ஹலோ With காம்கேர் -31: நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகிறதா?

ஹலோ with காம்கேர் – 31
ஜனவரி 31, 2020

கேள்வி: நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைகிறதா?

சில வருடங்களுக்கு முன்னர் என் நிறுவனத்தின் அனிமேஷன் பிரிவுக்கு ஒரு நேர்காணல். ஒரு மணிநேரத்துக்கு நான்கு பேர் என்ற கணக்கில் செயல்முறை விளக்கமாக ஒரு கான்செப்ட் கொடுத்து அதை அனிமேஷன் செய்யச் சொல்லி இருந்தேன்.

காலை ஏழு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை தொடர்ச்சியாக தேர்வு  நடந்துகொண்டிருந்தது.

நான் அவ்வப்பொழுது வரைபவர்களை பின்னால் நின்று கவனித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு அனிமேட்டரின் பேனா கை தவறி கீழே விழுந்தது. நான் அருகில் நின்று கொண்டிருந்ததால்  ‘மேடம், பேனாவை கொஞ்சம் எடுத்துத் தருகிறீர்களா…’  என்றார்.

அவர் சொன்னவிதம் எனக்கு வித்தியாசமாக இருந்தது. கொஞ்சம் கோபமும்  எட்டிப் பார்த்தது.

பொதுவாக இப்படி தான் தவறுதலாக கீழே போட்ட பொருளை மற்றவர்களை விட்டு எடுத்துக்கொடுக்கச் சொல்லமாட்டார்கள். அதுவும் அவர் உட்கார்ந்திருக்கும் டேபிளுக்கு அருகிலேயே பேனா கைக்கு எட்டும் தொலைவில்தான்  விழுந்திருந்தது.

நான் எடுத்துக்கொடுத்துவிட்டு ‘ஏன் நீங்களே எடுத்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டேன்.

‘மேடம் எனக்கு ஒரு கால் செயற்கையாகப் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் என்னால் குனிந்து எடுக்க முடியாது…’ என்றார்.

எனக்கு சுருக்கென்றது. ஒரு வருத்தம். மறுபடியும் சின்ன கோபம். ஆனால் இந்த கோபத்துக்கான காரணம் வேறு.

இதுபோன்றவர்கள் உதவி கேட்கும்போதே தங்களுக்கு உள்ள பிரச்சனையை சொல்லிவிட்டுக் கேட்டால் எதிராளிக்கு சங்கடம் இல்லாமல் இருக்கும். அவர்களுக்கும் கேட்கின்ற உதவிகள் சுலபமாக விரைவில் கிடைக்கும்.

அதுதான் எதிராளிக்கு குழப்பம் ஏற்படுத்தாமல் அவர்களையும் தர்மசங்கடத்துக்கு உட்படுத்தாமல் செயல்பட வைக்கும்.

இப்படி பிறரிடம் உதவிகளை கேட்பதற்கு மட்டுமில்லாமல், ஒரு செயலை வெற்றிகரமாக  முடிப்பதற்கும்  சில லாஜிக்குகள் தேவைப்படுகின்றன.

ஒரு செயல் வெற்றிபெற வேண்டுமானால் அதை நாம் நேர்த்தியாக செய்வதில் மட்டும் முனைப்பு காட்டினால் போதாது. திறம்பட செய்ய திட்டமிட வேண்டும்.

நேர்த்தி என்பது வேறு. திறம்பட செய்வது என்பது வேறு. முன்னது நாம் எடுத்துக்கொண்ட செயலை மனதிருப்தியுடன் செய்வது. பின்னது நாம் எடுத்துக்கொண்ட செயலை எதற்காக யாருக்காக செய்கிறோமோ அவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றி  திறனுள்ளதாக செயல்பட வைப்பது.

நாம் எடுத்துக்கொண்ட செயலை யாருக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ அவர்களை நோக்கியப் பயணமாக அதன் செயல்பாடுகளை அமைக்க வேண்டும்.

யார் யாரையெல்லாம் ஈடுபட வைத்து அந்த செயலை செம்மைப்படுத்த முடியும் என ஆராய்ந்து அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

செயல்பாட்டின் நோக்கத்தை தெளிவாக மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் ஈகோ பார்த்துக்கொண்டிருந்தால் நாம் என்னதான் முயற்சி செய்து ஒரு செயலை ஆரம்பித்திருந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராய் பயனில்லாமல் போகும்.

‘நான் முயற்சித்தேன் வெற்றிபெறவில்லை’ என்று வருத்தப்படுவதைவிட எப்படி முயற்சித்தோம் என்பதில்தான் நாம் எடுத்துக்கொண்ட செயலின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கிறது.

ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள்… முயற்சியில் நேர்மை இருக்கட்டும். நாம் எடுத்துக்கொண்ட செயல் உடனடி வெற்றி தராவிட்டாலும் நம் முயற்சியின் நேர்மை வேறுவகையில் பலன் தருவது நிச்சயம்.

நான் இப்படித்தான் செயல்படுகிறேன். சந்தோஷமாக வாழ்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 39 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon