ஹலோ With காம்கேர் -280 : பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?

ஹலோ with காம்கேர் – 280
October 6, 2020

கேள்வி: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் புத்தகங்களை வாசிக்க முடியுமா?

2019 – ல் இருந்து ஃபேஸ்புக்கில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நான் எழுதி வரும் தன்னம்பிக்கை தொடரை படித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சென்ற வருடம் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பில் எழுதி வந்தேன். இந்த வருடம் ஹலோ வித் காம்கேர் என்ற தலைப்பில் கேள்வி பதில் பாணியில் எழுதுகிறேன்.

என்னுடைய வாசகர்களில் ஒரு சிலர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் இருப்பதால் அவர்களுக்காக என் பதிவின் ஆடியோ வடிவத்தையும் கொண்டு வரலாம் என நினைத்து நேற்று முன்னோட்ட வீடியோ (Trailer) ஒன்றை யு-டியூப் சேனலில் வெளியிட்டேன்.

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்து 2005-ல் ஒர்க்‌ஷாப்புகள் நடத்தியபோதுதான் அவர்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் ஸ்க்ரைப் (அவர்கள் வாயால் சொல்ல சொல்ல தேர்வு எழுதுபவர்கள் ஸ்க்ரைப் எனப்படுவர்) உதவியின்றி தேர்வெழுதும் விசியோ எக்ஸாம் (Visio Exam) என்ற சாஃப்ட்வேரை உருவாக்கினோம்.

2007 – ல் எங்கள் பெற்றோர் பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக வருடா வருடம் தொழில்நுட்பம், கல்வி, வேலை வாய்ப்புகள் சார்ந்து அவர்களுக்காகவே கருத்தரங்களுகள் நடத்தி வருகிறோம்.

எங்கள் அனிமேஷன் பிரிவில் நாங்கள் எந்த அனிமேஷன் படைப்பை உருவாக்கினாலும் அது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவும் வகையில் கவனமாக வடிவமைத்தோம். அதாவது நேவிகேஷன் பட்டன்கள் மற்றும் ஐகான்களை அவர்கள் எளிதாக கையாளும் வகையில் அமைப்போம்.

திருவாசகம், திருக்குறள், கந்தர் சஷ்டிக் கவசம் போன்ற அனிமேஷன் படைப்புகளை அப்படித்தான் வடிவமைத்தோம். அவர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

இன்றுவரை கல்வி சார்ந்த இ-கண்டண்ட்டுகளையும் தயாரிக்கும்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளையும் மனதில்கொண்டே வடிவமைத்து வருகிறோம்.

சென்ற வாரம் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு ஜூம் மீட்டிங்கில் கலந்து கொண்டு பேசியபோது அவர்களில் பலர் ஃபேஸ்புக்கில் என் பதிவுகளை படிக்க விரும்புவதாக சொன்னார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்காக எங்கள்  ‘காம்கேர் டிவி’ யு-டியூப் சேனலில் என் பதிவுகளை வீடியோவாக வெளியிட முடிவு செய்தேன். படிப்பதைவிட அவர்களுக்கு கேட்பது சுலபம் அல்லவா?

தினமும் காலையில் 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் எழுதி பதிவிட்டு வருவதைப் போல மாலை 6 மணிக்கு வீடியோவாக யு-டியூப் சேனலில் வெளியிட இருக்கிறேன்.

நிரந்தரமாக என் இணையதளத்தில் http://compcarebhuvaneswari.com/ என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகள் இருக்கும். ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களும் என் இணையதளத்தில் வாசிக்கலாம்.

யு-டியூப் சேனலில் என் வீடியோவை பார்க்க நினைப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். எங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துகொள்ளுங்கள். கட்டணம் ஏதும் கிடையாது. இலவசம்தான்.

யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யும் முறை:

1.பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் கீழே உள்ள Subscribe பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

2.பின்னர் வெளிப்படும் திரையில் Sign-in என்ற விவரத்தை க்ளிக் செய்துகொள்ள வேண்டும்.

3.உடனடியாக இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்ட் கேட்கும் திரை வெளிப்படும்.

4.அதை க்ளிக் செய்து உங்கள் ஜிமெயில் முகவரியையும் பாஸ்வேர்டையும் கொடுத்தால் அந்த வீடியோ வெளிப்படும் சேனல் சப்ஸ்க்ரைப் செய்யப்படும். அதன்பிறகு அந்த சேனலில் ஒவ்வொரு முறை எந்த வீடியோ அப்லோட் ஆனாலும் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் கிடைக்கும்.

பார்வையற்றவர்கள் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாகவே ஸ்க்ரீன் ரீடிங் சாஃப்ட்வேர் மூலம் கம்ப்யூட்டரையும் இண்டர்நெட்டையும் நம்மைப் போலவே மிக இலாவகமாக பயன்படுத்தி வருகிறார்கள். அதற்காகவே ஸ்கிரீன் ரீடிங் சாஃப்ட்வேர்கள் உள்ளன. அவர்கள் மவுசை கொண்டு செல்லும் இடங்களையும், திரையில் வெளிப்படும் விவரங்களையும் அவர்களுக்குப் படித்துக் காட்டிக்கொண்டே வருவதுதான் அதன் பணி.

நம்மைவிட அவர்கள் திறமையாகவே தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். தொழில்நுட்பம் அவர்களின் விழியாகவே மாறிவிட்டது எனலாம்.

இப்போது படிக்கும் புத்தகங்கள், வாயால் பேசினாலே புரிந்துகொண்டு டைப் செய்யும் நுட்பம், கைகளால் எழுதினால் ஒலி வடிவில் வெளிப்படும் தொழில்நுட்பம் எல்லாம் வந்துவிட்டதால் ஜமாய்க்கிறார்கள் அவர்கள். உச்சத்தைத் தொட்ட தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் சந்தோஷமாக உள்ளது.

ஒவ்வொரு முறை நான் இயங்கும் தொழில்நுட்பத் துறையின் மூலம் பிறருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்யும்போதும் ‘வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனைய உயர்வு’ என்ற குறள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon