ஹலோ With காம்கேர் -89:  ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்களா?

ஹலோ with காம்கேர் – 89
March 29, 2020

கேள்வி: ஃபேஸ்புக் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருமே நண்பர்களா?

நேற்று ஃபேஸ்புக் தொடர்பில் இருக்கும் ஆசிரியராக பணிபுரியும் நடுத்தர வயது பெண் ஒருவர் இன்பாக்ஸில் வந்து ‘உங்கள் ஃபேஸ்புக் நட்பில் இருக்கிறார் என்பதற்காக அவர் கொடுத்திருந்த நட்பு அழைப்பை ஏற்றுக்கொண்டேன்… ஆனால் நேற்று மெசஞ்சரில் கன்னா பின்னா என்று ஏதோதோ பேசுகிறார்…’ என்று அழமாட்டாத குறையாய் ஒரே புலம்பல்.

உலகமே கொரோனா பீதியில் இருக்கும் இந்த காலகட்டத்திலும் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்துகொண்டு பொழுது போகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இப்படி தங்களுக்குள் இருக்கும் கேவலமான மற்றொரு முகத்தை காட்டுபவர்களை நினைத்தால் அவர்கள் எல்லாம் மனித ஜென்மங்கள்தானா என்று வியப்பு மேலிட்டது.

ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நண்பர்கள் வைத்திருக்கிறார்கள். தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என பலதரப்பட்ட மனிதர்கள் அதில் இணைந்துள்ளனர்.

ஒரு சிலர் தனக்கு வருகின்ற நட்பு அழைப்புகளை கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பின்புலம் ஆராய்ந்து பார்த்து  நட்பு வட்டத்தில் இணைத்திருப்பர். ஆனாலும் அவர்களுக்கே டிமிக்கிக்கொடுத்து ஃபேக் ஐடிகள்  பலர் அவர் லிஸ்ட்டில் இருப்பர்.

ஆத்மார்த்தமாகப் பழகும் ஓரிருவரை தக்க வைத்துக்கொள்வதே பிரம்மப்பிரயத்தனமாக இருக்கும் இந்தாளில் ஃபேஸ்புக் நட்பில் இருக்கும் 5000 நபர்களையும் சமாளிப்பவர்களை நினைத்து எனக்கு பிரமிப்புத்தான்.

ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் நண்பர்கள் என்றழைப்பதுகூட ஒருவகையில் சரியல்ல என்பதே என் கருத்து.

பிசினஸ் செய்பவர்கள் அவர்களின் பொருட்களை / சேவைகளை பயன்படுத்துபவர்களை எப்படி கிளையிண்ட் / கஸ்டமர் என்ற பெயரில் அடையாளப்படுத்துகிறார்களோ, அதுபோல முகநூல் என்ற பொதுவெளியில் இணைந்திருப்பவர்கள் அவரவர் ‘தொடர்பில் இருப்பவர்கள்’ மட்டுமே.

அதில் நமக்கு நேரடியாக நண்பர்களாக இருப்பவர்களும் இருக்கலாம், நம் குடும்ப உறுப்பினர்கள் இருக்கலாம், நம் ஆசிரியர்கள் இருக்கலாம், அலுவகத்தில் உடன் பணிபுரிபவர்கள் இருக்கலாம். அதனால் அத்தனை பேருமே நண்பர்கள் என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  புரிதலின் அடிப்படையில் பின்னாளில் ஓரிருவர் நண்பர்களாகலாம். அது வேறு விஷயம்.

சமூக வலைதளங்களில் நட்பில் இருப்பவர்கள் அனைவரும் நண்பர்கள் அல்ல,
சமூக வலைதள தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே.

என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவர்களுக்கு எல்லாம் நான் நன்னடத்தைச் சான்றிதழ் கொடுக்க முடியாது. எனவே நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் என்று பதில் அளித்தேன்.

வாழ்வா சாவா அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தில் கண்களுக்குத் தெரியாத வைரஸ் நம் அனைவரின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இயற்கை எத்தனை அவதாரங்களை எடுத்து எத்தனைப் பாடங்களை சொல்லிக்கொடுக்க முற்பட்டாலும் இவர்களைப் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்ற எண்ணம் மேலோங்கி நேற்றைய பொழுதை ஆக்கிரமித்தது.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon