ஹலோ With காம்கேர் -228: தலைமுறை இடைவெளி (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 228
August 15, 2020

கேள்வி: தலைமுறை இடைவெளி என்பது எத்தனை பெரிய இடைவெளி?

பல குடும்பங்களில் தலைமுறை இடைவெளியை தவிர்க்க முடிவதில்லை. திடீரென ஒரு நாளில் அந்த இடைவெளியை குறைப்பது என்பதும் முடியாத காரியம்.

குழந்தைகள் வளர வளர வீட்டில் உள்ள பெரியோர்கள் அந்த இடைவெளியை பெரிதாக்காமல் சரி செய்துகொண்டே வந்தால் தலைமுறை இடைவெளி பெரிதாகமல் இருக்கும்.

மூன்று வயதுவரை பேச்சே வராத குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள் ஒரு தம்பதி. டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா?

‘குழந்தையை கொஞ்சி மகிழுங்கள். ஆனால் செல்லம் கொடுக்காதீர்கள். குழந்தைகள் தங்கள் தேவையை வாய்விட்டுக் கேட்கட்டும், கேட்பதற்கு முன் எதையும் எடுத்துத் தராதீர்கள். தங்கள் பசியை உணர்ந்து அழுது வெளிப்படுத்தட்டும், பசிக்கும் முன் உணவு கொடுக்காதீர்கள். தங்கள் ஏமாற்றத்தை அனுபவிக்கட்டும், அழுவதற்கு முன்னர் ஆறுதல் சொல்லாதீர்கள். பேசவோ, அழவோ, மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தவோ தேவையே இல்லாதபோது பேசுவதற்கு அவசியமே இல்லாமல் போய்விடுகிறது…’.

எத்தனை அருமையான அறிவுரை.

40 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு.

கணவனை இழந்த ஒரு பெண்மணி தன் மூன்று குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார். இரண்டு ஆண், ஒரு பெண். ஒருநாள் கொண்டைக்கடலை சுண்டல் வேண்டும்  என அவர்கள் கேட்டதால் தாளிப்பதற்கு மிளகாய் வாங்கிவரச் சொல்லி இருக்கிறார் அவருடைய மகன்களிடம். அந்த நாட்களில் பெண் குழந்தைகளை கடைக்கு அனுப்புவதை தவிர்ப்பார்கள். அதனால் மகளிடம் சொல்லவில்லை. அவரது இரண்டு மகன்களும் வாங்கி வராமல் நேரம் தாழ்த்திக்கொண்டே இருந்தார்கள். நினைவுபடுத்தியும் வாங்கி வரவில்லை. அவர் ஊற வைத்த கொண்டைக்கடலையை எடுத்து உணர்த்தி விட்டார். சுண்டல் போடவில்லை.

அவர் நினைத்திருந்தால் அருகில் இருக்கும் கடைக்குச் சென்று மிளகாய் வாங்கி வந்திருக்க முடியும். ஆனால் தன் பிள்ளைகளுக்கு எப்படியும் தாங்கள் கேட்டது கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது என்பதற்காகவும்,  தாங்கள் சாப்பிடும் உணவில் தங்கள் பங்கு உழைப்பும் உள்ளது என்பதை உணர வைக்கவும், அப்பா இல்லாமல் தான் கஷ்டப்பட்டு உழைத்து ஆளாக்குவதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காகவுமே அப்படி செய்தார்.

அவருடைய மகள் என் அம்மாவின் அலுவலகத்தில் அம்மாவுடன் பணி புரிந்தவர். அவர் தன் அம்மாவின் ஆளுமை குறித்து என் அம்மாவிடம் இதை பகிர்ந்துகொண்டாராம்.

அந்த இரண்டு மகன்களும், மகளும் தங்கள் அம்மாவின் கடைசி காலத்தில் அவரை நல்லபடியாக பார்த்துக்கொண்டார்கள்.

இளைஞர்கள் மொட்டை மாடியில் பாட்டு கேட்டுக்கொண்டே வாக்கிங் சென்றால், ‘பாட்டு கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்வது பயனில்லை’ என சொல்லி அவர்களின் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டைப் போடாதீர்கள். வாக்கிங் செல்லவே செல்லாமல் இருப்பதற்கு பாட்டு கேட்டபடி வாக்கிங் செல்வது ஒன்றும் பெரிய தவறாகிவிடாது. நாட்கள் செல்லச் செல்ல அவர்களே புரிந்துகொள்வார்கள். ஒரு பழக்கத்தை அவர்கள் வழக்கமாக்கிக்கொண்டால் அதில் உள்ள சாதக பாதகங்களை அவர்களே தெரிந்துகொண்டுவிடுவார்கள்.

அதுபோல குளித்துவிட்டு சமைத்து காய்க்காய்க்கு சாதம் போடுதல் மிக நல்ல விஷயம்தான். ஆனால் காலையில் காகத்துக்கு அரிசி போட முயலும் இளைஞர்களை அதையே காரணம் சொல்லி தடுக்க வேண்டாம். அரிசியாகவோ, சாதமாகவோ எப்படிப் போட்டால் என்ன தர்மம் தர்மம்தானே.

குடும்ப வாட்ஸ் அப் குழுவில் வீட்டுப் பெரியவர்களை இணைத்திருந்தால் அவர்கள் ஏதேனும் தகவல் பதிவிட்டால் அதை மதித்து ‘தேங்க்யூ அங்கிள்’, ‘ஆஹா அருமை மாமி’, ‘சூப்பர் தாத்தா’ என ஏதேனும் ஒரு பதில் கொடுங்கள். இளைஞர்கள் உங்களுக்குள் எப்படியெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொள்கிறீர்கள்? வீட்டுப் பெரியவர் வேறென்ன பெரிதாய் எதிர்பார்த்துவிடப் போகிறார்கள். உங்கள் அன்பைத் தவிர.

உங்கள் வீட்டு பெரியவர்களுக்கு, குறிப்பாக அப்பா அம்மாவுக்கு  வாட்ஸ் அப், யு-டியூப், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் என்ன உங்களிடம் புரோகிராம் எழுதவா கற்றுக்கொடுக்கச் சொல்கிறார்கள்.

திருமணம் போன்ற நிகழ்வுகளில் உங்கள் வயதை ஒத்த பிள்ளைகளிடம் உங்கள் பெற்றோர் தங்கள் மொபைல் போன் சம்மந்தமான சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருப்பது உங்களுக்கு அல்லவா அவமானம்.

நான் எந்த குடும்ப நிகழ்ச்சிக்குச் சென்றாலும் என்னைச் சுற்றி வயதில் பெரியவர்கள் இதுபோன்ற சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டு சூழ்ந்துவிடுவார்கள். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் பி.ஈ, பி.டெக், எம்.எஸ்.ஸி என படித்த பிள்ளைகள் இருப்பார்கள். ‘ஏன் அவர்களிடம் கேட்கலாமே?’ என நான் கேட்டால் ‘எங்கேம்மா அவர்களுக்கு நேரம்…’ என சின்ன அங்கலாய்ப்புடன் பதில் சொல்வார்கள். அவர்கள் பொறுமையாக சொல்லித் தருவதில்லை, நேரம் இல்லை, அவர்கள் பிசி… இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஒரே பதிலை வெவ்வேறு தொனியில் சொல்வார்கள். இதெல்லாம் முடிப்பதற்குள் நான் கலந்துகொள்ள வந்திருந்த நிகழ்ச்சி முடிந்திருக்கும். சாப்பிட்டு கிளம்ப வேண்டியதுதான்.

உங்களுக்கு அ, ஆ சொல்லிக்கொடுத்து நீங்கள் விரும்பிய படிப்பைப் படிக்க வைத்து உங்கள் கனவு வேலைக்குச் செல்ல அனுமதித்து உங்களைக் கொண்டாடி வளர்த்த உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்யக் கூடிய மகத்தான உதவி என்ன தெரியுமா?

‘வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யு-டியூப் இவற்றை பயன்படுத்த கற்றுக்கொடுப்பதே. கற்றுக்கொடுத்துவிட்டால் அவர்களும் உங்களைத் தொந்திரவு செய்யாமல் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள்தானே… அவர்கள் பிசியாக இருந்தால் நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா?’

இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் பிள்ளைகளும் பெற்றோர்களும் கவனமாக இருந்தால் தலைமுறை இடைவெளி பெரிதாகாமல் இருக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர்  15,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 47 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon