வாழ்க்கையின் OTP-20 (புதிய தலைமுறை பெண் – மார்ச் 2020)

தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?

நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே.

எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு அதில் ஈடுபாடு இல்லாமல் செய்யவே முடியாது. அலுவலக மீட்டிங், நண்பர்களின் அன்புத்தொல்லை என்று சொல்லிக்கொண்டு மது அருந்துவதையும் புகைப்பதையும் என்னவோ தங்களுக்கு அதில் உடன்பாடே இல்லாததைப் போல சொல்லி மழுப்புபவர்கள் மனதில் எங்கோ ஒரு மூலையில் மதுவும், புகையும் விருப்பமான ஒரு செயலாக பதிந்திருப்பதால்தான் பிறரை சாக்கு சொல்லிக்கொண்டு தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.

ஐடி நிறுவன பார்ட்டிகளில் மது  இடம்பெறும் என்பது பொதுவான அபிர்ப்பிராயமாக உள்ளது. என் நிறுவன நிகழ்ச்சிகளில் மதுவும், அசைவ உணவும் இடம்பெறாது. நானே உருவாக்கிய நிறுவனமாக இருப்பதால் அதை உறுதியாகப் பின்பற்ற முடிகிறது.

வெளியில் நடக்கின்ற பொதுவான மீட்டிங்குகளுக்குச் செல்லும்போது பெரும்பாலும் அந்த நிகழ்ச்சிகள் விருந்துடன் முடிவடையும். ஒரு சில விருந்துகளில் அசைவ உணவும் மதுவும் இடம்பெற்றிருக்கும். சைவ உணவும் அசைவ உணவும் தனித்தனியாக ஏற்பாடு செய்திருந்தாலும்கூட நான் உரியவர்களிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடாமலேயே கிளம்பி விடுவேன்.

என்னுடைய இந்த குணத்துக்காக நான் இதுவரை என் வாழ்க்கையிலும் பிசினஸிலும் எதையுமே இழக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் கூடுதல் மரியாதையைத்தான் பெற்றிருக்கிறேன்.

பிறர் நம்மை மதிக்கும்போது எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறதோ அதைவிட பல்மடங்கு சந்தோஷத்தை பெறுகிறேன், என் உணர்வுகளை நான் மதிக்கும்போது.

2012-ம் ஆண்டு தினமலர் பத்திரிகை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சூப்பர் ஜோடி நிகழ்ச்சியில் ஏராளமான தம்பதிகள் கலந்துகொண்டார்கள். அதில் 50 வயதைக் கடந்த ரவி-கிரிஜா தம்பதியும் கலந்துகொண்டனர். சிறிய பேப்பர்களில் பாட்டு, நடனம், வசனம், மிமிக்கிரி என தனித்தனியாக எழுதி ஒரு பெட்டியில் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு தம்பதியினரையும் மேடைக்கு அழைக்கும்போது அதிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் படிப்பார்கள். அதில் என்ன வருகிறதோ அதை அந்த தம்பதிகள் செய்ய வேண்டும்.

ரவி கிரிஜா தம்பதிக்கு கையைக் கோர்த்துக்கொண்டு சேர்ந்து ஆட வேண்டும் என சொல்லி அப்போது பிரபலமாக இருந்த ஒரு பாடலை இசைக்க விட்டார்கள்.

இந்த தம்பதிக்கு பொதுவில் கைகோர்த்துக்கொண்டு அந்த பாடலில் வருவதைப்போல அங்க அசைவுகளுடன் ஆடுவதில் உடன்பாடில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் ‘நான் இப்படி சினிமாவில் வருவதுபோல ஆட முடியாது. நான் தனியாக ஆடுகிறேன். என் மனைவி தனியாக ஆடுவார். உங்கள் விதிமுறை அனுமதித்தால் ஆடுகிறேன். இல்லை என்றால் விலகுகிறேன்’ என ரவி சொன்னபோது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதிகொடுத்தனர். இருவரும் தனித்தனியாக பயிற்சி இல்லாமல் ஆடும் சிறிய குழந்தைகளைப் போல் தங்கள் இஷ்டத்துக்கு ஆடினார்கள்.

தங்களுக்கு எங்கே பரிசு கிடைக்கப் போகிறது என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சர்யம். அந்த நிகழ்ச்சியின் சூப்பர் ஜோடி விருது அந்த தம்பதிக்கே கிடைத்தது.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நம் வாழ்க்கையில் நாம் பின்பற்றும் சில நல்ல விஷயங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் உறுதியாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் புரிந்துகொள்வார்கள். இதுதான் சுயத்தை இழக்காமல் வாழ்வதற்கு வாழ்க்கை நமக்குக் கொடுத்துள்ள OTP.

ஆம். சுயத்தை இழக்காமல் நம்மால் வாழவும் முடியும், வாழ்க்கையில் ஜெயிக்கவும் முடியும்.

அப்பான்னா அப்பாதான்!

அரிசியில் பூச்சி வராமல் இருப்பதற்காக வசம்பு போட்டு வைப்பது வழக்கம். நாட்டு மருந்து கடையில் வசம்பு வாங்கினோம். அதை ஒரு செய்தித்தாளில் கட்டிக்கொடுத்தார் கடைக்காரர்.

எதைப் பார்த்தாலும் படிக்கும் ஆர்வம் உள்ள நான் அதை மட்டும் விட்டுவிடுவேனா?

‘நீங்கள் தைரியசாலி. அன்பானவர். பண்பானவர். நேர்மையானவர். அதர்மத்தைக் கண்டு பொங்குபவர். எந்த வம்புக்கும் செல்ல மாட்டீர்கள். ஆனால் வந்த வம்பை விடமாட்டீர்கள்… இப்படியாக ராசிபலன் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த காகிதம் செய்தித்தாளின் ஒரு சிறிய பகுதியாக இருந்ததால் அது எந்த ராசிக்கு எழுதப்பட்டிருந்தது என்ற விவரம் தெரியவில்லை.

ஆனால் வெகு சுவாரஸ்யமாக இருந்தது. இதைப் படிக்கும் யாருக்குமே அது தன் ராசிக்காக எழுதப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றும். காரணம் பாராட்டி புகழ்ந்து எழுதப்பட்டிருந்த தகவல்கள்.

வார்த்தைகளின் வலிமைக்கு உண்மை சம்பவம் ஒன்றை சொல்கிறேன்.

என் உறவினர் ஒருவர். படித்தவர். நல்ல பதவியில் இருக்கிறார். சொந்த வீடு, கார். ஒரு மகன், ஒரு மகள். மனைவியும் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியர்.

எல்லாம் இருந்தும் அவர் தன் பிள்ளைகளிடம் பாசமாக பேச மாட்டார். இயந்திரம்போல செயல்படுவார். குழந்தைகளிடம் ஜாலியாக பேசிப் பார்த்ததே இல்லை. எப்போதுமே மிலிட்டரி கட்டுப்பாடுதான். ஆனால் அவர்களுக்குத் தேவையானதை செய்வதில் எந்த குறையும் வைக்க மாட்டார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் பள்ளியில் தந்தையர் தினத்துக்கு அப்பாவை பற்றி எழுதித்தரச் சொல்லி இருக்கிறார்கள்.

அதை மதிப்பீடு செய்து பரிசும் கொடுத்து அவர்கள் எழுதிய கடிதத்தை லேமினேட் செய்து அவரவர்கள் அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கச் சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.

இவரது மகன் என்ன எழுதியிருந்தான் தெரியுமா?

என்னுடைய அப்பா மிகவும் அன்பானவர். பாசத்தைக் கொட்டுவார். தினமும் அலுவலகத்தில் இருந்து வரும்போதே என் பெயரைச் சொல்லி அழைத்துக்கொண்டே வந்து என்னைக் கட்டிக்கொள்வார். தினமும் எனக்குப் பிடித்த இனிப்பை வாங்கி வருவார். தினமும் குதூகலமாக கதைகள் பேசுவார். எனக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே செய்வார். அம்மா என்னை திட்டும்போது அப்பாதான் எனக்கு சப்போர்ட் செய்வார். தினமும் தூங்கும்போது என்னை தட்டிக்கொடுத்துக்கொண்டே தூங்க வைப்பார். எனக்கு அப்பாவிடம் பிடித்ததே அப்பாவின் சிரித்த முகம்தான். கடுமையாக திட்டி பார்த்தே இல்லை…. இப்படியாக அவன் மனதில் அவன் அப்பா எப்படி இருக்க வேண்டும் என அவன் நினைக்கிறானோ அதை அப்படியே எழுதியிருந்தான்.

அவன் மழலையில் எழுதியிருந்ததை என்னுடைய வார்த்தைகளில் கொடுத்துள்ளேன்.

இதை அவன் அப்பா படித்துவிட்டு வாய்விட்டு அழுதுவிட்டதை அவரே ஒருமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறார். தன்னிடம் இல்லாத குணங்களை எழுதியதன் மூலம் தன்னுடைய ஏக்கங்களை வார்த்தைகளில் வடித்த தன் மகனின் அன்பில் உருகி கரைந்து மெல்ல மெல்ல மாறி அவன் விரும்பிய அன்புத் தந்தையாகிப் போனார்.

தன்னிடம் இல்லாத நல்ல குணங்களைப் பாராட்டிச் சொல்லும்போதே மனம் இத்தனை குதூகலம் அடைகிறதே. உண்மையிலேயே நாம் நல்ல குணநலன்களுடன் பண்புடன் இருந்துவிட்டால் அந்த உணர்வு எத்தனை புத்துணர்வையும் ஊக்கத்தையும் நம் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் புகுந்து நம்மை நல்வழிப்படுத்திச் செல்லும். யோசிப்போமே!

இதுதான் நம்மைச் சுற்றி உள்ளோர்களை ஊக்கப்படுத்தி அரவணைத்துச் செல்வதன் மூலம் நம் உணர்வுகளையும் புதுப்பித்துக்கொண்டே முன்னேறுவதற்கான OTP.

அம்மான்னா அம்மாதான்!

கடந்த 2 நாட்களாக வாட்ஸ் அப்பும், மெசஞ்சரும் கண்டுகொள்ளப்படாமல் பொங்கல் வாழ்த்துக்களால் திணறி கொண்டிருந்தன. ஒரு வாட்ஸ் அப் பகிர்வுக்கு 1 ரூபாய் என கட்டணம் வைத்தால் இதுபோல திணற திணற ஃபேர்வேர்ட் மெசேஞ்களை அனுப்புவார்களா என சில நேரங்களில் விளையாட்டாகவும் பல நேரங்களில் சீரியஸாகவும் யோசித்துண்டு.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியின் வாட்ஸ் அப் மெசஞ்சர்களில் ஏராளமான குறுஞ்செய்திகள். ‘நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்… உங்களுடன் நட்பு கிடைத்ததே பெரும் பாக்கியம்… இந்த நட்பு இறுதிவரைத் தொடர வேண்டும்… உங்களைப் பார்த்தால் ஒரு வளர்ந்தக் குழந்தைக்கு அம்மா என்றே சொல்ல முடியவில்லை…’ இப்படியாக அவரின் புறத்தோற்றத்தை வைத்தே அந்தத் தகவல்கள் இருந்தன. எட்டாவது  படிக்கும் அவரின் மகள் எதேச்சையாக அவற்றை படித்துப் பார்க்கிறாள்.

‘அம்மா, இந்த வயதிலும் உன்னை எத்தனை பேர் ஃபாலோ செய்கிறார்கள்… நம்ம அப்பா மட்டும் உன்னை புரிஞ்சுக்கவே இல்லை. அப்பப்ப சண்டை போடறார்… அப்பா இன்னும் உன்னை நல்லா வச்சுக்கணும்’ என்று சொல்ல அவர் அதிர்ந்து போனார்.

என்னிடம் அதை பகிர்ந்துகொண்டு வருத்தப்பட்டார். நான் சில ஆலோசனைகளைக் கொடுத்தேன்.

அதை அன்றில் இருந்தே செயல்படுத்தத் தொடங்கினார்.

‘கண்மணி, நான் என்ன பொருளா? என்னை நல்லா பத்திரமா பாதுகாக்க… அப்பா அம்மாவுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வருவதால் அவர்களுக்குள் அன்பு இல்லை என்று பொருளல்ல. நல்ல புரிந்துகொள்ளல் இருந்தால்கூட சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். அதைவிடு கண்மணி, பெண்களை நல்லா பத்திரமா பார்த்துக்கொள்ள மட்டுமே ஆண்கள் படைக்கப்படவில்லை. பெண்கள், ஆண்கள் இருவரும் இணைந்து நட்புணர்வோடு பயணிப்பதற்காகவே இந்த வாழ்க்கை நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது… யாரும் யாரையும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அவரவர் தேவைகளை முடிந்தவரை அவரவர்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கையோடு வாழ முடியும்’ என்ற ரீதியில் முடிந்தவரை தன் பெண் புரிந்துகொள்ளும் வகையில் பேசினார்.

ஆனாலும் அந்த சின்னப்பெண்ணுக்குப் புரிந்தும் புரியாத நிலை. அடுத்த நாள் மொபைலில் இருந்து வாட்ஸ் அப், மெசஞ்சர்களை டெலிட் செய்து விடுகிறார். இந்த செய்தியை மகளிடமும் சொல்கிறார்.

ஒரு வாரம் கழித்து மகளிடம் பேச்சுக் கொடுக்கிறார்.

‘கண்மணி, என் மொபைல் எஸ்.எம்.எஸ்களைப் பார்…’

மகளும் பார்க்கிறார். ஆப்ஸ்களில் இருந்ததைப் போல ‘அச்சுபிச்சு’ மெசேஜ்கள் எதுவுமே இல்லை. எல்லாமே அவசியமான தகவல்களாகவே இருந்தன.

‘கண்மணி, இலவசமாக ஒரு வசதி கிடைக்கிறது என்றவுடன் தாராள மனப்பான்மையுடன் வாட்ஸ் அப்பில் ‘எக்கச்செக்க’ புகழாரங்களை அள்ளி வீசியவர்களில் யாரேனும் காசு கொடுத்து சாதாரண எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறார்களா பார்! ஒரு எஸ்.எம்.எஸ் கூட தவறான நோக்கத்தில் இல்லை அல்லவா?

இதுதான் மனித இயல்பு. இப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. எனவே புகழ் வார்த்தைகளுக்கு மயங்கக் கூடாது. சமூக வலைதளங்களில் நண்பர்களை வைத்துக்கொள்வதில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.’

என் அலோசனையின்படி தன் பெண்ணிடம் ஒருவார காலம் பேசி புரியவைத்ததை என்னிடம் நன்றியுடன் பகிர்ந்துகொண்டார்.

இந்த ஆலோசனை வளரும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல நன்கு படித்து நல்ல வேலையில் திருப்தியாக சம்பாதிக்கும் பலருக்கும் சேர்த்துத்தான்.

வஞ்சப் புகழ்ச்சியாக நம்மை நோக்கி வரும் புகழாரங்கள் என்றைக்குமே ஆபத்துத்தான் என்பதை உணர்வதே நம் சுயத்தை நாம் தொலைத்துவிடாமல் கண்ணும் கருத்துமாக நடந்துகொள்வதற்கான OTP.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

குடும்பம் என்பது அப்பா அம்மா குழந்தைகள் என ஓர் அழகான நந்தவனம். அந்த நந்தவனத்தில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒரு சுயம் இருக்கும். அதை விட்டுக்கொடுக்காமலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் இணக்கமாகவும் அன்பாகவும் பொறுப்புடனும் வாழ்வது என்பது ஒரு கலை. அவரவர் சுயத்தை அவரவர் அறிவது ஒன்றுதான் அந்தக் கலையைக் கற்றுத் தேர்வதற்கான ஒரே OTP.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 20
மார்ச் 2020

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon