வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[1] : பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்! (நம் தோழி)

பலிகடாக்களும் பட்டப் பெயர்களும்!

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.’ அடிக்கடி இந்தக் குறள் என் மனதுக்குள் வந்துபோகும்.

நமக்குத் துன்பம் ஏற்படுத்துகிறவர்களுக்கு நன்மைகள் செய்தாலும், அவர்கள் நாணமெல்லாம் படுவதில்லை இந்தக் காலத்தில். ஏனெனில் பலருக்கும் தாங்கள் செய்வது தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. சிலர் தெரிந்தே தவறு செய்கிறார்கள். ஒரு சிலர் தாங்கள் செய்கின்ற தவறு தங்களுக்கு சரியெனப்படுகிறது என்கிறார்கள்.

பொதுவாகவே மனிதர்களுக்கு தங்கள் செயல் குறித்த சரி / தவறு என்ற எண்ணமே இருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இதுவும் கடந்து போகும்’ என்பதைப் போல எல்லாவற்றையும் புறந்தள்ளி கடந்து சென்றபடி இருக்கிறார்கள். தங்கள் வார்த்தைகள், செயல்கள் எதையும் திரும்பிப் பார்ப்பதே இல்லை.

இதற்கு ‘நேரம் இல்லை… அவசியம் இல்லை… தேவை இல்லை’ என பல காரணங்கள் வைத்துள்ளார்கள். ‘ஏன் யோசிக்கணும்? எதற்காகத் திரும்பிப் பார்க்கணும்? அதனால் என்ன பலன்?’ இப்படிப் பல கேள்விகளும் அவர்களிடம் ரெடிமேடாக இருக்கின்றன.

இன்னும் சிலர் ‘நான் பொதுவாகவே எதையும் மனதில் சுமந்துகொண்டு செல்வதில்லை’ என்று தோள் குலுக்கி சற்றே பெருமிதமாய் சொல்கின்றனர்.

சுமக்க வேண்டியதை சுமந்துதான் ஆக வேண்டும். மற்றவர்களைக் காயப்படுத்திவிட்டு ‘நான் எதையும் சுமப்பதில்லை’ என்று சொல்வதைப் போன்ற மனசாட்சியற்ற செயல் வேறெதுவும் இருக்க முடியுமா? நம் செயல்பாடுகள் குறித்த பார்வைகளை சுமந்தால் மட்டுமே நாம் மனிதநேயத்துடன் வாழ முடியும். சுமக்க வேண்டியதை சுமப்போம். அதில் உள்ள ‘நல்லவை’ நம் ஆரோக்கியத்துக்கு; ‘தீயவை’ களைந்தெடுக்கப்பட்டு மன ஆரோக்கியத்துக்கு.

தேவையான நல்ல விஷயங்களை நம் மனதில் அவ்வப்போது அப்லோட் செய்துகொண்டு, நேரம் கிடைக்கும்போது அவற்றை டவுன்லோட் செய்து சிந்திக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு டி.டி.பி சென்டர். தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங், இவற்றுடன் ஜெராக்ஸ், ஆதார் அட்டை சம்மந்தமான வேலைகள் என பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார்கள். அங்கு 18 முதல் 20 வயதில் ஐந்தாறு இளம்பெண்கள் பணிபுரிகிறார்கள். அந்தக் கடை ஓனர் தனது கிராமத்திலிருந்து அவர்களை அழைத்து வந்து, வீடெடுத்துக் கொடுத்து, வேலையும் கற்றுக்கொடுத்து, சாப்பாடும் போட்டு நல்லபடியாக கவனித்துக்கொள்கிறார். மாதா மாதம் சம்பளத்தை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

நான் எப்போதாவது அங்கு ஜெராக்ஸ் எடுக்கச் செல்வதுண்டு. அப்போதெல்லாம் என் கண்களில்படும் செயல் என்னை உறுத்திக்கொண்டே இருக்கும்.

அந்தக் கடைக்கு நிறைய டீன் ஏஜ் மாணவர்கள் வருவார்கள். வேலையின் இடையே அவர்கள் அந்தப் பெண்களிடம் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதும், அந்தப் பெண்கள் அதற்கு வெட்கப்பட்டு சிரிப்பதுமாக நடக்கும். கொஞ்சம் பழகிய பின்னர் அந்தப் பெண்களும் அவ்வாறே பேசத் தொடங்குவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் அந்த மாணவர்கள் தேவையே இல்லாமல் அந்தப் பெண்களை தெரிந்தும் தெரியாமலும் தொட்டுத் தொட்டுப் பேசுவதும் தொடர்ந்தது. பெண்கள் அதைத் தடுக்கவில்லை.

ஒருநாள் பொறுக்க முடியாமல் அந்தக் கடை ஓனரிடம், ‘‘ஏன் சார் இப்படி அந்த மாணவர்களை அனுமதிக்கிறீர்கள்?’’ என்றேன் கோபத்துடன்.

என்னை அலுவலகத்தினுள் அழைத்துச் சென்ற அவர், ‘‘மெதுவாகப் பேசுங்கள் மேடம்! வெளியூர் மற்றும் வெளி மாநில மாணவர்கள் நூற்றுக்கணக்கில் இந்த ஏரியாவில் ரூம் எடுத்துத் தங்கிப் படிக்கிறார்கள். இந்த மாணவர்களைக் கண்டித்தாலோ அல்லது அவர்களின் சின்னச் சின்ன சேட்டைகளை அனுமதிக்காவிட்டாலோ, அவர்கள் என் கடையை விட்டு வேறு கடைக்குச் சென்றுவிடுவார்கள். தெருவுக்கு நான்கு டி.டி.பி சென்டர்கள் இருக்கிறதே…

என் வியாபாரம் படுத்துவிடும். அவர்களை நான் கண்டித்தால், நான் இல்லாத நேரத்தில் வருவார்கள். அது இன்னும் மோசமாகும். அதற்கு பதிலாக நான் கண்டும் காணாமல் செல்வதுதான் நல்லது’’ என்றார்.

எனக்கு அங்கு வேலை செய்யும் கிராமத்துப் பெண்கள் பலிகடாக்கள் போலவே தெரிந்தார்கள்.

இதில் பலிகடா ஆக்கப்படுவது அந்தப் பெண்கள் மட்டுமல்ல, அந்த மாணவர்களும்தான். அவர்களுக்கும் சரியான வழிகாட்டல் இல்லை. ஒரு தவறான செயலை செய்பவர்களைவிட, அதை எதிர்க்காமல் அனுமதிப்பவர்கள்தான் மிக மோசமானவர்கள்.

இவர்கள் சமுதாயத்தின் ஒரு ‘சாம்பிள்’தான். இதேபோல ஒவ்வொரு துறையிலும் பலர் தங்களையோ, வேறு யாரையாவதோ, பலிகடா ஆக்கிவிட்டு முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஏன் இதைச் செய்ய வேண்டும்?

சிலருக்கு ஜீவனம்… சிலருக்குப் பணம்… சிலருக்கு புகழ்… சிலருக்கு பணமும் புகழும்.

இப்படி பலிகடா ஆகாமல், கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து ஜெயித்துக்கொண்டிருக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ‘திமிர் பிடித்தவள்’, ‘அகங்காரி’, ‘கோபக்காரி’ போன்ற பட்டப் பெயர்கள் ஏராளம். அப்படிப் பட்டம் கொடுப்பவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம் என்பதுதான் வருத்தத்தின் உச்சம்.

இங்கு ‘நான் ரொம்ப நல்லவள்’, ‘நான் ரொம்ப நேர்மையானவள்’, ‘நான் ரொம்ப கண்ணியமானவள்’ என்று சொல்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. ‘நான் மட்டுமே நல்லவள்’, ‘நான் மட்டுமே நேர்மையானவள்’, ‘நான் மட்டுமே கண்ணியமானவள்’ என்று சொல்லும் மனப்பாங்கு ‘பெண்ணியம்’ பேசும் பெண்களிடம் அதிகரித்துவிட்டதை கண்கூடாகப் பார்க்கிறேன்.

நம்மை நாம் மதிப்போம். அனைவரையும் அரவணைத்துச் செல்வோம். வாழ்க்கை சில காலம் மட்டுமே. சந்தோஷமாகவும் கண்ணியமாகவும் வாழ்ந்துவிட்டுச் செல்வோமே!

பலர் என்னிடம் நீங்கள் ‘ஃபெமினிஸ்டா’ என்று கேட்டிருக்கிறார்கள். என் நேர்மை, தன்னம்பிக்கை, வெளிப்படையாகப் பேசும் பாங்கு… இப்படி ஏதோ ஒன்று அவர்களை இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டியிருக்கலாம். நான் நானாக வாழ்கிறேன். அந்த வரத்தை, சூழலைப் பெற்றிருக்கிறேன். அந்த வகையில் நான் ‘ஃபெமினிஸ்ட்’தான்.

தன்னைப் புரிய வைக்கும் சாதுர்யம், நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை, மதிநுட்பம், தவறைச் சுட்டிக் காட்டும் மேன்மை, பாரபட்சம் காட்டாத அன்பு… இவையெல்லாம்தான் பெண்ணியத்தின் பண்புகள். நாம் நாமாக வாழும் பக்குவம் இருந்துவிட்டால் சந்தேகமே இல்லாமல் நாம் பெண்ணியவாதியே.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஏப்ரல் 6, 2019

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (ஏப்ரல் 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 1

புத்தக வடிவில் படிக்க…. நம் தோழி ஏப்ரல் 2019

(Visited 185 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon