ஹலோ With காம்கேர் -191: உங்கள் நவரச குணங்கள் பற்றி சொல்லுங்களேன்?

ஹலோ with காம்கேர் – 191
July 9, 2020

கேள்வி: உங்கள் நவரச குணங்கள் பற்றி சொல்லுங்களேன்?

வெட்கம், வீரம், கருணை, அற்புதம், சிரிப்பு, பயம்,  அருவருப்பு, கோபம், அமைதி இவை நவரச குணங்கள்.

வெட்கம்:  எனக்கு பேசும்போது வார்த்தைகளுடன் முகபாவனைகளும் சேர்ந்தே வெளிப்படும். அதனால் என்னுடைய வார்த்தைகளைவிட என் முகபாவனைக்கு வலிமை அதிகம். என் முகபவானையை வைத்தே நிறுவனத்தில் என் பர்சனல் செகரட்டரி புரிந்துகொண்டு செயல்படுவார்.

வீட்டில், மனதில் உள்ளதை மறைக்காமல் வெகுளித்தனமான வார்த்தைகளால் சில நேரங்களில் சிவாஜி கணேசனே தோற்றுவிடும் அளவுக்கு முகபாவனைகளுடன் நான் விவரிக்கும்போது என் பெற்றோர் அதை சொல்லிக்காட்டி ரசிக்கும் சமயங்களில் ‘அத்தனை ஆக்‌ஷன்களையா முகத்தில் காட்டுகிறோம்’ என்று நினைத்து என்னையும் அறியாமல் வெட்கப்படுவதுண்டு.

வீரம்: விவேகமான வீரம் என்னுடையது. எது நமக்கும் நம் குடும்பத்துக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்போ அதன்படி மனசாட்சியின் குரலுக்கும் மதிப்புக்கொடுத்து செயல்படும் அளவுக்கு விவேகம் இருப்பதால் என்னுடைய வீரத்தை தேவைப்படும் நேரத்தில் மட்டுமே வெளிப்படுத்துவேன். மற்ற நேரங்களில் என் அமைதிக்குள் வீரம் மறைந்திருக்கும்.

நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி பத்திரிகையில் (பெயர்: பீக்காக்) ‘பெண்கள் முன்னேற்றம்’ குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதைப் படித்த என் பேராசிரியர்கள் ‘பார்ப்பதற்கு இத்தனை அமைதியாக இருக்கிறாள். இவளா இப்படி வீராவேசமாக எழுதியுள்ளாள்’ என மற்றவர்களிடம் வியந்து பேசியதாக எனக்குத் தகவல் வந்ததுடன் என்னையும் அழைத்துப் பாராட்டினார்கள்.

கருணை: கருணை என் பெற்றோரின் குணம். அது என் ஒவ்வொரு செல்லிலும் பரவியுள்ளது. பிறர் துன்பங்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதை விட (Sympathy) அவர்கள் துன்பத்தை நம் துன்பமாக பாவித்து (Empathy) ஏதேனும் செய்ய முடியுமா என நினைப்பதே கருணையின் அதிகபட்ச வெளிப்பாடு.

அற்புதம்: பிறரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவற்றைப் புரிய வைத்து சரி செய்து அவர்களுடனான தொடர்பை முறித்துக்கொள்ளாமல் இருக்கவே பிரயத்தனப்படுவேன். ஆனால் அதில் பெரும்பாலும் வெற்றி கிட்டுவதில்லை. காரணம் 99% விலகிவிடுவார்கள். இதை என் அற்புத குணமாக கருதுகிறேன். எத்தனை முறை பாதிக்கப்பட்டாலும் என் அணுகுமுறையில் மாற்றம் செய்துகொள்ளாமல் நான் காயப்பட்டாலும் பிறரை காயப்படுத்தாமல் இருக்க முயல்கிறேனே… அது அற்புதம் தானே?

சிரிப்பு:  ஒருமுறை எங்கள் அறக்கட்டளை விழாவுக்கு நகைச்சுவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அந்த நிகழ்ச்சியை நடத்த வந்தவர்கள் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு அரங்கத்தை சிரிப்பொலியில் மூழ்கடித்தார்கள். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ‘அரங்கமே சிரித்துக்கொண்டிருந்தபோது நீங்கள் மட்டும் சீரியஸாக இருந்தீர்களே…’ என கேட்டபோது, ‘அவரவர் இயல்புபடி நடந்துகொள்ளும்போதுதான் அது சிறப்பு பெரும். கைதட்டி வெளியில் சிரித்தால்தான் சிரிப்பு என்றில்லை. பிறர் சிரிப்பதை ரசித்து அத்தனை பேரின் மகிழ்ச்சியையும் நான் உள்வாங்கிக்கொண்டிருந்தேன். அது எனக்குள் எத்தனை நிறைவை கொடுத்துள்ளது தெரியுமா… அதுமட்டுமில்லாமல் அழுகையோ சிரிப்போ இயல்பாய் தானாக வர வேண்டும். பிறருக்காக செய்வது இயல்பாகாது. நடிப்பாகும்…’ என்றேன்.

பயம்: சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்நாளில் அவர்களாகவே எனக்கு போன் செய்து ஏதேனும் உதவியைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு ‘மேடம் எனக்கு அடிக்கடி போன் செய்வார்கள்…’ என்றும், ‘மேடம் எனக்கு நெருங்கிய நண்பர்’ என்றும், ‘அவர் ஏதேனும் உதவி என்றால் என்னைத்தான் அழைப்பார்கள்…’ என்றும் பெருமைக்காக வாய்சவடால் விடும் மனிதர்களைக் கண்டால் பயமாக உள்ளது. பிரபலங்கள் தங்களுக்கு அத்தனை நெருக்கம் என்று சொல்லிக்கொள்வதில் பெறும் அற்ப சந்தோஷம் அவர்களுக்கு. இந்த குணம் கொண்டவர்களிடம் இருந்து வாழ்நாள் முழுவதும் விலகியே இருப்பேன்.

அருவருப்பு: பெற்ற தந்தையும் தாத்தாவும் சேர்ந்து பத்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதையெல்லாம் கேள்விப்படும்போது அத்தகைய ஆண்கள் மீது அருவருப்பு ஏற்படுகிறது. ‘தூணுக்குப் புடவை கட்டி வைத்தாலும் அதை பெண் என்றே பார்ப்பார்கள்’ என்று சொல்லி பெண்கள்   எப்போதுமே பாதுகாப்பாகவே இருக்க வேண்டும் என என் அம்மாவின் கொள்ளுபாட்டியே என் அம்மாவுக்கு சிறிய வயதில் அறிவுரை சொல்லி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் கேள்விப்படும்போது இத்தனை அருவருப்பானதா இந்த உலகம் என்று தோன்றும்.

கோபம்: சின்னதோ பெரியதோ நம்மிடம் உதவி பெறும் பலர் நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, குறையாவது கூறாமல் இருக்கலாம்.  அவர்கள் குறைபடுவற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் கேட்பதை கேட்ட பதத்திலேயே நாம் உதவவில்லை என்பதால் இருக்கலாம். நம்மால் உதவ முடியாதபோது அவர் கேட்ட அதே உதவியை வேறு வடிவில் செய்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் தற்சமயம் உதவ வாய்ப்பில்லை என்று நேர்மையாக பதில் அளித்திருக்கலாம். எப்படி இருந்தாலும் உதவியை கேட்டுப் பெற்றுகொண்டு முதுகுக்குப் பின் சென்று குறை சொல்வதை கேள்விப்படும்போது அதீத கோபம் வரும்.

அமைதி: நித்தம், நேரடியான உலகிலும், டிஜிட்டல் உலகிலும் எத்தனைவிதமான மனிதர்களை சந்திக்கிறேன். அவர்கள் மூலம் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எத்தனை எத்தனை அனுபவங்கள். கொஞ்சம் உற்று நோக்கினால் தலை வெடித்துவிடும் அளவுக்கு அழுத்தம் உண்டாகும். எல்லாவற்றையும் எதிர்கொண்டு புறம் தள்ளிச் செல்லும் பக்குவம் இருப்பதால் என்னால் அமைதியாக இருக்க முடிகிறது. காரணம் என் பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அற்புதமான சூழல் எனக்கு வாய்த்திருக்கிறது. எல்லோருக்கும் இதுபோல ஒரு வடிகால் அமைந்துவிட்டால் இந்த உலகமே எதிர்த்தாலும் ‘ஒரு கை’ பார்த்துவிடும் தைரியமும் (புற வலிமை) மனதுக்குள் பேரமைதியும் (உள் வலிமை) கிடைத்துவிடும்.

அப்புறம் என்ன ஜமாய்க்க வேண்டியதுதான்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 76 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon