ஹலோ With காம்கேர் -272 : மந்திரத்தால் மாங்காய் விழுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 272
September 28, 2020

கேள்வி: மந்திரத்தால் மாங்காய் விழுமா?

இன்றைய குழந்தைகளிடம் உள்ள மிக முக்கியமான பிரச்சனையே தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை தங்கள் பெற்றோரிடம் தொடக்கத்திலேயே சொல்லாமல் மறைத்து மறைத்து கடைசி கட்டத்தில் அந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து தானாகவே வெளியில் தெரியும்போது சொல்வதுதான்.

இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர்கள் இரண்டுவிதமான போராட்டங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஒன்று தங்கள் பிள்ளைகளை அந்த பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான செயல்பாடுகளை செய்தல், இரண்டாவது பிள்ளைகள் வீட்டை விட்டு சென்றுவிடுதல், தற்கொலை முயற்சி என ஏதேனும் எதிர்மறையான செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை கண்காணித்துக்கொண்டே இருத்தல்.

இந்த இரண்டு விஷயங்களில் பிள்ளைகளை பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கு அவர்கள் எடுக்கின்ற முயற்சிகளை பின்னுக்கு இழுப்பது இரண்டாவதாக சொன்ன கண்காணிப்புப் பணிதான்.

பெற்ற குழந்தைகளாகவேதான் ஆகட்டும், 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டே இருக்க முடியுமா என்ன?

பிரச்சனையை ஆரம்பத்திலேயே சொன்னால் அதில் இருந்து பிள்ளைகளை வெளிக்கொண்டு வருவது சுலபம். பிரச்சனையின் கடைசி கட்டத்தில்தான் பிள்ளைகள் வாயைத் திறக்கிறார்கள். அதனால் பிரச்சனை மட்டுமில்லாமல் பிள்ளைகளின் மனச் சிக்கல்களும் முற்றிவிடுவதால் பெற்றோர்கள் திண்டாடித்தான் போகிறார்கள்.

பிரச்சனையை ஆரம்பத்திலேயே பெற்றோரிடம் சொல்வதில் சில விஷயங்கள் பிள்ளைகளை தடுக்கிறது.

முதலாவதாக பயம்.

தங்கள் ஒத்த வயது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டு என நினைத்து செய்யும் ஆபத்தான செயல்பாடுகளை அப்பா அம்மாவிடம் சொன்னால் அவர்கள் கடிந்துகொள்வார்கள் என்கின்ற பயம்.

இரண்டாவதாக அலட்சியம்.

தொழில்நுட்பம் உச்சகட்ட வளர்ச்சியில் இருப்பதால் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் ஒரு விரல் நுனியில் எதை வேண்டுமானால் செய்து முடித்துவிட முடிவதால் ஆபத்துகளும் கூகுள் வேகத்தில் வெகு விரைவாக தங்களை வந்தடைவது தெரியாமல் ‘அப்பா அம்மாவிடம் சொன்னால் மட்டும் அவர்களுக்கு புரிந்துவிடவா போகிறது… வாட்ஸ் அப் தவிர அவர்களுக்கு தொழில்நுட்பம் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?’ என்ற அலட்சிய மனோபாவத்தால் எதையுமே சொல்லாமல் மறைத்துவிடுதல். எல்லாம் தங்கள் ப்ரைவசி என சொல்லி தங்கள் பர்சனல் விஷயங்களை பப்ளிக் ஆக்கி மாட்டிக்கொள்கிறார்கள்.

மூன்றாவதாக குற்ற உணர்வு.

தெரிந்தோ தெரியாமலோ செய்கின்ற தவறுகளை பெற்றோர்களிடம் சொன்னால் அவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து விடுவதாக நினைத்து மறைக்கிறார்கள்.

பெற்றோர்கள் பிள்ளைகளிடம் ‘உன் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தேன்… இப்படி செய்துவிட்டாயே?’, ‘எங்கள் சின்ன சின்ன சந்தோஷங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு உனக்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம்… இப்படி செய்துவிட்டாயே?’, ‘எங்கள் வாழ்க்கையை உன்னுடைய சந்தோஷங்களுக்காக அர்பணித்தோமே!’ என சொல்லி சொல்லி புலம்பும்போது அந்த வார்த்தைகளின் வலிமையை பிள்ளைகள் எதிர்கொள்ள முடியாமல் எதிர்மறை செயல்களில் ஈடுபட்டுவிடுகிறார்கள்.

பெற்றோர்களுக்கு நான் சொல்லும் ஒரே ஒரு ஆலோசனை, பிள்ளைகள் பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், அது சின்னதோ பெரியதோ அதில் இருந்து அவர்களை வெளியில் கொண்டு வருவதிலும் அவர்களுக்கு நல்லபடியாக அறிவுரை சொல்லி பிற்காலத்தில் தொடர்ச்சியாக அதுபோன்ற தவறுகளை சொல்லாமல் தடுப்பதிலும்தான் உங்கள் கவனம் இருக்க வேண்டும். அதைவிட்டு திரும்பத்திரும்ப புலம்பிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு எரிச்சல், கோபம், இயலாமை, குற்ற உணர்வு என அத்தனையும் ஒரு கலவையாக உள்ளுக்குள் சென்று உங்களைவிட்டு  நிரந்தரமாக விலகிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சின்ன வயதில் இருந்தே ஒரே குழந்தை என்று கடிந்து ஒரு வார்த்தை சொல்லாமல் வளர்க்காதீர்கள். கடிந்துகொள்ள வேண்டிய நேரத்தில் கடிந்துகொள்ள தயங்காதீர்கள். அப்பா அம்மா தான் எதை சொன்னாலும் பொறுமையாக காதுகொடுத்து கேட்பார்கள் என்ற நம்பிக்கையை விதையுங்கள். அவர்களை பேச விட்டு மெளனமாக கேட்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

அதைவிட்டு, திடீரென ஒருநாள் கடிந்துகொள்ளும்போது அது அவர்களுக்கு புதிதாக இருக்கும். அவர்களால் எதிர்கொள்ளத் தெரியாது. திடீரென ஒருநாள் வாயைத் திறந்து பேசு என திட்டுவதால் அவர்கள் குணம் மாறிவிடாது.

பிள்ளைகளிடம் நான் வேண்டும் ஒரே விஷயம், ‘பெற்றோர்களைத் தவிர வேறு யாராலும் உங்களுக்கு பாதுகாப்பைக் கொடுக்கவே முடியாது. அவர்களுக்கு தொழில்நுட்பம் வேண்டுமானால் உங்கள் அளவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் உங்களைவிட அனுபவம் அதிகம் உள்ளவர்கள் என்பதை மறக்காதீர்கள். அப்பா அம்மாவிடம் சொல்வது கடவுளிடம் சொல்வதைப் போன்றது என்ற ஆழமாக நம்பிக்கைக் கொள்ளுங்கள். அவர்கள் மட்டுமே உங்கள் ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இது சத்தியமான உண்மை.’

பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையான அந்தப் பிணைப்பு, நம்பிக்கை எனும் மந்திரத்தால் கட்டப்பட்டிருந்தால் பிள்ளைகள் வாழ்க்கையில் மேஜிக் போல மாயாஜாலங்கள் பல நிகழும்.

மந்திரத்தால் மாங்காய் விழாதுதான். ஆனால் மனமெனும் தோட்டத்தில் நம்பிக்கை எனும் மந்திரத்தால் எந்த மாயாஜாலமும் ஏற்படாவிட்டாலும், அட்லீஸ்ட் குறையில்லாத குற்றமில்லாத நிம்மதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் கிடைக்கும். பிள்ளைகளே இதை உங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

கவனமாக இருப்போம். எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களை பாதுகாப்போம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

அக்டோபர் 1,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 41 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon