.

சாஃப்ட்வேர் தயாரிப்பு பணிகள்தான் எங்கள் முதன்மை பணி என்றாலும், காம்கேர் ஆரம்பித்த சில வருடங்கள் நாங்கள் அவ்வப்பொழுது கம்ப்யூட்டர் சாஃப்வேர் அனிமேஷன் கிராஃபிக்ஸ் சார்ந்த பயிற்சிகள் / ஒர்க்‌ஷாப்புகள் நடத்தி வந்தோம். நான் தான் நேரடியாக பயிற்சி அளித்து வந்தேன்.

அப்போதும் அவர் குருக்கள்தான். ஆனாலும் கம்ப்யூட்டர் பயின்று தன்னை அப்டேட் செய்துகொண்டார். என் மூலமே மலேசியா சென்று ஒரு பதிப்பகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு திரும்பவும் தன் குருக்கள் பணியைத் தொடர்ந்தார்.

தீபாராதனை காண்பித்தவர் அங்கு வந்த பக்தர்களிடம் ‘மேடம்தான் என் டீச்சர்…’ என்று என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்படியா… எந்த ஸ்கூல் டீச்சர் என்று ஆச்சர்யமாக என்னைப் பார்த்துக் கேட்டார்கள்.

நான் சிரித்தபடி இருக்க, அவர் தொடர்ந்தார்… ‘ஸ்கூல் டீச்சர் இல்லை… எனக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுத்தவங்க…’ என்று முகமலர்ச்சியுடன் சொன்னார்.

அனைவரும் என்னை புன்சிரிப்புடன் பார்த்து தலை ஆட்டினார்கள்.

குருக்களிடம் அவர் குடும்ப நலன் குறித்து விசாரித்தேன். திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருப்பதாகச் சொன்னார். இப்போது அந்தக் கோயிலில் முழுநேர குருக்களாக இருப்பதையும் தெரிவித்தார்.

‘காம்கேர் எப்படி இருக்கிறது… இப்போதெல்லாம் ஏன் இந்தக் கோயிலுக்கு வருவதில்லை… உங்கள் பேச்சிலோ நடவடிக்கையிலோ எந்த மாற்றமும் இல்லை மேடம்… அப்படியே இருக்கீங்க… ரொம்ப சந்தோஷமா இருக்கு…’ என தொடர்ச்சியான மலர்ச்சியான பேச்சினால் என்னை சில நிமிடங்கள் சந்தோஷத்தில் படபடக்க வைத்துவிட்டார்.

தட்சனை போட எத்தனித்தபோது, ‘வேண்டாம் மேடம்… குருவிடமே  தட்சனை வாங்குவதா… வேண்டாமே…’ என்றார்.

அந்த நொடியில் கடவுளே என்னை நேரடியாக ஆசிர்வதிப்பதைப் போல் உணர்ந்தேன்.

சில எதிர்பாராத சந்திப்புகள்… எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதுவும் மனதுக்கு இதமான கடவுள் சன்னிதானத்தில்!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 25, 2018

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!