ஹலோ With காம்கேர் – 5 : மேடையில் பேசும்போது கைகால் உதறல் எடுக்கிறதே?


ஹலோ with காம்கேர் – 5
ஜனவரி 5, 2020

கேள்வி: மேடையில் நான்கு பேருக்கு முன்னால் மைக்கில் பேச வேண்டும் என்றால் கைகால் உதறல் எடுக்கிறதே?

இந்த பயத்துக்கு ஸ்டேஜ் ஃபியர் (Stage Fear)  என்று பெயர்.

நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம். கலகலப்பான நபராக இருக்கலாம். உங்களைச் சுற்றி நிறைய நட்புகள் இருக்கலாம்.

ஆனாலும் உங்களுக்கும் Stage Fear ஏற்படலாம். ஏனெனில் மேடையில் மைக் பிடித்து பேசுவது என்பது வேறு. உங்கள் நண்பர்களுடன் பேசுவது என்பது வேறு.

உங்களைத் தவிர வேறு யாராலும் உங்கள் தயக்கத்தை உடைக்க முடியாது.

எந்த தன்னம்பிக்கை புத்தகத்தைப் படிப்பதாலும் தயக்கத்தைக் குறைக்க முடியாது.

ஏனெனில் பிறர் சொன்ன அறிவுரைகளும், புத்தகங்களில் படிப்பதும் மேடை ஏறியவுடன் ஏதோ ‘மேஜிக்’ செய்வதைப்போல மறந்துவிடும்.

அரங்கை உங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது என்பது அத்தனை சுலபமல்ல. ஆனாலும் அதுவும் சாத்தியமே, சில டிப்ஸ்களை பின்பற்றினால்.

  1. யார் போலவும் பேச முயற்சிக்காதீர்கள். உங்களுக்கென ஒரு பாணியை அமைத்துக்கொள்ளுங்கள். இயல்பாக உங்கள் வீட்டில், உறவுகளிடம், நண்பர்களிடம், அலுவலக மேலதிகாரிகளிடம் பேசுவதைப் போலவே பேசலாம். அப்படிப் பேசுபவர்களைத்தான் பலருக்கும் பிடித்திருக்கிறது.
  2. மேடையில் உங்களுடன் பேச வந்திருக்கும் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லி அவர்களை அறிமுகம் செய்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ‘என்னுடன் பேச வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்’ என சுருக்கமாகச் சொல்லி உரையைத் தொடங்குங்கள்.
  3. பேச இருக்கும் சப்ஜெட்டை சுவாரஸ்யமாக தயாரியுங்கள்.
  4. நடைமுறை உதாரணங்கள், அண்மைக்கால நிகழ்வுகள், குட்டிக் கதைகள் என பொதுவான விஷயங்களுடன் அனைவருக்கும் பொருந்தும் வகையில் உங்கள் உரைக்கான தகவல்கள் அமையட்டும்.
  5. உங்கள் உரைக்குப் பொருத்தமான ஏதேனும் வீடியோ அல்லது அனிமேஷன் அல்லது பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் இருந்தால் அவற்றை காட்சிப்படுத்துங்கள். உங்கள் உரைக்கு நிச்சயம் அவை வலு சேர்க்கும்.
  6. உங்கள் சொந்த அனுபவங்களைக்கூட சுருக்கமாகச் சொல்லலாம். பார்வையாளர்கள் மனதில் சிம்மாசனம் போட இது நிச்சயம் உதவும்.
  7. சர்ச்சைக்குறிய விஷயங்களை தவிர்த்துவிடுங்கள். இல்லையெனில் அரங்கம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு விலகிச் செல்லும்.
  8. இவை எல்லாவற்றையும்விட முக முக்கியமான டிப்ஸ் ஒன்றுள்ளது, Stage Fear உள்ளவர்கள் மேடையில் பேச நேரிட்டால் அரங்கில் இருப்பவர்கள் உங்களை கவனிக்கிறார்கள் என்ற உணர்வை தூக்கி எறிந்துவிட்டு வெற்று அரங்கைப் பார்த்துப் பேசுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். தயக்கம் நிச்சயம் விலகும்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், ஒரு கருத்தரங்கில் பேசுவதற்காக அழைக்கப்பட்டேன். நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைபேரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். அனைவரும் டாக்டரேட் பட்டம் பெற்ற ஆசிரியர்கள். ஒருசிலர் இரட்டை டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.

அதுவே நான் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல் மேடை நிகழ்ச்சி. கொஞ்சமும் பதட்டமே இல்லாமல் நான் பேசத் தொடங்கினேன். காரணம் அவர்கள் யாராலும் என்னைப் பார்க்க முடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதில் மட்டுமே கவனமாக இருந்ததார்கள்.

மேடை நிகழ்ச்சிகளில் தயக்கமில்லாமல் பேசும் ஆற்றலை பெற்றதற்கு இந்த நிகழ்ச்சியே என வாழ்க்கையில் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

அரங்கில் யாருமே இல்லை என்றும், கண்ணாடியைப் பார்த்துப் பேசுவதாகவும் நினைத்துப் பேசிப் பாருங்களேன். மேடை பயமும், தயக்கமும், உதறலும் விலகுவது நிச்சயம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

 

(Visited 78 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon