வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[9] : ஆராய வேண்டாம், புரிந்துகொள்வோம்! (நம் தோழி)

நேற்று ஓர் ஓட்டல் வாசலில் ஆரஞ்சு கலர் டீ-ஷர்ட்டுடன் கவுண்டரில் பில்லை நீட்டிக்கொண்டு பார்சலுக்காக காத்து நிற்கும் இளைஞர் கூட்டத்தைக் கடந்து வந்தபோது அவர்களில் பெரும்பாலானோர் இன்ஜினியரிங் படித்திருக்கிறார்கள் என்று படித்த செய்தியும் நினைவுக்கு வந்தது.

மொபைல் App-ல்  உணவை ஆர்டர் செய்கின்றவர்களுக்கு அவர்கள் சொல்லும் ஓட்டலில் அவர்கள் குறிப்பிடும் உணவை வாங்கி அவர்கள் இருப்பிடத்துக்கே டெலிவரி செய்யும் உணவோட்டிகள் இவர்கள்.

‘இதெல்லாம் பெண்கள் வேலை’ என சொல்லி வீட்டு வேலைகளில் இருந்து தப்பிக்கும் ஆண்கள் பொதுவெளியில் பொறுப்பாக இயங்குவதைக் காணும்போது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

உங்கள் அம்மாவும், உங்கள் பாட்டியும் என்றாவது சமையல் செய்யாமலோ அல்லது வீட்டு வேலைகள் செய்யாமலோ இருந்திருக்கிறார்களா… வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கும், உறவுகளுக்குள் கோப தாபங்கள் இருக்கும், குடும்பத்தில் நல்லது கெட்டதுகள் நடக்கும் ஆனாலும் அவர்கள் வேலைகளை அவர்கள் செய்யத் தவறியதை என்றேனும் நீங்கள் பார்த்திருப்பீர்களா? அவர்களுக்கு சுயநினைவே இல்லாமல் போனாலே தவிர அவர்களால் அவர்கள் வேலைகளை செய்யாமல் இருக்க முடியாது.

ஏன் உங்கள் அக்கா தங்கைகள் உங்கள் மனைவி என எல்லா பெண்களுமே பெரும்பாலும் இப்படித்தான் வாழ்ந்து வருகிறார்கள். உங்கள் மகளும் இப்படித்தான் வாழப் பழகுவாள்.

இன்று பெண்கள் தங்களுக்கு முடியவில்லை என்றால் வீட்டு வேலைக்கு பணிப்பெண்களை அமர்த்திக்கொள்கிறார்கள், சமைக்க நேரமில்லை என்றால் ஹோட்டலுக்கு செல்லலாம் என சொல்கிறார்கள், வழக்கமான தங்கள் பணியில் இருந்து மாறுதலுக்கு வெளியில் செல்லலாம் என்று நினைக்கிறார்கள்… இது நல்ல மாற்றம்தான். ஆனாலும் வீடுகளில் நாள் தவறாமல் செய்ய வேண்டிய அடிப்படை வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள் பெரும்பாலான இடங்களில்.

வீட்டில் சாப்பிடும் தட்டைக்கூட  எடுக்காமல் செல்லும் ஆண்கள்தான் ஓட்டல்களில் இன்முகத்துடன் சாப்பாடு கேட்டு கேட்டு பரிமாறுகிறார்கள். வாடிக்கையாளர்களின் முகம் அறிந்து ‘அப்புறம் என்ன சாப்பிடறீங்க’ என பரிவுடன் உபசரிக்கிறார்கள். சிடுசிடுக்கும் வாடிக்கையாளர்களை தங்கள் இனிய வார்த்தைகளால் ஆற்றுப்படுத்துகிறார்கள்.

இன்று ஓட்டல் வாசலில் பொறுமையாகக் காத்திருந்து உணவுப் பொட்டலங்களை வாங்கிக்கொண்டு பைக்கில் பறந்து பறந்து சென்று எங்கேயோ காத்திருக்கும் முகம் தெரியாத நபர்களுக்கு உணவை டெலிவரி செய்து சம்பாதிக்கும் இளைஞர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் தாங்கள் சாப்பிட்டவுடன் அம்மாவைப் பார்த்து ‘நீ சாப்பிட்டாயாம்மா?’ என கேட்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வுகூட இல்லாமல் போனை தடவ ஆரம்பித்துவிடுபவர்களாகவே இருப்பார்கள்.

ஓட்டலில், கல்யாணம் போன்ற பெரு விழாக்களில் சமையல் செய்வதும், பரிமாறுவதும் ஆண்களே.

வீடுகளில் பெண்கள் தங்களுக்கே தங்களுக்கென்று சில வேலைகளை வைத்துக்கொண்டு அந்த ஏரியாவுக்குள் ஆண்களை வரவிடாமல் செய்வதுகூட அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஓர் உளவியல்தான்.

இயற்கையான சில விஷயங்களைத் தவிர பெண்களுக்கு எதெல்லாம் சாத்தியமோ அதெல்லாம் ஆண்களுக்கும் சாத்தியமே. பெண்கள் சூழ வளரும் ஆண்களுக்கு வீட்டில் அவற்றை சாத்தியப்படுத்த அவசியம் இல்லாமல் போய்விடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அவ்வளவுதான். That’s it! 

இந்த உலகில் தன் வாழ்க்கை முழுவதையும் தன் குடும்பத்துக்காகவே அர்பணித்து வாழ்வதில் நம் அம்மாக்களை மிஞ்ச வேறு யாரும் இருக்க முடியாது.

அம்மாக்களுக்கு தமிழ் சினிமாக்கள் வகுத்த இலக்கண இலக்கியங்களும், முந்தைய தலைமுறை அம்மாக்கள் வாழ்ந்து சென்ற வாழ்க்கையும் ‘அம்மா என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்… அப்படி இல்லை என்றால் அம்மாவாக இருக்கவே தகுதியில்லை’ என்ற மனோபாவத்தில் தாங்களும் குழம்பி அம்மாவையும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் பிள்ளைகள்தான் இங்கு அதிகம்.

அம்மாக்கள் மீதான புரிதல் குறித்து ‘மேனா வாஹினி’ என்பவர் ஃபேஸ்புக்கில் ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்ததில் என்னுடைய கருத்துக்களையும் இணைத்து என் பாணியில் இதோ உங்கள் பார்வைக்கு.

அம்மாவுக்கு சோர்வாக இருப்பதாகச் சொல்லி ஓய்வெடுத்தால் அவள் தான் பெற்ற பிள்ளைகளை மறந்துவிட்டாள் என பொருளல்ல. அம்மாவுக்கு சோர்வாக இருக்கிறது.  அவ்வளவுதான். That’s it.

அம்மா சில நேரங்களில் தனிமையில் இருக்க விரும்புவதாகச் சொன்னால் அவளுக்கு தாய்மையில் விருப்பமில்லை என்றோ பிள்ளைகளை வெறுக்கிறாள் என்றோ பொருள் அல்ல.  நாள் முழுவதும் உழைக்கும் அம்மா தனக்கான நேரத்தை அனுபவிக்க நினைக்கிறாள் என்பதே அதன் பொருள்.  அவ்வளவுதான். That’s it.

அம்மா சமையல் அறையில் தனக்கு உதவி தேவைப்படுகிறது என்று சொன்னால் அவள் யார் துணையும் இன்றி வேலை செய்யும் திறமைசாலி அல்ல என்று பொருள் அல்ல. அவளுக்கு அன்று சமையல் அறையில் உதவி தேவை என்பதே அதன் பொருள். அவ்வளவுதான். That’s it.

அம்மா ஒரே ஒருநாள் காலை டிபனுக்கு நூடுல்ஸ் தயாரித்துக்கொடுத்தால் அவளுக்கு காய்கறிகள் சமைக்கவே தெரியாது என்றோ இனி அவள் பிள்ளைகளுக்கு காய்கறியே சமைக்க மாட்டாள் என்றோ பொருள் அல்ல. அன்று அவள்  அலுவலகத்துக்கு  சீக்கிரம் செல்ல வேண்டிய சூழலாலோ அல்லது காலையில் சற்று தாமதமாக எழுந்திருந்ததாலோ டிபன் செய்ய நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்பதே அதன் பொருள்.  அவ்வளவுதான். That’s it.

நீங்கள் வீட்டுக்கு வரும்போது அம்மாவின் முகம் அழுது வடிந்துகொண்டிருந்தாலோ அல்லது வீடு சுத்தமாக இல்லாமல் இருந்தாலோ அவள் எப்போதுமே இப்படித்தான் இருக்கப் போகிறாள் என்று பொருள் அல்ல. அன்று அம்மாவுக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது உடல்நலம் சரியில்லாமல் இருக்கலாம் என்பதே அதன் பொருள். அவ்வளவுதான். That’s it.

அம்மா தன் தோழிகளுடன் ஒருநாள் வெளியில் செல்வதாகச் சொன்னால் அவளுக்கு குடும்பத்தின் மீது பாசம் இல்லை என்று பொருள் அல்ல. அவளுக்கு ஒரு மாறுதல் தேவையாக இருப்பதால் தோழிகளுடன் வெளியில் செல்ல நினைக்கிறாள் என்பதே அதன் பொருள். அவ்வளவுதான். That’s it.

அம்மா எதேனும் ஒரு விஷயத்துக்காக பயந்தால் அவள் பயந்தாங்கொள்ளி என்று பொருள் அல்ல. அம்மாவுக்கு அந்த குறிப்பிட்ட விஷயத்தில் பயம் அவ்வளவுதான். That’s it.

அம்மா உங்களிடம் ஏதேனும் கத்தினால் அவள் தேவையில்லாமல் கத்துவதாக பொருள் அல்ல. அப்படி அவள் கத்த ஆரம்பிப்பதற்கு முன் 300 முறை அதே விஷயத்துக்காக மென்மையாகவே உங்களிடம் பேசியிருப்பாள் என்பதை நினைவில் வையுங்கள். அவ்வளவுதான். That’s it.

அம்மாவை  ஆராய வேண்டாம். புரிந்துகொள்வோம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

December 13, 2019

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (டிசம்பர் 2019)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 9

புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி டிசம்பர் 2019

(Visited 74 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon