ஹலோ With காம்கேர் -176: நீங்கள் தொழில்துறையில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?

ஹலோ with காம்கேர் – 176
June 24, 2020

கேள்வி:  நீங்கள் தொழில்துறையில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?

  1. நீங்கள் சாஃப்வேர் துறை பிசினஸில் இல்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?

மீடியா நேர்காணல்களில் இந்தக் கேள்வியை ஒருசிலர் கேட்டிருக்கிறார்கள். என்னை பேட்டி எடுக்கும் முன்னர் அவர்கள் சினிமா நடிகைகளிடம் பேட்டி எடுத்துவிட்டு அதே வைப்ரேஷனில் என்னை சந்திக்க வந்திருப்பார்களோ என நினைத்ததுண்டு. ஏனெனில் அவர்களிடம் தானே ‘நீங்கள் நடிக்க வந்திருக்கவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?’ என்ற பொதுக் கேள்வி கேட்பார்கள்.

சாஃப்ட்வேர் துறையில் பிசினஸில் இல்லை என்றால் இதே துறையில் வேலையில் சேர்ந்திருப்பேன். படிப்படியாக முன்னேறி நான் பணிபுரியும் நிறுவனத்திலேயே மிக உயரியப் பதவியை அடைந்திருப்பேன் அல்லது நல்ல அனுபவம் பெற்ற பிறகு சொந்தமாக நிறுவனம் தொடங்கி இருப்பேன்.

ஆனால் ஒன்று, நான் என்ன செய்து கொண்டிருந்தாலும் எழுதிக்கொண்டே இருந்திருப்பேன். அதில் மட்டும் மாற்றம் இல்லை.

  1. ஒரு நிறுவனத்தில் பணி புரிவதற்கும் சொந்தமாக பிசினஸ் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஓர் இடத்தில் பணியில் சேர்ந்தால் படிப்படியாக வேலைகளைக் கற்றுக்கொண்டு அனுபவம் பெற்று உயர்பதவியை அடைய வேண்டி இருக்கும். இங்கு நமக்குக் கொடுக்கப்படும் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். படிப்படியாக முன்னேறிக்கொண்டே செல்லலாம். ரெஸ்பான்சிபிலிட்டி தன்னளவில் இருந்தால் போதும். நிறுவன ரெஸ்பான்சிபிலிட்டியை நிர்வாகம் பார்த்துக்கொள்ளும்.

சொந்தமாக பிசினஸ் ஆரம்பித்தால் உயர்பதவி முன்பே கிடைத்துவிடும். அங்கு அமர்ந்துகொண்டு படிப்படியாக எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். ஒரு நிறுவனத்தில் நடைபெறும் அத்தனைப் பணிகளிலும் முழுமையான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளாவிட்டால் அந்த ப்ராஜெக்ட்டுகளில் பூரணத்துவத்தை அடைய முடியாது. ரெஸ்பான்சிபிலிட்டி மிக மிக அதிகம். தன்னிடம் பணி புரியும் அத்தனை பணியாளர்களின் வாழ்க்கையையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டி இருக்கும்.

  1. புது ப்ராஜெக்ட்டுகள் குறித்து எப்போது எப்படி முடிவெடுப்பீர்கள்?

ஒரு ப்ராஜெக்ட் செய்யும்போதே அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளின் ஐடியா கிடைத்துவிடும். சதா அவை குறித்தே சிந்தனை செய்துகொண்டிருப்பதால் பெரும்பாலும் தூக்கத்தில் கனவில் ப்ராஜெக்ட்டுகளை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற முழு ஐடியா உருவாகிவிடும்.

  1. கனவில் ப்ராஜெக்ட்டுகள் குறித்து சிந்தனை வருமா, ஆச்சர்யமாக உள்ளதே?

ப்ராஜெக்ட்டுகள் குறித்து மட்டுமல்ல, சாஃப்வேர் தயாரிப்பின்போது லாஜிக்கில் எங்கேயேனும் சிறிய தவறு ஏற்பட்டு சாஃப்ட்வேர் சரியா இயங்காமல் முழுமை பெறாமல் சிக்கலாகிக்கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அந்த சிக்கலைத் தீர்க்க உதவும் லாஜிக், தவறு எங்கிருக்கிறது என்ற விவரம் அனைத்துமே பெரும்பாலும் என் கனவுகளில்தான் கிடைக்கின்றன.

என்னைப் பொருத்த வரை நிறுவனம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல. என்னையே ஒரு நிறுவனமாக்கிக்கொண்டு செயல்பட்டதால் / செயல்படுவதால்தான் இந்தத்துறையில் நிலைத்திருக்க முடிகிறது.

  1. பிசினஸில் சந்தித்த ஏதேனும் ஒரு சுவாரஸ்யமான விஷயம்?

பிசினஸில் ஆரம்பித்த காலத்தில் சிறிய வாடகை இடத்தில்தான் செயல்பட்டுக்கொண்டிருந்தோம். கொஞ்சம் பெரிய இடமாக பார்த்துக்கொண்டிருந்தோம். ஒருநாள் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டிடத்தில் டூ லெட் போர்டை பார்த்தேன்.

உள்ளே சென்று கட்டிட உரிமையாளரை சந்தித்தேன். இடத்தைப் பார்க்க வேண்டுமே என சொல்லி கேட்ட போது அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். காரணம் அப்போது எனக்கு மிக இளம் வயது (25). கமர்ஷியல் இடத்தை வாடகைக்கு எதற்காக பார்க்க வந்திருக்கிறார் இவள் என்ற தொணி அவர் பார்வையில் தெரிந்தது. ஆனாலும் இடத்தைத் திறந்து காண்பித்தார். ஆனாலும் அவரிடம் சின்ன அலட்சியம் தென்பட்டது. வாடகை குறித்து கேட்டபோது 500 ரூபாய் வாடகை என்றார் சர்வ சாதாரணமாக.  ‘எங்கே இந்தப் பெண் வரப் போகிறது’ என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் நிச்சயம் அந்த இடத்துக்கு வாடகை அந்த காலத்தில் 4000 முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்பது எனக்கும் தெரியும்.

அப்பாவும் நானும் திரும்பவும் கட்டிட உரிமையாளரை சந்தித்தோம். அப்போதுதான் அவர் நான் நிஜமாகவே பிசினஸுக்குத்தான் அந்த இடத்தைப் பார்க்க வந்திருப்பது புரிந்தது.

என் அப்பாவிடம் அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவிருக்கிறது.

‘இந்த இடத்துக்கு வாடகை 4000 ரூபாய். ஆனால் உங்கள் மகளிடம் நான் அலட்சியமாக 500 ரூபாய் என்று சொல்லி விட்டதால் நான் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் ஆறு மாதத்துக்கு 500 ரூபாய் கொடுங்கள். அதன் பின்னர் 4000 ரூபாய்’ என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து ‘மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா’ என்று மரியாதையுடன் பேசினார்.

இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா என நாங்கள் வியந்தோம். சொன்ன சொல்லைக் காப்பாற்றினார் அவர். அந்த இடமும் நல்ல ராசியான இடமாக அமைந்தது. 10 வருடங்கள் அந்த இடத்தில் இருந்தோம். அதன் பின்னர் சொந்த இடம் வாங்கிக்கொண்டுச் சென்றோம்.

இந்த நிகழ்வை சுவாரஸ்யம் என்று சொல்வதா, ஆச்சர்யமான நிகழ்வு என சொல்வதா என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை விதைத்த நிகழ்வு எனலாம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 10 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari