ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்…’

2019 சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் நேற்று நடைபெற்ற (06-01-2019, ஞாயிறு) ஷெண்பாவின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ புத்தக வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் புத்தகத்தை வெளியிட நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன்.

நேற்று விடுமுறை தினமாக இருந்ததால் கொஞ்சம் கூட்டம் அதிகம். புத்தகக் கண்காட்சி முழுவதும் விழாக் கோலம்… ஸ்டால்களில் உள்ள கூட்டத்தைவிட மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்களின் கூட்டம் அதிகமோ எனத் தோன்றியது.

விழா மேடையில்…

விழா மேடையில் என்னுடன் இயக்குநர் கலைமாமணி எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மற்றும் எழுத்தாளர் திருமிகு. லதா சரவணன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக…

திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மேடையில் என்னைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார். எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாகப் பேசினார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்னை மேடையில் அறிமுகம் செய்துவைத்தபோது 100 புத்தகங்கள் எழுதி உள்ளீர்களா என வியந்து பாராட்டினார்.

மேலும் என் நிறுவனம் காம்கேர் குறித்தும், அப்பா அம்மா குறித்தும்  பல்வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர் உரையாற்றும்போது அவற்றையும் சேர்த்துக் குறிப்பிட்டார்.

குறிப்பாக என் எல்லா செயல்களுக்கும் உறுதுணையாக பக்கபலமாக என் பெற்றோர் இருப்பதை குறிப்பிட்டுச் சொன்னதுடன், அப்பாவை மேடையிலும் தனிமையிலும் பாராட்டி அவரை நெகிழச் செய்தார்.

ஷெண்பாவின் நின்னைச் சரணடைந்தேன் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பேசிய சாராம்சம்…

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வேலை அல்லது தொழில் செய்கிறோம். பணத்துக்காகத்தான் பணிசெய்கிறோம் என்றாலும் நம் ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை இருக்க வேண்டும்.

அந்த வகையில் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் சமூக அக்கறை என்பது நிறையவே வேண்டும். ஏனெனில் எழுத்து என்பது பலரது மனநிலையை மாற்றம் ஏற்படுத்தக் கூடிய ஒன்று. எழுத்தைத்தாண்டி எழுத்தாளர்களை தெய்வீக நிலையில் கொண்டாடுபவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எழுத்தாளர்களை அவர்கள் எழுத்தின் வாயிலாக மட்டுமே பார்ப்பார்கள்.

அந்தவகையில் ஷெண்பாவின் எழுத்துக்களில் நேர்மறை சிந்தனைகள், வாழ்வியல், நட்பு, சமூக அக்கறை என எல்லாமே ஒரே பாஸிட்டிவ்தான்.

ஷெண்பாவை எனக்கு 2016 ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் அவரது சுபம் பப்ளிகேஷன் ஸ்டாலில்தான் முதன் முதலில் சந்தித்தேன். இவர் சிறுவயதில் இருந்தே என் புத்தகங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பார்த்திருப்பதாக அறிமுகம் செய்துகொண்டு நட்பானார்.

2018 ஏப்ரல் மாதம் சிருஷ்டி குழுமத்தின் மூலம் அமிழ்தம் இ-மேகசின் தொடங்கியபோது அதுதொடர்பான சின்னச் சின்ன தொழிநுட்ப விவரங்களுக்காக தொடர்ந்த நட்பு இப்போது இவரது புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதன்மைப் பிரதியைப் பெற அன்புடன் அழைத்ததுவரை தொடர்கிறது.

‘வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு’

என்ற திருக்குறளுக்கு ஏற்ப ‘ஒரு எழுத்தாளராக தானும் வளர்ந்து, பதிப்பாளராக தன்னைச் சார்ந்தவர்களையும் உயர்த்தும் நிலைக்கு தன்னை வளர்த்துக்கொண்டவர்’. இதுதான் ஷெண்பாவைப் பற்றிய ஒரு வரி குறிப்பு.

எழுத்தின் மீது மட்டுமில்லாமல் எல்லா கிராஃப்ட் வேலைகளிலும் ஈடுபாடு கொண்டவர். ஏன் ஸ்போர்ஸையும் விட்டு வைக்கவில்லை. படிக்கின்ற காலகட்டத்தில் ஸ்போர்ட்ஸ் சேம்பியன். இப்போது தஞ்சாவூர் பெயிண்டிங்கில் தன் தனித்திறமையை நிரூபித்து வருகிறார்.

இப்படி பலதரபட்ட திறமைகளை சிறிய வயதிலேயே வளர்த்தெடுத்ததால் அவற்றை ஒருமுகப்படுத்தி தன் எழுத்து என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி படைப்புகளை வெளியிட முடிகிறது.

பெரும்பாலும் ஒருகுறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குபவர்கள்  அந்தத்துறையில் மட்டுமில்லாமல் மல்டி பர்சனாலிடிகளாக திகழ்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு பெண் எப்போது தேவதையாக இருக்கிறாள், எப்போது சூனியக்கார பாட்டியாக மாறிவிடுகிறாள் என குட்டிக் கதைச் சொன்னேன்.

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பணி சார்ந்த என் துறை தொழில்நுட்பமாக இருந்தாலும் அதன் மூலம் நான் பெறும் அனுபவங்களை எழுத்து, பேச்சு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைப் படைப்புகள், ஆவணப்படங்கள்,  யுடியூப் சேனல் நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் வெப்சைட் என எல்லா தளங்களிலும் என் கிரியேடிவிடியை பலதரபட்ட ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்து இதுவரை 130-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன்.

என் 12 வயதில் எழுதத் தொடங்கி 21 வயதுக்குள் கதை, கவிதை, கட்டுரை என 100-க்கும் மேற்பட்ட படைப்புகள் மூலம் ஒரு எழுத்தாளராக  அறிமுகமானேன்.

ஆனாலும்…

இலக்கியம் என்ற ஒரு வரையறைக்குள் என்னை முத்திரைக்குத்திக்கொள்ளாமல் இதுநாள்வரை இலக்கிய நிகழ்வுகளை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்து வந்துகொண்டிருந்த என்னை…

அவரது ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் கெளரவத்தை எனக்கு வழங்கி தன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்துள்ள ஷெண்பாவின் எழுத்தும் பதிப்பகமும் மென்மேலும் உயர என் வாழ்த்துகளும் பிராத்தனைகளும்!

விழாவின் ஹைலைட்:

நான் சொன்ன திருக்குறள் உவமையும், குட்டிக் கதையும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

விழாவில் திரு. எஸ்.பி.முத்துராமன் அவர்கள் உரையாற்றும்போது என் பேச்சின் நயத்தையும், நான் சொன்ன திருக்குறள் உவமையையும், குட்டிக் கதையையும் பாராட்டினார். தான் எந்த மேடையிலும் திருக்குறள் இல்லாமல் பேசுவதில்லை எனவும், ஆனால் இந்தமுறை நான் திருக்குறள் உவமையைச் சொல்லிப் பேசியதை ரசித்து பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தார்.

ஷெண்பாவின் கணவர் திரு. பாலசந்தர், கணவரின் சகோதரி உட்பட ஷெண்பாவின் பெற்றோர், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், நட்புகள் என ஒரு குடும்ப விழாவாக இனிமையாக நடைபெற்றது.

மிக மனநிறைவான அற்புதமான நாளாக அமைந்தது.

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜனவரி 6, 2019

(Visited 60 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon