#கதை: ஹலோ With காம்கேர் -161: அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?

ஹலோ with காம்கேர் – 161
June 9, 2020

கேள்வி:  அம்மா! நான் ஏன் படிக்கக் கூடாதா?

என் பெயர் ஜோதிபாலா. வீட்டில் ஜோதி.  நட்பு வட்டத்தில் ‘ஜோ’.

நான் இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப் போகிறேன். தமிழ் டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். படிப்பு ஒன்றுதான் வாழ்க்கைக்குத் தன்னம்பிக்கைக் கொடுக்கும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்கு இடையூராக எது வந்தாலும் உதறித் தள்ள வேண்டும் என்று நம்பிக்கையாகப் பேசுவார்.

நான் நன்றாகப் படிப்பேன். என் அப்பா கொத்தனார் வேலைக்குச் செல்கிறார். அம்மா மூன்று வீடுகளில் வீட்டு வேலை பார்க்கிறார். அவ்வப்பொழுது பணத் தேவைகளுக்கு ஏற்ப ஓரிரண்டு வீடுகள் கூடும். எனக்கு இரண்டு தம்பிகள். ஒருவன் எட்டாம் வகுப்பு. மற்றொருவன் ஆறாம் வகுப்பு. அவர்களும் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் பொறுப்பு கிடையாது. விளையாட்டுத்தனம் அதிகம். வீட்டின் கஷ்டம் புரிவதில்லை.

லாக் டவுன் ஆனதில் இருந்து முழு நேரமும் வீட்டிலேயே இருப்பது எனக்கும் கஷ்டமாகவே இருக்கிறது. தம்பிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களை அடக்கி வைப்பதே அம்மாவின் பெரும்பாடாக உள்ளது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும்கூட லாக்டவுனினால் வேலை இல்லை. சாப்பிடுவதற்கு அம்மா அப்படி இப்படி என சேர்த்து வைத்திருக்கும் பணம் உதவுகிறது. அரசாங்கம் கொடுக்கும் ரேஷன் அரிசியும் பணமும் இருப்பதால் எப்படியோ அம்மா  மேனேஜ் செய்கிறார்கள். அப்பாவுக்கு குடிபழக்கம் உண்டு. ஆனால் அவரும் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். அதனால் மாலை ஆனதும் வசவுகளை காதுகொடுத்துக் கேட்க முடிவதில்லை.

என் படிப்பு பற்றி பேச்சு நிறைய அடிபடுகிறது வீட்டில். எங்கள் குடும்பங்களில் பெண் பிள்ளைகளை படிக்க வைக்க மாட்டார்கள். எட்டாவது பாஸ் செய்திருந்தாலே பெரிய விஷயம். எப்படியோ தப்பி நான் பத்தாவதுவரை வந்துவிட்டேன். எனக்கு நிறைய படிக்க வேண்டும். நல்ல வேலைக்குப் போக வேண்டும். சொந்த வீடு கட்ட வேண்டும். அப்பா அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டும். தம்பிகளுக்கு பைக் வாங்கித்தர வேண்டும் அப்படி இப்படி என நிறைய கனவுகள் உண்டு.

‘இவ படிச்சு என்ன செய்யப் போறா…. சீக்கிரம் கல்லாணம் செஞ்சுரணும்…’

எல்லாவற்றுக்கும் அப்பாவுடன் சண்டைப் போடும் அம்மாவும் இந்த விஷயத்தில் அப்பாவுக்கு ஜால்ரா போடுகிறாள்.

‘ஆமாங்க, எந்தம்பிக்கே கட்டிக் கொடுத்துடலாம். அவனுக்கும் இவ மேல ஒரு இது இருக்கு…’

“அவனுக்கு ‘இது’ இருந்தால் போதுமா. எனக்கு என்ன பிடிக்கும் என கேட்க வேண்டாமா…” என அழுகை வந்தது. என் மாமன் மீது கோபமும் வெறுப்பும் வந்தது. அவன் படிக்கவில்லை. நிரந்தர வேலைக்கும் செல்லவில்லை. எலக்ட்ரீஷியன். ஆனால் மூட் இல்லையென்றால் வீட்டிலேயே கிடப்பான். நண்பர்களுடன் ஊர் சுற்றுவான்.

என் கனவில் படிப்பு, வேலை, சொந்த வீடு குறித்த கனவெல்லாம் இருப்பதைப் போல மற்றுமொரு கனவும் உண்டு. அதைச் சொன்னால் என்னை நீங்கள் தவறாக எடுத்துகொண்டுவிடுவீர்கள் என நினைக்கிறேன். ஆனாலும் சொல்கிறேன்.

குடி, சிகரெட் பழக்கம் இல்லாத நன்றாகப் படித்த டக்-இன் செய்துகொண்டு பைக்கில் தினமும் ஆஃபீஸ் வேலைக்குச் சென்று வரும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆசை உண்டு. இந்த ஆசை இந்த வயதில் எப்படி வரலாம் என கேட்காதீர்கள். நான் பெரியவள் ஆன தினத்தில் இருந்து ஆறாம் வகுப்பில் இருந்தே திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அப்புறம் எப்படி அதுகுறித்தக் கனவுகள் இல்லாமல் போகும்.

அதற்கெல்லாம் ஆப்பு வைப்பதைப் போல சூழல் அமைந்து வருகிறதே. அம்மா நல்லவள்தான். ஆனால் படிக்காதவள் என்பதால் பெண்களுக்கு திருமணம் ஒன்றுதான் பாதுகாப்பு என கருதுகிறாள். கோபம் வந்தால் விளக்குமாற்றால்கூட அடிக்கத் தயங்க மாட்டாள். பெரியப் படிப்புப் படிக்க வேண்டும் என்று சொன்னதுக்காக ஓரிரு முறை என்னை விளாசி இருக்கிறாள். தம்பிகள் அடிக்கும் முன்பே ஐயோ ஐயோ என கதறி வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டுத் திரும்புவார்கள்.

லாக் டவுன் தளர்வுக்குப் பிறகு இப்போது மீண்டும் அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அப்பா மாலை குடித்துவிட்டும் வருகிறார். நாங்கள் மூவர் மட்டும் வீட்டில் அடைந்து கிடக்கிறோம்.

நேற்று ஹால் டிக்கெட் வாங்க செல்ல வேண்டும் என்று சொன்னதுக்கே அப்பா ‘ஊரே கொரோனா பயத்தில் இருக்கு. என் கூட வேலை செய்யும் ராமதுரையையே ஆம்புலன்சில கூட்டிட்டுப் போய் ஆஸ்பத்திரில அடைச்சு வச்சிருக்காங்க… நீ ஒண்ணும் ஹால் டிக்கட்டெல்லாம் வாங்க வேணாம்’ என்று கத்த அம்மாவும் வழக்கம்போல் ஒத்து ஊதினாள்.

ஆனால் அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் சென்றவுடன் நான் என் தோழி ரம்யாவுடன் பள்ளிக்குச் சென்று ஹால்டிக்கெட் வாங்கி வைத்துள்ளேன். அப்பா அம்மா கண்களில் படக்கூடாது என ஒளித்து வைத்திருக்கிறேன்.

இன்னும் சில நாட்களில் தேர்வு. ஆனால் எனக்கு இதுநாள் வரை படித்தது எதுவுமே நினைவில் இல்லை. படிக்கலாம் என உட்கார்ந்தால் அம்மா கத்துகிறாள்.

‘ஹால் டிக்கட்டே வாங்கல. எப்படி பரிட்சைக்குப் போவ… சும்மா மச மசன்னு உட்கார்ந்திருக்காம சமைக்கக் கத்துக்க… கல்லாணம் முடிஞ்சா சமைக்கக் கூடக் கத்துக்கொடுக்கல்லனு எனக்குத்தான் வசவு வரும்’

எனக்கு அழுகை வந்தது. ஹால் டிக்கெட் பத்திரமா இருக்கிறதா என்று ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். ஹால் டிக்கெட்டை அம்மாவுக்குத் தெரியாமல் வாங்கியாயிற்று. அவளுக்குத் தெரியாமல் பரிட்சைக்குச் செல்வது எப்படி? என்ற பயத்திலேயே வயிறு சரியில்லாமல் போனது. நிறைய முறை பாத்ரூம் சென்று வருவதால் ‘என்ன புள்ள’ என அம்மா கேட்கிறாள். ‘ஒண்ணுமில்லம்மா… வயிற்றுவலி’ என்று சொல்லி சமாளிக்கிறேன்.

கோர்ட்டில் தேர்வே வைக்காமல் எல்லோருக்கும் பாஸ் போடச் சொல்லி விவாதம் நடந்துகொண்டிருக்கிறதாம். அப்படி மட்டும் நடந்துவிட்டால் என்னைவிட இந்த உலகத்தில் வேறு யாரும் அத்தனை சந்தோஷப்பட மாட்டார்கள்.

லாக் டவுன் ஆனதால் தமிழ் டீச்சரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடன் போனில் எல்லாம் பேசியதில்லை. அவர் மொபைல் எண்ணும் என்னிடம் இல்லை.

பத்தாம் வகுப்பில் பாஸ் செய்துவிட்டால் தமிழ் டீச்சரிடம் சொல்லி அம்மாவிடம் பேசச் சொல்லலாம். தொடர்ந்து படிக்கலாம். நான் காணும் கனவு பலிக்க உழைக்கலாம்.

‘கடவுளே, கோர்ட்டில் நல்ல தீர்ப்பாகக் கொடுக்க வேண்டுமே!’ – அழுதுகொண்டே தூங்கினேன். காலையில் கண்ணாடியில் முகம் பார்த்தேன்.

கன்னங்களில் கண்ணீரின் சுவடுகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

(படிக்க வேண்டும் என ஆசைப்படும் அத்தனை ஜோதிபாலாக்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம். ஜூன் 9, 2020 அன்று நான் எழுதிய சிறுகதை)

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 1,159 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon