கனவு மெய்ப்பட[11] – வளையத்துக்குள் சர்கஸ் சிங்கங்கள்! (minnambalam.com)

வெற்றி பெற்றவர்களை உற்று நோக்கினால் ஒரு உண்மை புலப்படும். அவர்கள் தங்கள் Comfort Zone  விட்டு வெளியே வந்து தங்கள் வாழ்க்கையை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.

புதிதாக திருமணம் ஆன ஒரு பெண் டெல்லிக்குச் செல்கிறார். டிகிரி படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லை. இந்தி சுத்தமாக தெரியாது. இந்தி இல்லாமல் டெல்லியில் காலம் தள்ளுவது கடினம்.

அவர் சைகை மொழியை வைத்தே காய்கறி கடை, சூப்பர் மார்கெட் போன்ற இடங்களில் எப்படியோ சமாளிக்கிறார். மாதக்கணக்கில் இப்படியே செய்து வருகிறார். அதுவே அவருக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார். எனவே இந்தி கற்கவோ அல்லது பேசவோ முயற்சிக்கவேயில்லை.

அவர் தன் Comfort Zone விட்டு வெளியே வர விரும்பவில்லை. அதற்குக் காரணம் பயம். தயக்கம். கூச்சம். சோம்பேறித்தனம்.

இதுவே சுற்றுலாத்தலங்களில் படிப்பறிவே இல்லாத ஒரு ஆட்டோ டிரைவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பேசிக் கலக்குவதை நாம் காண முடியும்.

காரணம் அவர் தன் Comfort Zone விட்டு வெளியே வந்து தான் பிழையுடன் பேசினாலும் அது குறித்து கவலைப்படாமல் தப்பும் தவறுமாக பேச ஆரம்பித்து நாளடைவில் சுற்றுலா வருகின்ற மக்களுடன் பேச வேண்டிய அவசியமான அத்தனை வாக்கியங்களையும் சரளமாகவும் சரியாகவும் பேசவும் கற்றுக்கொள்கிறார்.

முன்னவர் Comfort Zone விட்டு வெளியே வர விரும்பவில்லை. அவசியமும் இல்லை என்ற சூழல். பின்னவர் Comfort Zone விட்டு வெளியே வரவில்லை என்றால் பிழைப்பு நடத்துவதே கடினம். இதுதான் டெல்லி பெண்ணுக்கும், சுற்றுலாத்தல டிரைவருக்கும் உள்ள வித்தியாசம்.

பொதுவாகவே ஒரு குழந்தை பிறந்தது முதலே Comfort Zone என்ற வளையத்தை மாட்டிவிடுகிறோம். 2 வயதில் மழலை மாறுவதற்குள் திருக்குறளை ஒப்பிக்க வேண்டும். 5 வயதில் பள்ளிக்குச் செல்லும் முன்னரே ஆங்கிலத்தில் அகிலத்தையே ஆள வேண்டும். பள்ளிப் படிப்பில் எப்பவும் முதல் மதிப்பெண் பெற வேண்டும். படித்து முடித்தவுடன் இன்ஜினியர், டாக்டர் என ஏதேனும் ஒரு ஹைகிளாஸ் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும். கேம்பஸிலேயே தேர்வாகி ஐடி நிறுவனத்துக்குள் சென்றுவிட வேண்டும். அடுத்த இரண்டு வருடங்களுக்குள் ஆன்சைட் பிராஜெக்ட்டுக்காக அமெரிக்கா சென்றுவிட வேண்டும். முப்பது வயதுக்குள் சொந்தமாக வீடு, கார் வாங்கிவிட வேண்டும். அதை தகுதியாக வைத்து திருமணம் குழந்தை என செட்டில் ஆகி இருக்க வேண்டும்.

இப்படி பல ‘வேண்டும்கள்’ என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

இதில் எங்கேனும் சறுக்கினால் போச்சு… பிழைக்கத் தெரியாத, வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒரு ஜீவனாகக் கருதி முத்திரைக் குத்தி ஒதுக்கிவிடுவார்கள். இப்படி ஒதுக்கப்படாமல் இருக்கவே பெரும்பாலானோர் Comfort Zone விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். அந்த வளையத்துள்ளேயே சாகசம் புரியும் சர்கஸ் சிங்கங்களாய் சுழல்கிறார்கள்.

முடிவெடுக்கும் உரிமையை தாரை வார்க்காதீர்!

நான் 1992-ஆம் ஆண்டு எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சென்னை வந்து காம்கேர் சாஃப்ட்வேர் என்ற ஐடி நிறுவனத்தை தொடங்கினேன். இதுவும் ஒரு வகையில் Comfort Zone விட்டு வெளியே வந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் செயல்பாடுதான்.

சிறு வயதில் இருந்தே பாடபுத்தகங்கள் தாண்டி ஏராளமான புத்தகங்கள் படிக்கும் வழக்கம் இருந்ததால், என் பெயரில் தயாரிப்புகள், படைப்புகள், கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்பது எனது பெருங்கனவானது. அதுவே, நான் தொழில் தொடங்குவதற்கும் உந்துதலாக இருந்தது.

என்னுடன் படித்தவர்கள் ஒருசிலர் ஆசிரியராகவும், பேராசிரியராகவும் வேலைக்குச் செல்ல, ஒருசிலர் அரசு பணிக்கு தேர்வெழுதிக்கொண்டிருக்க, இன்னும் சிலர் தங்கள் தந்தையுடன் அவர் செய்யும் தொழிலில் மூழ்கிப் போக, நானோ எனக்கான பாதையை என் முயற்சியில் உருவாக்கினேன்.

அதற்காக என் படிப்பு, உழைப்பு, திறமை இவற்றை மூலதலமாக்கினேன். கூடவே பெற்றோரின் முழு ஆதரவும் இருந்ததால் என் Comfort Zone விட்டு வெளியே வந்து வாழ்க்கையை எதிர்கொள்வது சுலபமானது.

ஆனால் வெளி உலகில்தான் என் கவனத்தை சிதறடிக்க எத்தனை எத்தனை முயற்சிகள்.

உன் படிப்பை வீணடிக்கிறாய்….

பெரிய நிறுவனங்களில் ஐடி துறையில் முயற்சிக்கலாமே

நல்ல சம்பளத்தில் அரசு உத்யோகத்தில் நுழையலாமே

ஆசிரியர் அல்லது பேராசிரியராகலாமே…  

திருமணத்துக்குப் பிறகு பிசினஸ் ஒத்துவராது…

அமெரிக்காவில் ‘ஜாம் ஜாம்என்று செட்டில் ஆவதை விட்டு இங்கிருந்து சொந்த பிசினஸ் ஆரம்பித்து கஷ்டப்படணுமா

இப்படி ஆயிரம் ஆலோசனைகள். அறிவுரைகள்.

கூடவே…

‘நல்ல மதிப்பெண் வாங்கி இருக்க மாட்டாள்’

‘அரியஸ் இருக்குமா இருக்கும்…’

‘சென்னையில் படிக்கவில்லை…. திருச்சி, மயிலாடுதுறைன்னு படிச்சிருக்கா… ஆங்கிலம் தெரியாம இருக்கும்…. அதான் இண்டர்வியூவில் செலெக்ட் ஆக முடியவில்லை…’

எல்லாவற்றையும் விட

‘இவளுக்கு அந்த அளவுக்கு பக்தி கிடையாது. அதான் கடவுள் ஒரு நல்ல வேலையைக் கூட கொடுக்கல…. ஏதோ பிசினஸ் அது இதுன்னு அல்லாடறா’

என்ற அபத்தமான கமெண்ட்தான் வேடிக்கை.

என் Comfort Zone விட்டு வெளியேறிய இந்த 25 ஆண்டுகளில் எனக்கான பாதையை உருவாக்கி வடிவமைத்து அதில் வெற்றியும் அடைந்துள்ளேன். தொழில்நுட்ப உலகில் ‘காம்கேர்’என்ற அடையாளத்துடன் ஒரு ஐகானாகவும் மாறியுள்ளேன்.

இப்படி Comfort Zone விட்டு வெளியேறும் தைரியம் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. தங்கள் முடிவுகளை தாங்கள் எடுக்காமல் அந்த உரிமையை மற்றவர்களிடம் தாரை வார்த்துக்கொடுத்துவிடுவதும் ஒரு காரணம்.

கணிதம் படித்தும் தொழிலதிபர் ஆகலாம்!

மிக சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட THE JOURNEY – FUELLED BY DETERMINATION என்ற புத்தகத்தை படித்தேன்.

SSN என்று மூன்றெழுத்துக்களில் அனைவராலும் அறியப்படும் திரு. எஸ். சங்கரநாராயணன் (1912-1987) அவர்களின் சுயசரிதை புத்தகம் இது. ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் திரு. ரமணன்.

ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து கல்லூரியில் கணிதம் படித்து கிடைத்த ஆசிரியர் வேலையை ஒதுக்கி தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டு, அதில் மிக உறுதியாக நின்று தொடர்ந்து பல்வேறு தொழில்களைத் துவங்கி உயரங்களையும் துயரங்களையும் சந்தித்த ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணக் கதைதான் இந்தப் புத்தகம்.

தோல் பொருட்களை விற்பனை செய்வதில் தொடங்கிய SSN, வாழ்க்கையில் Master Cutter, Army Clothing Supplier, Civil Engineering Contractor, Master Printer, Steel Drum Manufacturer, Agriculturist என்று பல துறைகளில் உச்சம் தொட்டவர்.

இறுதியில் இவர் மகன் சீதாராமனுடன்  இணைந்து Super Auto forge Private Limited (SAF) என்ற நிறுவனத்தைத் துவக்கி, Cold Forging Technology தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய தொழிலதிபராக அவதாரம் எடுத்தார். இன்று இந்த நிறுவனத்தின் மொத்த வியாபாரம் பல கோடிகளைத் தொட்டாலும், மிக  எளிமையான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள்.

1928–ல் கணிதத்தை மேஜராக எடுத்து கல்லூரியில் காலடி எடுத்து வைத்த SSN, படிப்புடன் சேர்த்து இசை, ஆங்கில இலக்கியம், ஸ்போர்ட்ஸ் மற்றும் நாடகக் கலை இவற்றில் ஆர்வமாக இருந்தார். டென்னிஸ், வாலிபால் என அனைத்திலும் ஈடுபாடு காட்டினார். தினமும் உடற்பயிற்சி செய்து தன்னை ஹெல்தியாக வைத்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டினார்.

கல்லூரி முடிந்ததும் மாதம் 30 ரூபாய்க்கு ஆசிரியர் பணி கிடைத்தது. ஆனால் SSN மனம் முழுவதும்  பிசினஸ் ஆர்வமே.

காரணம் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவருக்கு ஏற்பட்ட 2 அனுபவங்கள்.

முதலாவதாக, பள்ளியில் மாணவர்களின் பிராஜெக்ட் ஒன்றுக்கு தனிப் படங்கள் தேவையாக இருந்தன. ஆனால் மார்க்கெட்டில் நிறைய படங்கள் அடங்கிய சார்ட்டே கிடைத்தது. SSN அதை வாங்கிவந்து மாணவர்களுக்குத் தேவையான படங்களை மட்டும் கட் செய்து விற்று பணம் சம்பாதித்தார்.

இரண்டாவதாக, தஞ்சாவூரில் படித்து வந்த போது ஒரு சில்க் வியாபாரி, மிகப் பெரிய அளவில் செலவு செய்து தன் மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்தார். ஐந்து நாட்கள் முன்னணி கலைஞர்களை ஏற்பாடு செய்து இசை நிகழ்ச்சியுடன் கூடிய கலகலப்பான திருமணம்.

SSN அந்த வியாபாரிக்கு, ஸ்பீக்கர் மற்றும் ஆப்ளிஃபையர் வைத்தால் இசை நிகழ்ச்சிகள் இன்னும் அருமையாக இருக்கும் என யோசனை சொல்ல அதை அவரும் ஏற்க சென்னையில் இருந்து அதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார் SSN.

இந்த ஏற்பாட்டுக்காக சென்னையில் இருந்து வரவழைத்த எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டரிடம் இருந்து 100 ரூபாய் கமிஷன் கிடைத்தது.

இதுபோன்ற சின்ன சின்ன அனுபவங்கள் SSN மனதில் பிசினஸ் ஆர்வத்தை வளர்த்தன.

இயல்பிலேயே புத்திசாலியாக இருந்த SSN தன் சிறு வயதிலேயே ஏராளமான வெவ்வேறு துறைசார்ந்த நூல்களை படித்ததன் காரணமாக அறிவாளியாகவும் திகழ்ந்தார்.

படிப்பு மட்டும் இல்லாமல் பல்துறை ஆர்வம் உள்ளவர்களால் மட்டுமே வாழ்க்கையில் தன் Comfort Zone தாண்டியும் வேலை செய்ய முடியும். ரிஸ்க் எடுத்து செயல்பட முடியும். வெற்றி தோல்வி எதுவந்தாலும் கவலைப்படாமல் அடுத்தடுத்து நகர்ந்துகொண்டே இருக்க முடியும். இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் SSN.

ஒவ்வொருவருக்கும் அவரவர்கள் Comfort Zone விட்டு வெளியே வந்து செயல்பட ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அது சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஏன் அது உப்பு சப்பில்லாத விஷயமாகக் கூட இருக்கலாம். ஆனால் நிச்சயம் ஒரு தாக்கம் இல்லாமல் Comfort Zone விட்டு வெளியே வர இயலாது.

அதுபோல Comfort Zone வளையத்துக்குள்ளேயே இருப்பதற்கும் காரணங்கள் உண்டு. அவை பெரும்பாலும் பயம், தயக்கம், கூச்சம், சோம்பேறித்தனம் என பொதுவானதாகவே இருக்கும்.

யோசிப்போம்!

ஆன்லைனில் மின்னம்பலத்தில் படிக்க… https://minnambalam.com/k/2019/01/19/12

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
@ மின்னம்பலம் டாட் காம்
வெள்ளிதோறும் வெளியாகும் தொடரின் பகுதி – 11

(Visited 160 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon