சூழல் காட்டும் திறமை

திறமையும் ஆர்வமும் வெவ்வேறு. திறமை என்பது நம்மிடம் இருந்து ஏதேனும் வடிவத்தில் வெளிப்படக் கூடியது. ஆர்வம் என்பது ஏதேனும் ஒரு விஷயத்தின்பால் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாடு.

முன்னதை கொஞ்சம் பிரயத்தனப்பட்டால் வளர்த்துக்கொள்ள முடியும். பின்னதை அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் ஈடுபாடு இருக்கும் துறை அத்தனையிலும் நமக்குத் திறமை இருக்க வேண்டும் என்பதில்லை.

மேலும் திறமை பெரும்பாலும் உழைப்பு சார்ந்தது. ஆர்வம் ரசனை சார்ந்தது.

திறமை, ஆர்வம் இந்த இரண்டுமே இல்லாமல், ‘சூழல்’ காரணமாய் ஒரு துறைமீது ஈடுபாடு ஏற்பட்டு அதுவே வாழ்வாதாரமாக மாறி பின்னர் அதுவே ஒருவரது தனித்துவத்தை வெளிப்படுத்தும் திறமையாகவும் மாறிப்போவதுண்டு.

உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா?

இதென்ன கேள்வி… யாருக்காவது சிரிக்கத் தெரியாமல் இருக்குமா?

பிறரை சிரிக்க வைப்பதையே வேலையாக அல்லது தொழிலாக செய்துவரும் திரு. சம்பத் (சிரிப்பானந்தா) தன் 25 வயதுவரை வெகு சீரியஸ் டைப். அவர் எப்படி மற்றவர்களை சிரிக்க வைக்கும் பணியை ஏற்று அதில் தனக்கென ஒரு இடத்தை எப்படி பிடிக்க முடிந்தது?

இதனை ‘மறைந்திருக்கும் திறமை’ (Hidden Talent) எனலாம்.  ‘சூழல்’ இந்த வகை திறமையை வெளிக்கொணரும்.

அப்படி என்ன சூழல் இவருக்கு ஏற்பட்டது?

இவர் தன் பெற்றோர் விருப்பத்துக்காக பி.ஏ சேர்ந்து அதை முழுமையாக முடிக்காமல் விட்டவர். உடனடியாக நிதி சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறார். அதன்பின்னர் தொலைதூரக் கல்வியில் பி.எஸ்.ஸி. கணிதம் சேர்ந்து, தேர்வெழுத விடுப்பு கிடைக்காததால் அதையும் முழுமையாக முடிக்க முடியவில்லை.

2000-ல் தான்பணிபுரிந்து அனுபவம் பெற்ற நிதி சார்ந்தத் துறையிலேயே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கி முதலீட்டு ஆலோசகரானார். மேலும் அந்த அனுபவத்தை வைத்தே தொலைதூரக் கல்வியில் எம்.காம் பட்டமும் பெறுகிறார்.

இவர் வேலையில் இருந்தபோது ‘டார்கெட்’ முடித்துக்கொடுக்க வேண்டிய பணி அழுத்தம் மன அழுத்தமாகி, தன் 25 வயதில் இன்சுலின் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய நீரிழிவு நோய்க்கு ஆளானார்.

அப்போது டாக்டர்கள் கொடுத்த அறிவுரையின்படி யோகா, தியானம் எல்லாம் கற்றார். 2010 –ல் டாக்டர் மதன் கட்டாரியா அவர்களிடம் சிரிப்பு யோகாவும் கற்றுக் கொண்டார்.  இவரிடம் ஆசிரியர் பயிற்சியையும், நடத்துனர் பயிற்சியையும் பெற்று சான்றிதழும் பெறுகிறார்.

இதற்குப் பிறகு இவருடைய மன அழுத்தம் குறைந்து நீரிழிவின் தாக்கமும் கட்டுக்குள் வந்தது.

வாழ்வாதாரத்துக்கு முதலீட்டு ஆலோசகர் என்ற பணியை செய்துவந்தாலும், சிரிப்பு யோகா கற்றுக்கொடுத்தலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும்தான் பூரண சந்தோஷம் கிடைக்கிறது என்கிறார்.

25 வயதுவரை சீரியஸ் டைப்பாக இருந்த இவர் எப்படி தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பதையே தன் பணியாக மாற்றிக்கொள்ள முடிந்தது?

இவர் தனது நீரிழிவு நோய்கான தீர்வை தேடியபோது ஏற்பட்ட கட்டாயச் சூழல், இவரிடம் இருந்த சீரியஸ் தன்மையை விலக்கவும், உள்ளுக்குள் இருந்த பேரானந்தத்தை வெளிக்கொணரவும் உதவியதோடு, அதையே முக்கியப் பணியாக மாற்றிக்கொள்ளவும் உதவியுள்ளது.

இதுபோல உங்களுக்குள்ளும் Hidden Talents இருக்கும். சில நேரங்களில் அவை வெளிப்பட சூழல் உருவாகும். நீங்களாகவும் பரிசோதனை முயற்சியில் சூழலை உருவாக்கி திறமையை வெளிக்கொணரலாம்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 30, 2019

(Visited 98 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon