சேவை மனப்பான்மையும் தொழில் வாய்ப்பும்!

மாணவர்களின் ஆர்வம் என்ன, திறமை என்ன என்பதைக் கண்டறிந்து இரண்டும் ஒருங்கிணையும் ஒரு புள்ளியை அவர்களின் எதிர்காலமாகக் கொண்டு அதற்கான வாய்ப்பைத் தேடுவதில்தான் அவர்களின் வெற்றி உள்ளது.

அந்த வகையில் பிறருக்கு உதவும் மனப்பான்மைகூட ஒரு திறமைதான். அதனடிப்படையில் அவர்கள் பணியை தேர்ந்தெடுக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செய்யப்படும் பணிகள் மனித உறவுகள் தொடர்பான தொழில்களிலும், சமூக நலப் பணிகளிலும் அடங்கும்.

இப்போதெல்லாம் சமூக நல ஊழியர்கள் பட்ட மேற்படிப்புப் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதில் முனைவர் பட்டமெல்லாம் பெற்றிருக்கிறார்கள். இதனால் பிரச்சினைகளைக் கையாளும் திறன் இவர்களுக்கு இருக்கிறது. பள்ளி, மருத்துவமனை, தொழிற்சாலை, அலுவலகம், சிறைச்சாலைகள் என்று பல இடங்களில் இவர்களது பணிகள் தேவைப்படுகின்றன.

இதில் ஏராளமான வேலைவாய்ப்புகளும், தொழில்வாய்ப்புகளும் உள்ளன.

தொண்டு செய்வதையே தன் முழுநேரப் பணியாக எடுத்து கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சாதித்து வரும் சேவாலயா தொண்டு நிறுவன உரிமையாளர் முரளிதரன், பள்ளி கல்லூரி படிப்பில் டாப் ரேங்கராகத் திகழ்ந்தவர்.

மேலும் இளம் வயதிலேயே தன் ஆர்வம் என்ன திறமை என்ன என்பதைக் கண்டறிந்து தனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தவர்.

இவர் தன் சிறுவயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவதை தன் ஆர்வம் எனவும் சொல்லி இருக்கிறார் ஒரு நேர்காணலில்.

வெற்றி பெற்ற ஒவ்வொருவரின் வாழ்க்கை கிராஃபையும் உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் ஆர்வமும் திறமையும் மட்டுமே அவர்களை வெற்றிமேடையில் அமர்த்தியிருப்பதை உணர முடியும்.

தன் 16,17 வயதில் ‘ராகமாலிகை’ என்ற கையெழுத்துப் பிரதி ஒன்றை நடத்தி வந்தார். காந்தி, விவேகானந்தர், பாரதி இவர்களின் கொள்கைகளை கதை கவிதை கட்டுரையாக கையாலேயே எழுதி படம் வரைந்து ஒரே ஒரு பிரதி மட்டுமே தயாரித்து அதை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பகிர்ந்து கொண்டு படிப்பார்களாம்.

அதைத்தொடர்ந்து  ‘விவேகானந்தா அசோசியேஷன்’ என்ற அமைப்பை தன் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்படுத்தினார். அதன் மூலம் விடுமுறை நாட்களில் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம், பார்வையற்றவர்கள் காப்பகம் என சென்று அவரவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வந்தார்.

பெங்களூரில் ஐ.ஐ.எஸ்ஸில் இன்ஜினியரிங் சேர்ந்தபோதும் இந்தத் தொண்டு அமைப்பின் செயல்பாடுகளை விடவில்லை.

பெங்களூரில் உள்ள ‘ஸ்ரீராம்புரம்’ என்ற குடிசைப் பகுதி உண்டு. அதனருகில் ஊதுவத்தி நிறுவனம் ஒன்றிருந்தது. அந்த நிறுவனம் தினந்தோறும் ஊதுவத்திக்கான கலவை மற்றும் குச்சி இரண்டையும் அந்த குடிசைப் பகுதியில் உள்ள ஒவ்வொரு குடிசையிலும் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். மாலை ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்கள் தயாரித்த ஊதுவத்திகளைப் பெற்றுக்கொண்டு அதற்கான ஊதியத்தைக் கொடுத்துவிடுவார்கள்.

அந்த குடிசைப் பகுதி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள். இதை கவனித்த முரளிதரன் அந்த நிறுவனத்துக்குச் சென்று அதன் உரிமையாளருடன் பேசி சனி ஞாயிறுகளில் மட்டும் அந்தக் குழந்தைகளுக்கு விடுமுறை கேட்டு, அவர்களுக்கு மரத்தடியில் வகுப்பெடுத்திருக்கிறார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பில் ஆர்வம் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள பள்ளியில் படிப்பதற்கு சேர்த்துவிட்டிருக்கிறார். இதை தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு தன் ‘விவேகானந்தா அசோசியேஷன்’ அமைப்பின் மூலம் நண்பர்களுடன் சேர்ந்து செய்திருக்கிறார்.

இதற்குள் கல்லூரி படிப்பும் முடிவடைய 1984-ஆம் ஆண்டு PSI என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்கிறார். பிறகு 1987-ஆம் ஆண்டு சென்னையில் டி.சி.எஸ்ஸில் பணியில் சேர்ந்தவர் 2009 வரை அதே நிறுவனத்தில் பணியாற்றினார்.

இடையில் 1988-ஆம் ஆண்டு சேவாலயா நிறுவனத்தை ஆரம்பித்தார். அவருடைய மனைவி புவனேஸ்வரி UTI நிறுவனத்தில் தன் பணியை உதறிவிட்டு சேவாலயா பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

முரளிதரன் 2009 ஆம் ஆண்டு தன் 25 ஆண்டு சர்வீஸை முடித்தவுடன் அதில் இருந்து விடுபட்டு முழுமையாக சேவாலயா பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.

இன்று சேவாலயாவின் முதன்மை அலுவலகம் திருவள்ளூர் உட்பட அம்பத்தூர், ஸ்ரீபெரம்பதூர், உத்திரமேரூர் , பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி என ஒவ்வொரு இடமாக சேவாலயாவின் தொண்டு நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்து இப்போது மதுராந்தகத்திலும் தொடங்கப்பட உள்ளது.

தனிநபர்கள் கொடுக்கின்ற நன்கொடை மற்றும்  CSR (Corporate Social Responsibility) மூலம் நிறுவனங்கள் கொடுக்கும் நன்கொடைகளும் தான் சேவாலயாவின் சேவைக்கு பேருதவி செய்கிறது என்கிறார்.

சர்வீஸ் செய்வதும் ஒரு திறமையே. அதையும் ஒரு நெறியோடு கருத்துடன் செய்யும்போதுதான் அதிலும் வெற்றிபெற முடியும் என்பதற்கு சேவாலயா தம்பதிகள் முரளிதரனும், புவனேஸ்வரியும் ஓர் உதாரணம்.

கற்போம்… கற்பிப்போம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software Private Limited

மார்ச் 29, 2019

மின்னம்பலம் டாட் காமில்
ஆன்லைனில் மாணவர்களுக்காக நான் எழுதி வரும்
‘எந்தப் பாதையில் உங்கள் பயணம்?’
என்ற  தொடரில் மார்ச் 29, 2019 அன்று எழுதிய கட்டுரையின் முழு வடிவம்

https://minnambalam.com/k/2019/03/29/15

(Visited 191 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon