ஹலோ With காம்கேர் -179: குறும்புக் காகங்கள் சீரியஸாக இருப்பதேன்?

ஹலோ with காம்கேர் – 179
June 27, 2020

கேள்வி:   சில தினங்களாய் குறும்புக் காகங்கள் சீரியஸாக இருப்பதை கவனித்தீர்களா?

காகங்கள்…

மொட்டை மாடியில் காலை வாக்கிங்கின் போது நாங்கள் போடும் தின்பண்டங்களை சாப்பிட்டு, அதற்காகவே நாங்கள் தண்ணீர் விட்டு வைத்திருக்கும் அகலமான மண் சட்டியில் தண்ணீர் குடித்து, அதிலேயே தலையை முக்கி முக்கிக் குளித்து, வெளியே வந்து தலையையும் இறகுகளையும் நன்றாக சிலுப்பிக்கொண்டு, தன் அலகுகளை கூர் தீட்டியபடி சக காகங்களுடன் பேசி, கொஞ்சி விளையாடி, புறாக்களைச் சீண்டி, துளி சப்தம் கேட்டாலும் குடுகுடுவென ஓடும் அணில்களை விரட்டி, புதுவரவாய் அவ்வப்பொழுது எட்டிப் பார்க்கும் மரம் கொத்திப் பறவை, குருவி, கிளி போன்றவற்றை வினோதமாய் கழுத்தை சாய்த்து பார்த்து வாழ்க்கையை கொண்டாடித் தீர்க்கும் காகங்கள் சில தினங்களாகவே கொஞ்சம் சீரியஸாக வலம் வருகின்றன.

கூடு கட்டுவதற்காக குச்சிகளை தேடித்தேடி அலைந்துகொண்டிருக்கின்றன. மொட்டை மாடியில் தொட்டியில் வைத்திருக்கும் செடி கொடிகளில் உள்ள கிளைகளை பிடித்து இழுக்கின்றன. சின்னதாய் ஏதேனும் குச்சி வடிவில் தரையில் தென்பட்டாலும் விடுவதில்லை. சிறிய கம்புகள், கம்பிகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. அனைத்தையும் வாயில் கவ்விக்கொண்டு பறக்கின்றன.

இதற்காகவே அம்மா செடிகொடிகளில் காய்ந்திருக்கும் கிளைகளை காகங்கள் எடுத்துச் செல்ல வசதியாக ஒடித்து போட்டபடி, ‘காகங்கள் கூடு கட்டிய பிறகுதான் முட்டையிடும்’ என்று சொன்னார். ஒடித்துப் போடும் குச்சிகள் அத்தனையும் நாங்கள் காலை வாக்கிங் முடிப்பதற்குள் காலியாகிவிடும்.

இரு தினங்களுக்கு முன்னர் வரை குச்சிகளையும் சிறிய மெல்லிய கம்புகளையும் எடுத்துச் சென்று கொண்டிருந்த காகங்கள் துணி உலர்த்தும் கொடிகம்பத்தில் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் இரும்பு கம்பிகளை பிடித்து இழுத்து இழுத்து அதை எடுத்துச் செல்ல முயன்றன.

‘ஓ, கூட்டை நெருக்கிக் கட்டுவதற்கு கம்பிகள் தேவையாக இருக்கிறது’ என நினைத்து சணலை சின்னதும் பெரியதுமாக கட் செய்து எடுத்து வந்து இரும்புக் கம்பிகளில் கோயில்களில் வேண்டிக்கொண்டு ஆங்காங்கே கட்டித் தொங்கவிடுவார்களே அதைப்போல் கட்டித் தொங்க விட்டோம்.

ஆனால் காகங்கள் இரும்புக் கம்பிகளையே பிடித்து இழுத்திக்கொண்டிருந்தன. பின்னர் சணல்களை உற்று உற்று பார்த்து பரிசோதனை செய்துவிட்டு அவற்றை எடுத்துச் சென்றன.

சணல் துண்டுகள், ஒயர்கள், கொரியர் பார்சலில் வரும் ஸ்பான்ச்சுகள் என எதெல்லாம் கிடைக்கிறதோ அத்தனையையும் தேடி எடுத்து வந்து தரையில் தூவி வைக்க ஆரம்பித்தோம். அத்தனையையும் சில நிமிடங்களில் எடுத்துச் சென்றுவிடும்.

இப்படியாக சில நாட்களாக தின்பண்டங்களுடன் சேர்த்து, காகங்கள் கூடு கட்டுவதற்கு உதவும் பொருட்களையும் சப்ளை செய்துகொண்டிருந்தோம்.

நேற்று மொட்டைமாடி சுவரில் வரிசையாக ஐந்து காகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அமர்ந்தன. கொடி கம்பத்தில் தொங்கவிடும் சணல்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன. நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும் ஒவ்வொரு காகமாய் கொடி கம்பத்துக்கு வந்து இரும்புக் கம்பியை ஆட்டி ஆட்டி அசைத்துப் பார்த்துவிட்டு கடைசியாக சணலை எடுத்துக்கொண்டு பறந்தன. ஐந்தே நிமிடங்களில் வரிசையாக தொங்க விட்டிருந்த சணல்களை எடுத்துக்கொண்டு காகங்கள் அத்தனையும் இடத்தைக் காலி செய்தன.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்லும் காகங்களின் செயல்களை எத்தனை முறை பார்த்தாலும் அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதைப் போலவே புத்துணர்வாக உள்ளது.

இவ்வளவையும் நாங்கள் செய்தாலும் அவ்வப்பொழுது காகங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் தாழப் பறந்துவந்து தலையில் அடித்துவிட்டுச் செல்லுவதைப் போல வேகமாக பறந்துவரும். நம் கண் முன்னே நமக்கு நேராக வந்தால் விலகிவிடலாம். நம் தலைக்குப் பின்னே வந்து தலையில் அடித்துச் செல்லும்போது கொஞ்சம் பதட்டம் வரும். ஒரு நிமிடம் உடல் வெலவெலத்துப் போகும்.

குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தவர்களுடன் சற்று உரிமை எடுத்துக்கொண்டு கொஞ்சி செல்லமாக சண்டைப் போடுவதைப் போல அவை நம்மிடம் விளையாடுகின்றன என அம்மா சொல்லுவார்.

எந்த உயிரனமாய் இருந்தால் என்ன, அடிப்படையில் அவை அன்புக்குத்தானே கட்டுப்படுகின்றன. பரிவைத்தானே எதிர்பார்க்கின்றன, பாசத்துக்குத் தானே அடிபணிகின்றன.

பொதுவாகவே நாங்கள் சாப்பிடுவதற்கு முன்னர் காகங்களுக்கு போடுவதற்காக ஒரு டப்பாவில் கொஞ்சம் உணவுப் பண்டங்களை எடுத்து வைத்துவிடுவது வழக்கம். வீட்டில் என்ன தின்பண்டம் தயாரித்தாலும் காகங்களுக்கு முதலில் எடுத்து வைத்துவிடுவோம். வடாம் பொரித்தால்கூட.

முட்டை இடுவதற்குத் தயாராகும் தாய் காகங்கள் மீது தனி பாசமும் கருணையும் உண்டானது. இப்போதெல்லாம் அவை சாப்பிடுவதற்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுத்துவைக்கத் தொடங்கினோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon