‘Uncompromised Honesty’ – நம் சுயத்தை மற்றவர்களும் உணரும்போது…

எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்களுடனான சந்திப்பு….

முன்பும் திட்டமிடவில்லை. எதிர்பாராத சந்திப்பும் இல்லை. ஆனாலும் ஒருநாள் சந்தித்தோம்.

எழுத்து, பேச்சு, நாட்டு நடப்பு, கொஞ்சம் அரசியல், நிறைய தொழில்நுட்பம் என பல விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம்.

வயது வித்தியாசமோ பணிபுரியும் களமோ தினமும் இயங்குகின்ற தளமோ எந்த விதத்திலும் ஒருவரை ஒருவர் பாதிக்காமல் இருவரின் உரையாடலும் அமையப்பெற்றது வரம்.

நம்மை நாம் அறிவோமே!

என்னை பலரும் வாழும் விவேகானந்தர் என்றும், பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும், பெரியார் கண்ட புரட்சிப் பெண் என்றெல்லாம் அவரவர் புரிந்துகொண்ட விதத்தில் விமர்சிப்பார்கள்.

நான் நானாக இருக்கிறேன். என் வாழ்க்கை முறை விவேகானந்தர், பாரதி, பெரியார் இவர்கள் சொன்ன கருத்துக்களோடு ஒத்துப் போகிறது. அவ்வளவுதான். நான் அவர்கள் சொன்னதைப் போல வாழ இம்மியும் முயற்சிக்கவில்லை. அதுவே உண்மை.

இந்த கண்ணோட்டம் குறித்து திரு. மாலன் அவர்களிடம் பேசியபோது அவர் சுருங்கச் சொன்ன ஒரு விஷயம் ஆழமான நிறைய செய்திகளைச் சொன்னது.

நாம்…

நம்மைப் பற்றிய நம் கணிப்பு…

நம்மைப் பற்றிய பிறரது கணிப்பு…

இந்த மூன்றுக்குமான இடைவெளி குறைந்தால் நல்லது என சுருக்கமாக சொன்னார்.

இவர் சொன்னதைக் கேட்டபோது நான் அடிக்கடி மற்றவர்களுக்குச் சொல்வதுதான் நினைவுக்கு வந்தது.

‘நம்முடைய எண்ணம், செயல், பேச்சு, எழுத்து, மூச்சு என அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும். வாழ்க்கை வேறு, வேலை வேறு என நம் இயல்புகளை பிரிக்கும்போதே நம் சுயத்தை இழந்து விடுகிறோம். வாழ்க்கையில் நாம் பின்பற்றுவதை ஆத்மார்த்தமாக உணர்வதைத்தான் நம் பணி என்னவாக இருந்தாலும் அதில் பின்பற்ற வேண்டும்… அப்படித்தான் என்னால் செயல்பட முடிகிறது…’

என் வாழ்க்கையில் பின்பற்றிவரும் இந்த கருத்துக்களும், திரு.மாலன் சொன்ன சுயம் குறித்த கருத்துக்களை இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்து அலசியபோது இறுதியில் கிடைத்த தீர்வும் ஒன்றாகவே இருந்தது.

அசைபோட்டு ஆராய்ந்ததில் பல ஆழமான கருத்துக்கள் மனதுக்குள் குவியத்தொடங்கின.

அதன் சாரம்சம்:

நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணாதிசயங்களுடன், பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்துவருகிறோம். கலப்படமே இல்லாமல் நாம் நாமாக இருக்கும் சுயம் அதுதான்.

ஆனால் சமுதாயத்தில் பல்வேறு சூழல் காரணமாக சர்வைவல் செய்வதற்காக நாம் நம்மைப் பற்றிய ஒரு மேம்படுத்தப்பட்ட பிம்பத்தை வைத்துக்கொள்வோம் அல்லது வளர்த்துக்கொள்வோம். உதாரணத்துக்கு நாம் தான் மற்ற எழுத்தாளர்களைவிட சிறப்பாக எழுதுகிறோம் என்றோ, நாம் தான் மற்றவர்களைவிட அழகாக இருக்கிறோம் என்றோ திறமை சார்ந்தோ, அழகியல் சார்ந்தோ அல்லது என்னபிற காரணிகள் சார்ந்தோ நம்மை அறியாமல் நம்முள் கூடவே ஒரு பிம்பமும் வளர்ந்துகொண்டே வரும்.

இது இல்லாமல் மற்றவர்கள் நம் மீது ஒரு பிம்பத்தை வளர்த்து வைத்திருப்பார்கள். உதாரணத்துக்கு, நாம் அமைதியான சுபாவமாக இருப்போம். பிறர் நம்மை கோபக்காரராகவோ, தமாஷாகப் பேசுபவராகவோ அவரவர் கோணத்தில் அவரவர் தளத்தில் அவரவர் களத்தில் இருந்து நமக்கான பிம்பத்தை வளர்த்திருப்பார்கள். பெரும்பாலும் அதுவே நம் அடையாளமாகவும் மாறிப் போகிறது.

உண்மையில் நம் சுயமே நம் அடையாளமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. நம்மைப் பற்றிய பிறரது பிம்பங்களே ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவி நம்முடைய நிரந்தர அடையாளமாகிப் போகிறது. மாற்ற முயற்சித்தாலும் முடிவதில்லை.

ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு நான் சொன்ன பதிலும்…

‘நீங்கள் உங்கள் பணியில் இத்தனை உறுதியாகவும், நேர்மையாகவும் அதே சமயம் அன்பாகவும், கனிவாகவும் இருக்கிறீர்கள்… உங்கள் வீட்டிலும் அப்படியே இருப்பீர்களா…’

‘வீடு, அலுவலகம் இரண்டிலும் நீங்கள் சொன்ன அத்தனை பண்புகளோடும்தான் இருப்பேன். எனக்கு வாழ்க்கை வேறு, பணி வேறு என்று இரண்டாக பிரித்து வாழும் திறன் இல்லை… இரண்டு முகங்களுடன் வாழத் தெரியவில்லை…’ என்றேன்.

பேட்டி முடிந்து கிளம்பும்போது அவர்கள் ‘Uncompromised Honesty இதுதான் நீங்கள்…’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்…

இன்னும் நேர்மையாக உண்மையாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்த அங்கீகாரம்….

நம் சுயத்தையே மற்றவர்களும் உணரும்போது  மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?

படிப்பும் கருத்தும் மனதுக்குள் படிந்தால் மட்டுமே மனம் விசாலமாகும்

மிக நிறைய புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உள்ள நடுத்தர வயது எழுத்தாளர் ஒருவர்… படிப்பது மட்டுமல்ல அதை நினைவில் வைத்திருந்து தேவையான போது எடுத்துச் சொல்வதிலும் வல்லவர். யாருக்கேனும் சந்தேகம் வந்தால் இவரை என்சைக்ளோபீடியா போல பயன்படுத்துவார்கள்.

ஆனால் பர்சனல் லைஃபில் பூஜ்ஜியம். அப்படி ஆனதுக்குக் காரணம் முழுக்க முழுக்க அவருடைய குறுகிய மனப்பான்மையே.

இவர் குறித்தும் பேசினோம். ‘படிக்க படிக்க மனசு விசாலமாக அல்லவா ஆக வேண்டும்’ என நான் கேட்டதற்கு திரு. மாலன் கொடுத்த பதில்…

‘படித்து… படித்ததில் உள்ள கருத்தை உள்வாங்கினால் மட்டுமே மனசு விசாலமாகும். படிப்பதையும் அதிலுள்ள கருத்துக்களையும் தான் எழுதும் படைப்புகளுக்கும், மேடையில் பேசுவதற்கும் பயன்படுத்தும் ஒருவரின் மனது எப்படி விசாலமாகும்… படிப்பதை பயன்படுத்துவார்கள்…. உள்வாங்க மாட்டார்கள். உள்வாங்கிக்கொள்பவர்கள் மனதில் நிச்சயம் மாற்றம் உண்டாகும்… பிரச்சனைகள் மீதான அவர்களின் கண்ணோட்டமும் வித்தியாசமாக இருக்கும்…’

இந்தக் கருத்தில் வியந்தேன்.

ஒரு சந்திப்பும் சில நிமிட பேச்சுவார்த்தைகளுமே நம் மனதுக்குள் நுண்ணிய கருத்துக்களால் நிரம்பி, அவை நம் மனதுக்குள் சென்று ஏதோ ஒரு தாக்கத்தை உண்டு செய்யும்போது பலதரப்பட்ட புத்தகங்களை படிக்கின்ற ஒருவரின் மனதுக்குள் எதுவே செல்லாமல் எப்படி தடுத்து நிறுத்தி தன் தேவைக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்த முடிகிறது?

ஆச்சர்யமான முரண்.

வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான ஃபார்முலா

அடுத்து வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவையான விஷயங்கள் குறித்த பேச்சு வந்தது. அதற்கும் அருமையான ஃபார்முலா ஒன்றைச் சொன்னார் திரு. மாலன்.

1.Willingness to learn (கற்றுக்கொள்வதில் ஆர்வம்)

2.Capacity for hardworking (கடுமையாக உழைக்கக்கூடிய சக்தி)

3.Burning desire to succeed (வெற்றிபெற வேண்டும் என்கின்ற வெறித்தனமான விருப்பம்)

கற்றுக்கொள்வதில் ஆர்வமும், கடுமையாக உழைக்கக்கூடிய சக்தியும், வெற்றிபெற வேண்டும் என்கின்ற வெறித்தனமான விருப்பமும் சரி விகிதத்தில் இருக்கும் ஒருவருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் முன்னேற்றம்தான்.

வயதோ, படிப்போ, பணமோ இதற்குத் தடை கிடையாது. அவரவர் வயதுக்கு ஏற்ப, படிப்புக்கேற்ப, பண வசதிக்கு ஏற்ப அவரவர்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோளுக்கு ஏற்ப முன்னேற்றமும் அது சார்ந்த வெற்றியும் கிடைக்கப்பெறும்.

முயற்சியில் கிடைக்கின்ற பலனை வெற்றி தோல்வி என வைத்துக்கொள்ள வேண்டாமே. எடுத்துக்கொண்ட குறிக்கோளுக்காக நாம் எடுக்கின்ற முயற்சிக்கான பலனை ‘குறிக்கோளில் முன்னேற்றம்’ என வைத்துக்கொள்ளலாம்.

Willingness, Capacity, Burning desire – இந்த மூன்றும் மேலே சொன்ன வரிசையில் இருந்தால் மட்டுமே அந்த ஃபார்முலா சரியாக வேலை செய்யும். சற்றே வரிசை மாறினாலும் பிரயோஜனமில்லை.

அதாவது Willingness for Hardworking, Capacity to Learn என்றோ, Burning desire to learn, Capacity to succeed என்றோ இருக்குமேயானால் ஆங்கிலத்தில் அதன் பொருள் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் முன்னேற்றத்துக்கான ஃபார்முலா சரியாக பலனளிக்காது.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
டிசம்பர் 10, 2018

 

(Visited 141 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon