ஹலோ With காம்கேர் -193: மோகமுள் நாவல் படித்திருப்பீர்கள், கோபமுள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஹலோ with காம்கேர் – 193
July 11, 2020

கேள்வி: மோகமுள் நாவல் படித்திருப்பீர்கள், கோபமுள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு முறை ஒரு பெண்மணி என்னிடம் போனில் தொடர்புகொண்டார். அவருடைய இளைய மகள் எங்கள் காம்கேரில் பணியில் இருந்தாள்.

அந்தப் பெண்மணிக்கு அரசாங்கப் பணி. ஓரிரு மாதங்களில் ஓய்வு பெற இருப்பவர். அவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும். மூவருக்கும் 8,10,12 வயதிருக்கும்போது அவர் கணவர் இறந்துவிட்டடார்.  மூவரையும் ஒன்றுபோல்தான் பார்ப்பதாகவும், மூவரையும் ஆண் பெண் பாகுபாடு இன்றி நன்றாக படிக்க வைத்து அவரவருக்குப் பிடித்தத் துறையில் பணிக்குச் செல்ல அனுமதித்து பூரண சுதந்திரத்துடன் வளர்த்ததாகவும் சொன்னவர் இறுதியில் பிரச்சனை என்னவென்று விளக்கினார்.

மூத்த மகளுக்கு திருமணம் செய்துவிட்டதாகவும் இப்போது இளைய மகளுக்குத் திருமணத்துக்குப் பார்த்துக்கொண்டிருப்பதாகவும், ஆனால் அவளுக்காகத் தான் பார்க்கும் பையன்களை எல்லாம் நிராகரிப்பதாகவும் கூறினார்.

அவள் வேறு யாரையேனும் காதலித்தால் அந்த பையனையே திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று எண்ணி அதையும் கேட்டுப் பார்த்துவிட்டாராம். அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டாளாம்.  ‘உங்களால் அவளிடம் பேசிப் பார்க்க முடியுமா’ என கேட்டார்.

அவள் அனிமேட்டர். நல்ல கிரியேட்டிவிட்டி உண்டு. வெகு கண்ணியமாக உடை அணிந்து வருவாள். பண்புடன் பேசுவாள்.

அவளை அவ்வப்பொழுது அழைத்து ப்ராஜெக்ட் விஷயமாக பேசுவதைப்போல பேசத் தொடங்கினேன். ஒரு புது கான்செப்ட் கொடுத்து அதற்கு அவளையே ஸ்டோரி போர்ட் உருவாக்கச் சொன்னேன். எப்படிப் பேசினாலும் அவளிடம் எந்த மனச்சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை.

அவளுடைய பிறந்தநாள் வந்தது. அவளுக்கு சர்ப்ரைஸாக அவள் புகைப்படத்தை ஆர்ட் ஒர்க் செய்து லேமினேஷன் செய்து பரிசளித்து வாழ்த்தினேன். அன்று மிக நெகிழ்ச்சியாக இருந்தாள்.

பொதுவாக வேலையிலும் டிசிப்ளினிலும் மிக கண்டிப்பாக இருப்பேன். மென்மையாக நடந்துகொள்ள வேண்டிய நேரத்தில் அவர்களே எதிர்பார்க்காதவண்ணம் மிக மென்மையாக அணுகுவேன்.

அதனால் அவள், ‘நீங்கள் இந்த அளவுக்கு அன்பாக இருப்பீர்கள் என நினைக்கவில்லை’ என்றாள். என் காலில் விழுந்து வணங்கப் போனவளைத் தடுத்து ஆசிர்வதித்தேன்.

அன்று அவளிடம் அவள் திருமணம் குறித்துப் பேசியபோது மனம் திறந்துப் பேசினாள். அவள் அம்மா அப்பா சகோதரன் சகோதரி என அனைவர் பற்றியும் விரிவாக பேசினாள். அம்மாவைப் பற்றியும் மிக உயர்வாகவே சொன்னாள். அம்மா தனக்கு வரன் பார்த்துக்கொண்டிருப்பதையும் சொன்னார்.

நான் சற்று நெருங்கி, ‘அம்மா பார்க்கும் மாப்பிள்ளைகளில் எவரையும் உனக்குப் பிடிக்கவில்லையா?’ என கேட்டேன்.

‘மேம், நான் சொன்னால் என்னை தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது’ என பீடிகைப் போட்டுவிட்டு விஷயத்துக்கு வந்தாள்.

‘என் அம்மா நல்லவள்தான். எங்கள் மூவருக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளாள். நன்றாகப் படிக்க வைத்துள்ளாள். ஆனால் எங்கள் சிறிய வயதில் என் அம்மா என் தம்பிக்குக் கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார். ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்’ என சொல்லிவிட்டு விளக்கினார்.

“அன்று ஏதோ சண்டை எங்கள் மூவருக்குள்ளும். எப்போதும் சின்ன குழந்தைகளுக்குள் வரும் சண்டைதான். அப்போது எங்களை சமாதானப்படுத்த என் அம்மா சொன்ன ஒரு விஷயம் என் மனதை விட்டு இன்னும் போகவில்லை.

‘வீட்டுக்கு வெளியே எத்தனையோ பேர் கமெண்ட் அடிக்கிறார்கள். வேண்டுமென்றே மேலே இடித்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் இப்படியா சண்டைப் போட்டுக்கொண்டிருக்கிறாய். மவுனமாக கடந்து வரவில்லை. வீட்டுக்குள் தம்பியிடம் கொஞ்சம் அட்ஜட் செய்துகொண்டு போனால் என்னவாம்…’

இதை என் அக்கா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த வார்த்தைகள் என்னை அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அப்படி என்றால் பெண்கள் அடங்கியே வாழ வேண்டுமா, வீட்டுக்கு வெளியேதான் அவமானங்களை சுமக்க வேண்டி வருகிறதென்றால் வீட்டுக்குள் சகோதரனிடம்கூட உரிமையாய் தங்கள் நிலையை எடுத்துச் சொல்ல வழியில்லையா… எங்களுக்குள் சண்டை என்றால் பிரச்சனை யாரிடம் என கேட்டு அவர்களை கண்டித்திருக்க வேண்டாமா… அதைவிட்டு அட்ஜஸ்ட் செய்துகொண்டு போகச் சொன்னாள்.

அம்மா எத்தனைதான் எங்களுக்காக உயிரைக் கொடுத்து வளர்த்திருந்தாலும் எங்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது பெண்கள் கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும் என சொல்லிக் காயப்படுத்தும் இதுபோன்ற வார்த்தைகள் என்னை அவமானப்படுத்துகின்றன. அதனால் திருமண விஷயத்தில் மட்டும் அம்மா சொல்வதைக் கேட்கவே கூடாது என்ற ஒரு பிடிவாதம் எனக்குள் தலைத்தூக்குகிறது” என்று சொன்னாள்.

அவள் பிரச்சனை என்ன என்று எனக்குப் புரிந்தது. சிறு வயதில் அவள் மனதில் குத்திய முள் அப்படியே இருக்கிறது. அந்த முள்ளை எடுத்தால் மட்டுமே அவள் அம்மா சொல்லும் வார்த்தைகளுக்கு அவளால் கட்டுப்படமுடியும்.

அவள் அம்மாவிடம் போன் செய்து விவரம் சொன்னேன். ‘நான் யதார்த்தமாகத்தானே சொல்கிறேன்… இந்த அளவுக்கு பாதிக்கும் என தெரிந்திருந்தால் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டேன்’ என கூறி அழுதார்.

இறுதியில் நன்றிகூறி எப்படியாவது அவள் மனதில் இருக்கும் கோப முள்ளை எடுக்கப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

மனச் சிக்கல்களுக்கு பெரிய பெரிய விஷயங்கள்தான் காரணிகளாக வேண்டும் என்பதில்லை. ஒரு சொல், ஒரு வார்த்தை, ஒரு பார்வை போதும் மனம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு. பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்போம்! மனச் சிக்கல்களைத் தவிர்ப்போம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 21 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon