ஹலோ With காம்கேர் -146: கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்?


ஹலோ with காம்கேர் – 146
May 25, 2020

கேள்வி:   கழைக்கூத்தாடி கிளறிவிட்ட சிந்தனைகளில் அப்படி என்ன விசேஷம்?

நேற்று காலை ஏழரை மணி இருக்கும். வாசலில் மேள சபதம்போல கேட்க, பால்கனி வாயிலாக எட்டிப் பார்த்தேன். ஒரு கழைக்கூத்தாடி பெண் ஒருவள் சாலையில் சம்மனமிட்டு உட்கார்ந்து மேளம் அடித்துக்கொண்டிருந்தாள். கூடவே அவளுடைய மகனும், மகளும். ஐந்து ஆறு வயதுதான் இருக்கும் இருவருக்கும். கூத்துக்குத் தயார் ஆகிக்கொண்டிருந்தார்கள்.

கழைக்கூத்தாடிகளை கடைசியாக எப்போது பார்த்தேன் என யோசித்தேன்.

பெற்றோரின் பணி இட மாற்றல் காரணமாக நிறைய ஊர்களில் வசிக்கும் வாய்ப்பு. நிறைய ஊர்கள், வித்தியாசமான சூழல்கள், பலதரப்பட்ட மனிதர்கள், விதவிதமான நல்ல அனுபவங்கள் அத்தனையும் என்னை நித்தம் புதுப்பித்துக்கொண்டே இருந்தன என்று சொல்லலாம்.

கற்பனை வளமும் ஆக்க சக்தியும் சதா என்னுள் தளும்பிக்கொண்டே இருப்பதற்கு அவையெல்லாம் ஒரு காரணம். ஒரு புத்தகம் வாசிப்பதைவிட அமைதியாக அமர்ந்துகொண்டு நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பது கலப்படம் இல்லாத உண்மைகளை கற்றுக்கொடுப்பதைப் போல தோன்றும். கற்பனையோ அல்லது உண்மைக் கதையோ எழுபவர்களின் கருத்தும் சேர்ந்துத்தானே எழுதப்பட்டிருக்கும். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் சொல்லும் கதைகளில் அதற்கான வாய்ப்புகள் கிடையாது என்பதால் மனிதர்களை கவனிப்பது எனக்குப் பிடித்த ஒன்று.

மனிதர்களை படிப்பதாலோ என்னவோ முகங்கள் என் நினைவுகள் விட்டு அகலுவதே இல்லை. பெயர்கள் சட்டென நினைவுக்கு வராது. ஆனால் முகங்கள் நினைவில் நின்றுகொண்டே இருக்கும். ஒரே மாதிரியான குணாதிசயங்கள் கொண்டவர்கள் ஒரேமாதிரியான சாயலில் இருப்பதைப் போல தோன்றும். பலரை இப்படி பார்த்திருக்கிறேன்.

நான் மதிக்கும் பண்பான ஒரு பத்திரிகையாளர், கனிவான ஒரு ஓட்டல் சர்வர்,  நேர்மையான ஒரு போஸ்ட் மேன் என இவர்கள் மூவருமே ஒரே முகசயாலில் இருப்பதைக் கண்டு ஒவ்வொரு முறை அவர்களை சந்திக்கும்போதும் வியந்திருக்கிறேன். ஒருவர் பேசும்போது மற்றொருவர் முகத்தை அவர்களிடம் காண்பேன். இதற்கெல்லாம் ஏது நேரம் உங்களுக்கு என கேட்காதீர்கள். போஸ்ட் மேன் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ரெஜிஸ்ட்டர் தபாலை என்னிடம் கொடுத்துச் செல்லும் ஒரு நிமிட, இரண்டு நிமிட இடைவெளியில் எனக்குள் தோன்றி மறையும் சிந்தனைகள் இவை.

நான் சொன்ன பத்திரிகையாளர், ஓட்டல் சர்வர், போஸ்ட் மேன் இவர்கள் மூவருக்கும் ஒரே மாதிரியான முகச்சாயல் இருப்பதற்கு அவர்களின் அடிப்படை குணமான பண்பு, கனிவு, நேர்மை இவற்றைச் சொல்லலாம். நேரம் கிடைத்தால் நீங்களும் கவனித்துப் பாருங்கள், உங்களுக்கும் இந்த உண்மை புலப்படலாம். புலப்படாவிட்டாலும் விட்டுத்தள்ளுங்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரி சிந்தனை இருக்க வேண்டும் என்பதில்லையே?

சரி சரி விஷயத்துக்கு வருகிறேன்.

நேற்று பார்த்த கழைக்கூத்தாடி சிறுமியின் சாயலை ஒத்த ஒரு சிறுமி எந்தப் பிடிமானமும் இன்றி சாலையில் நடுவே கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் நடந்து சாகசம் செய்த காட்சி இப்போதும் நினைவிருக்கிறது. என்னுடைய பத்து வயதில் சீர்காழியில் பள்ளி முடிந்து அப்பாவுடன் சைக்கிளில் வரும்போது அந்தக் காட்சியைப் பார்த்தேன். அந்தச் சிறுமியின் முகமும் அவளுடைய சாகசமும் மனதில் நீங்காமல் பதிவாயிற்று.

என்னுடைய பிசினஸில் எத்தனையோ நேர்காணல்கள். ஒவ்வொன்றிலும் ‘ஆண்களுக்கான பிசினஸ் உலகில் பெண்ணாக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள், போட்டிகள் இவற்றை எப்படி சமாளித்து வெற்றி பெற்றீர்கள்’ என்ற கேள்வி இடம் பெறாமல் இருக்காது.

‘கயிற்றின் மேல் நடக்கும் சிறுமி கீழே விழுந்து விடாமல் இருக்க எத்தனைப் பிரயத்தனம் செய்ய வேண்டியுள்ளது. அவள் கவனம் முழுவதும் கயிற்றின் மீதும், பாதையின் மீதும்தான் இருக்க வேண்டும். அதை விட்டு, அந்தச் சிறுமி அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தை ஒரு நொடி பார்த்து விட்டாலோ அல்லது அவர்களது கை தட்டலை காது கொடுத்து கேட்டுப் பூரிப்படைந்து விட்டாலோ என்ன ஆகும் அவள் கதி? அது போல தான் நான் என் பாதையில் சென்று கொண்டே இருக்கிறேன். போட்டி போட என்றுமே விரும்பியதில்லை. என்னுடன் ஓடுபவர்களைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. நான் எந்த அளவுக்கு ஓடுகிறேன் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். இது தான் என் வெற்றியின் இரகசியம்’ –  ஒவ்வொரு முறை இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும்போதும் இதுவே என் பதிலாக இருக்கும். இனியும்கூட.

நேற்று ஞாயிற்றுக்கிழமை. ஊரடங்கின் தாக்கம் முற்றிலும் நீங்காததால் எங்கள் தெருவில் ஆள் நடமாட்டமே இல்லை. அமைதியோ அமைதி. ஆனாலும் அந்த கழைக்கூத்தாடிப் பெண் மேளம் அடிக்க, அவளுடைய மகனும் மகளும் தரையில் படுத்து சின்ன சின்ன சாகசம் செய்ய ஆரம்பித்தார்கள். மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். மொபைலில் வீடியோ எடுத்தேன். அதற்குள் அந்த சிறுவன் நான் கவனிக்கிறேன் என கண்டுகொண்டு என்னை நிமிர்ந்துப் பார்த்து தட்டை நீட்டி காசு கேட்டான்.

இருவருக்கும் தனித்தனியாக கொடுப்பதற்காக இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளையும், கொஞ்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு கீழேச் சென்றேன். அவற்றைப் பெற்றுகொண்டு தன் அம்மாவிடம் அவற்றைக் கொடுக்க அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். பின்னர் மூவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

அவர்கள் தெருமுனைவரை செல்லும்வரை அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். நேற்று முழுவதும் அந்தச் சிறுமி என் பத்து வயதில் நான் பார்த்த சிறுமியின் முகத்தை நினைவூட்டிக்கொண்டே இருந்தாள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 114 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari