ஹலோ With காம்கேர் -144: நம்மவர்களின் சுயசார்புத் தன்மை (Self-reliance) அதிகரித்துள்ளதா?

ஹலோ with காம்கேர் – 144
May 23, 2020

கேள்வி: நம்மவர்களின் சுயசார்புத் தன்மை அதிகரித்துள்ளதா?

எங்கள் வீட்டில் இருந்து 100, 150 அடி தொலைவில் எங்கள் வீட்டைவிட கொஞ்சம் உயரமாக இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் இருந்து தினமும் ஒரு குரல் கேட்கும். ‘பாட்டி… பாட்டி…’ என ஒரு சிறுமி கத்துவாள். அவள் தன் பாட்டியைத்தான் கூப்பிடுகிறாள் என நினைத்து நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். ஆனால் என் அம்மா, அந்தக் குழந்தை தன்னைத்தான் பாட்டி என கூப்பிடுகிறது என்று சொன்னதால் திரும்பிப் பார்த்தேன். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா இவர்களுடன் அந்தச் சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் தலையின் சிறுபகுதி மட்டும்தான் தெரிந்தது. மொட்டை மாடி சுவரின் உயரத்தைக் கூட இன்னும் எட்டவில்லை. அவ்வப்பொழுது அந்தக் குழந்தையின் அப்பாவும் அம்மாவும் அந்தச் சிறுமியை தூக்கி வெளி உலகை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.  அவள் எங்களை நோக்கித்தான் ‘பாட்டி பாட்டி’ என கத்துகிறாள் என்பது புரிந்தது.

நாங்களும் அந்த சிறுமி இருக்கும் திசையில் கை அசைப்போம். கை அசைத்தால் அவள் வெட்கப்பட்டுக்கொண்டு தூக்கி வைத்திருப்பவரின் கைகளில் இருந்து திமிறிக்கொண்டு கீழிறங்கிவிடுவாள்.

‘அம்மா அந்தக் குழந்தை உன்னை பாட்டி என கூப்பிடுகிறதா அல்லது என்னைப் பாட்டி என நினைத்துக் கூப்பிடுகிறதா’ என கிண்டல் செய்து பேசியபடி வாக்கிங் செல்வது இந்த லாக்டவுன் காலகட்டம் கொடுத்த மகிழ்ச்சிகளுள் ஒன்று.

கார்ப்பரேஷன் அலுவலகம், வங்கிகள், அலைபேசி நிறுவனங்கள் இவற்றில் இருந்து அவ்வபொழுது போன் அழைப்பு வந்து ‘பாதுகாப்பாக இருக்கிறீர்களா’ என்ற நலன் விசாரிப்புடன் தொடங்கி தங்கள் சேவை சார்ந்து ஏதேனும் உதவி என்றால் தயங்காமல் போன் செய்யுங்கள், உதவக் காத்திருக்கிறோம் என முடிக்கும் கனிவைக் கூட்டிய குரல்கள் இயந்திரத்தனமான பேச்சைக் கேட்டே பழகி விட்ட நமக்கெல்லாம் புதிதுதான்.

வீடுகளில் தங்களுக்குத் தேவையானதை தாங்களே செய்துகொள்பவர்களை நிறைய காண முடிகிறது.

எங்கள் இருப்பிடத்துக்கு அடுத்து கீழொரு வீடு, மேலொரு வீடு, அதற்கு மேல் மொட்டை மாடி என சிறிய குடியிருப்பு. அந்த வீட்டு உரிமையாளர் கணவன் மனைவியாக சேர்ந்து மொட்டை மாடி தரையில் இருந்து வீட்டுக்குள் வெயில் பரவாமல் இருக்க சுண்ணாம்பு அடித்ததைப் பார்க்கும்போது அவர்கள் வேலை செய்யும் பாங்கு அழகாக இருந்தது. இத்தனைக்கும் அவர்கள் தங்கள் வீட்டு நாயைக் கூட தாங்கள் வாக்கிங் அழைத்துச் செல்ல மாட்டார்கள். வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் அந்த வேலையையும் செய்வார். அவர்களுக்கு சுண்ணாம்பு அடிக்கும் வேலைகள் எல்லாம்கூட தெரியுமா என நினைத்து வியந்தேன்.

எதிர் வீட்டில் அப்பா, அம்மா, கல்லூரியில் படிக்கும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் என அழகான குடும்பம். அவர் பிசினஸ் செய்கிறார். பாத்திரம் துலக்க, வீடு பெருக்க, சமையல் செய்ய இப்படி எல்லா வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள் வைத்திருக்கும் வசதியானவர்கள். மொட்டை மாடியில் மாலை 6 மணிக்கு வாக்கிங் வந்துவிட்டு கொஞ்ச நேரம் சீட்டு விளையாடிவிட்டுச் செல்வார்கள். ஆறரை மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கிவிடும். பல நாட்களாய் பயன்படுத்தப்படாமல் இருந்த லைட்டை மாற்றிக்கொண்டிருந்தார் அந்தக் குழந்தைகளின் அப்பா. அது வெளிப்புறத்தில் மூடப்பட்ட விளக்கு. அந்த மூடிப் பகுதியை ஸ்குரூ ட்ரைவர் வைத்துத் திறந்து, துரு பிடித்துப் போயிருந்த உட்பகுதியை டெஸ்ட்டர் கொண்டு பரிசோதித்து, துருவை சுத்தம் செய்து புது லைட் மாற்றி அந்த விளக்கின் மூடியைப் பொருத்தினார். இதுபோன்ற சின்னச் சின்ன எலக்ட்ரிக்கல் வேலைகள் எல்லாம் நம்மவர்களுக்குத் தெரியுமா என ஆச்சர்யப்பட்டேன்.

ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியின் வெளிப்புறத்தில் தண்ணீர் ஒழுகிக்கொண்டே இருந்ததால் அதை அந்த வீட்டுப் பெரியவர் ஒருவர் ஏதோ செய்து சரி செய்துகொண்டிருந்தார்.

தெருமுனை வீட்டில் இளைஞன் ஒருவன் பைக் ஸ்டார்ட் ஆகாததால் தானே முயற்சி செய்து சரி செய்துகொண்டிருந்தான். டயரும் பஞ்சர். சற்று நேரத்தில் ஸ்டார்ட் ஆனது. பின்னர் டூல்கிட் வைத்து டயரை பாந்தமாக பிரித்து பஞ்சர் எங்கிருக்கிறது என பார்த்து என்னவோ செய்து தானாகவே பஞ்சர் ஒட்டிவிட்டான்.

மற்றொரு வீட்டில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண் தன் வீட்டுக் காரை வாட்டர் வாஷ் செய்து துடைத்துக்கொண்டிருந்தாள்.

பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாக்கிங் வருவார்கள் பார்த்திருக்கிறேன். இந்த லாக் டவுன் காலத்தில் பத்து பன்னிரெண்டு வயது சிறுவர்கள் கூட ஓடாமல் ஒளியாமல் சீராக நடந்து வாக்கிங் செல்வதை காண முடிகிறது.

எதிர் அப்பார்ட்மெண்ட்டில் பத்து வயது சிறுவன் தினமும் மாலையில் அத்தனை அழகாய் நேர்த்தியாய் சந்தியாவந்தனம் செய்வதை பார்க்கும்போது அவனுடைய பெற்றோரின் வளர்ப்பின் மீது மரியாதை உண்டாகிறது.

பின்பக்கத்து வீடு தனிவீடு. கீழே குடியிருப்பு. மேலே மொட்டை மாடி. பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருக்கும் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வாக்கிங் செல்லும் இளம் தாயைக் காண முடிகிறது.

ஆங்காங்கே கண்களுக்கு எட்டிய தொலைவில் எல்லாம் குடும்பம் குடும்பமாக மொட்டை மாடியில் வாக்கிங் செல்வதும், பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. எங்கும் மனிதத் தலைகள்.

தங்களின் பெரும்பாலானத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளவும், தங்கள் மகிழ்ச்சி வெளியில் இல்லை தங்களுக்குள்ளேயேத்தான் இருக்கிறது என்பதையும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கற்றுக்கொடுத்துச் சென்றுள்ளது.

நம்மவர்களின் சுயசார்புத் தன்மை அதிகரித்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 89 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon