அறம் வளர்ப்போம் 1-5

அறம் வளர்ப்போம்-1

ஜனவரி 1, 2020

அறம் என்றால் என்ன?

அன்புதான் அறம். அறம்தான் அன்பு.

நம்மால் முடிந்ததை தேவைப்படுபவர்களுக்குக் கொடுத்து உதவுவதே அறம்.

அறம் என்பது பொருளாகவோ, பணமாகவோ கொடுப்பது மட்டும் அல்ல. எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம்.

சொல்லாலும் செயலாலும் மனதாலும் நல்லது செய்வது அனைத்துமே அறம். அந்த அறமே அன்பு.

சோர்வுற்றிருக்கும் மனதுக்கு நல்லதாக நாலு வார்த்தை பேசினாலே அதை அறம் எனலாம்.

தேவைப்படுபவர்களுக்குத் தேவையான நேரத்தில் ஆறுதலாகப் பேசுவதும் அறமே.

அறம், செய்யும் நம்மையும் மகிழ்விக்கும், பயனடைபவர்களையும் மகிழ்விக்கும். மற்றவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொண்டு, அவர்களையும் அறம் செய்ய வைத்து, இப்படியாக அறம் தானகவே தன்னை வளர்த்தெடுக்கும்.

அன்பும் ஒரு அறம்தான். அன்பு தான் இருக்கின்ற இடம் முழுவதும் தன் வைப்ரேஷனை பரப்பி அந்த இடத்தில் இருக்கின்ற உயிரினங்கள் அனைத்தையும் அன்பால் செயல்பட வைக்கும்.

அன்பும் அறனும் பின்னிப் பிணைந்த பண்பே மனிதன் மனிதனாக இருப்பதற்கான அச்சாணி. அதுவே நல்ல மனிதனுக்கான அடையாளம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்-2

ஜனவரி 2, 2020

அம்மா – அன்பானவர், அறிவானவர், தந்தையுமானவர்

உங்களை அன்புடன் கொஞ்சுவது, சமைப்பது, சாப்பாடு போடுவது, துணிமணி துவைத்துக் கொடுப்பது என உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வது அம்மாவின் வேலைதான். ஆனால் அவை மட்டுமே அம்மாவுக்குத் தெரியும் என நினைத்துவிடக் கூடாது.

அம்மாவுக்கும் அறிவார்ந்து சிந்திக்கத் தெரியும். தேவைப்பட்டால் வேலைக்குச் சென்று பணமும் சம்பாதிக்க முடியும். எந்தப் பிரச்சனையானாலும் அவற்றை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும் சக்தி வாய்ந்தவர்.

அம்மாவினால் அப்பாவைப் போலவே தைரியமாக செயல்பட முடியும். அதனால்தான் அம்மாவை தந்தையுமானவர் என்கிறோம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்-3

ஜனவரி 3, 2020

 அப்பா – பாசமானவர், பண்பானவர், தாயுமானவர்

வேலைக்குச் செல்வதும், பணம் சம்பாதிப்பதும், பள்ளியில் ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதும், உங்களுக்குத் தேவையானதை வாங்கித் தருவதும் அப்பாவின் வேலைதான். ஆனால் அவை மட்டுமே அப்பாவின் வேலை என்று நினைத்துவிடக் கூடாது.

அப்பாவுக்கும் பாசமாகவும் இருக்கத் தெரியும். அம்மாவைப் போலவே அப்பாவிடமும் நெருக்கமாக பேசுங்கள். பழகுங்கள். உங்களுக்கு முழுமையான  பாதுகாப்பை அப்பாவினால் மட்டுமே கொடுக்க முடியும்.

அப்பாவினால் அம்மாவைப் போலவே அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ள முடியும். அதனால்தான் அப்பாவை தாயுமானவர் என்கிறோம்.

காம்கேர் கே. புவனேஸ்வரி
, CEO
Compcare Software, Chennai

 

அறம் வளர்ப்போம்-4

ஜனவரி 4, 2020

 குரு – கண்ணியமானவர், கற்றுக்கொடுப்பவர், ஏற்றம் தருபவர்

உங்கள் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக உங்கள் நலனில் அக்கறையுடன் இருப்பவர் குரு. குரு என்றால் ஆசிரியர். கனிவுடனும் அன்புடனும் பொறுமையுடனும் உங்களை வழிநடத்துவதில் கண்ணியமானவர்.

குரு என்பவர் கல்வியைக் கற்றுத் தருபவர் மட்டுமல்ல. வாழ்க்கைக்குத் அவசியமான நன்னெறியையும் கற்றுக்கொடுக்கும் நல்ல ஆசிரியர்.

தாங்கள் கற்ற அனைத்தையும் தங்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் மாணவர்களாகிய உங்களுக்கு சொல்லிக்கொடுத்து வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலைக்கு வருவதற்கு உதவுபவர்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-5

ஜனவரி 5 2020

தெய்வம் – இறைசக்தி,  இயற்கை, காலம்

இறைசக்தி, இயற்கை, காலம் இவை மூன்றுமே தெய்வத்துக்கு சமமானதே. தினமும் இந்த சக்திகளை வணங்கி வேலைகளைத் தொடங்குவோம்.

நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தி உதவுகிறது.

நம்முடைய  முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.

இறைசக்தி, இயற்கை இவற்றுடன் காலம் என்ற ஆசானிடமும் நம்பிக்கை வையுங்கள். காலம் கற்றுக்கொடுப்பதைப் போல வேறெந்த ஆசானும் சொல்லிக்கொடுத்துவிடப் போவதில்லை.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

 

(Visited 683 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon