Book Exchange Mela (Dec 2, 2018)

இன்று ஓர் இனிய நாள்…

சைட் எ புக் (siteabook)  இந்த App சார்பாக  புத்தக மாற்று மேளா சென்னையில் இன்று (டிசம்பர் 2, 2018) தி.நகர் ,கிருஷ்ணா தெரு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில்  உள்ள  இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறுகிறது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து வாசகர்களும் தங்கள் படித்த புத்தகங்களை  கொண்டு வந்து வேறு புத்தகங்களை மாற்றி கொள்ளலாம். இலவசமாக என்பது ஹைலைட்!

நேற்று போனில் என்னுடன் பேசிய திரு. வெங்கடகிருஷ்ணன் (இந்த App-ல் இணைந்து செயல்படுபவர்), ‘என்னுடைய மிகப் பெரிய FAN’ என்று அறிமுகம் செய்துகொண்டதோடு நான் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களின் எளிமையை பிரமாண்டமாக எடுத்துச்சொல்லி புத்தக மாற்று மேளா நிகழ்ச்சிக்கு அவசியம் வருமாறு அன்புடன் அழைத்தார்.

நானும் என்னிடம் இருந்த 10 புத்தகங்களை எடுத்துக்கொண்டு அப்பாவுடன் இன்று நிகழ்ச்சிக்கு மிகச் சரியாக 10.30 மணிக்குச் சென்றிருந்தேன்…

APP-ன் காரணகர்த்தாவுடன் அறிமுகம்

முதலில் இந்த APP-ஐயும் அதன் நிறுவனத்தையும் நடத்திவரும் திரு மணிகண்டன் கிருஷ்ணன் அவர்களுடன் அறிமுகம்…

இவர் IIM  பெங்களுருவில் படித்துவிட்டு பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் மிக உயரிய பதவிகளில் சுமார் 25 ஆண்டு  காலம் வேலைசெய்துவிட்டு, இந்த APP – ஐ உருவாக்கி அதன் நிறுவனத்தையும்  நடத்தி வருகிறார்.

இந்த APP குறித்து இவரே தொடர்ந்தார்.

‘இப்போது புத்தகங்களும் இருக்கிறது வாசகர்களும் இருக்கிறார்கள் இவர்களை எப்படி இணைப்பது. ரசனை சார்ந்த கூட்டத்தை எப்படி சேர்ப்பது. எங்கே விவாதிப்பது, யாரிடம் கருத்தை கேட்பது. நாம் ரசித்ததை யாரிடம் பகிர்வது , பிடிக்காத விருப்பு வெறுப்புகளை எங்கே பதிவு செய்வது?  அதற்கான தளம்  தான் இந்த சைட் எ புக்.

2017-ல்  ஆரம்பிக்கப்பட்ட சைட் எ புக் ஆப் முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று மொத்தம் 8 மொழிகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்களுடன் மிக பெரிய வாசகர் வட்டமாக உருவாகியுள்ளது…’ என்றார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த வயதில் குறைந்த குட்டிப் பையன்

புத்தக மாற்று மேளாவிற்கு வந்திருந்த வாசகர்களில் வயதில் குறைந்த மிக இளம் வயது சிறுவனை (3-1/2 வயது) அவன் அம்மாவின் பர்மிஷன் கேட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மிக அழகாக புத்தகங்களை கைகளில் அடக்கி வைத்திருந்த போஸ் அழகு.

நிகழ்ச்சி மேடையில் என் உரை

நிகழ்ச்சி மேடைக்கு என்னை புத்தகங்கள் குறித்து பேச அழைத்தார்கள். நிகழ்ச்சியின் ஆங்கர்கள் மிக அழகாக ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி என்னை இன்டராக்ட் செய்தார்கள்.

நான் எழுதிய ஏதேனும் ஒரு புத்தகத்தை என்னையே ரிவ்யூ செய்யச் சொன்னார்கள். விகடன் வாயிலாக வெளியான தெரிந்ததில் தெரியாத 100 தொழில்நுட்ப விவரங்களை உள்ளடக்கிய ‘கம்ப்யூட்ராலஜி’ என்ற என் 100-வது புத்தகத்தை ரிவ்யூ செய்தேன்.

மேலும் லேட்டஸ்டாக நான் படித்த ஒரு புத்தகம் குறித்தும் பேசச் சொன்னார்கள். இன்று காலை நான் படித்த திரு. இறையன்பு எழுதி ‘நியூ சென்சுரி புக் ஹவுஸ்’ வெளியிட்ட ‘பணிப் பண்பாடு’ என்ற புத்தகம் குறித்துப் பேசினேன்.

திரு காந்தி கண்ணதாசனின் சந்திப்பு

நிகழ்ச்சிக்கு திரு. காந்தி கண்ணதாசன் அவர்கள் 11.30 மணி அளவில் வருகை தந்தார். 2000-ல் நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்களை வெளியிட்டு அவற்றை தமிழகமெங்கும் கொண்டு சென்று ஏராளமான வாசகர்களைப் பெற்றுத்தந்தவர்.

தொழில்நுட்பம் நம் நாட்டில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்துக்கொண்டிருந்த காலத்திலேயே நான் எழுதிய சி++, டாட் நெட், விபி டாட் நெட், சி ஷார்ப் டாட் நெட் என தொழில்நுட்பப் புத்தகங்களை விளக்கச் சிடியுடன் பதிப்பித்து புதுமை செய்தவர்.

நிகழ்ச்சி மேடையில்  அவர் பேசிய போது எனக்கு கிரீடம் வைக்காத குறையாக என்னுடைய திறமைக்கும், உழைப்புக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் கொடுத்து கெளரவித்தார்.

‘கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருவது என்பதையும் தாண்டி,  தனி ஒரு மனுஷியாக கம்ப்யூட்டருக்காகவே தன் வாழ்நாளை டெடிகேட் செய்தவர்…. கம்ப்யூட்டர் குறித்து நிறைய இவர்தான் அதிக அளவில் புத்தகங்கள் எழுதியவர்… கம்ப்யூட்டர் என்றாலே காம்கேர் புவனேஸ்வரிதான் என்ற நிலை உருவாகி உள்ளது…. இப்போது ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். எழுத்தாளராக மட்டும் இல்லாமல் இவரே புத்தகங்களை பதிப்பித்தும் வருகிறார்’

என்று பெருந்தன்மையோடு  வெளிப்படையாக பாராட்டியதோடு கம்ப்யூட்டர் குறித்து தமிழில் எழுத, 3 விஷயங்கள் தேவை,

ஒன்று, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும்…

இரண்டாவது, தமிழ் தெரிந்திருக்க வேண்டும்…

மூன்றாவது, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்…

என்று என்னுடைய திறமைகளை சரியாக புரிந்துகொண்டு பொது மேடையில் பாராட்டிய அவருடைய பெருந்தன்மையை அனைவருக்கும் சொல்லவே இங்கு பகிர்ந்தேன். (சுயபுராணம் என்று நினைக்க வேண்டாம்)

புகைப்படங்களும், செல்ஃபிகளும்

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருந்தவர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பியதால் சில செல்ஃபிகளாலும், நியூஸ் சேனல்களில் இருந்து வந்தவர்கள் எடுத்த புகைப்படங்களாலும் இன்றைய தினம் வண்ணமயமானது.

நான் மாற்றி எடுத்து வந்த புத்தகங்கள்

நான் எடுத்துச் சென்ற புத்தகங்களை கொடுத்துவிட்டு நான் மாற்றி எடுத்துவந்த புத்தகங்கள்:

The Odyssey of Enlightement, Straightway to Success, ஸ்ரீமத் பகவத் கீதை – வனமாலா வ்யாக்யானம், ஆன்மிக வினாவிடை – 3 புத்தகங்கள்

பாலாஜி பவன் தினசரி காலண்டரிலும்

12.30 மணி அளவில் நானும் அப்பாவும் பாண்டி பஜார் பாலாஜிபவனுக்கு சாப்பிடச் சென்றோம். சாப்பிட்டு முடித்து வரும்போது சுவரில் மாட்டியிருந்த தினசரி காலண்டரை எதேச்சையாகப் பார்த்தேன்.

அதில் ‘புத்தகங்களின் தோற்றம் உள்ளத்தில் இருந்து கவலைகளைப் போக்குகிறது’ என்றிருந்தது. என்ன ஒரு Co-incident.

இன்று முழுவதும் புத்தகங்கள்… புத்தகங்கள்… புத்தகங்கள்…

இன்றைய நாள் இனிமையானதற்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
டிசம்பர் 2, 2018

 

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon