இங்கிதம் பழகுவோம்[11] சுதந்திரத்தின் லகான் உங்கள் கைகளில் இருக்கட்டும்! (https://dhinasari.com)

வருடா வருடம் எங்கள் நிறுவனத்துக்கு பிராஜெக்ட் செய்வதற்காக கல்லூரி மாணவ மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வருவது வழக்கம்.

இப்படி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தங்கும் இடத்தையும் நாங்கள் ஏற்பாடு செய்வோம். அது எங்கள் பணி இல்லை என்றாலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி. குறிப்பாக மாணவிகளுக்காக இதில் அதிக கவனமெடுப்போம்.

விடுதிகளை போனில் தொடர்புகொண்டு விசாரித்து, நேரிலும் சென்று பார்த்து பேசி, விடுதியை சுற்றிப் பார்த்து, பாதுகாப்பு எப்படி உள்ளது என அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து தன் பிள்ளைகளுக்கு எப்படி பார்த்துப் பார்த்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவாறோ அப்படி வெளியூர்களில் இருந்து சென்னை வரும் கல்லூரி மாணவிகளுக்கு விடுதியை கவனமாக ஏற்பாடு செய்வார் என் அப்பா.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் திருச்சி கல்லூரியில் இருந்து ஐந்தாறு பேட்ச் மாணவிகள் பிராஜெக்ட்டுக்கு சேர்ந்திருந்தார்கள். கல்லூரிக்குக் கொடுக்க வேண்டிய ஒப்புதல் கடிதம் கொடுத்து முறையாக எல்லா பிராஜெக்ட் சம்பிரதாயங்களையும் முடித்தாயிற்று.

ஒரு சில பேட்ச்களுக்கு விடுதிகளிலும், விடுதியில் இடம் கிடைக்காத ஒரு பேட்ச் மாணவிகளுக்கு எங்கள் நிறுவனத்துக்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசதிகள் செய்துவைத்திருந்தோம். காலை முதல் இரவு வரை சாப்பாட்டுக்கும் அருகில் இருந்த மெஸ்ஸில் ஏற்பாடு செய்தோம்.

பிராஜெக்ட்டுக்கு சென்னை வர வேண்டிய தேதியை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதால் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை முடித்துவிட்டு போனிலும், இமெயிலிலும் தகவல் கொடுத்துவிட்டோம்.

அந்த மாணவிகளிடம் இருந்தோ அவர்கள் பெற்றோரிடம் இருந்தோ இது தொடர்பாக விசாரிக்கக் கூட போன் எதுவும் வரவில்லை.

திடீரென ஒரு நாள் திருச்சியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறி அமர்ந்தவுடன் ஒரு மாணவி போன் செய்தாள். அப்போது நேரம் மாலை 5 மணி.

‘மேடம் நாங்கள் இப்போதுதான் கிளம்புகிறோம்…’  – மாணவி.

‘இப்பவே மாலை 5. சென்னை வந்து சேர இரவு 10 மணி 11 மணி ஆகும். இடையில் பஸ் பிரேக் டவுன் ஆனால் என்ன செய்வது… இரவு நேரத்தில் வரும்படி இப்படியா தனியாகக் கிளம்புவது…’ – நான்.

‘மேடம்…’ – மாணவி.

‘சரி, கூட அப்பா அம்மா யாராவது பெரியவர்கள் வந்திருக்கிறார்களா?’ – நான்.

‘இல்ல மேடம், நாங்க 8 பேர் மட்டும் கிளம்பி இருக்கோம்…’ – மாணவி.

‘பஸ்ஸில் ஏறிய பிறகு போன் செய்கிறீர்களே. வீட்டில் இருந்து கிளம்பும் போதாவது போன் செய்திருக்கலாமே… பஸ்ஸில் சிக்னல் கிடைக்கலை அல்லது வேறு ஏதேனும் கோளாறினால் பேச முடியவில்லை என்றால் எப்படி  தொடர்பு கொள்வீர்கள்…’ என கடிந்து கொண்டு ‘சரி… பத்திரமா வந்து சேருங்கள்…’ என்று முடித்தேன்.

ஏதோ மாப்பிள்ளை வீட்டாருக்காகக் காத்திருப்பதுபோல அந்த மாணவிகளின் வருகைக்காக காத்திருந்தோம்.

இரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தார்கள் அந்த வீர மங்கைகள்.

வீட்டைத் திறந்து அவர்களுக்கு தூங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொடுத்து நாங்கள் தூங்க இரவு 1 மணி ஆனது.

பெண் குழந்தைகளாயிற்றே என இப்படி பர்சனலாக பார்த்துப் பார்த்து ஏற்பாடுகளை நாம் செய்தாலும், அவர்கள் பெற்றோருக்கோ அல்லது அந்த மாணவிகளுக்கோ இரவு நேரம், முதன்முறை தனியாக சென்னைப் பயணம் என எந்த பயமோ தயக்கமோ இல்லை.

அண்மையில் சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு பெண்கள் விடுதியில் ரகசிய கேமிராக்கள் வைத்து பெண்களை வீடியோ எடுத்து வருவதை அந்த விடுதிப் பெண்கள் மொபைல் ஆப் மூலம் கண்டறிந்து போலீஸில் புகார் அளிக்க அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து பரவலாக எல்லா மீடியாக்களிலும் ‘பெண்களே உஷார்… இரகசிய கேமிராக்கள் உங்களை கவனிக்கின்றன…’ என்பதே செய்தி.

கைது செய்யப்பட்ட ஆண்களின் முகத்துடன் கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்லும் புகைப்படத்தையும் போட்டு அதன் கீழ்

‘ஆண்களே… கேமிராக்களை வைத்து பெண்களை சீரழித்தால் இப்படித்தான் கைது செய்யப்பட்டு அவமானப்படுவீர்கள்… தண்டனை அடைவீர்கள்… தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு…’ என்றல்லவா(என்றுமல்லவா) செய்திகள் பரவ வேண்டும்.

பெண்களை உஷார் செய்ய வேண்டியதுதான். ஆனால் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு என்பதையும் ஆண்கள் மனதில் விதைத்து உஷார் செய்ய வேண்டியதும் அவசியம் தானே.

என்னைக் கேட்டால் முன்னதை விட பின்னது அதிமுக்கியம்.

இந்த செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து, வெளி உலகில் பெண்களுக்கு ஆபத்துக்கள் மிகுந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாமாகவே நமக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமே என்கிற ஆதங்கம்தான் எனக்கு.

வெளியூரில் இருந்து சென்னை வந்து பிராஜெக்ட் செய்யும் பெண்களுக்கு உதவுவதற்காகவே ‘கல்லூரி பிராஜெக்ட்’ என்ற புத்தகத்தை எழுதி  ‘நியூ சென்சுரி புக் ஹவுஸ் (NCBH)’ பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளேன்.

வெளியூருக்கு பிராஜெக்ட்டுக்காக தங்கள் பிள்ளைகளை (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்) அனுப்பும் பெற்றோர்கள் அவர்கள் எங்கு பிராஜெக்ட் சேர்ந்துள்ளார்கள், எந்த இடத்தில் தங்குகிறார்கள் அவற்றின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள், தொடர்புகொள்ள வேண்டிய நபரின் பெயர் போன்றவற்றையும், அவர்களின் சக நண்பர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

 என் பெண் (அல்லது பையன்) எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள்… தைரியசாலி என்ற நம்பிக்கை இருக்க வேண்டியதுதான். ஆனாலும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் சுதந்திரம் எனும் அஸ்திவாரத்தின் ஒரு முனையை உங்கள் கைகளில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 18, 2018

தினசரி டாட் காமில்  லிங்க்…  https://dhinasari.com/?p=63632

தொடரும்…

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் டிசம்பர் 18, 2018  

(Visited 116 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon