ஹலோ With காம்கேர் -298 : கோபம்! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 298
October 24, 2020

கேள்வி: கோபப்படும் மனிதருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் பின்னால் உள்ள வெறுப்பை உணர்ந்திருக்கிறீர்களா?

எனக்குத் தெரிந்த ஓர் அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டும் விரைப்பாக சல்யூட் அடித்து தன் மரியாதையை கூடுதலாக காண்பிப்பார்.

பொதுவாக பார்ப்பவர்களுக்கு, அந்த நபர் செக்யூரிட்டிக்கு அவ்வப்பொழுது பணம் கொடுப்பார் அல்லது ஸ்பெஷலாக ஏதேனும் கவனிப்பாராக இருக்கும். அதனால்தான் அவருக்கு மட்டும் இத்தனை மரியாதை என நினைக்கத் தோன்றும்.

அதற்காக அந்த செக்யூரிட்டி மற்றவர்களை உதாசினப்படுத்த மாட்டார். ஆனால் மரியாதை அத்தனை வெளிப்படையாக இருக்காது.

ஒருமுறை நான் நேரடியாகவே கேட்டேன். அதற்கு அந்த காவலாளி, ‘ஏம்மா நாம் அவரு வாயிலயும், கண்ணுலயும் விழுந்து புறப்பட்டு வரணும். என்ன ஒரு விரைப்பான சல்யூட் தானே… கொடுத்து அந்த மனுஷன் கண்ணுல இருந்து தப்பிச்சா போதும்… முணுக்குன்னா கோபம் வந்துடும்மா அவருக்கு… ஒருநாள் அவர் வரும்போது எனக்கு மயக்கமாக இருந்ததால் அசந்து சேரில் அமர்ந்துவிட்டேன். நான் வந்து கதவை திறப்பதற்குள் காரில் இருந்து இறங்கி வந்து என் வயதுக்குக் கூட மரியாதை கொடுக்காமல் கன்னாபின்னா என்று கத்தி கூப்பாடு போட்டு எங்கள் செக்யூரிட்டி அலுவலகத்துக்கும் புகார் அளித்துவிட்டார். நான் அவர்கள் கையில காலில விழுந்து தப்பிச்சேன்மா… ஆனா இதே அப்பார்ட்மெண்ட்டுல ஒரு அம்மா இருக்காங்க… அவங்க வீட்டில் அவங்க குழந்தைகளுக்கு என்ன டிபன் செய்தாலும் எனக்கும் கொடுத்துடுவாங்க… கம்ப்யூட்டர் கம்பெனில வேலைபார்க்கும் ஒரு தம்பி இருக்காரும்மா. அவர் தினமும் இரவு ஷிஃப்டுக்கு வேலைக்கு போவார். நான் என் ஷிஃப்ட் முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது அந்த தம்பி ஆஃபீஸுக்குக் கிளம்பும். தினமும் அவரு பைக்குல என்னை உட்கார வச்சி என்னை பஸ் ஸ்டாப்புல இறக்கிவிடும்… மனுஷங்க அப்படியும் இருக்காங்க, இப்படியும் இருக்காங்க…’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த அப்பார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் ஒரு இளம் பெண் ஸ்கூட்டியில் வர, அவரைப் பார்த்து செக்யூரிட்டி ‘என்னம்மா இப்பத்தான் வேலை முடிஞ்சுதா…’ என கேட்க  ‘ஆமாம் அண்ணா… செம்ம ட்ராஃபிக்… டீ குடிச்சீங்களா…’ என்று கேட்டுக்கொண்டே எங்களைக் கடந்து போனார்.

‘பார்த்தீங்களாம்மா, இப்படி இயல்பாக இருப்பவர்களுக்குத் தெரியும் நான் அவர்களிடம் எத்தனை மரியாதை வைத்திருக்கிறேன் என்று. ஆனால் நான் விரைப்பாக சல்யூட் அடிக்கும் நபருக்கு நான் மனதுக்குள் வைத்திருக்கும் மரியாதையும் தெரியப்போவதில்லை, அவர் வாய்க்கு பயந்து வைக்கும் விரைப்பான சல்யூட்டுக்குப் பின்னால் உள்ள சின்ன வெறுப்பும் புரியப் போவதில்லை. விந்தை மனுஷங்க…’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார் சப்தம் கேட்க கதவை திறக்க ஓடினார்.

கோபப்படுதல் ஒரு மோசமான குணம். ஏனெனில் அந்த குணம் யாரிடம் கோபப்படுகிறோமோ அவர்களை காயப்படுத்துவதைவிட பலமடங்கு நம்மைத்தான் காயப்படுத்தும்.

எதற்காகக் கோபப்படுகிறோம்?

நம் எண்ண ஓட்டத்துடன் பிறர் நடந்துகொள்ளாதபோது…

நாம் நினைப்பது அப்படியே நடக்காதபோது…

நம் சொல் பேச்சை பிறர் கேட்காதபோது…

நம் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்களுடன் செயல்படும்போது…

நம் கருத்துக்களை மட்டும் இல்லாமல் நம்மையே எதிர்க்கும்போது…

வீட்டில் நம் குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும்போது…

கணவன் மனைவிக்குள்ளான ஈகோவினால்…

மற்றவர்களின் அபார வளர்ச்சியினால்…

சுருங்கச் சொன்னால், கோபம் என்பது நம் எண்ண ஓட்டத்துக்கு மாறாக நடக்கின்ற செயல்பாடுகளினால் அல்லது நம் எண்ண ஓட்டத்தை சலனப்படுத்தும் விஷயங்களினால் உண்டாகும் ஒரு எரிச்சல் மனோபாவம்.

பொறாமையினால் உண்டாகும் கோபம் ரொம்ப விசித்திரமானது. அக்கம் பக்கத்து வீட்டினராக இருந்தால் காரணமே இல்லாமல் கோபம் வரும். அவர்கள் தம்மைவிட உயர்ரக கார் வாங்கினால், நம்மைவிட வசதியாக இருந்தால் என சின்னச் சின்ன பொறாமையினால் அவர்களைப் பார்த்தாலே வெறுக்கும் அளவுக்கு மனோநிலை மாறி அது கோபத்தில் கொண்டுவிடும். ‘எதடா சாக்கு’ என பார்த்து அவர்களிடம் நம் கோபத்தைக் கொட்டக் காத்திருக்கும் நம் மனது.

காதல் தோல்வியினால் உண்டாகும் விரக்தி மனப்பான்மை அதீத கோபமாக மாறிவிடும். ஒன்று சம்மந்தப்பட்டவரை அழிப்பது / சிதைப்பது / துன்புறுத்துவது அல்லது தம்மையே அழித்துக்கொள்வது என அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும்.

எப்படி இருந்தாலும் என்ன காரணமாக இருந்தாலும் கோபம் ஒருபோதும் மற்றவர்களை மாற்றவும் போவதில்லை, நமக்கும் எந்த விதத்திலும் அமைதியைக் கொடுக்கவும் போவதில்லை.

நாம் அன்பாக சொல்லும்போது புரிந்துகொள்ளாததையா கோபப்படும்போது புரிந்துகொண்டுவிடப் போகிறார்கள்?

கோபம் நம் அமைதியை கெடுக்கும், உடல் சூட்டை அதிகரிக்கும், மன அழுத்தத்தை கூட்டும். முகப்பொலிவை இழக்கச் செய்யும். பிபி, ஷூகர் என எல்லா வியாதிகளுக்கும் அடிக்கல் நாட்டுவிழா செய்துவிடும்.

கடுகடுவென இருக்கும்போது உங்கள் முகத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள் அல்லது செல்ஃபி எடுத்துப் பாருங்கள். உங்கள் முகம் எத்தனை கொடூரமாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் கோபப்படுபவர்கள் ஒருபோதும் மற்றவர்கள் மனதில் இடம்பிடிக்கவே முடியாது. அத்துடன் கோபம் யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழிக்கும் பலமான ஆயுதம்.

தேவையானபோது மட்டும் கோபத்தைப் பயன்படுத்துவோம். எல்லா நேரங்களிலும் கோபப்படுவது நம் செயல்திறனை நீர்த்துப் போக செய்துவிடும்.

‘கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்’ என்று சொல்வதெல்லாம் அந்த காலத்தில் வீடுகளில் ஆண்களின் கோபத்துக்கு / ஆதிக்கத்துக்கு / அதிகாரத்துக்கு பெண்கள் கொடுத்த சப்பை கட்டு. எனவே அதையெல்லாம் உண்மை என்று நினைத்து உங்கள் உடம்பையும் மனதையும் சிதைத்துக்கொள்ளாதீர்கள்.

கோபத்தில் கவனம் வைப்போம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 19,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 47 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon