ஹலோ With காம்கேர் -46: உங்கள் விடுமுறை தினங்களை எப்படி செலவழிக்கிறீர்கள்?

ஹலோ with காம்கேர் – 46
February 15, 2020

கேள்வி: உங்கள் விடுமுறை தினங்களை எப்படி செலவழிக்கிறீர்கள்?

பொதுவாக விடுமுறை தினங்களில் வீடுகளில் என்ன நடக்கும். எல்லோரும் தாமதமாக எழுந்திருப்பார்கள், ரிலாக்ஸ்டாக டிவி பார்ப்பார்கள். பொறுமையாக டிபன் சாப்பிட்டு திரும்பவும் டிவி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக்.

தங்கள் துணிகளை துவைத்துக்கொண்டு சுடச்சுட சாப்பிட்டு சுகமான மதிய தூக்கம். பிறகு நான்கு மணிக்கு எழுந்து ஏதேனும் நொறுக்குத்தீனி சாப்பிட்ட பின்னர் நண்பர்களை சந்திப்பது அல்லது குடும்பத்துடன் வெளியே எங்கேயேனும் செல்வது என கொஞ்சம் சோம்பேறியான நாளாகவே விடுமுறை தினங்கள் கடந்து செல்லும்.

உங்களின் விடுமுறை தினம் இப்படி இருக்க உங்களின் வீடு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

நீங்கள் ஏழு எட்டு மணிக்கு எழுந்திருக்கும் முன்பே காபிக்கு டிகாஷனும், இட்லிக்கு சட்னியும் தயாராக டைனிங் டேபிளில் காத்திருக்கும். நீங்கள் மதியம் சுடச்சுட சாப்பிடுவதற்கு முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும். நீங்கள் டிவியில் மூழ்கியிருக்கும் நேரத்தில் சமையல் நடந்து கொண்டிருக்கும். நீங்கள் குளித்து முடித்துவிட்டு வரும்நேரம் சமையல் கமகமக்கும். மதியம் நீங்கள் தூங்கிவிட்டு எழுந்திருக்கும் நேரம் மாலை ஸ்நாக்ஸ் தயாராகி இருக்கும். பின்னர் உங்களுடன் வெளியே வர வேண்டும் என நீங்கள் விரும்பினால் அல்லது அனுமதித்தால் அதற்கும் சந்தோஷமாக தயாராகிவிடும் ஒரு ஜீவன் ஒவ்வொரு வீட்டிலும் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும்.

அந்த ஜீவனுக்குப் பெயர்தான் ‘அம்மா’.

சில வீடுகளில் அப்பாக்களும் இப்படி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டே இருப்பார்கள்.

எப்படி ஒரு வீடு உயிர்ப்பாக இயங்குவதில் அம்மாக்களின் பங்கு அதிகமிருக்கிறதோ அப்படித்தான் என் நிறுவனம் தொய்வில்லாமல் தொடர்ச்சியாக இயங்குவதில் என் பங்கு அதிகம் உண்டு.

ஓரிடத்தில் பணி புரிந்தால் 8 அல்லது 9 மணி நேரம் வேலைசெய்தால் போதும். விடுப்பு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம். விடுமுறை தினங்களில் அலுவலகத்தில் இருந்து வரும் போன் அழைப்பை எடுப்பதும் எடுக்காததும் அவரவர் இஷ்டம். மாதா மாதம் உங்களுக்கான சம்பளம் உங்கள் வங்கி அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகிவிடும். உங்களுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு வேலைக்குச் சென்றுவிடலாம்.

ஆனால் ஒரு நிறுவனத்தை நடத்தும்போது வருடத்தின் 365 நாட்களும் வாரத்தின் 7 நாட்களும் ஒரு நாளின் 24 மணி நேரமும் நிறுவனம் குறித்த நினைவுகளுடனேயேதான் பயணிக்க வேண்டியிருக்கும்.

27 வருடங்களாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தை இப்படித்தான் இயக்கிக்கொண்டிருக்கிறேன்.

ஒரு கைக்குழந்தையை வீட்டில் யாரிடமாவது விட்டுவிட்டு ஒரு அம்மா எங்கேயேனும் வெளியில் சென்றால் எப்படி வீட்டில் உள்ள குழந்தையின் நினைவாகவே இருப்பாளோ அதுபோலதான் என் மனநிலை இருக்கும்.

என்னைப் பொருத்தவரை நான் வீட்டில் இருந்தாலும், கோயிலில் இருந்தாலும், கல்யாண வீட்டில் இருந்தாலும், எங்கேயேனும் சுற்றுலா சென்றிருந்தாலும், ஏன் தூங்கிக்கொண்டிருந்தாலும் மனதுக்குள் நிறுவனம் இயங்கிக்கொண்டே இருக்கும். எங்கிருக்கிறேனோ அந்த இடத்தில் இயல்பாக இயங்கிக்கொண்டே என் மனம்  என் நிறுவனத்திலும் கவனமாக இருக்கும்.

இந்தியாவில் இருந்தாலும் ப்ராஜெக்ட் விஷயமாக வெளிநாடு சென்றிருந்தாலும் நினைவு முழுக்க நிறுவனத்தில்தான். தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் இந்நாளில் ஆன்லைன் வீடியோ கான்ஃபிரன்ஸ் வசதிகள் வந்த பிறகு நிறுவனத்தை உலகின் எந்த மூலையில் இருந்தும் நேரடி கவனிப்பில் வைத்துக்கொள்ள முடிகிறது.

விடுமுறை தினங்களிலும் வழக்கமான பிரம்ம முகூர்த்தத்தில் (3 மணிக்கு) எழுந்துகொள்வது முதல் அத்தனை வேலைகளும் மற்ற நாட்களைப் போலவே நடக்கும்.

விடுமுறை தினங்களில்தான் சில புதிய கான்செப்ட்டுகள் மனதுக்குள் உதிக்கும். உடனே, அதற்கான முன்னேற்பாடுகளை தயார் செய்வது உண்டு.

வேலை தினங்களைவிட விடுமுறை தினங்களில் அமைதியான மனநிலை இருக்கும் என்பதால், நான் கொடுக்க வேண்டிய மீடியா நேர்காணல்கள், சில முக்கிய சந்திப்புகள் ஏதேனும் இருந்தால் விடுமுறை தினங்களில் அலுவலகம் வரச் சொல்லி முடிப்பதும் உண்டு.

விடுமுறை தினங்களிலும் எந்த ஒரு போன் அழைப்பையும் தவிர்ப்பதில்லை.

குடும்ப நிகழ்ச்சிகள் எதையும் விட்டுக்கொடுப்பதில்லை. குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல், அவ்வப்பொழுது அப்பா அம்மாவுடன் கோயில்களுக்குச் செல்லுதல் என அத்தனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

எல்லோரும் வேலைக்கு வருவதற்கு முன்பே காலையில் 7 மணிக்கு அலுவலகம் சென்று எல்லோரும் கிளம்பிச் சென்ற பிறகு இரவு 9 மணிக்கு அலுவகம் விட்டுக் கிளம்புவதால் இடைப்பட்ட நேரத்தில் பிசினஸ் மீட்டிங், நாங்கள் தயாரிக்கும் ஆவணப்படங்களுக்கான ஷீட்டிங் ஸ்பாட் செல்வது, மேடை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றல் உட்பட எனக்கான நேரத்தையும் எடுத்துக்கொள்ள முடிகிறது.

பிசினஸைப் பொறுத்தவரை Man Management மற்றும் Time Management இரண்டையும் சமாளிக்கத் தெரிந்திருந்தால் வெற்றி நிச்சயம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

இன்றைய கேள்வியை கேட்டவர்
என் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும்
உயர்திரு. முருகேஷ் பாலகிருஷ்ணன் அவர்களின்
மகள் கிருபா முருகேஷ்

உங்களது அலுவலகத்திற்கு விடுமுறை உள்ளது. உங்களுக்கு விடுமுறை உண்டா? விடுமுறை நாட்களிலும் அலுவலக பணிகளில் ஈடுபடுவீர்களா? விடுமுறை நாட்களை எவ்வாறு செலவிடுவீர்கள்?

 

(Visited 56 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon