ஹலோ With காம்கேர் -83:  நீங்கள் ஏன் இதுவரை கொரோனா விழிப்புணர்வு பதிவுகள் எழுதவில்லை?

ஹலோ with காம்கேர் – 83
March 23,  2020

கேள்வி:  நீங்கள் ஏன் இதுவரை கொரோனா விழிப்புணர்வு பதிவுகள் எழுதவில்லை?

நேற்று மாலை 4.59. பால்கனி சென்று வெளி உலகில் என்ன நடக்கிறது என பார்த்தபடி நாங்கள் கைத்தட்ட ஆரம்பித்தோம். சிலர் மொட்டைமாடியில் நின்று கைத்தட்டத் தொடங்கினார்கள். ஒருசிலர் தட்டில் கரண்டியால் அடித்துக் சப்தமெழுப்ப ஆரம்பித்தனர். சைரன் சப்தமா சங்கு ஊதும் சப்தமா என தெரியவில்லை. எங்கிருந்தோ சப்தம் மட்டும் வந்தது.

காகங்களும் புறாக்களும் அந்த சப்தத்தில் பயந்து அங்கும் இங்கும் பதற்றத்துடன் பறந்தன. நாய்கள் குரைத்தன.

எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தால் பக்கத்துத் தெருவில் உள்ள ஓரிரு குடிசை வீடுகள் கண்களுக்குத் தெரியும். அந்த குடிசையில் இருக்கும் ஒரு சிறுவன் காலையிலேயே குப்பைப் பொறுக்க கிளம்பிவிடுவான். நேற்று வீட்டில் இருந்திருக்கிறான். கைதட்டல் சப்தம் கேட்டதும் வெளியே தலையை எட்டிப் பார்த்தான். கூடவே வயதான அவன் பாட்டியும் வெளியே வந்தார்.

ஓரிரு இடங்களில் கிழிந்து கசங்கிய சட்டையுடன் குடிசை வாசலில் நின்று கைத்தட்ட ஆரம்பித்தான். பாட்டியும்தான். மிக நெகிழ்ச்சியாக இருந்தது இந்தக் காட்சி.

கொரோனா பற்றி நீங்கள் ஏன் விழிப்புணர்வு கட்டுரைகள் எதையும் எழுதவில்லை என என்னிடம் சிலர் கேட்டிருந்தார்கள். கொரோனா குறித்து மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டும் சுயநலம் துறந்து உழைத்துக்கொண்டும் இருக்கும்போது அவற்றை கூர்ந்து கவனித்து அவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பது மட்டுமே நம் தலையாய கடமை என்பதால் அதை மட்டுமே செய்து வருகிறேன்.

சமூக வலைதளங்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே என் பதிவுகளும் வீடியோக்களும் சென்றடையப் போகிறது. அவர்கள் ஏற்கெனவே கொரோனா குறித்து அப்டேட் ஆனவர்களே.

இரண்டு நாட்கள் முன்னர் குப்பை கொட்டச் சென்றிருந்தபோது மாஸ்க் அணிந்த தூய்மைப் பணியாளர் ஒருவரை பார்த்தேன். ‘என்ன கொரோனாவுக்காக எப்படி பாதுகாப்பா இருக்கீங்க?’ என கேட்டேன். ‘நாங்க என்ன பண்ணப் போறோம்மா… வீட்டுக்குப் போனா கைகால் கழுவிட்டு சுத்தபத்தமா சமைக்கிறோம், சாப்பிடறோம்… அவ்ளோதான்… எல்லோருக்கும் வர்றது எங்களுக்கும்… இருக்கும்வரை வாழ்ந்துட்டுப் போவணும் அவ்ளோதான்’ என்று சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினரானார்.

இவ்வளவு நாட்கள் கைகால் அலம்பாமல்தான் சமைத்து சாப்பிட்டு வந்தார்களா என நினைத்துக்கொண்டேன்.

சென்ற வாரம் அப்பாவுடன் மளிகைக் கடைக்குச் சென்றிருந்தேன். இருபத்தைந்து வருடங்களாக அங்குதான் வாங்குகிறோம். போனில் ஆர்டர் எடுத்துக்கொண்டு வீட்டில் டெலிவரி செய்துவிடுவார்கள். இந்த முறை நேரில் சென்று கொஞ்சம் பார்த்து வாங்கிக்கொள்ளலாமே என்பதால் நேரடி விசிட். கூட்டமான கூட்டம்.

கடை முதலாளி எங்களைப் பார்த்து சிரித்துவிட்டு ‘இப்போ என்ன உலகமே அழியப் போகிறதா,  ஒரு வாரம் பத்து நாட்களுக்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம்… இரண்டு மாதம் மூன்று மாதம் என அள்ளி எடுத்துச் செல்கிறார்கள்… அதை சரியாக பராமரிக்காமல் பூச்சி வண்டு வந்தாலும் எங்களைத்தான் குறை சொல்வார்கள். உங்களிடம்தான் சாமான் வாங்கினோம். ஒரே பூச்சி என புகார் அளித்துகொண்டு வருவார்கள்…’ என புலம்பித் தள்ளிவிட்டார். வியாபாரம் நன்கு நடந்தால் அவருக்குத்தானே லாபம் என்றெண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் முத்தான ஒரு கருத்தைச் சொன்னார் பாருங்கள். அசந்துவிட்டோம்.

‘எல்லோருக்கும்  நடக்கப் போகிறதுதானே நமக்கும். வாழ்ந்தால் எல்லோரும் வாழப் போகிறோம், செத்தால் எல்லோரும் சாகப் போகிறோம்… ஏன் இத்தனை பதட்டம்…’

மளிகைக்கடை முதலாளியாகட்டும், தூய்மைப் பணியாளராகட்டும், குப்பைப் பொறுக்கும் சிறுவனாகட்டும் எல்லோரிடத்திலும் ஒரு நேர்மையும் தெளிவும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஏதோ ஒன்றுக்கு கட்டுப்படுகிறார்கள்.

இந்தத் தெளிவு நம் எல்லோருக்கும் இருந்துவிட்டால் எல்லா இடர்களையும் கடந்துவிடலாம்.

இதுவும் கடந்துபோகும்தான். அது இயல்பாகக் கடக்க நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

புரிந்துகொள்வோம். ஒத்துழைப்போம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 75 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon