வாழ்க்கையின் OTP-2 (புதிய தலைமுறை பெண் – செப்டம்பர் 2018)

நம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம். அதை விளம்பரப்படுத்தலாமா? நிச்சயமாக. பல விஷயங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவதனாலேயே பரவலாகின்றன. அது லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போனாகட்டும் உயர்ரகக் காராகட்டும் உணவருந்தும் ஓட்டலாகட்டும்.

அறமும் அப்படித்தான். ஒருவர் உதவுவதைப் பார்க்கும்போது நாமும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். அந்த உந்துதல் அறம் வளரவும், அன்பு செழிக்கவும் நிச்சயமாக உதவும்.

பிரசிடென்சி கல்லூரிப் பேராசிரியர் ஒருவரை எங்கள் நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். பார்வைத்திறன் இழந்த மாற்றுத்திறனாளியான அவருடைய அறம் குறித்த பார்வை நம்மில் பலருக்குப் பொதுவான OTP.

“நான் இந்த உலகுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன். மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடிய அளவுக்கு எனக்கு பணவசதி இல்லை. இன்றைக்கு என் வங்கி இருப்புத்தொகை மூவாயிரம் மட்டுமே. ஆனால் என்னாலும் கொடுக்க முடியும். அதற்காகத்தான் புத்தகங்கள் எழுதத் தொடங்கினேன். எந்தெந்த இடத்துக்குச் செல்கிறேனோ அதற்கு ஏற்றாற்போல புத்தகங்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் எழுதிய ‘சிந்தனை விழுதுகள்’ என்ற புத்தகத்தை கொடுப்பதற்காக கொண்டு வந்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை இந்த உலகுக்கு எதையாவது கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

ஒருமுறை மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் விழாவில் என்னையும் கெளரவப்படுத்தினார்கள். அந்த விழாவுக்கு நான் எழுதிய 100 புத்தகங்களை அனைவருக்கும் கொடுப்பதற்காக வாங்கிச் சென்றிருந்தேன். அதைப் பார்த்த அந்த விழாவுக்கு பார்வையாளராக வந்திருந்த ஒருவர் வியந்து தானும் கொடுக்கிறேன் என சொல்லி அத்தனை புத்தகங்களுக்கும் பணம் கொடுத்து உதவினார்.

‘நான் கொடை செய்ய வந்த இடத்தில் நீங்கள் கொடை செய்து விட்டீர்களே… நீங்கள் கொடுத்த இந்தப் பணத்துக்கு அடுத்தமுறை புத்தகங்களை பிரிண்ட் போட்டு உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்…’ என்றேன்.

இப்படி அறம் என்பது தொடர்ச்சியாக சென்றுகொண்டே இருக்க வேண்டும்…”

இப்படியாக அந்தப் பேராசிரியரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நமக்கு வேறொரு கோணத்தைக் காட்டின.

இதைத்தானே அன்றே சொன்னாள் ஒளவை பாட்டி ‘அறம் செய விரும்பு’ என்று. அறம் என்பது பொருளாகவோ, பணமாகவோ கொடுப்பது மட்டும் அல்ல. எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம். ‘அறம் செய்’ என ஒளவை ஆர்டர் போட்டுக் கட்டாயப்படுத்தவில்லை. ‘அறம் செய விரும்பு’ நல்லது செய்ய ஆசைப்படு என்றே சொல்கிறாள். ஒரு நல்ல விஷயத்தைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும். அதை செயல்படுத்தும் வழிமுறைகள் நம் கண்முன்னே வரிசைகட்டி நிற்கும். ஒரு செயலை மனதார விருப்பப்பட்டு செய்யும்போது அந்த செயலை அப்போதைக்கு நல்லபடியாக செய்துமுடிக்க முடிவதோடு தொடர்ச்சியாக அந்த செயலை செய்ய வேண்டும் என்கின்ற நேர்மறை உந்துதலும் நமக்குள் ஏற்படும்.

விருப்பம் அதற்கான முயற்சி இரண்டும் ஒருங்கிணையும்போதுதான் எந்த ஒரு விஷயமும் முழுமையான வெற்றிபெறும். இதுதான் தொடர்ச்சியான வெற்றிக்கான OTP.

சோர்வுற்றிருக்கும் மனதுக்கு நல்லதாக நாலு வார்த்தை பேசினாலே அதை அறம் எனலாம்.

முன்பெல்லாம் கிராமங்களில் ஆங்காங்கே திண்ணைகளில், தெருமுனைகளில் மனிதர்கள் கூடிப் பேசுவார்கள். மனித மனங்களுக்குள்  காற்றோட்டம் அதிகம் இருந்தது. எப்படிப்பட்ட தலைபோகிறப் பிரச்சனைக்கும்  ‘கவலைய விடுப்பா… பார்த்துக்கலாம்… பேசி தீர்த்துக்கலாம்…’ என்பதே ஆறுதல் வார்த்தையாக இருந்தது ஆச்சர்யம்தான்.

இன்று சமூகவலைதளங்களில் ஆயிரக்கணக்கில் நண்பர்கள். ஆனாலும் ஆறுதல் வார்த்தைக்கு ஆளில்லாமல் ஆன்லைனில் லைவ் செய்து காட்டியபடி தற்கொலைகள்.

எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையில் இல்லை நட்பின் மதிப்பு. எத்தனை பேர் நமக்குத் தேவையான நேரத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிடாமல் தொடர்பு எல்லைக்குள் இருக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

தேவைப்படுபவர்களுக்குத் தேவையான நேரத்தில் ஆறுதலாகப் பேசுவதும் அறமே.

2015 – ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது,  இருளர்  சமூகத்தினரைச் சார்ந்த குடும்பங்களை ஒருங்கிணைத்து, எங்கள் அறக்கட்டளை வாயிலாக உதவி செய்தோம்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புடவை , வேட்டி, துண்டு, பிஸ்கெட் பாக்கெட்  கொடுத்தபோது அவர்கள்  நன்றி சொன்னதோடு,  ‘அம்மா, நீங்கள் கொடுக்கும் இந்த பொருட்களைவிட நீங்கள் எங்களுடன் பேசியதுதான் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது’ என்றார்கள்.

இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் நமக்கு?  கொடுப்பது மட்டும் அறமல்ல, மனதுக்கு இதமாக பேசுவதும் அறமே.

நாங்கள் செய்த இந்த சிறிய உதவியைப் பார்த்து, என் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு என்னைச் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள் என பலரும் இதுபோல உதவ முன்வந்தனர்.

அறம்… செய்யும் நம்மையும் மகிழ்விக்கும், பயனடைபவர்களையும் மகிழ்விக்கும்… மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சித் தொற்றிக்கொண்டு, அவர்களையும் அறம் செய்ய வைத்து… இப்படியாக அறம் தானகவே தன்னை வளர்த்தெடுக்கும்.

சொல்லாலும் செயலாலும் மனதாலும் நல்லது செய்வது அனைத்துமே அறம். அந்த அறமே அன்பு.

அதே காலகட்டத்தில் வெள்ளத்தினால் தொலைபேசி, அலைபேசி, இன்டர்நெட் என அனைத்துமே முடங்கிவிட பெரிய கடைகளில் டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்த முடியாத சூழலில் அவர்கள் காசு கொடுத்து பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். வழக்கமான கஸ்டமர்களுக்கும் இதே வலியுறுத்தல்தான்.

ஆனால் ஒரு நடுத்தர வயது பெண்மணி மூன்று சக்கர மிதி வண்டியை முழங்கால் அளவு தண்ணீரில் நகர்த்தியபடி பால், காய்கறி என அன்றாடத் தேவைகளுக்கானப் பொருட்களை அதனதன் விலையிலேயே வீடு வீடாகச் சென்று விற்பனை செய்தார். அவர் எங்கள் தெருமுனையில் கடை வைத்திருக்கிறார். தினமும் இப்படி தெருவில் விற்பனை செய்வது கிடையாது. அந்த மழை வெள்ளத்தில் அவர் தன் பணியின் தன்மையை இப்படி மாற்றிக்கொண்டார். அவர் சேவையில் மகிழ்ந்த சிலர் தாங்களாக ஏதேனும் பொருள் உதவி செய்தால் மட்டும் பெற்றுக்கொண்டார். இவரது செயலை அறம் என்பதா? அன்பு என்பதா? மனிதாபிமானம் என்பதா?

நம் கண்களில் நேரடியாகத் தென்படுவது இவரைப்போன்ற ஓரிரு நபர்கள்தான். ஆங்காங்கே சாப்பாடு, உடைகள் இன்னபிற பொருட்கள் என பெரிய நிறுவனங்கள் இலவசமாகக் கொடுத்து உதவிக்கொண்டிருக்க இப்படி சப்தமே இல்லாமல் மிக எளிமையாக தங்களால் முடிந்த உதவிகளை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்கள் பொருட்களை விற்பது வாழ்வாதாரத்துக்காக. இதில் என்ன இருக்கிறது அறம் என்று சிலர் நினைக்கலாம். பிறருக்கு ஏதேனும் கொடுப்பது மட்டும் அறமல்ல. இக்கட்டான சூழலை பயன்படுத்தி அதிக பணம் சம்பாதிக்க நினைக்காமல், அவரவர் பணியை நியாயமான முறையில் செய்து, தங்கள் உழைப்புக்கு மரியாதைக் கொடுக்கும் அவர்களின் நேர்மையும் அறம்தான்.

இப்படி அன்பும் அறனும் பின்னிப் பிணைந்த பண்பே மனிதன் மனிதனாக இருப்பதற்கான அச்சாணி. இதுதான் ஒவ்வொரு மனிதனுக்குமான OTP.

இன்று ஃபேஸ்புக்கில் நண்பர்கள் லைக் போட்ட பதிவுகளுக்கு நாமும் லைக்கிட்டு, அவர்கள் ஷேர் செய்வதை நாமும் விரும்பி ஷேர் செய்து   மற்றவர்களின் நண்பர்களை பார்த்து அவர்களை நாமும் நட்பாக்கிக் கொள்வதில் கூட அன்பும் அறமும் செழிக்கிறது. இப்படிச் சொல்வது விளையாட்டாக இருந்தாலும் அதுதானே உண்மை.

சமீபத்தில் ஒரு வீடியோ கண்களில் பட, ‘மென்மையான வழியில் நீங்கள் இந்த உலகை அசைக்க முடியும்’ என்று பொருள்படும் வகையில் ‘In a gentle way you can shake the world’ என தலைப்பே வித்தியாசமாக இருக்க வீடியோவை முழுமையாகப் பார்த்தேன். இளைஞர் ஒருவர் ஒரு ஓட்டலுக்குச் சாப்பிட வருகிறார். பணியாளர்கள் சாப்பிட்ட தட்டுகளை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாதி சாப்பாட்டுக்கும் மேல் சாப்பிடாமல் மீதம் வைத்திருந்த பதார்த்தங்களை எல்லாம் குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்கள். இதை கவனித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞர் யோசனையுடன் பில்லுக்கான பணத்தை செலுத்திவிட்டு செல்கிறார்.

அடுத்த நாளும் வருகிறார். தான் கொண்டு வந்திருந்த சிறிய பைகளில் டேபிள்களில் சாப்பிடாமல் வைத்துவிட்டுச் சென்ற பதார்த்தங்களை எடுத்துச் செல்கிறார். தான் சாப்பிடதற்கு பணத்தை செலுத்திய பிறகு சர்வருக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

இதுபோல அவர் அடுத்த சில நாட்கள் செய்யவே ஓட்டல் முதலாளி, ஒரு பணியாளரை அவர் பின்னால் சென்று பார்த்துவிட்டு வரச் சொல்கிறார். பணியாளரும் அந்த இளைஞர் பின்னால் செல்கிறார். அந்த இளைஞர் தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பைகளை எதிர்படும் எளியவர்களுக்கும், இயலாதவர்களும் கொடுத்துக்கொண்டே செல்கிறார். அவர்கள் அந்த இளைஞரை நன்றியோடு பார்க்கிறார்கள். இதை கவனித்த பணியாளரின் முகம் மாறுகிறது. ஓட்டலுக்குத் திரும்பி அந்த இளைஞர் தனக்கு டிப்ஸாகக் கொடுத்த பணத்தை ஓட்டலில் வைத்திருந்த அனாதை ஆஸ்ரம உண்டியலில் போடுகிறார்.

அடுத்த நாள் அந்த இளைஞர் ஓட்டலுக்கு வந்தபோது வாசலிலேயே ஓட்டல் முதலாளி புன்சிரிப்புடன் வரவேற்று பைகளில் கட்டிய மீந்துபோன சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கொடுக்கிறார். அவருக்கு நன்றி சொல்லிய இளைஞர், அருகில் நின்றிருந்த பணியாளருக்கு டிப்ஸ் கொடுக்க முற்பட அதை வாங்க மறுக்கிறார் அவர். இப்படியாக முடிகிறது அந்த வீடியோ.

உரையாடல்கள் எதுவும் இல்லாத பின்னணி இசையுடன் நடிப்பின் மூலமாக மட்டுமே இயக்கப்பட்டிருந்த அந்த வீடியோ 4.30 நிமிடங்களே ஓடினாலும் அது ஏற்படுத்திய தாக்கம் பெரிது. அறம் செய்யச் சொல்லி நாம் யாரையும் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை. ஒருவர் ஆரம்பித்து வைத்தால் அது தானாகவேத் தொடரும்.

பலர் தாங்கள் சாப்பிட்ட மீதியை எடுத்துக் கொண்டு வருவதையே அவமானமானச் செயலாகக் கருதுவர். ஒருசிலரோ போனிலும், வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பிசியாகி கவனமே இல்லாமல் இருப்பர். இன்னும் சிலர் இது குறித்த கண்ணோட்டமே இல்லாமல் இருப்பர். இப்படி அனைத்துப் பிரிவினரையும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டால்போதும். அவர்களுக்குளேயே மாற்றம் நிகழும். அதுதான் அன்பின் மகிமை. அறத்தின் ஆற்றல்.

எங்கள் வீட்டுக்கருகில் உள்ள ஒரு குடும்பத்தில் ஐந்து வயது குழந்தைக்கு அம்மைப் போட்டிருந்தது. மருத்துவம் பார்த்துக்கொண்டதோடு, பிராத்தனையாக எங்கள் தெருவில் குப்பைகளை பிரிக்கும் பணியை செய்கின்ற ஒரு பெண்மணியின் குழந்தைக்கு புது உடையும், முன்று வேளைக்கான சாப்பாட்டுக்குப் பணமும் கொடுத்தார்கள். குழந்தைக்கு பூரண குணம் ஆன செய்தி கிடைத்த அடுத்த சில நாட்களில் அந்தப் பெண்மணி தலைக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தார். நான் ஆச்சர்யமாக திருப்பதியா, பழனியா என கேட்க, ‘இல்லம்மா இங்க பக்கத்துலதான் எங்க ஊர் கோயிலில்… உங்க வீட்டுக்கு எதிர் வீட்டு குழந்தைக்கு நல்லபடியா குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டேன்…’ என்ற அவர் பதிலில் உறைந்தேன். இதைக்கூட நான் கேட்டதால்தான் சொன்னார்.

இந்த இடத்தில் பகுத்தறிவு குறித்து நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். நாம் அறம் செய்வதற்கும் அன்பு காட்டுவதற்கும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால் அதை பெற்றவர்கள் அவரவர்கள் பாணியில் இரண்டு அடி முன்வருவார்கள். இப்படி தொடர் நிகழ்வாக அறம் பெருகும்.

அறம் செய்ய படித்திருக்க வேண்டாம். பணம் வைத்திருக்க வேண்டாம். அறக்கட்டளை நடத்த வேண்டாம். கூட்டம் கூட்ட வேண்டாம். பெருமை பேச வேண்டாம். அடுத்தவரிடம் நன்கொடையும் கேட்க வேண்டாம். சின்ன சின்ன செயல்களில், நெகிழும் அன்பு உள்ளங்களில், பரிவான செயல்பாடுகளில் அறம் தானகவே செழித்து வளரும்.

இந்தா பிடிங்க… உங்களுக்கான OTP ‘அன்புதான் அறம். அறம்தான் அன்பு!’

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 2
செப்டம்பர் 2018

 

(Visited 211 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon