பஞ்சு மிட்டாய் – சமுதாயத்துக்கு என்ன செய்கிறது?

பிரபுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாய் தகவல் கொடுத்திருந்தார்.  ‘தன்யஸ்ரீக்கு தன்யனாய் ஒரு தம்பி…’ என வாழ்த்தி விட்டு அமர்ந்தபோது பஞ்சு மிட்டாய் சிறுவர் இதழ் வண்ணமயமாய் பஞ்சுமிட்டாயின் கலர்களுடன் என் கவனத்தை ஈர்த்தது என் டேபிள் மீது.

‘பஞ்சு மிட்டாய்’ குறித்து எழுத வேண்டும் என வைத்திருந்த கான்செப்ட்  வேலைபளுவின் காரணமாய் தள்ளிக்கொண்டே போனது.

இன்று சாத்தியமானது.

பஞ்சு மிட்டாய்…

உச்சரிக்கும்போதே குதூகலமான உணர்வு. குழந்தைகளை மட்டுமில்லாமல் பெரியோர்களுக்கும்.

பெயருக்கு ஏற்ப வண்ண மயமான படங்கள், படிக்கத் தூண்டும் வகையில் ஃபாண்ட்டுகள், பிறந்த குழந்தையை ஆசையாய் கைகளில் எடுத்து  கொஞ்சத் தூண்டுவதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் வழ வழப்பான பேப்பரில் பிரிண்ட் செய்கிறார்கள்.

யார் இதை நடத்துவது?

தெரிந்துகொள்ள கூகுளில் தேடியபோது கிடைத்த வெப்சைட் பஞ்சு மிட்டாய் டாட் காம். தொடர்பு எண் எடுத்து என்னை அறிமுகம் செய்துகொண்டு பேசியபோது தொடர்பில் வந்தவர் தான் ‘பிரபு’.

மரியாதையுடனும், பொறுமையாகவும், நிதானத்துடனும் இவர் பேசிய விதத்தில் First Impression is the best என்றானது.

பஞ்சு மிட்டாய் – குழு மூன்று தளங்களில் இயங்கி வருகிறது. ஒன்று நிகழ்வுகள், இரண்டாவது இதழியல், மூன்றாவது இணையதளம்.

பெங்களூரை சேர்ந்த பஞ்சுமிட்டாய் சிறார் குழு  2015 முதல் இவர்களது  அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள‌ தமிழ் சிறார்களுக்கு கதைகள் சொல்லும் நிகழ்வுடன் துவங்கப்பட்டது. நிகழ்வுகள் மூலம் சிறார்களுக்கு தமிழ் சார்ந்த வாழ்வியல் முறையையும் அவர்களது கற்பனை திறன்களை வெளிப்படுத்த ஏதுவான தளத்தினை அமைத்து தருவதே எங்களது நோக்கம்.

சிறுவர்கள் உலகை பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பஞ்சு மிட்டாய் காலாண்டிதழ் இயங்குகிறது. பெரும்பாலும் சிறுவர்களே கதை எழுதுகிறார்கள்… படம் வரைகிறார்கள்… எல்லாம் அவரவர் கற்பனையில்… கிறுக்கல்களாக இருந்தாலும் அவரவர் மொழியில் அவரவர் திறமையில்… பெரியோர்களின் தலையீடு இல்லாமல்…

குழந்தை வளர்ப்பு, கல்வி, கலைகள், விளையாட்டுகள், நிகழ்வுகள், இலக்கியம், தற்கால சிறார் இதழ்கள்,உளவியல்,உணவு,மருத்துவம் என சிறார் உலகினைப் பற்றி தமிழில் உரையாடுவதற்கான தளமாக விளங்கும் பஞ்சுமிட்டாய் டாட் காம் இணையத்தளத்தில் எழுத்தாளர்கள், பெற்றோர்கள், கலை நிபுணர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் இணையும் ஒரு புள்ளியாக இணைகிறார்கள்.

இவ்வளவு செய்வதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்றதற்கு ‘செய்யணும் என்ற ஆசை இருந்தால் நேரம் தானாகவே கிடைக்கும்’ என்ரார் உற்சாகமாக…

இவ்வளவு சொல்லி விட்டு இன்னொரு முக்கிய விஷயத்தைச் சொல்லாவிட்டால் எப்படி?

இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருடைய மனைவி திவ்யாவும் இதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். இவரும் பணியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை தன்யாஸ்ரீ. நேற்று இவளுக்கு தம்பி பிறந்திருக்கிறான்.

நல்லதொரு சமுதாயம் உருவாக காரணிகளாய் விளங்கும் இவருடைய குடும்பத்துக்கும், பஞ்சுமிட்டாய் ஆசிரியர் குழுவுக்கும் அதில் பங்களிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 12, 2018

(Visited 96 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon