கனவு மெய்ப்பட[5] – தினம் ஒரு கிழங்கு! (minnambalam.com)

‘நாம் ஒரு முயற்சி செய்கிறோம். அதன் பலன் பாசிட்டிவாக இருந்தால் அது வெற்றி, நெகட்டிவாக இருந்தால் அது தோல்வி’ இப்படித்தான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம்முடைய முயற்சியே வெற்றிதான். நாம் எடுக்கின்ற முயற்சியின் பலன் நேர்மறையாக பாசிட்டிவ் பலனைக் கொடுக்கலாம், எதிர்மறையாக நெகட்டிவ் பலனைக் கொடுக்கலாம் அல்லது இரண்டுமே இல்லாமல் ஒரு செயல் நடைபெற்றது என்ற அளவில் எந்த பலனும் இல்லாமல் நியூட்ரலாகவும் இருக்கலாம்.

உண்மையில் முயற்சி செய்வதே வெற்றி. முயற்சி செய்யாமல் சோம்பி வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதுதான் தோல்வி.

முயற்சி செய்து தோல்வியே கிடைத்தாலும் நாம் எடுத்த முயற்சி கொடுக்கும் தன்னம்பிக்கை அளவிடமுடியாதது. மாறாக எந்த முயற்சியும் எடுக்காமல் சோம்பியே உட்காந்திருந்தால் அதுகொடுக்கும் சொர்வும் அளவிடமுடியாததுதான்.

முன்னது கொடுக்கும் தன்னம்பிக்கை நம்மால் இயலாத பல நல்ல விஷயங்களைக்கூட செய்ய ஊக்கமாக அமையும். பின்னது கொடுக்கும் மனச்சோர்வு நம்மால் முடியக்கூடிய செயல்பாடுகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும் வல்லமை பெற்றது.

இந்த இரண்டில் எது நமக்குத் தேவை என்பதை நாம்தான் உணர வேண்டும். முடிவெடுக்க வேண்டும்.

முயற்சிகள் பலவிதம், ஒவ்வொரும் ஒருவிதம்!

முயற்சி என்பது படிப்புக்காக இருக்கலாம், வேலைக்காகவோ தொழிலுக்காகவோ இருக்கலாம், காதலுக்காக இருக்கலாம், திருமணத்துக்காக இருக்கலாம்… இப்படி எந்த ஒரு விஷயத்துக்காக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நான்கு மாணவர்கள் அவர்களின் பெற்றோர் கட்டாயத்துக்காக இன்ஜினியரிங் படிக்கிறார்கள்.

முதல் மாணவன் படிப்பில் முழு கவனமும் செலுத்தி, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி ஐடி நிறுவனத்தில் பணியில் அமர்கிறான்.

இரண்டாம் மாணவன் படிப்புடன் கூடவே தன் தனித்திறமையான ஓவியத்துக்கு, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கற்றுகொண்டதால், கேம்பஸ் இன்டர்வியூவிலும் தேர்வாகி, தன் திறமைக்கான பணியான கிராஃபிக்ஸை பகுதி நேர பணியாகக்கொண்டு செயல்படுகிறான்.

மூன்றாம் மாணவன் படிப்பை பட்டம் பெற பயன்படுத்திக்கொண்டு, தன் தனித்திறமையான வீடியோகிராஃபி துறையில் சொந்தமாக பிசினஸ் தொடங்குகிறான்.

நான்காம் மாணவன் தன் பெற்றோர் விருப்பத்துக்காக இன்ஜினியரிங் சேர்ந்ததால் தனக்கு விருப்பம் இல்லாத அதை படிக்கவும் முடியாமல், முறையாக முடிக்கவும் முடியாமல், தன் தனித் திறமையான கர்நாடக  இசையில் தொடர்ந்து பயிற்சியும் எடுத்துக்கொள்ள நேரத்தையும் ஒதுக்க முடியாமல் கேம்பஸ் இன்டர்வியூவிலும் தேர்வாகாமல் வேலைக்கு அல்லாடி கஷ்டப்பட்டு தற்சமயம் அவன் படித்த படிப்புக்கும், அவன் தனித்திறமைக்கும் சம்மந்தமே இல்லாத மார்கெட்டிங் துறையில் பணியில் அமர்ந்துள்ளான்.

மேலே குறிப்பிட்ட நால்வருமே ஒரே கல்லூரி, ஒரே வகுப்பு, ஒரே படிப்பு என ஒத்த திசையில் பயணித்திருந்தாலும் அவர்களின் இலக்குகள் வெவ்வேறாக இருந்ததால் அவரவர் முயற்சிக்கும், உழைப்புக்கும் ஏற்ப அவரவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வு உண்டாகிறது.

இறுதியில் வாழ்க்கையின் மிக முக்கியப் பகுதியான வேலைக்கு சென்று பணம் ஈட்டுதல் என்ற இடத்தில் அனைவருமே ஜெயிக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். அவ்வளவுதான்.

பிரச்சனைகளை காட்டி வெற்றியை விரட்ட வேண்டாமே!

ஐ.ஏ.எஸ் அதிகாரியான டாக்டர் வெ.இறையன்பு எழுதிய ‘பணிப் பண்பாடு’ என்ற புத்தகத்தில் முயற்சியின் அவசியத்தை மிக அழகாகச் சொல்லி இருப்பார்.

இங்கிலாந்து நாட்டில் தாய் ஒருத்திக்கு மகளிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘தயவு செய்து டேபடில் மலர்களைக் காண இன்றேனும் வா’ என்று இடைவிடாத தொல்லை. மகளிடம் ‘உன்னையும் பேரக்குழந்தைகளையும் பார்ப்பதற்காகத்தான் பறந்து வந்தேன்’ என்றாள்.

‘அம்மா, இன்னும் சில நாட்களில் டேபடில் மலர்கள் பூப்பது நின்றுவிடும். உனக்கு அந்த அரிய காட்சியைக் காண்பிக்க வேண்டுமென்றுதான் அழைத்தேன் வா’ என்று அருகிலிருந்த இடத்துக்கு அவளே வாகனத்தை ஓட்டிச் சென்றாள்.

இறங்கும் வரை இருந்தது தாய்க்கு இதயத்தில் சலிப்பு. ‘அப்படி என்ன பெரிதாய் இருந்துவிடப் போகிறது’ என்பது அவளின் எண்ணம். ஆனால் இறங்கியவுடன் அவள் மனதைப் பூரிப்புத் தொற்றிக் கொண்டது.

ஒரே இடத்தில் அத்தனை மலர்களை அவள் பார்த்ததே இல்லை. அவள் சொற்கள் தடுமாறின. வார்த்தைகள் வழுக்கி விழுந்தன. அள்ளிப் பருகுவதைப் போல அதையே வெகுநேரம் பார்த்திருந்தாள்.

அதன் பிறகு மகளிடம், ‘இந்தத் தோட்டம் யாருக்குச் சொந்தம்’ என்று கேட்டாள்.

மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர்தான் இவ்வளவு பெரிய தோட்டத்தை மலர்களுக்காக மட்டுமே உருவாக்க முடியும் என்று தாய் நினைத்தாள்.

டேபடில் என்பது நெடுங்காலப் பூ, அது மார்ச் மாதத்தில் இருந்து மே வரை மட்டுமே வசந்த காலத்தில் இதழ்களை விரிக்கும் இனிய மலர். தாய் மகளிடம் ’இந்தத் தோட்டம் யாருக்குச் சொந்தம்?’ என கேட்டாள். அதற்கு மகள் தொலைவில் இருக்கும் குடிலைக் காட்டி ‘அங்கே இருக்கும் பெண்ணுக்குத்தான் இது சொந்தம்’ என்றாள். அந்தத் தாய்க்கு மகள் சொன்ன செய்தியை நம்ப முடியவில்லை. ‘நான் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமே’ என தன் விருப்பத்தைச் சொன்னாள்.

தன் தாயை அந்தக் குடிலுக்கு அழைத்துச் சென்றாள் மகள். குடியில் வயதான பெண்மணி அமர்ந்திருந்தாள். அவள் வீட்டு சுவரில் சூத்திரங்கள் போல சில வாசகங்கள்.

‘இந்தத் தோட்டத்தை நான் மட்டுமே உருவாக்கினேன்…

எந்தப் பணியாளரையும் பணி அமர்த்திக்கொள்ளவில்லை…

1958-ல் இந்தப் பணியைத் தொடங்கினேன்…

தினம் ஒரு கிழங்கை நட்டேன்…

ஒருநாள் கூடத் தவறாமல் ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து நடுகிறேன்…

இன்று காலையில்கூட அபூர்வ வண்ணம் கொண்ட ஒரு கிழங்கை நட நேர்ந்தது…

என் கவலைகளோ… அவ்வப்பொழுது வருகிற காய்ச்சலோ… என் முயற்சியைத் தடுத்து நிறுத்தவில்லை… ஒருநாள்கூட புதிய கிழங்கை நட நான் மறந்ததில்லை…’

குடிலில் இருந்து திரும்பி வருகிறபோது தாய் யோசித்தாள். ‘நானும்கூட இதைச் செய்திருக்கலாமே…’ என மகள் சொன்னாள்.

அதற்கு தாய், ‘இப்போதும் கூட ஒன்றும் ஆகிவிடவில்லை. நாளையில் இருந்துகூட தொடங்கலாம். தினம் ஒரு கிழங்கை நம்மாலும் நட முடியும். மகனின் படிப்பு முடியட்டும், மகளின் திருமணம் நிகழட்டும், வீடு வாங்கிய கடன் அடைபடட்டும், வண்டி வாங்கிய பிறகு தொடங்கலாம் என காத்திருக்காமல் முயற்சியை தள்ளிப் போடாமல் உடனடியாகத் தொடங்கலாம். அத்தனைப் பிரச்சனைகளையும் ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தொடர்ந்து செய்தால் நம்மாலும் ஒரு பூந்தோட்டத்தை உருவாக்க முடியும்…’ என்கிறாள்.

இந்தக் கதைத் தரும் தத்துவம் ஒரு பூந்தோட்டத்தை உருவாக்குவதற்காக மட்டும் அல்ல… வாழ்க்கையில் நாம் தள்ளிப் போட்டுக்கொண்டிருக்கும் அத்தனை விஷயங்களுக்காகவும்தான்.

பிரச்சனைகளின் ஊடே பிரமாண்டத்தைப் படைக்கும் திறன் நம் ஒவ்வொருக்குள்ளும் சோம்பிச் சுருண்டுள்ளது. அதை தட்டி எழுப்பி விஸ்வரூபம் ஆக்குவதும், சுருண்டதை தட்டிக் கொடுத்து அதன் போக்கில் மூலையில் முடக்கிவிடுவதும் நம் கையில்தான் உள்ளது.

முயற்சியே வெற்றி என்ற வாழ்க்கைப் பாடம்!

முயற்சி என்பது ஏதோ பாசிட்டிவ் விஷயங்களுக்கு மட்டும்தான் அவசியம் என நினைக்க வேண்டாம்.

நமக்கு நேர்ந்த ஒரு பாதிப்பில் இருந்து வெளி வருவதற்கும் அதே முயற்சிதான் தேவையாக உள்ளது. முயற்சி செய்யாவிட்டால் நம் மனம் அதன் போக்கில் தோல்வியுடன் பயணம் செய்ய ஆரம்பித்து புதைகுழிக்கு அழைத்துச் சென்றுவிடும்.

நம் மனதை பாதிப்பில் இருந்து வெளிவர நாம்தான் முயற்சி செய்து பக்குவப்படுத்த வேண்டும். நிதர்சனத்தைப் புரிய வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி. அந்த பாதிப்பை எப்படி எல்லாம் சரி செய்ய முடியும் என கண்டறிந்து அதன் உச்ச நிலைவரை முயற்சிக்க வேண்டும். அப்போதும் முடியவில்லை என்றால் நேரத்தை விரயம் செய்வதைவிட்டு வேறு வேலையைப் பார்க்கச் செல்லலாம். அதற்கு மனதைப் பக்குவப்படுத்தவே முயற்சியும் அதுசார்ந்த உழைப்பும்.

அதற்கு என் வாழ்க்கையில் ஒரு அனுபவம்.

பத்தாம் வகுப்புப் படிக்கும்போது, பள்ளி ஆசிரியை ஒருவரின் சூழ்ச்சியினால் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களைத் தவிர மற்ற 3 சப்ஜெக்ட்டுகளின் விடைத்தாளின் கடைசி மூன்று பக்கங்கள் குறுக்கே அடிக்கப்பட்டு, மாநிலத்தில் முதலாவதாக வர வேண்டும் என்ற என் கனவில் இடி விழுந்ததோடு, பள்ளியில்கூட முதலாவதாக வர இயலாமல் போனது.

அன்று என் பெற்றோர் எடுத்த முடிவுதான் இந்த நிமிடம்வரை என்னை இயக்கும் தன்னம்பிக்கைக்கான வித்து.

இப்போதுபோல மதிப்பெண் மறுமதிப்பீட்டல் எல்லாம் அன்று அத்தனை சுலபமல்ல. ஆனால், எதற்கும் அஞ்சாமல் ரிசல்ட் வந்த அன்றே சென்னை வந்து பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் நடந்ததை உறுதி செய்துகொண்டோம். அந்த ஆசிரியை மீது புகார் கொடுக்க நீதித்துறையை அணுகினோம்.

நீதிபதி மிக நேர்மையாக ‘இந்த கேஸில் பள்ளியின் முழு ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். எந்தப் பள்ளியும் தங்கள் பள்ளி ஆசிரியர் குறித்த வழக்கிற்காக உங்களுக்கு ஆதரவு கொடுத்து தேவையான ஆவணங்களைக் கொடுக்க மாட்டார்கள்… இது தற்காலிக பின்னடைவுதான்… வருங்காலத்தில் முன்னேற்றப் பாதையைத் தேடிச் செல்வது தான் புத்திசாலித்தனம்’ என அறிவுரை கூறி எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வழக்கு போடவும் அது தொடர்பாக அலையவும் செலவு செய்யவும் நாங்கள் அப்படி ஒன்றும் பெரும் செல்வந்தர்கள் அல்ல. அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் சென்று என்னையும் என் தம்பி தங்கைகளையும் படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கும் நடுத்தர குடும்பப் பின்னணிதான்.

ஆனாலும் என் பெற்றோரின் துணிவுதான் எங்களுக்குள் தன்னம்பிக்கையாக உருமாறி எங்களை வழிநடத்துகிறது.

எந்த ஒரு நியாயமானப்  பிரச்சனைக்கும் நம்மால் முடிந்த அளவு போராட வேண்டும், போராட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் நாம் முயற்சித்தோம் என்ற தன்னிறைவு கிடைக்கும். அதுவே நாம் எடுக்கும் முயற்சிக்கான வெற்றி என்ற ஆழ்ந்த உண்மையை எங்களுக்குள் வித்திட்டார்கள் எங்கள்  பெற்றோர்.

யோசிப்போம்!

மின்னம்பலத்தில் படிக்க…https://minnambalam.com/k/2018/12/07/4

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 5

(Visited 151 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon