வாழ்க்கையின் OTP-23 (புதிய தலைமுறை பெண் – ஜூன் 2020)


மகிழ்ச்சியின் ரகசியம் மகிழ்ந்து மகிழ்விப்பதே!

பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில் தவறானதுதான்.

நம் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களே நம் கைகளில் இல்லை எனும்போது பிறர் வாழ்க்கையைப் பார்த்து கரிசனப்பட நமக்கு என்ன அக்கறையும் உரிமையும்.

என்னிடம் பல்வேறு மீடியா நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று என்ன தெரியுமா?

‘அனிமேஷன் துறையில்(லும்) இருக்கும் நீங்கள் சினிமாவில் அனிமேஷனுக்காக இயங்கினால் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்க முடியும்’

அதற்கு நான் சொல்லும் பதில்.

‘நாம் இப்போதே உயரத்தில்தானே இருக்கிறேன்… இந்த உயரமே எனக்கு போதுமானதாக உள்ளது… இன்னும் உயரத்துக்குச் செல்ல செல்ல நான் இன்னும் பாதுகாப்பு வளையத்துக்குள் அல்லவா இருக்க வேண்டும்… நான் வேலை செய்வது என் சந்தோஷத்துக்காக, என் மன நிம்மதிக்காக. என் துறையில் தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறேன். நான் நினைத்ததை என் படைப்புகளில் கொண்டுவர விரும்புகிறேன். அதை செய்து நானும் மகிழ்ந்து என்னைச் சுற்றி இருப்பவர்களையும் பெருமகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். மேலும் நானும் உயர்கிறேன், பிறரையும் உயர்த்துகிறேன். அந்த சுதந்திரத்தை இழந்து கிடைக்கும் உயரத்தையும், புகழையும் நானே ஏன் வலுக்கட்டாயமாக வரவேற்க வேண்டும்?’

இப்படித்தான் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் வைத்திருக்கிறோம். அந்த வட்டத்தைவிட்டு வெளியே வருவதும் வராததும் அவரவர் விருப்பம். அந்த வட்டத்துக்குள் அவரவர்கள் பெரியவர்களே. அவரவர் துறையில் அவரவர் ராஜாதான்.

கொரோனா வைரஸினால் ஊரடங்கில் இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவத்துறையினரும், போலீஸ் துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்துகொண்டே இருக்கிறேன். Hats off to them.

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ள பணமோ, பகட்டோ, புகழோ இன்னபிற செளகர்யங்களோ ஒருதுளிகூட உதவப்போவதில்லை. அர்ப்பணிப்பு  மட்டுமே நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

சமீபத்தில் மறைந்த நடிகர் இர்ஃபான்கானின் கடைசிக் கடிதம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை படித்தேன். அதில் அவர், ‘நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு எதிரே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது. வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது. எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வளவுதான் வாழ்க்கை.

வாழும் வாழ்க்கையின் பயணத்துக்கு இணையாக மரணத்துக்கானப் பாதையும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் நமக்கான வாழ்க்கைப் பாதை மரணப் பாதைக்கு மாறும் என்று சொல்ல முடியாது.

அதற்குள் நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்து நிம்மதியாக  வாழ்ந்துவிட்டுச் செல்வோமே. இதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான OTP.

மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவும் லாஜிக் தெரியுமா?

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. 60+ வயதிருக்கும். தன் ஐம்பது வயதுக்கு மேல் தன்னிடம் உள்ள எழுத்துத்திறமையைக் கண்டறிந்து கதை, கவிதை, என பத்திரிகைகளுக்கு எழுதி வந்தார்.

அவர் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகி சென்றுவிட அவர் சென்னையில் தனித்து இருக்கிறார். கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சென்ற ஆண்டு வரை அவருடன் அவரின் வயதான அம்மாவும் வசித்து வந்தார். அம்மா படுத்தப்படுக்கை என்பதால் அவரை கவனித்துக்கொள்வதிலேயே நிறைய நேரம் செலவாகிவிடுவதால் நிறைய எழுத முடிவதில்லை என்று சொல்வார்.

சென்ற வருடம் அவர் அம்மா இறந்து விட்டார். ஆனால் அதன் பிறகு அவர் எழுதுவது குறைந்தது. ஒருகட்டத்தில் நின்றே போனது. அதற்கு அவர் சொன்ன காரணம் வியப்பாக இருந்தது.

‘என் அம்மா படுத்தப்படுக்கையில் இருந்தாலும் நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அன்றாட செய்தித்தாள்களை படித்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தும் நாட்டு நடப்புகளை என்னுடன் பகிர்ந்துகொண்டு விவாதிப்பார். எழுதுவதற்கு என் அம்மாதான் மறைமுகமாக மனதளவில் ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார் என்பது அவர் உயிருடன் இருந்தபோது தெரியவில்லை, இறந்தபிறகுதான் தெரிந்தது. எதிலும் வெறுமை. ஊக்கமின்மை. பகிர்ந்துகொள்ள ஆள் இல்லாததால் எழுதுவதற்கு வார்த்தைகள்கூட வருவதில்லை. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. ஆனால் எழுத மனதில் ஊக்கம் இல்லை’ என்று சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.

இதில் ஓர் உளவியல் உள்ளது. கடைசியில் சொல்கிறேன். இப்போது ஒரு கதையை படியுங்கள்.

ஒரு திருடன் சர்கஸ் பார்க்கப் போனான். வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி. நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்கஸ் வீரனிடம் சென்று இந்த பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என கேட்டான். அதற்கு அந்த வீரன் ‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’ என்றபோது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’ எனக் கூறி அழைத்துச் சென்றான்.

அடுத்தநாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும்போது சர்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான். அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக்கொடுத்த பிறகு சர்கஸ் வீரனிடம், ‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’ என்று சொன்னான்.

அதற்கு சர்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல் ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’ என சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ என கேட்கிறான்.

சர்கஸ் வீரன், ‘நான் சர்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை. சர்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால்தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன். நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப்போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்ல திருடன் தலைசுற்றி மயக்கமடைந்தான். இந்தக் கதையை புலவர் கீரன் அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

இந்த இரண்டு நிகழ்வுக்கும் பொதுவாக ஓர் உளவியல் இருப்பதை கவனியுங்கள்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. உற்சாகமாக இருக்கும்போதுதான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும். துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும். உற்சாகம் குறையும்போது நம்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு தூசியைக்கூட நம்மால் தன்னிச்சையாக தட்டிவிட்டுக்கொள்ள முடியாது.

நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மை சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம். இதுதான் மகிழ்வித்து மகிழவும், மகிழ்ந்து மகிழ்விக்கவுமான OTP.

‘இன்று என்ன சமையல்’ என்ற விசாரிப்புக்குப் பின்னால் இவ்வளவு பெரிய உளவியல் உள்ளதா?

நாற்பது வயதேயான என் உறவினர் ஒருவர் கல்லூரியில் படிக்கும் தன் ஒரே மகனுடன்  வாழ்ந்துகொண்டிருக்கிறார். குழந்தைக்கு 10 வயதிருக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். பள்ளியில் அட்மின் செக்ஷனில் பணி புரிகிறார். ஊரடங்கின் போது வீட்டில் இருக்கிறார்.

தினமும் அவருக்கு போன் செய்து ‘இன்று என்ன டிபன்?’ என்று கேட்டு உரையாடலைத் தொடங்குவேன்.

அன்றைய பொழுது எப்படி சென்றது, என்ன சமையல், என்ன டிபன், என்ன டிவி நிகழ்ச்சி பார்த்தேன், என்ன சினிமா பார்த்தேன், மகனுடனான செல்ல சண்டைகள் என அவரே எல்லாவற்றையும் சொல்லிவிடுவார். நான் காதுகொடுத்து கேட்டு ‘ம்’ கொட்டி, ‘அடடா’ சொல்லி, ‘அப்படியா?’ என வியந்து கேட்டுக்கொண்டிருப்பேன். அதை மட்டுமே செய்வேன். உண்மையில் வேறெதுவும் அதிகப்படியாக பேச மாட்டேன்.

குறிப்பாக சமையல் குறித்து தினமும் புதிது புதிதாக ஏதேனும் ஒரு புது டிபன், சைட் டிஷ் என தயாரிப்பதை ரசனையோடு சொல்வார். செயல்முறை விளக்கத்துடன் அவர் சொல்வதை கேட்பதற்கு எனக்கு ‘பொறுமை’ இல்லாவிட்டாலும் அவர் ரசனையோடு சொல்வதை கேட்க வேண்டும் என்பதற்காகவே நானும் ‘பொறுமையாக’ கேட்டுக்கொள்வேன்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. எனக்கு சாஃப்ட்வேர், குறும்படங்கள், திரைப்படங்கள், புத்தகம், எழுத்து இவை பற்றிப் பேசினால் பிடிக்கும். அவருக்கு சமையல்.

சிலருக்கு தோட்டம், சிலருக்கு பாட்டு. சிலருக்கு நடனம். இன்னும் சிலருக்கு யோகா தியானம். ரசனைகள்தான் வேறுபடுகிறதே தவிர, அடிப்படையில் நாம்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்துக்கும் விருப்பத்துக்கும் கட்டுண்டே பயணிக்கிறோம். அவரவர் விருப்பம் அவரவருக்கு சொர்க்கம். இதில் விமர்சிக்க ஏதுமில்லை. எது உயர்ந்த ரசனை தாழ்ந்த ரசனை என்ற உயர்வு தாழ்வுக்கும் இடமில்லை. ரசனை. அவ்வளவுதான்.

நேற்றும் வழக்கம்போல் மாலை 6 மணி அளவில் போன் செய்திருந்தேன். ‘இன்றைக்கு என்ன ஸ்பெஷல் டிபன்’ என்ற என் டிரேட் மார்க் கேள்வியை கேட்டபோது அவர் அழுதே விட்டார். ‘நீதான் தினமும் கூப்பிட்டு விசாரிக்கிறாய். என் உடன்பிறந்தவர்கள் இருக்கேனா இல்லையா என்றுகூட கவலைப்படுவதில்லை. ஊரடங்கின்போது இதுவரை ஒருநாள் கூட போன் செய்ததில்லை’ என்று சொன்னபோது போன் செய்வதே அத்தனை பெரிய வடிகாலாக இருக்கிறதா என வியந்தேன்.

ஆனால், ‘இன்று என்ன சமையல்’ என்ற ஒற்றை கேள்விக்குப் பின்னால் இத்தனை உளவியல் இருக்கிறதா என நான் வியக்கவில்லை.

காரணம் இப்படி அவரவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை ஒட்டிய சம்பாஷனைகள் அமையும்போது உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை உணர்ந்துத்தானே பேசுகிறேன்.

பிறருடன் பேசும்போது நம்மைப் பற்றியும் நம் ரசனைகள் பற்றியும் நம் பிரச்சனைகள் சாதனைகள் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தால் நாளடைவில் நம்மிடம் இருந்து அழைப்பு வந்தாலோ அல்லது தூரத்தில் நாம் வருவது தெரிந்தாலோ ‘ரெடி ஜூட்’ என நம்மை தவிர்த்துவிட்டு ஓடவே பார்ப்பார்கள்.

பிறருடன் பேசும்போது யாருடன் பேசுகிறோமோ அவர்கள் குறித்து நாமே கேள்வி கேட்டு அதை ஒட்டிய கருத்துப் பரிமாற்றங்களுடன் பேசும்போது நம்முடன் பேசுவதற்கு எல்லோருமே பிரியப்படுவார்கள். காசா, பணமா… கரிசனம் தானே காட்டப் போகிறோம். அதைக்கூட செய்ய முடியாதா என்ன? மற்றவர்கள் நம்முடன் பிரியமுடன் பேசுவதற்கான OTP இதுதான்.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…

 பிறரை மதிப்பதுதான் அவர்களுக்கு நாம் காட்டும் ஆகச் சிறந்த மரியாதை.  பிறரை மகிழ்வித்து நாம் மகிழ்வோம். நாம் மகிழ்ந்து பிறரை மகிழ்விப்போம். நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் சுவாரஸ்யமான வாழ்க்கைக்கான OTP.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 23
ஜூன் 2020

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon