வாழ்க்கையின் OTP-4 (புதிய தலைமுறை பெண் – நவம்பர் 2018)

‘சார் என்னை நினைவிருக்கிறதா… நீங்க தான் என் பாஸா இருந்தீங்க… மேடம் ஞாபகம் இருக்கிறதா… நீங்கதான் என் எம்டியா இருந்தீங்க…’ இப்படி யாராது தங்கள் முன்னாள் நிறுவன தலைவர்களைப் பார்த்தால் மகிழ்ந்து கேள்விப்பட்டிருப்போமா?

ஆனால் உலகில் எங்கு, எப்படிப்பட்டச் சூழலில் ஆசிரியர்களை பார்த்தாலும் நமக்குள் ஒரு பரவசம் தொற்றிக்கொள்ளும்.

‘நீங்கதான் என் தமிழாசிரியரா இருந்தீங்க, நீங்கதான் எங்க ஸ்கூல் தலைமையாசிரியரா இருந்தீங்க… நீங்கதான் எனக்கு கணக்குக் கற்றுக் கொடுத்தீங்க… நீங்கதான் எனக்கு பாட்டு சொல்லித் தந்தீங்க…’ இப்படி வணக்கம் சொல்லிப் பூரிப்படைய நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு உயரிய கெளரவத்துக்குச் சொந்தக்காரர்கள் ஆசிரியர்கள்.

மாதா பிதா குரு தெய்வம் இந்த வரிசையில் குருவுக்கு மூன்றாவது இடமென்றாலும் மாணவச் செல்வங்கள் ஒரு நாளின் பெரும்பகுதியை அவர்களுடன்தான் செலவிடுகிறார்கள். நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் சுமார் 20 வருடங்கள் கல்விச் சூழலில்தான் பயணிக்கின்றோம். அவரவர்கள் படிப்பிற்கேற்ப வருட எண்ணிக்கையில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

ஆக, இந்தக் கல்விச் சூழலின் பெற்றோராக இருக்கக் கடமைப்பட்டவர்கள் ஆசிரியர்கள். இறைவனுக்குக் கூட குருவுக்கு அடுத்த இடம்தான் என்றால் எத்தனை அரிய பெரிய பொறுப்பு அவர்களுக்கு.

தங்கள் பணியில் அதீத அர்பணிப்புடன் வாழும் ஆசிரியர்கள் தங்கள் ஆயுளின் பெரும்பகுதியை மாணவர்களுக்காக செலவிடுவதாக சிறுவயதில் எங்கள் பூகோள ஆசிரியர் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. ஆசிரியர்களின் அர்பணிப்பின் உச்சத்தை இதைவிட அழகாக சொல்ல முடியுமா?

நம் மாணவர்களும் ஆசிரியர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லவே.

தங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த குருவின் பிரிவு உபசார விழாவில் அன்பின் மிகுதியால் குதிரை வண்டியின் குதிரைகளுக்கு பதிலாக தாங்களே வண்டி இழுத்து ரயில் நிலையம் வரை கொண்டுவிட்ட மாணவர்களும் இருக்கிறார்கள். யார் அந்த பாக்கியசாலி. ஆசிரியராக பணிபுரிந்து குடியரசு தலைவர் பதவிவரை சென்று அவரது பிறந்த நாளை (செப்டம்பர் 5) ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் அளவுக்கு உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் என்கின்ற மாமனிதன்தான் அந்த பாக்கியவான்.

ஏழ்மையில் வாழ்ந்து வந்த தங்கள் குருவுக்கு வீடு கட்டிக்கொடுத்த மாணவர்களும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள். ராசிபுரத்திலிந்து திருச்சொங்கோடு செல்லும் வழியில்  குருசாமிப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 31 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர் புலவர் வெங்கட்ராமன். அன்புடனும், நட்புடனும் மாணவர்களுக்கு தமிழ் போதித்ததோடு ஊரின் முன்னேற்றத்திலும் அக்கறைக் காட்டினார். ஓய்வுக்குப் பிறகு வாடகை வீட்டில் வசித்து வந்தவருக்கு 2009 ஆம் ஆண்டு அவரது முன்னாள் மாணவர்கள் சேர்ந்து வீடு கட்டிக்கொடுத்து ‘குரு நிவாஸ்’ என பெயரிட்டு கிரஹப்பிரவேசமும் செய்து வைத்தார்கள்.

நாமெல்லாம் நமக்குப் பிடித்த ஆசிரியர்கள் ஓய்வு பெற்றாலோ அல்லது பணி இடமாற்றமானாலோ என்ன செய்வோம்? வருத்தப்படுவோம். கொஞ்சம் அழுவோம். சில நாட்கள் அவரைப் பற்றி பேசுவோம். பிறகு எப்போதாவது அவரது நினைவு வரும். அவ்வளவுதான். ஆனால் சமீபத்தில் (ஜூன் 2018) பகவான் என்ற ஆசிரியர் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் தன்னுடைய அர்பணிப்புப் பணியால்.

ஆசிரியராக அப்படி என்னதான் செய்தார் அவர்?

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்தான் பகவான் என்ற  அந்த இளைஞர்.

மாணவ மாணவிகளுக்கு ஆசிரிய தோரணை இல்லாமல் சக தோழனாக இருந்து அவர் ஆங்கிலப் பாடம் கற்றுத்தர, ஆங்கிலம் அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மிகவும்  பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் மட்டுமில்லாமல், அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை, அனைவரது சுகதுக்கங்களில் காட்டிய அக்கறை  காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கும் பிடித்தமானவராக மாறிப்போனார்.  இந்நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மாணவர்களுடன் அவர்கள் பெற்றோரும் சேர்ந்துகொண்டு பகவானை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தனர். இதை அறிந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் இவரது இடமாற்ற உத்தரவை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்கள்.

முதலில் குறிப்பிட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன், அடுத்து குறிப்பிட்ட புலவர் வெங்கட்ராமன், இறுதியில் குறிப்பிட்ட ஆங்கில ஆசிரியர் பகவான் இவர்கள் மூவரின் வாழ்வின் நிகழ்வுகளிலும் ஓர் ஒற்றுமை இருப்பதை கவனிக்கவும். இவர்கள் ஆசிரியர்களாக மட்டும் செயல்படவில்லை, அதையும் மீறி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அப்பா அம்மா அண்ணன் தம்பி நண்பன் என அனைவரின் இயல்புகளையும்  தங்கள் இயல்புடன் இணைத்துக்கொண்டனர். மேலும் சமுதாய நலனிலும் கவனம் செலுத்தி பற்றுடன் செயல்பட்டனர். இவற்றால் மட்டுமே மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பெற முடிந்தது.

வெறும் ஆசிரியராக செயல்பட்டிருந்தால் எடுக்கின்ற வகுப்புக்கும் கொடுக்கின்ற மதிப்பெண்ணுக்கும் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு ஒதுங்கியிருப்பார்கள்.

இதுவே வெவ்வேறு காலங்களில் ஆசிரியர்களாக பணிபுரிந்த இந்த மூவரும் சக ஆசிரியர்களுக்குச் சொல்லியுள்ள OTP.

‘உங்கள் கனவுகளை பின் தொடருங்கள். அவற்றுக்குத்தான் உங்கள் பாதை தெரியும்’ என பொருள்படும் ‘Always follow your dreams, They know the way’ என்ற தலைப்புடன், ஆசிரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை உணர்வுப்பூர்வமாய் உணர்த்திய 4.30 நிமிட குறும்படம்.

ஒரு ஸ்ட்ரீம் போட்டில் சீருடையில் பள்ளி மாணவ மாணவிகள்,  அலுவலகம் செல்பவர்கள் என அனைவரும் பயணம் செய்வதாய் தொடங்குகிறது.

ஒரு சிறுமி சீறிப் பாயும் தண்ணீரையும், கலைந்து செல்லும் மேகங்களையும் ஆனந்தமாய் ரசித்தபடி ஒரு நோட்டில் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள் இறங்க வேண்டிய இடம் வந்ததுகூட தெரியாமல். அதே போட்டில் பயணிக்கும் அவள் அப்பா அவளை சப்தமாகக் கூப்பிட, அவசரம் அவசரமாய் எழுந்து ஓடி வருகிறாள்.

வீட்டில் எல்லோரும் உறங்கிய பின்னர் டார்ச் லைட் வெளிச்சத்தில் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, தினமும் பயணம் செய்யும் போட்டில் தண்ணீர் மற்றும் காற்றின் ரம்யமான சப்தத்தில், பள்ளியில் உணவு இடைவேளையில் என எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு நோட்டில் ஓவியங்கள் வரைந்துகொண்டும், பெயிண்டிங் செய்துகொண்டும் எழுதியபடியும் இருக்கிறாள் அவள்.

பள்ளியில் மற்ற மாணவர்கள் தேர்வெழுதிக்கொண்டிருக்க, அவள் விடைத்தாளில் ஏதோ படம் வரைந்துகொண்டிருக்கிறாள்.

தேர்வின் முடிவு விடைத்தாளில் தெரிய, அதில் உள்ள படங்களைப் பார்த்த அவள் அம்மா அப்பா இருவரும் கவலைப்படுகிறார்கள்.

ஒருநாள் ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும்போது அவள் பாடத்தை கவனிக்காமல் தன் போக்கில் எழுதிக்கொண்டிருக்க அந்த ஆசிரியர் அருகில் வந்து அவளுடைய நோட்டை தன்னுடன் எடுத்து வந்துவிடுகிறார்.

முகம் சுருங்கிப் போகிறது அந்தச் சிறுமிக்கு. அடுத்தடுத்த நாட்கள் பள்ளியில், போட்டில், வீட்டில், படுக்கையில் என எல்லா இடங்களிலும் சோகத்துடனும் வளைய வருகிறாள்.

இதற்கிடையில் அவள் நோட்டை எடுத்து வந்த ஆசிரியர் அதை பிரித்துப் பார்க்கிறார். பக்கத்துக்குப் பக்கம் வண்ணமயமான பெயிண்டிங் மற்றும் ஓவியங்கள். அருகே பொருத்தமான வார்த்தைகளில் மழலை எழுத்துக்களில் கதை வசனம். அசந்து போன ஆசிரியர் தன் முன் இருந்த லேப்டாப்பையும், ஸ்கேனரையும் ஆன் செய்து அந்த நோட்டில் தேவையான பக்கங்களை ஸ்கேன் செய்கிறார். அவள் கைகளால் எழுதி இருந்த வார்த்தைகளை அந்தந்த இடங்களில் அப்படியே டைப் செய்து அழகான புத்தகமாக லே அவுட் செய்கிறார்.

அடுத்த சில நாட்களில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அந்த ஆசிரியர் கையில் ஒரு புத்தகத்துடன் மாணவ மாணவிகளுக்காக பேச ஆரம்பிக்கிறார். ‘எழுத்தாளர் என்பவர் யார்… பேனாவுடன் கனவுகளையும் சேர்த்து சுமக்கும் கற்பனையாளர். சில நாட்கள் முன்பு ஓர் அருமையான எழுத்தாளரின் புத்தத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்தவர்தான்…’ என சொல்லி அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து தன் கையில் பைண்டிங் செய்து வைத்திருந்த புத்தகத்தை அவளிடம் கொடுக்கிறார்.

கைதட்டல் மழையில் ஆனந்தக் கண்ணீருடன் ‘Princess of Mano and Magic Flowers’ என்று தலைப்பில் ‘By Paromita Sanyal’ என்று அவள் பெயருடன் கூடிய  வண்ணமயமான அந்த புத்தகத்தை பிரித்து பக்கம் பக்கமாய் பார்க்கிறாள்.

சக மாணவ மாணவிகளுடன் அவள் அம்மா, அப்பா, பாட்டி என அனைவரும் கைதட்டி மகிழ்கிறார்கள். அவள் கண்ணீருடன் முகம் முழுவதும் சிரிப்புடன் ஆசிரியரை கட்டித் தழுவுவதாக அந்த குறும்படம் நிறைவுறுகிறது. ஒரு லேப்டாப் நிறுவனத்துக்கான விளம்பரக் குறும்படமாக இருந்தாலும் ஆசிரியர் மாணவர் உறவுமுறையை நெகிழ்ச்சியாய் எடுத்திருக்கிறார்கள்.

வகுப்பில் பாடமெடுப்பதும், பரிட்சை நடத்துவதும், மதிப்பெண் அளிப்பதும், அதன் அடிப்படையில் ரேங்க்/கிரேட் போடுவது மட்டும் ஆசிரியர்களின் பணி அல்ல. தன் மாணவர்களிடம் எங்கோ ஒரு மூலையில் புதைந்து கிடக்கும் திறமையை கண்டறிந்து வெளிச்சப்படுத்துவதும் அவர்களின் தலையாயக் கடமை. முன்னது வாங்கும் சம்பளத்துக்கு உழைக்கும் உழைப்பு என்றால், பின்னது அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பணியின் தார்மீகக் கடமை என்பதை உணர்த்திய இந்தக் குறும்படச் செய்தி ஒவ்வொரு ஆசிரியருக்குமான OTP.

உயிரைக் காப்பாற்றும் கடவுளுக்கு நிகரானவர் என டாக்டரை வணங்குபவர்கள், எழுத்தறிவித்தவன் இறைவன் என குருவை கடவுளாகவே கொண்டாடுகிறார்கள். ஆசிரியர் கல்வியை போதிக்கும் ஆசானாக மட்டுமல்ல வாழ்க்கையையும் சேர்த்துக் கற்றுக்கொடுக்கும் சர்வ வல்லமை படைத்தவர்.

கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் இப்படி எல்லாமே எல்லா நேரங்களிலும் சிறப்பாக அமைந்துவிடாது. நல்லது என ஒன்றிருந்தால் கெட்டது என்பதும் இருக்கத்தானே செய்யும்.

பல்பு முதற்கொண்டு பல மின்சார உபகரணங்களைக் கண்டுபிடித்து உலகத்தில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசனை ‘மக்கு மாணவர்’ என அவரது பள்ளி நிர்வாகம் ஒதுக்கியது.

ஒரு நாள், ‘உங்களின் மகனுக்கு கவனிக்கும் ஆற்றம் இல்லை. அவனுக்கு  மனநிலை சரியில்லை எனக் கருதுகிறோம். அவனை எங்கள் பள்ளியில் படிக்க தொடர அனுமதிக்க முடியாது’ என்று எழுதி அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார் அவரது ஆசிரியர்.

எடிசனின் தாய் அதைப் படித்து முதலில் வருத்தப்பட்டாலும் சட்டென அதை துடைத்துப் போட்டு வைராக்கியத்துடன் மகனுக்கு தானே எழுதவும், படிக்கவும் சொல்லித் தர ஆரம்பித்தார். கணிதப் பாடத்திலும் தானே பயிற்சி அளித்தார்.

‘நீ அபாரமான புத்திசாலி.  அதுமட்டுமில்லாமல் தைரியசாலியும் கூட. எதிர்காலத்தில் உலகம் பாராட்டும் புகழ்பெற்ற மேதையாக உருவாகும் ஆற்றல் உன்னிடம் உள்ளது’ என்பது போன்ற தன்னம்பிக்கை வார்த்தைகள் மூலம் புத்தக அறிவுடன் சேர்த்து வாழ்க்கைக் கல்வியையும் விதைத்தார். இதன் காரணமாய் சுயமான அறிவுத் தேடல்மிக்க சிறுவனாக எடிசன் வளர்ந்தார்.

படிக்காத மேதையானார். பட்டங்கள் பெறாமலேயே கிட்டத்தட்ட 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, உலகில் அதிக கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அவற்றில் கிட்டத்தட்ட 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமையும் பெற்றார்.

இதெல்லாம் எப்படி சாத்துயமானது? எடிசனின் ஆசிரியர்கள் கைவிட்டாலும் அவரது அம்மாவே ஆசிரியராக மாறி அன்புடன் சேர்த்து அறிவையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்ததால் சாதாரண குழந்தைகளைவிட ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தார். தன் திறமையினால் மட்டுமே உலகப் புகழ் பெற்றார்.

தன்னம்பிக்கைமிக்க ஒரு தாய் வளர்க்கும் குழந்தை அவளைவிட பலமடங்கு தன்னம்பிக்கைமிக்கதாகத்தானே வளரும். இதுவே எடிசனின் தாய் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற OTP.

தேவையானபோது ஆசிரியர்கள் பெற்றோர் ரோலையும், பெற்றோர் ஆசிரியர் ரோலையும் தங்கள் கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டியதாகிறது.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP ‘ஆசிரியர்களே நீங்கள் மாணவர்களுக்கு மற்றொரு பெற்றோர்… மறந்துடாதீங்க!’

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 4
நவம்பர் 2018

(Visited 232 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon