ஹலோ With காம்கேர் -106: விமர்சனங்கள் இல்லாமல் வாழவே முடியாதா?

ஹலோ with காம்கேர் – 106
April 15, 2020

கேள்வி:  விமர்சனங்கள் இல்லாமல் வாழவே முடியாதா?

சாத்தியம் இல்லை. நான்கு பேர் உள்ள வீட்டில் அப்பா சொல்வதையோ அல்லது அம்மா சொல்வதையோ பிள்ளைகளால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறதா? எத்தனை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

வீட்டுக்குள்ளேயே இப்படி என்றால் பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் கேட்கவா வேண்டும்.

இரண்டு தினங்கள் முன் கார்ப்பரேஷனில் இருந்து இருபது வயதிருக்கும் இளைஞன் ஒருவர் வந்திருந்தார். சீருடையும்  மாஸ்க்கும் அணிந்திருந்தார்.  ஒரு அடி தள்ளி நின்று வீட்டு உறுப்பினர்களின் பெயர், வயது போன்றவற்றை கேட்டுவிட்டு யாருக்கேனும் பிபி, ஷுகர், ஜூரம், கோல்ட் இருக்கிறதா என கேட்டறிந்து குறித்துக்கொண்டு சென்றார். அவரின் பொறுமை, கனிவு, ஈடுபாடு கவனிக்க வைத்தது.

அதற்கு அடுத்த நாளும் வந்து விவரம் கேட்டறிந்து சென்றார். நேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று ஆணும் பெண்ணுமாய் இருவர் வந்திருந்தனர்.  ‘வீட்டில் எல்லோரும் நலம் தானே, ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?’ என நலன் விசாரித்தார்கள்.  ‘தினமும் விவரம் கேட்கச் சொல்லி இருக்கிறார்களா?’ என கேட்டதற்கு  ‘ஆமாம்’ என்று சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினரானார்கள். எங்களிடம் அவர்கள் கேள்வி கேட்டு எழுதுவதைப் போல் மொபைலில் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.

நேற்று எங்கள் குடியிருப்புக்குக் கீழே அந்த இளைஞனும் இதே பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு இளைஞனும் போதுமான இடைவெளி விட்டு உட்கார்ந்துகொண்டு கையில் வைத்திருந்த பேடில் பதிவு செய்திருந்ததை பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஸ்கூட்டியில் சீருடை அணிந்த ஒரு நடுத்தர வயது பெண் வந்து ‘என்ன தம்பிங்களா, இரண்டு தெரு பார்க்கிறதுக்குள்ள உட்கார்ந்துட்டீங்க?’ என கேட்க ‘மாடி ஏறி கேட்கிறதுதான் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் உட்கார்ந்துட்டு போகலாம் என்றிருக்கிறோம்’ என பதில் சொன்னார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்ததில் இருந்து சில விவரங்கள் கிடைத்தன. நாள் ஒன்றுக்கு 15 தெரு (எண்ணிக்கை சரியாக காதில் விழவில்லை) கணக்கிட்டால் இத்தனை ரூபாய் என கொடுக்கிறார்கள் என அவர்கள் அந்த பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

‘நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். ஒரு நாளுக்கு இத்தனை சம்பாதிக்க முடிகிறதே… நாங்கள் எல்லாம் இதுபோல வேறு பணிகளுக்கு கணக்கிட சென்றால் ஒரு மாதத்துக்குத்தான் இத்தனை கிடைக்கும்… வாய்ப்பை மிஸ் பண்ணாம வேலை பாருங்க…’ என்று கனிவுடன் சொல்லிவிட்டு கிளம்ப எத்தனித்த போது அவர்கள் ‘சில வீடுகளில் கதவை திறக்க மாட்டேன் என்கிறார்களே’ என்றனர்.

‘அப்படியே, உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள் என உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டார் அந்த பெண்.

‘வாசலில் செருப்புகள் உள்ளன, வீட்டின் உள்ளே பேச்சு சிரிப்பு சப்தம் கேட்கிறது. டிவி ஓடும் சப்தம் கேட்கிறது. சில வீடுகளில் குழந்தைகள் அழும் சப்தமும் வருகிறது…’ என்றனர்.

‘எந்தெந்த வீடுகளில் இப்படி நடக்கிறதோ அதை தனியாக குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள். தினமும் நீங்கள் ரிப்போர்ட் சப்மிட் செய்யும்போது அதையும் இணைத்துக்கொடுங்கள். இல்லையெனில் நாளை நீங்கள்தான் அந்த வீடுகளுக்கு செல்லாமல் தட்டிக்கழித்ததாக தவறான பெயர் கிடைக்கும்’ என பொறுப்புடன் அறிவுரை சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் பறந்தார்.

அந்த இளைஞர்களின் பொறுப்பும், அந்த பெண்ணின் கனிவான ஆலோசனையும் அமைதியான ஆள் அரவமற்ற அந்த தெருவையே காகிதமாக்கி ஒரு கவிதை தானாகவே எழுதிக் கொண்டதைப்போல உணர்ந்தேன்.

இதை இப்படியாக நான் உணர்ந்து ரசித்துக்கொண்டிருந்த வேளையில் அடுத்த வீட்டுல் ஒரு அம்மணி  என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

‘ஓவரா சீன் போடறாங்க… தினம் தினம் என்ன நமக்கு வியாதியா வந்துடப் போறது… டெய்லி நோட்டை எடுத்துட்டு வந்துடறாங்க… எத்தன வீடுகளுக்குப் போறாங்க… எதையாவது வைரஸை நம்மிடம் தள்ளிட்டுப் போயிடப் போறாங்க…’ என்று மனசாட்சியே இல்லாமால் விமர்சனம் செய்தார்.

தினந்தோறும் காலை ஆறு மணிக்கு நான் எழுதிவரும் பதிவுகளில் பெரும்பாலும் நேர்மறை, தன்னம்பிக்கை, உளவியல் இதுபோன்ற வாழ்வியல் சிந்தனைகளை என் அனுபவங்களின் ஊடே எழுதி வருவதால் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் விமர்சனம் செய்வதற்கு எதுவுமே இல்லை என்றாலும் இதுவும் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை.

சென்ற வருடத்தில் ஒருநாள்.

‘நல்லதையே சிந்தியுங்கள், நல்லதே நடக்கும், பாஸிட்டிவ் வைப்ரேஷன் உங்களைச் சுற்றிப் பரவும், மனமே கடவுள் இப்படி காலம் காலமாக வார்த்தை ஜாலங்களினால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நீங்களும் உங்கள் பாணியில் கொஞ்சம் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் இதையேத்தான் சொல்கிறீர்கள்… நல்லதை நினைத்தால் நல்லது நடந்துவிடுமா என்ன, கொஞ்சம் லாஜிக்கலா சிந்தியுங்கள்…’ என சீறிக்கொண்டு ஒரு பிரபலம்(!) பின்னூட்டத்தில் விமர்சனம் செய்தார்.

‘மனதை மேம்படுத்தவும் செம்மைப்படுத்தவும் நேர்வழிப்படுத்தவும் நேர்மறை சிந்தனையை கொஞ்சம் மிகைப்படுத்திச் சொன்னால்கூட தவறில்லையே…’ என நான் பதில் அளிக்க அவர் தொடர்ச்சியாக ‘வீண்’ விவாதம் செய்ய கடைசியில் ப்ளாக் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றியது.

நான் எழுதுவது உளவியல் சார்ந்த நேர்மறை சிந்தனைகளை மட்டுமே. இதையும் பொறுக்க மாட்டாமல் விமர்சிக்க ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது.

எதைச் செய்தாலும் விமர்சனம் செய்துகொண்டுதான் இருப்பார்கள் வாய்சொல் வீரர்கள். புறம் தள்ளிவிட்டு நமக்கான பாதையில் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon