நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கையாளர்!

டாக்டர் ஆர். ஜெயசந்திரன்…

என்னுடைய இந்த வருடப் பிறந்த நாளுக்கு என்னை சந்திக்க வந்த முக்கியமான நபர்.

இவரைப் பற்றிய முக்கியமான விஷயத்தை நான் கடைசியில் தான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொன்னால் இந்தப் பதிவை யாருமே படிக்காமல் கடந்துவிடுவீர்கள் என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.

இரு கண்பார்வையும் இழந்த மாற்றுத்திறனாளி. கல்லூரி முதல்வர்.

‘எதற்காக கஷ்டப்படுகிறீர்கள் நானே வந்து சந்திக்கிறேன்…’ என்று சொல்லியும் கேட்காமல் தானே நேரில் வந்து சந்தித்தார்.

மலேசியா, சீனா போன்ற வெளிநாடுகளுக்கு தனி நபராகச் சென்று  கருத்தரங்குகளில்  தமிழிலும் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியிருக்கும் இவருக்கு சென்னையில் தனிநபராக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடம் செல்வது கடினமா என்ன?

இளமை பருவமும், பள்ளிப்படிப்பும்

1963-ம் ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள குமளம் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் திரு. ரங்கசாமி, திருமதி. தனலஷ்மி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் இவர்.

இவருடைய மூன்று வயதில் அம்மை போட்டதன் காரணமாக கண் பார்வைத்திறனை இழந்தார்.

பார்வைத்திறன் உள்ளவர்களைப் போலவே படித்து, பட்டம் பெற்று, தமிழில் Ph.D செய்து டாக்டர் பட்டமும் வாங்கியவர். பார்வையற்றோருக்கான கடலூர் அரசு பள்ளியில் 5-ம் வகுப்புவரையிலும், பார்வையற்றோருக்காக பூந்தமல்லியில் இயங்கிவரும் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் படித்தார். பி.ஏ, எம்.ஏ இரண்டும் சென்னை பச்சையப்பா கல்லூரியில். எம்ஃபில் மற்றும் பி.எச்.டி இரண்டும் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியப் பிரிவில்.

படிப்பதற்கு ப்ரைலியும் டேப் ரெகார்டரும், தேர்வெழுத ஸ்க்ரைப் உதவி என பள்ளிப் படிப்பில் இருந்து டாக்டர் பட்டம் வரை கல்வியில் கரைகண்டவர்.

கம்ப்யூட்டர் ஆர்வம்

1995 ஜனவரியில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 8-வது உலக தமிழ் மாநாடு நடைபெற்றபோது கம்ப்யூட்டர் இல்லாமல் இனி வரும்காலம் இல்லை என்பதை உணர்ந்து கம்ப்யூட்டர் பயில வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. 2001-ல் பூந்தமல்லியில் இயங்கிவரும் National Institute of Visually Handihapped (NIVH) நிறுவனத்தில் 1-1/2 மாதம்  ஜாஸ் என்ற டைப் செய்யச் செய்ய ஒலிவடிவில் வெளிப்படுத்தும் சாஃப்ட்வேர் (Speech Enabled Software) மூலம் கம்ப்யூட்டர் பயிற்சி. 2002-ல் கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா வித்யாலயாவில் 10 நாட்கள் கம்ப்யூட்டர் பயிற்சி.

பிறகு சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்கி இன்டர்நெட் தொடர்பை பெற்று முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பித்தார். ஜே. கிருஷ்ணமூர்த்தி உரைகளைத் தொடர்ச்சியாகக் கேட்டு தன்னைப் பண்படுத்திக்கொண்டார். வள்ளலார் குறித்து ஆராய்சிகள் செய்து ‘சிறந்த சன்மார்க்கத் தொண்டர்’ என்ற விருது பெற்றார். அதில் கிடைத்த விருதுத்தொகையை வைத்து ‘அறநெறிக் கல்வி அறக்கட்டளை’ தொடங்கி அதன் மூலம் பார்வையற்றோருக்கு தன்னால் முடிந்த அளவு உதவி வருகிறார்.

இவருடைய சேவையில் காம்கேரும், நானும்…

இவருடைய பிறந்த நாளான மார்ச் மூன்றாம் தேதி பார்வையற்றோருக்காக தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என தான் கற்றறிந்ததை தன்னைபோல் பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்.

2003-ம் ஆண்டு பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளிக்கான ஒர்க்ஷாப்புக்கு இவர் ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கருத்தரங்கில் டாக்டர் பட்டம் பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டார்கள். அனைவருமே பார்வைத்திறன் இழந்தவர்கள்.

என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அதில் நான் பேச்சாளராக மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஜாஸ் எனப்படும் திரையைப் படிக்கும் சாஃப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டரை அவர்களாகவே பயன்படுத்தும் பயிற்சியை அறிமுகப்படுத்தவும் அந்த நிகழ்ச்சி.

2003-ல் இருந்து தொடங்கி இன்றுவரை (2018) கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ஒவ்வொரு மார்ச் 3-ம் தேதியும் இவரது பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஒதுக்கி வருகிறேன். அன்றைய தினம் இவர் நடத்தும் கருத்தரங்கில் தொழில்நுட்பப் பயிற்சி, லேட்டஸ்ட் அப்டேஷன் என கம்ப்யூட்டர், மொபைல் சார்ந்த தொழில்நுட்பக் கலந்துரையாடல்களுடன் நிகழ்ச்சியில் ஒன்றிவிடுவேன்.

தற்சமயம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்க்ரைப் உதவியுடன் மட்டுமே தேர்வெழுதி வருகிறார்கள். எங்கள் காம்கேர் மூலம் இவர்களுக்காகவே ஸ்க்ரைப் சாஃப்ட்வேர் உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் அவர்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்ய செய்ய, கம்ப்யூட்டர் அதை படித்துக்கொண்டே வரும். இதனால் ஸ்க்ரைப் உதவி இல்லாமலேயே பார்வைத்திறன் அற்றவர்கள் தாங்களாகவே தேர்வெழுத முடியும். இதை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் டெமோ செய்து காண்பித்துள்ளோம். பீட்டா வெர்ஷனில் தற்போதுள்ள இந்த சாஃப்ட்வேர் விரைவில் பரவலாக எல்லா கல்வி நிறுவனங்களிலும் அமலுக்கு வரும்.

பணியும், மன நிறைவும்!

விருதாச்சலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் லெக்சுரராக தன் பணியைத் தொடங்கியவர் சீனியர் லெக்சுரர், அசோசியேடிவ் புரொஃபசர், தமிழ்த்துறைத் தலைவர் (HOD) என தன் திறமையினால் படிப்படியாக பணி உயர்வு பெற்று சென்னை பிரசிடென்சி கல்லூரி உட்பட சில கல்லூரிகளில் பணிபுரிந்து தற்சமயம் திருத்தணி சுப்ரமணிய ஸ்வாமி அரசுக் கலைக்கல்லூரியில் கல்லூரி முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இவரது தன்னம்பிக்கைக்கு சில உதாரணங்கள்

கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட், உயர்ரக மொபைல், சாஃப்ட்வேர்கள் என்று தொழில்நுட்ப விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்யும் இவர், கார் வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார். ஏன் என்று காரணம் கேட்டதற்கு அவர் கொடுத்த விளக்கம் வியக்க வைத்தது.

தொழில்நுட்ப விஷயங்கள் உலக நடப்புகளை நான் அறிந்து கொள்ளவும், என் பணிச் சுமையைக் குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது. குறிப்பாக நானே அவற்றை நேரடியாகப் பயன்படுத்த முடிவதால், அவை எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்கின்றன.

ஆனால் கார் வாங்கினாலும், காரை நான் ஓட்ட முடியாது. பிறரை நம்பித் தான் சொந்த காரில் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே, எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது. அதற்கு பதிலாக, எப்போது வெளியில் செல்ல வேண்டுமோ, அப்போது போன் செய்து சொன்னால், அடுத்த கால் மணி நேரத்தில், கால் டாக்ஸி வீட்டு  வாசலில்  வந்து நமக்காகக் காத்திருக்கப் போகிறது. நாம் கம்பீரமாக காரில் சென்று வரலாம்.

கல்லூரிக்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் சஃபாரி சூட்டும், பளிச்சென சுத்தம் செய்யப்பட்ட ஷூவும் இல்லாமல் செல்ல மாட்டார். தன்னை எப்போதும் பிரசன்டபிளாக வைத்துக்கொள்வார்.

வெளியில் சென்றால் நல்ல ஓட்டலில் சாப்பாடு, போனில் அழைப்பு வந்தால் யார் என தெரிந்துகொண்டு பேச வசதியாக கையில் Speech Recognition Software இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் என ஹைடெக்காக சூழலை அமைத்துக்கொள்வார்.

தன் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கும், கான்வகேஷன் போன்ற விழாக்களுக்கும் செல்லும்போது Speech Recognition Software இன்ஸ்டால் செய்யப்பட்ட லேப்டாப்புடன் ஆஜர் ஆவார். அதில் பிரசன்டேஷ்னகள் வெளிபப்டுத்தி பேசுவார்.

வெளியில் எங்கேனும் செல்ல வேண்டும் என்றால் யாருடைய தயவையும் எதிர்பார்க்க மாட்டார். தனியாகவே கார் புக் செய்துகொண்டு கிளம்பி விடுவார்.

இவருடைய மகள் எம்.பி.ஏ படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். மனைவி ஆசிரியராகப் பணியில் இருக்கிறார்.

நிறைவான வாழ்க்கை.

இவரது வெற்றிக்குக் காரணம்

இவர் எப்போதும் கம்பீரமாக இந்த உலகுக்குச் சொல்லும் கருத்தைக் கேட்டால் நம் எல்லோருக்குமே தன்னம்பிக்கைத் தொற்றிக்கொள்ளும்.

‘கண் தெரிபவர்களை விட நான் மகிழ்ச்சியா இருக்கிறேன்… நான்  நிறைய படிக்கிறேன்… நான் நன்றாக சாப்பிடுகிறேன்… நான் நிம்மதியாக தூங்குகிறேன்…  நான்தான் சந்தோஷமா இருக்கிறேன்…’

இதை இந்த முறையும் சொன்னார். இன்னும் அழுத்தமாக… ஆழமாக…

வயதும், அனுபவமும் கூடக் கூட இவரிடம் உள்ள தன்னம்பிக்கை ஏறுமுகமாகவே இருப்பதைப் பார்த்து நான் அதிசயத்து வருகிறேன்.

எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ இயற்கை துணை நிற்கவும், இறைவன் அருள்புரியவும் பிராத்திக்கிறேன்.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 9, 2018

(Visited 145 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon