இங்கிதம் பழகுவோம்[6] மனமே சாட்சி! (https://dhinasari.com)

சென்ற வருட தீபாவளித் திருநாள். மழை பெய்து ஓய்ந்திருந்தது. தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. லேப்டாப்பில் என் பணிகளை செய்துகொண்டு, நடுநடுவே ஃபேஸ்புக் படித்துக்கொண்டு, தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென  ‘ஃபேஸ்புக் சாட் விண்டோவில் மேடம், தீபாவளி வாழ்த்துக்கள். என்னை நினைவிருக்கிறதா? நான் உங்க கம்பெனில வேலை செய்திருக்கேன்…’ என தகவல் வந்து விழுந்தது.

அப்போதுதான் சாட் விண்டோவின் தலையில் பெயரைப் பார்த்தேன். அப்போதும் நினைவு வரவில்லை. புரொஃபைல் புகைப்படத்தைப் பார்த்தேன்.  அப்போதும் நினைவுக்கு வரவில்லை.

உரையாடலைத் தொடர்ந்தேன்.

‘எந்த வருடம்?’

‘2000-த்தில்’

‘என்னவாக வேலை செய்தீர்கள்?’

‘ஆஃபீஸ் அசிஸ்டென்ட்டாக’

‘உங்களுடன் வேறு யார் யார் வேலை செய்தார்கள்?’

இப்படியாக சில கேள்விகளில் பழசை தூசிதட்ட ஆரம்பித்தேன்.

அவருடன் பணிபுரிந்த புரோகிரமர் ஒருவர் பெயரை சொன்னவுடன் உருவம் முதல் பேச்சு, செய்கை வரை அத்தனையும் நினைவுக்கு வந்தது.

‘கொஞ்சம் விந்திவிந்தி நடப்பீர்களே, அவரா?’ என்றேன்.

‘கரெக்ட் மேடம்… எப்படி இருக்கிறீர்கள்? காம்கேர் எப்படி இருக்கு மேடம்?’

நான் அடையாளம் கண்டுகொண்டதும் உற்சாகமாக பேச்சைத் தொடர்ந்தார்.

‘நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’

‘நான் இப்போது சவுதியில் வேலை செய்கிறேன் மேடம்…’

‘நல்லது… இப்போதுதான் எனக்கு நீங்கள் பணிபுரிந்த காலகட்டம் நன்றாக நினைவுக்கு வருகிறது… எல்லா நிகழ்வுகளும் ஒவ்வொன்றாக என் கண்முன் தோன்றுகின்றன…’ என டைப் செய்த வார்த்தைகளில் என் பழைய நினைவுகள் அசைபோட்டன.

‘அந்த நாட்களில் நான் நடந்துகொண்ட விதத்துக்கு, என்னை நினைத்தால் எனக்கே அவமானமாக இருக்கிறது மேடம்…’ – சட்டென எமோஷனல் மெசேஜ்.

என்னிடம் வேலை செய்தபோது இவருக்கு 20 வயதுதான் இருக்கும். என் நிறுவனத்தில்தான் முதல்முதலில் வேலைக்குச் சேர்ந்தார்… நேரத்துக்கு வருவது, முறையாக அறிவித்துவிட்டு விடுப்பு எடுப்பது, மற்ற ஸ்டாஃப்களிடம் பழகுவது எல்லாமே புதிது… நான் நிறைய பேசி கற்றுக்கொடுக்க வேண்டி இருந்தது. பேச்சு என்பது சில நேரங்களில் அன்பாக இருக்கும், பல நேரங்களில் அலுவலக டென்ஷன் காரணமாக சூடாக இருக்கும். என் அலுவலக கல்சருக்கு ஏற்றாற்போல எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து அவரை மாற்றிக் கொண்டிருந்தேன். இவை எல்லாம் நினைவுக்கு வந்தது. ஆனால் இவ்வளவு எமோஷனல் ஆகும் அளவுக்கு என்ன நடந்தது என நினைவில்லை.

‘ஏன்… என்னாச்சு.. இப்படி எமோஷனல் ஆகும் அளவுக்கு என்ன நடந்தது?’ என கேட்க…

‘ஆமாம் மேடம், 9 ரூபாய்க்கு கூல் டிரிங் வாங்கி வந்துவிட்டு 10 ரூபாய் என கணக்குச் சொல்லி இருக்கிறேன். 25 ரூபாய்க்கு டிபன் வாங்கி வந்துவிட்டு 27 ரூபாய் என கணக்கு எழுதி இருக்கிறேன். இப்படி சின்ன சின்னதாய் பொய் சொல்லி இருக்கிறேன்….’

எனக்கு எப்படி ரியாக்‌ஷன் செய்வது என தெரியவில்லை.

‘அவ்வளவுதானே…’ என டைப் செய்தேன்.

‘இன்னும் இருக்கு…’

‘சொல்லுங்கள்….’ என்றேன்.

‘உங்கள் தம்பி திருமணத்துக்கு எங்கள் வீட்டில் எங்களுக்கு வந்திருந்த  கிஃப்ட்டை எடுத்து வந்து, இரண்டாயிரம் ரூபாய் என்று சொல்லி, நம் ஸ்டாஃப்களிடம்  பணம் கலெக்ட் செய்தேன். எனக்குத் தெரிந்த கடையில் 2000 ரூபாய்க்கு பொய்யாக ஒரு பில்லை வாங்கி வந்தேன்…’

இப்பவும் எனக்கு என்ன ரியாக்‌ஷன் கொடுப்பது என்று தெரியவில்லை.

‘அப்புறம் மேடம்… ஒரு இன்டர்வியூ போவதற்காக மாங்காடு கோயிலுக்குப் போகிறேன் என்று பொய் சொல்லி லீவ் எடுத்திருக்கிறேன்…’

எதற்காக இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார் என புரியாமல், திகைப்பில் இருந்தும் மீளாமல் அமைதி காத்தேன்.

‘அப்படியா?’

‘மேடம், என்னை மன்னித்து விடுங்கள்…’

அவர் டைப் செய்த வார்த்தைகள் கூட கூனிக்குறுகி மன்னிப்பு கேட்டதைப் போல இருந்தன. போனில் பேசி இருந்தால் அழுதே இருப்பாரோ?

‘சரி… விடுங்கள்… இப்போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்….’

‘என்ன மேடம்? சொல்லுங்கள் செய்கிறேன்…’

‘சாட் விண்டோவில் இப்போது நீங்கள் டைப் செய்தவற்றை முழுவதுமாக டெலிட் செய்துவிடுங்கள்… அதோடு உங்கள் மனதில் இருந்தும்…’

‘மேடம்…’

‘டெலிட் செய்து விட்டீர்களா?’

‘எப்படி டெலிட் செய்யணும் என்று தெரியவில்லை…’ என்றவருக்கு ஸ்கிரீன்ஷாட் எடுத்து டெலிட் செய்யச் சொல்லிக் கொடுத்தேன். நானும் டெலிட் செய்தேன்.

‘இந்தியா வரும்போது உங்களை நேரில் சந்திக்கிறேன் மேடம். அடுத்த வருடம் மார்ச்சில் திருமணம்… நிச்சயம் நீங்கள் வரணும் மேடம்’ என்றவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி சாட்டில் இருந்து வெளியேறினேன்.

ஒரு ரூபாய்க்கு மன்னிப்புக் கேட்ட பெருந்தன்மை, அதுவும் 17 வருடங்களுக்குப் பிறகு… சாட் செய்த விஷயங்கள் நீண்ட நேரம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. உலகில் ஒரு ரூபாய் ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்ட நபர் இவர் ஒருவராகத்தான் இருப்பார் என்று தோன்றியது.

எப்போதோ நடந்த விஷயத்துக்கு இப்போது அவர் மன்னிப்புக் கேட்டது  ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் உளவியல் ரீதியாக ஆராய்ந்ததில் ஒரு விஷயம் புரிந்தது.

அவர் சவுதியில் பணி புரிகிறார். அங்குள்ள மனிதர்கள், சமுதாய அமைப்பு, சட்ட திட்டங்கள், குற்றங்களுக்கான தண்டனைகள் போன்றவை அவருக்குள் இருந்த மனிதனைப் பட்டை தீட்டி இருக்க வேண்டும். அதனால்தான் என்றோ நடந்த நிகழ்ச்சிக்கு இன்று மனம் வருந்தி மன்னிப்புக் கேட்க வைத்துள்ளது.

ஒருவேளை இங்கேயே பணிபுரிந்து கொண்டிருந்தால் இந்த அளவுக்கு செய்த தவறை உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அவர் தற்போது வசிக்கும் நாடு அவருக்குக் கற்றுக்கொடுத்த பாடமாகவே இதை உணர வேண்டும்.

தவறு செய்பவர்கள் மனதில் அவர்கள் செய்கின்ற தவறுகள் எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே மறையாமல் படிந்திருக்கும். சந்தர்ப்பமும் சூழலும் ஏற்படும்போது அவர்கள் மனசாட்சி உறுத்த ஆரம்பிக்கும்.  ஒருசிலர் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதைப்போல தாங்கள் தவறே செய்யாததைப் போல வெளியே காட்டிக்கொண்டாலும் ஆழ்மனதில் அவரவர்கள் தவறுகள் அவரவர்களுக்கேத் தெரியும்.

தவறை உணராமல் இருப்பதுகூட உடல் நலத்துக்குக் கேடுதான்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
நவம்பர் 13, 2018

தினசரி டாட் காமில்  லிங்க்…  https://wp.me/p5PAiq-fN7

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் நவம்பர் 13, 2018  

(Visited 140 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon