ஹலோ With காம்கேர் -30: டீம் ஒர்க்கில் குளறுபடி ஏற்பட்டால் என்ன நடக்கும்?

ஹலோ with காம்கேர் – 30
ஜனவரி 30, 2020

கேள்வி: டீம் ஒர்க்கில் குளறுபடி ஏற்பட்டால் என்ன நடக்கும்?

அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது சென்னையில் பரபரப்பாக இயங்கிவரும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததால், தொடர்ச்சியாக அங்குதான் மருத்துவ பரிசோதனை செய்து வருகிறோம்.

ஒவ்வொரு முறையும் அப்பாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பொதுப் பரிசோதனை செய்த பிறகு இரத்தப் பரிசோதனை, ஈ.சி.ஜி, எக்கோ, ட்ரெட் மில் என வரிசையாக என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும் என எழுதிக்கொடுப்பார். அதை முடித்து ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு அதே டாக்டரிடம் காண்பிக்க வேண்டும். அவர் மருந்துகளை எழுதிய பிறகு நர்ஸை அழைத்து ப்ரிஸ்கிரிப்ஷனைக் கொடுப்பார். நர்ஸ் அந்த ப்ரிஸ்கிரிப்ஷனை ரிசப்ஷனிஸ்டிடம் கொடுத்து டைப் செய்து வாங்கிவருவார். டாக்டர் டைப் செய்ததை தான் எழுதியதுடன் ஒப்பிட்டுப் பார்த்து சைன் செய்து சீல் வைத்து கொடுப்பார்.

இதுதான் அங்கு வழக்கமாக நடக்கும் செயல்முறை சுழற்சி.

இந்த முறை ரிசப்ஷனிஸ்ட் டைப் செய்ததில் ஒரு தவறு இருந்ததால் டாக்டர் நர்ஸிடம் மீண்டும் ஒரு பிரிண்ட் எடுத்து வரச் சொன்னார்.

சில நொடிகளில் ரிசப்ஷனிஸ்ட் உள்ளே நுழைந்து, ‘சார், அதில் அடித்து எழுதித்தரலாமே…’ என ஆலோசனை சொல்ல ‘அப்படி செய்தால் இவர்கள் டிபார்ட்மெண்ட்டில் நிராகரித்துவிடுவார்கள்…’ என்றார்.

ரிசப்ஷனிஸ்ட் அறைகுறை மனதுடன் நகர்ந்தார்.

மீண்டும் பிரிண்ட் எடுத்து வந்தார் நர்ஸ். இப்போது கடைசியாக எழுதியிருந்த மருந்தில் ஏதோ குளறுபடி.

நர்ஸிடம் ‘என்ன ஆயிற்று, ரிசப்ஷனிஸ்ட் டைப் செய்யும்போது நீங்கள் அருகில் இருந்து உதவவில்லையா?’ என கேட்டு மீண்டும் பிரிண்ட் எடுக்கச் சொன்னார்.

இப்போது ரிசப்ஷனிஸ்ட் வேகமாக உள்ளே வந்து ‘சார் இதை நீங்கள் கையால் திருத்தி சைன் செய்து கொடுக்கலாம்’ என சொல்ல இந்த முறை டாக்டர் ‘ஏன் இப்படி பேசுகிறீர்கள்?’ என கேட்டார்.

‘அக்கவுண்ட் செக்ஷனில் பேப்பருக்கு கணக்கு கேட்பார்கள்…’ என்றபோது ‘சரி நான் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேசிக்கொள்கிறேன்… இப்போது சரியாக பிரிண்ட் எடுத்து வாருங்கள்… வயதானவரை திரும்பத் திரும்ப அலைய வைக்க முடியாது… ஏதேனும் தவறிருந்தால் இவர் டிபார்ட்மெண்ட்டில் இவரை அலைகழிப்பார்கள்…’ என்றார்.

அந்த ரிசப்ஷனிஸ்ட் விடவில்லை. ‘என்னைத்தான் கேள்வி கேட்பார்கள்… நீங்கள் திருத்தம் செய்து கீழே சீல் வைத்துவிட்டால்… பிரச்சனை கிடையாது…’ என்று டாக்டருக்கே ஆலோசனை சொன்னார்.

‘ரிசப்ஷனிஸ்ட்டுக்கு டாக்டர் சொல்வதை மறுத்து பேசும் அளவுக்கு  இத்தனை அதிகாரம் உள்ளதா?’ என நாங்கள் ஆச்சர்யப்பட்டோம்.

‘என்ன ஆயிற்று உங்களுக்கு… நான் இப்போது தவறான இந்த ப்ரிஸ்கிரிப்ஷனை கிழித்துப் போடுகிறேன். திரும்பவும் பிரிண்ட் எடுத்து வாருங்கள்… கொஞ்சம் கோ-ஆப்பரேட் செய்யுங்கள்’ என நிதானமாகச் சொன்னார். இந்த முறை நிதானத்திலும் கடுமை இருந்தது.

‘டீம் வொர்க்கில் இப்படி ஒருசிலர் குழப்பம் செய்வதற்கென்றே இருக்கிறார்கள்…’ என்றார் டாக்டர்.

இதே சூழலில் நான் இருந்தால் எப்படி நடந்து கொள்வேன், என் அப்பா இருந்திருந்தால் எப்படி நடந்துகொள்வார் என ஒரு கற்பனையை ஓட விட்டேன்.

இந்த நிகழ்வு ஒரு டெம்ப்ளேட். இந்த டெம்ப்ளேட்டில் உள்ள மருத்துவருக்கு பதில் ஒரு இன்ஜினியரோ, ஆடிட்டரோ, வக்கீலோ, ஒரு நிறுவனத் தலைவரோ யாரை வேண்டுமானாலும் நாம் பொருத்திக்கொள்ளலாம். அவரிடம் பணி புரிபவர்கள் ஒத்துழைக்காமல் வேலை செய்யும்போது ஏற்படும் குழப்பமான சூழல் அவர்களை மட்டும் பாதிப்பதில்லை. சம்மந்தப்பட்ட கிளைண்ட்டுகளையே பாதிக்கிறது.

டீம் ஒர்க் என்பது சாய்வாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தீப்பெட்டிகளைப் போல. ஏதேனும் ஒரு பெட்டியில் சின்ன அதிர்வை ஏற்படுத்தினாலும் அத்தனையும் சரிந்துவிடும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 52 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon