ஹலோ With காம்கேர் -173: அப்பா தாயுமானவர், அம்மா தந்தையுமானவர். சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 173
June 21, 2020

கேள்வி:  அப்பா தாயுமானவர், அம்மா தந்தையுமானவர். சாத்தியமா?

இன்று சர்வதேச தந்தையர் தினம். ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் எங்களுக்கு (எனக்கும், என் சகோதரி + சகோதரனுக்கும்) எல்லா தினங்களுமே ‘அப்பாம்மா’ தினம்தான்.

அம்மாவுக்கு தைரியம் அதிகம். அவரது தைரியம், அன்பாலும் கனிவாலும் கட்டுண்டு இருக்கும். தந்தையுமானவர். அம்மா கொடுக்கும் தைரியத்தில் கியர் வைத்த பைக்கைக்கூட 18 வயதிலேயே ஓட்டப் பழகியுள்ளோம். அம்மா செயல் ரீதியாக கட்டிப் போடுவார். வாழ்க்கையில் நாங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் அஸ்திவாரம் போடுபவர் அம்மாதான். சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கலாம் என அஸ்திவாரம் இட்டவரும் அம்மாதான். நினைத்துக்கொண்டால் தனியாகவே அமெரிக்கா பறந்துவிடுவார், தன் இன்னொரு மகள் மகனைப் பார்க்க!

அப்பாவிடம் அன்பும் கனிவும் அதிகம். அவரது அன்பும் கனிவும், தைரியத்தினால் கட்டுண்டிருக்கும். தாயுமானவர். அப்பா சமைக்கும் நாட்களில் சாப்பாடு அதிகம் சாப்பிட்டு விடுவோம். ஏன் அதிகமாக சாப்பாடு போட்டாய் என சண்டை இடுவோம். அப்பா உணர்வு ரீதியாக கட்டிப் போடுவார். வாழ்க்கையில் நாங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் பலிதமாக முழுமுதற்காரணமாக இருப்பவர். பக்க பலமாய் வலம் வருபவர். வெற்றி தோல்விகளில் கூடவே நிற்பவர். தூசி துரும்புகூட எங்களை பாதிக்காத வண்ணம் அரணாய் வாழ்பவர். என் காம்கேர் நிறுவனத்தின் ஒவ்வொரு செங்கல்லும் என் அப்பாவின் பெயர் சொல்லும்.

இருவருக்குமே நாங்கள்தான் உலகம். இன்றளவும் அவர்களுக்கு சின்ன ஏமாற்றத்தையும் கொடுக்கவில்லை நாங்கள்.

அப்பா, அம்மா இருவரில் யாரேனும் ஒருவர் இருந்தாலே இருவருமே இருப்பதைப் போன்ற உணர்வினை ஏற்படுத்தியுள்ளார்கள். அதனால்தான் அப்பா, அம்மா என்றுகூட பிரிக்காமல் ‘அப்பாம்மா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.

பின்னாளில் என் அப்பாம்மாவின் பெயரின் முதல் மூன்று எழுத்துக்களைக் கோர்த்து ஸ்ரீபத்மகிருஷ் என்ற பெயரில் அறக்கட்டளைத் தொடங்கினோம்.

ஒரு ஃபேஸ்புக் பதிவு. பதிவிட்டவர் தன் அப்பாவின் தனிப் புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘இதுபோல அவரவர்கள் தந்தையின் தனிப்புகைப்படத்தைப் பதிவிடுங்கள். தந்தையர் தினத்தன்று அப்பாக்களின் புகைப்படங்களால் ஃபேஸ்புக் பக்கங்களை நிரப்புவோம்’ என்று பதிவிட்டிருந்தார்.

என்னால் புகைப்படத்தில்கூட என் அப்பாவை தனியாகவும், அம்மாவை தனியாகவும் பார்க்கப் பிடிப்பதில்லை. எனவே நான் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தையே பதிவிட்டிருக்கிறேன்.

இன்றல்ல. நேற்றல்ல. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே எனக்கு என் அப்பா அம்மாவை பிரித்தே பார்த்ததில்லை.  ‘உனக்கு அப்பாவைப் பிடிக்குமா, அம்மாவைப் பிடிக்குமா?’ என்ற கேள்வியைக் கடந்து வராத குழந்தைகளே இருந்திருக்க மாட்டார்கள் நான் உட்பட. பேச்சே வராத வயதில் கூட மழலையாக ‘அப்பாம்மா’ என்றே இந்தக் கேள்விக்கு பதில் சொல்வேனாம்.

இன்றுவரை அந்த குணத்தில் இருந்து மாறவில்லை.

25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிராஜெக்ட் மீட்டிங்கின்போது எங்கள் நிறுவன கிளையிண்ட் ஒருவர், ‘எனக்கு உங்கள் அப்பா மீது ரொம்ப பொறாமையாக இருக்கிறது…’ என்றார்.

எனக்கு அவர் சொல்ல வருவது புரிந்தாலும் ஆச்சர்யமான முகபாவனையை காட்டினேன்.

‘எப்படி உங்களால் உங்கள் அப்பா மீது இத்தனை பாசமாக இருக்க முடிகிறது? என் பெண்ணுக்கும், பையனுக்கும் சச்சினையும், ஷாருகானையும்தான் பிடிக்கிறதே தவிர என் மீது அத்தனை ஈர்ப்பும் பாசமும் வருவதில்லையே…’ என ஆதங்கத்துடன் சொன்னார்.

நான் வேண்டுமென்றே என் பெற்றோர் பெருமைகளை மிகைப்படுத்தி மற்றவர்களிடம் சொல்வதில்லை. என் பணிசார்ந்த விஷயங்களைப் பேசும்போது தேவைப்படும் இடத்தில் அவர்களையும் குறிப்பிடுவேன். அவ்வளவுதான்.

ஆனாலும் அந்த கிளையிண்ட் அப்படி நுணுக்கமாக என்னைப் புரிந்துகொண்டு கேட்ட கேள்வி எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் என்ன பதில் சொல்வது என ஒருநிமிடம் யோசிக்கத்தான் வேண்டியிருந்தது.

வெறுப்பதற்குக் காரணங்கள் சொல்லலாம். நேசிப்பதற்கு என்ன காரணம் சொல்வது? எதைச் சொல்வது? எதை விடுவது?

பதில் ஏதும் சொல்லாமல் சிரிப்பையே பதிலாக்கிவிட்டு வந்துவிட்டேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் காம்கேரின் வெள்ளிவிழாவுக்காக மீண்டும் அதே கிளையிண்டை சந்தித்தேன்.

இப்போதும் அவர் மறக்காமல் அதே கேள்வியை கேட்டார்.

‘அது எப்படி உங்கள் அப்பா அம்மாவை இப்பவும் கொண்டாடறீங்க… உங்கள் அப்பா அம்மாவை பற்றி எழுதுவதும் பேசுவதும்தான் உங்கள் பொழுதுபோக்காக இருக்கிறது… ஆனால் இன்னமும் என் மகளிடமும் மகனிடமும் பெயர் எடுக்க முடியவில்லையே…’

25 வருடங்களுக்கு முன்னர் அவர் கேட்ட கேள்வியும் மாறவில்லை, அவர் குரலில் தென்பட்ட ஆதங்கம் இன்னமும் மறையவில்லை.

இப்போது அவர் மகளுக்கும், மகனுக்கும் திருமணமும் ஆகி அவர்கள் இருவருக்குமே 10, 15 வயதில் மகன்களும் மகள்களும் இருக்கிறார்கள்.

அவரது பிள்ளைகள் அந்த வயதில் இருந்தபோது என்னிடம் கேட்ட கேள்வியை அதே வயதில் பேரன் பேத்திகள் எடுத்த பிறகும் என்னிடம் கேட்க முடிகிறதென்றால் அதில்தான் என் அப்பாம்மாவின் வெற்றியே இருக்கிறது.

பாசக்கயிற்றின் ஒருமுனையில் எங்களை கட்டி சுதந்திரமாக… தனித்துவத்துடன்… தைரியமாக… நேர்மையாக… ஒழுக்கமாக… வாழ வழிவகை செய்துகொடுத்து… மறுமுனையை அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள்.

இதனால் தடம் மாறாமல் நேர் வழியில் எங்களால் எங்கள் பாதையில் பயணிக்க முடிகிறது.

மூன்றாம் நபர்களை எவ்வளவு வேண்டுமானாலும் காரணங்களைச் சொல்லிப் பாராட்டலாம், பெற்றோரை கொண்டாட மட்டுமே முடியும்.

நான் என் பெற்றோரை கொண்டாடுகிறேன். அப்போ நீங்கள்?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon