தீதும் நன்றும் கற்றுத் தருவோம் (அக் 19, 2018)

தியேட்டரில் ஆண் தேவதை பார்க்கச் சென்றிருந்தேன்.  ‘தீதும் நன்றும் கற்றுத் தருவோம்’ என்ற கொடேஷனுடன் குழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ சொல்லிக்கொடுக்கும் காட்சியுடன் ஆரம்பிக்கும் திரைப்படத்தில், பெரும்பாலான காட்சிகள் உட்கார வைத்து வகுப்பெடுத்ததைப் போல இருந்ததாலோ என்னவோ, திரைப்படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸானதைப் போலவே இருந்து.

ஆனாலும்…

தேவையில்லாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஏதுமின்றி, எந்த ஒரு காட்சியிலும் விரசம் துளியுமின்றி, ஹூரோவின் கோபத்தைக்கூட சண்டைக் காட்சிகளாக்காமல் நடுத்தர வர்க்கத்து நாசூக்காக கையாண்ட விதம், கூடவே நடுத்தர வர்க்கம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்போது ஏற்படக் கூடிய டிரான்சிஷன் மனோநிலைகளை அழகாக எடுத்துச் சொல்லிய விதம் அருமையோ அருமை.

காட்சி அமைப்புகள் வெகு எதார்த்தம். நடித்துள்ள குழந்தைகள் இருவரும் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள்.

அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று கம்பீரமாக முகம் சுளிக்காமல் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு கண்ணியம்.

ஹைலைட்டாக அதில் ஹவுஸிங் லோன் கட்ட முடியாமல் வீட்டுக்கு குண்டர்கள் வந்து மிரட்டும் காட்சி மிரட்டல். திரைக்கதையில் பல அறிவுரைகள் வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், வங்கிக் கடன் வசூலிக்கும் காட்சிகளில் மிரட்டலான அறிவுரை.

கடன் வாங்கிவிட்டு உண்மையிலேயே கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த கதி என்றால், வாழ்நாளில் கிரெடிட் கார்டே உபயோகிக்காத ஒருவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை எங்கு சொல்வது?

அந்த நபர் என் அப்பாதான்.

நான்காண்டுகளுக்கு முன்னர் நானும் என் அப்பா அம்மாவும் அமெரிக்காவில் என் சகோதரனின் மகன் உபநயனத்துக்காக சென்றிருந்தோம்.

அப்போது சென்னையில் நாங்கள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் எதிர் வீட்டில் இருக்கும் பெண்மணி எங்களுக்கு போன் செய்து ‘நீங்கள் கிரெடிட் கார்ட் பில் ஒரு லட்சம் கட்டவில்லை என்று ஒரு வங்கியில் இருந்து வந்திருந்தார்கள்…’ என்று தகவல் கொடுத்தார்.

நாங்கள் சற்று அதிர்ந்தோம். ஏனெனில் எங்கள் குடும்பத்தில் யாருமே கிரெடிட் கார்ட் உபயோகிப்பதில்லை.

எனவே அவரிடம் நாங்கள், ‘இனி வந்தால் அவர் பெயர், எந்த வங்கி, மொபைல் எண் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னோம்.

மறுநாளும் அந்த நபரே மீண்டும் வந்து அதே கதையைச் சொல்ல அந்தப் பெண்மணி அவருடைய முழு விவரத்தையும் அந்த நபரின் கையாலேயே ஒரு பேப்பரில் எழுதி வாங்கி எங்களுக்குப் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார்.

உடனடியாக நாங்கள் அந்த வங்கியின் மேலாளரை போனில் தொடர்பு கொண்டோம்.

அவர் ஒரு இமெயில் ஐடி கொடுத்து அதில் புகார் அளியுங்கள் என்றார்.

நாங்களும் அந்த இமெயில் ஐடிக்கு கிரெடிட் காட்டே உபயோகிக்காத எங்களுக்கு வந்த அந்த அதிர்ச்சித் தகவலினால் ஏற்பட்ட மன உளைச்சலைப் பற்றியும்,  எதிர் வீட்டு பெண்மணி கொடுத்த விவரங்களின் அடிப்படையிலும் (விசாரணைக்கு வந்த நபரிடம் ஐடி, அவர்கள் எங்கள் கிரெடிட் கார்ட் எண் என்று தெரிவித்திருந்த எண், அவர்கள் சொன்ன வங்கியின் பெயர், அவர்கள் மொபைல் எண்) அனைத்து விவரங்களையும் விரிவாக அனுப்பினோம். நாங்கள் யு.எஸ்ஸில் இருப்பதையும் தெரிவித்திருந்தோம்.

அடுத்த இரண்டு நாட்களில் அந்த இமெயிலுக்கு அந்த வங்கியில் இருந்து பதில் வந்தது.

அப்பாவின் ஐடி புரூஃப், பிறந்த தேதிக்கான புரூஃப், அட்ரஸ் புரூஃப் என அனைத்தையும் கேட்க அனைத்தும் எங்களிடம் டிஜிட்டல் காப்பியாக இருந்ததால் அவற்றை அடுத்த இமெயிலிலேயே அனுப்பி வைத்தோம்.

மீண்டும் இரண்டு நாட்களில் இமெயில். இந்த முறை நாங்கள் உங்கள் கேஸை பிராசஸ் செய்து கொண்டிருக்கிறோம். உங்கள் ரேஷன் கார்டின் டிஜிட்டல் காப்பியை அனுப்பி வைக்கவும் என்ற வேண்டுகோளுடன்.

‘நாங்கள் யு.எஸ்ஸில் இருப்பதால் ரேஷன் கார்டுக்கான டிஜிட்டல் காப்பி எங்களிடம் இல்லை. எனவே சென்னை வந்த பிறகு அனுப்புகிறோம்’ – இது எங்கள் பதில் இமெயில்.

கூடவே, கிரெடிட் கார்டே உபயோகிக்காத எங்களுக்கு ஏன் இத்தனை மன உளைச்சலை கொடுக்கிறீர்கள்… உங்கள் வங்கிக்கு வர வேண்டிய கடன் பாக்கிக்காக சம்மந்தமே இல்லாத வெளி ஆட்களை அனுப்பி அவர்கள் சம்மந்தா சம்மதமே இல்லாத ஒருவரை டார்ச்சர் செய்வது  எந்த விதத்தில் நியாயம்? இது உங்கள் வங்கிக்கே ஒரு இழுக்கு தானே? என கொஞ்சம் கடுமையாக எழுதி இருந்தோம்.

மீண்டும் இரண்டு நாட்களில் இமெயில். இந்த முறை  ‘மன்னிக்கவும். உங்களுக்காகத்தான் பிராசஸ் செய்து கொண்டிருக்கிறோம் பேன் கார்டை மட்டும் அனுப்பி வையுங்கள்’ என்ற வேண்டுகோளுடன்.

பொறுக்க முடியாமல் யு.எஸ்ஸில் இரவு 12 மணிக்கு மேல் இந்தியாவில் அவர்கள் வங்கி அலுவலக நேரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அப்பா கொஞ்சம் கோபமாகவே உரையாட அவர்  ‘Extremely Sorry for the inconvenience நீங்கள் கூறுவது அவ்வளவும் உண்மை என்று கூறி தகுந்த ஆதாரங்களுடன் உங்கள் கேஸை முடிப்பதற்காகவே இவ்வளவு தகவல்களை கேட்கிறோம்’ என்று பணிவாக பதில் சொன்னார்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து நாங்கள் சென்னை திரும்பியதும் அவர்கள் கேட்டிருந்த ரேஷன் கார்ட் பேன் கார்ட் இவற்றை அனுப்பி வைத்தோம்.

இதற்கிடையில் எங்கள் வீட்டு லேண்ட் லைனுக்கு ஒரு போன் வந்தது. போனில் ஒரு பெண், ‘ஸ்ரீபத்மகிருஷ் என்ற அறக்கட்டளை என்ற பெயருக்கு ஒரு கொரியர் வந்துள்ளது. முகவரி சரியாக இல்லை, எனவே உங்கள் முகவரியை சொல்லுங்கள்’ என்று சொல்ல அப்பா ‘யாருடைய பெயர் போட்டிருக்கிறது என கேட்க’, அவர் ‘கிருஷ்ணமூர்த்தி’ என சொல்ல என் அப்பாவும் எங்கள் முகவரியை அடையாளத்துடன் தெளிவாகச் சொல்லி விட்டார்.

கொரியர் வரவே இல்லை. அதற்கு பதிலாக தாங்கள் வங்கியில் இருந்து வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு 4 நபர்கள் வந்து நின்றனர். இரண்டு பேர் அதிகார தோரணையில், இரண்டு பேர் மிரட்டலாக.

நீங்கள் கிரெடிட் கார்ட் மாதாந்திர கட்டணம் பலமாதங்கள் கட்டாமல் அது வட்டியுடன் 1 இலட்சத்தை தாண்டியுள்ளது. உடனடியாக கட்டவில்லை என்றால் கைது செய்ய வேண்டி இருக்கும் என்று சொல்லி மிரட்டினர்.

நாங்கள் யு.எஸ்ஸில் இருந்தபோது  விசாரணைக்கு வந்த அதே நபர்கள் தான் இவர்கள் என தெரிய வந்தது.

வாழ்க்கையில் கிரெடிட் கார்டே உபயோகிக்காத என் அப்பா ஆங்கிலத்தில் அவர்களை பிளந்து கட்ட, அவர்கள் சற்றும் அசராமல் ‘சரி சார் இதை நாங்கள் வங்கிக்குத் தெரிவிக்கிறோம்’ என்று சொல்லிச் சென்று விட்டனர்.

என் அப்பாவுக்கு மன உளைச்சல் அதிகரிக்க, முன்பு தொடர்பு கொண்ட அந்த வங்கியின் கஸ்டமர் கேரின் சம்மந்தப்பட்ட அதிகாரியையே தொடர்பு கொண்டு ‘வைத்துக் கொள்ளாத கிரெடிட் கார்டுக்கு எதற்கு இத்தனை தொந்திரவு செய்கிறீர்கள்… நீங்கள் பிராசஸ் செய்துகொண்டிருக்கிறோம் என சொன்னதால்தான் இதுவரை பொறுமையாக இருந்தேன். இது இப்படியே நீடித்தால் சைபர் க்ரைமுக்கு புகார் அளிப்பதுடன் உங்கள் மேல் வழக்கு தொடரத்தான் வேண்டியிருக்கும்’ என்று கோபத்தில் விலாசித் தள்ளினார்.

அந்த அதிகாரி பொறுமையாக ‘டென்ஷன் ஆகாதீர்கள். கடையாக ஒரே ஒரு உதவி. உங்களுக்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து போன் வந்ததாகச் சொன்னீர்களே அந்த எண் சொல்ல முடியுமா?’ என்று கேட்க எங்கள் வீட்டு லாண்ட் லைன் போனில் உள்ள காலர் ஐடியில் எந்த எண்ணில் இருந்து போன் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்துச் சொன்னோம்.

ஏற்கனெவே நாங்கள் கொடுத்திருந்த அத்தனை விவரங்களுடன் இப்போது நாங்கள் கொடுத்த கொரியர் ஆஃபீஸ் எண்ணும் சேர்ந்துகொண்டு வங்கியால் எங்கள் புகாருக்கு மிக சுலபமாக தீர்வைக் காண முடிந்தது.

ஆம். அந்த கார்ட் எண் அந்த வங்கிக்கானதே இல்லை, விசாரணைக்கு வந்த நபர்கள் அவர்கள் வங்கி ஏஜென்டுகளும் இல்லை. எனவே இந்த புகாரை சைபர் க்ரைமுக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள். நாங்களும் புகாரை சைப்ர் க்ரைமுக்குக் கொண்டு சென்றோம்.

பிறகு முறையாக மன்னிப்புக் கேட்டு அந்த வங்கியில் இருந்து இமெயிலும், கடிதமும் எங்களுக்கு வந்தது.

இதற்காக நாங்கள் ஒரு இன்வெஸ்டிகேஷன் ஃபைல் போட்டு, போனுக்கு மேல் போன் செய்து, இமெயிலுக்கு மேல் இமெயில் அனுப்பி,  இல்லவே இல்லாத ஒரு கிரெடிட் கார்டுக்கு 6 மாத கால மன உளைச்சல்.

68 வயதில் ஹார்ட் பேஷண்ட்டான என் அப்பவுக்கு இது தேவையா?

அப்பாவுக்கு  மட்டுமா  மன உளைச்சல்… எங்கள் ஒட்டு மொத்த குடும்பத்துக்கும்தான்.

இவ்வளவு இன்னல்கள் பட்டும் அந்த வங்கியின் பெயரை நான் குறிப்பிடாததற்குக் காரணம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அந்த வங்கியின் பெயர் கெட வேண்டாம் என்ற ஒரே உள்நோக்கம்தான்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
அக்டோபர் 19, 2018

(Visited 69 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon