ஹலோ With காம்கேர் -107: Quarantine செய்யப்படுவதும், தனிமைப்படுத்திக்கொள்வதும் அத்தனை வேதனையானதா?

ஹலோ with காம்கேர் – 107
April 16, 2020

கேள்வி: Quarantine செய்யப்படுவதும், தனிமைப்படுத்திக்கொள்வதும் அத்தனை வேதனையானதா?

தைரியமாய் இருப்பவர்களுக்கு பயமே இருக்காது என்றும், மென்மையான சுபாவம் உள்ளவர்களுக்கு தைரியமே இருக்காது என்றும் மேம்போக்கான கருத்துக்கள் உள்ளன. மேலோட்டமாக வெளிப்படையாக தெரிகின்ற விஷயங்களை வைத்து பிறரை எடை போடுபவர்களின் கண்களுக்கு வெளியே எது தெரிகிறதோ அதையே அடையாளமாகக் கொள்கிறார்கள்.

இதனால்தான் தாங்கள் மனதுக்குள் கொண்டாடிய பிரபலங்களின் சுயரூபங்களை தெரிந்துகொள்ளும் சூழல் ஏற்படும்போது தடுமாறிப் போகிறார்கள். ‘நான் என்னவோ நினைச்சேன். அவர் இப்படி நடந்துகொள்கிறார், அப்படி பேசிவிட்டார்’ என்று புலம்புகிறார்கள்.

வெளியில் தெரிவது பிம்பம். உள்ளத்துக்குள் இருப்பதுதான் நிஜம். உள்ளேயும் வெளியேயும் ஒன்றாக வாழ்பவர்கள் மிககுறைவு. அப்படியே நடந்துகொண்டாலும் அவர்கள் Quarantine செய்யப்படுவார்கள் அல்லது தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்வார்கள். ஏனெனில், புரிந்துகொள்பவர்கள் மிகக் குறைவு.

கண்களுக்கு என்ன தெரிகிறதோ அதை நம்புவதைவிட்டு, நேரத்தை வீண் செய்து அறிவுக்கு மட்டுமே தெரியும் உள்ளத்தில் உள்ளதை ஆராய்ந்து அறிந்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் யாருக்குத்தான் இருக்கப் போகிறது.

இதில் பெற்ற தாய்கூட விதிவிலக்கல்ல. சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தில் புரோகிராமராக பணிபுரிந்தார் ஒரு பெண். வேலையில் பயங்கர ஸ்மார்ட். எதையும் அசால்ட்டாக உதறித் தள்ளிவிட்டுப் போகும் தைரியமான பெண். ஆனால் அதையெல்லாம் மீறி ஒரு சோகம் இழையோடும் அவர் முகத்தில். காரணம் தெரிந்துகொண்டபோது அவர் சொன்ன பதிலில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

அவர் அம்மா சிறு வயதில் இருந்தே அவருடைய அக்காவுக்கும் அண்ணாவுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பாராம். இத்தனைக்கும் இவருக்கும் இவரது அக்கா அண்ணாவுக்கும் ஓரிரு வயது வித்தியாசம்தானாம். அக்காவுக்கு அடுத்து அண்ணா, அண்ணாவுக்கு அடுத்து இவர். இவர் பிறந்தவுடம் அப்பா இறந்துவிட்டாராம்.

அவர்கள் பெரிய தவறுகள் செய்தால்கூட சின்னதாக கடிந்துகூட பேசாத அம்மா, இவர் ஏதேனும் சிறிய தவறு செய்தால்கூட சீறிவிழுவாராம். இணைப்பாக அடியும் உதையும்.

அக்காவுக்கு படிப்பு வரவில்லை. அண்ணா சுமாராகப் படித்து சுமாரான வேலையில். இவர் மட்டும்தான் இப்போது குடும்பத்தைத் தாங்கும் முதன்மைத் தூண். இருந்தும் இவருக்கான முக்கியத்துவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அக்காவின் திருமணம் அண்ணாவின் உயர் படிப்பு என அனைத்துமே இவரது வருமானத்தில்தான்.

‘அம்மா நானும் மனுஷிதான். எனக்கும் உன் பாசம் வேண்டும். என்னை மட்டும் ஏன் இப்படி நடத்துகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்…’ என்று வெளிப்படையாகக் கேட்டும் அவர் அம்மாவின் குணத்தில் எந்த மாற்றமும் இல்லை. ‘நான் சரியாகத்தான் நடந்துகொள்கிறேன்… நீதான் எதற்கெடுத்தாலும் குதர்க்கமாய் பார்க்கிறாய்’ என்று முன்பைவிட மோசமாக நடந்துகொள்கிறாராம்.

‘ராட்சசி கத்தப் போகிறாள்’, ‘எதுடா சாக்கு என குத்தம் சொல்ல வந்துடுவா’ என கூடுதல் பட்டப் பெயர்கள் கிடைத்தது மட்டும்தான் வெளிப்படையாக தன் எதிர்பார்ப்பை அம்மாவிடம் சொன்னதுக்கு கிடைத்த பலன் என்று சொன்னார்.

இப்படியும் அம்மாக்கள் இருக்கிறார்களே என நான் வியந்தேன்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். தைரியமாய் இருப்பவர்களுக்கும் வலிக்கும், அழுகை வரும், கஷ்டங்களை யாரிடமாவது சொல்லி புலம்பத் தோன்றும். ஆனால் பிறர் இவர்கள் மீது கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தினால் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

அதுபோலவே மென்மையான சுபாவம் இருப்பவர்களுக்குள் அசாத்திய தைரியம் இருக்கும். ஏதேனும் ஒரு சமயத்தில் அந்த தைரியம் கோபமாக வெளிவரும். அந்த சமயத்தில் ஏதேனும் கத்திவிட்டால் போச்சு. ‘ஊமைக் குசும்பு, பாரேன் அமுங்குலியாக இருந்துகொண்டு பேசுகின்ற பேச்சை’ என்ற பட்டப் பெயர் தாராளமாய் கிடைக்கும்.

வெளியில் தெரியும் பிம்பமும் உள்ளுக்குள் உறைந்திருக்கும் உண்மையும் இணையும் புள்ளிதான் நம் சுயம்.

சுயத்துடன் வாழ்வது அத்தனை சுலபமல்ல. அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலான நேரங்களில் குவாரண்டைன் செய்யப்படுவார்கள் அல்லது செய்துகொள்வார்கள். ஆனால் அதிகபட்ச சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.

நான் சுயத்துடன் வாழ்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

‘எந்த ஒரு உறவும் நாம் பிறரிடம் நடந்துகொள்ளும் விதத்தினாலும் நம்மைப் பற்றி நாம் ஏற்படுத்தும் பிம்பத்தினாலும் சுகமாக அல்லது சுமையாக மாறும் என்பது சரியா?’ என்ற கேள்வியை முன்வைத்து இன்றைய பதிவை எழுதத் தூண்டியவர் @திருமிகு. கமலா முரளி.

(Visited 31 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon