ஜம்முனு வாழ காம்கேரின் OTP-37: அமேசானில் இ-புத்தகங்கள் வாங்குவதும், வாசிப்பதும்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 37
பிப்ரவரி 6, 2021

அமேசானில் இ-புத்தகங்கள் வாங்குவதும், வாசிப்பதும் குறித்த கருத்தரங்குக்குத் தயாராகுங்கள்!

நீங்கள் அனைவரும் அறிந்த விஷயத்துடன் இன்றைய பதிவைத் தொடர்கிறேன். 28 வருடங்களுக்கும் மேலாக நான் இயங்கி வரும் சாஃப்ட்வேர் துறை அனுபவங்களை அந்தந்த காலகட்டத்திலேயே புத்தகமாக வெளியிட்டு வந்துள்ளேன். அதன் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

என் 10 வயதில் இருந்தே எழுதி வருவதால் தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே மொழி ஆளுமை இருக்கிறது. எழுத்து என் உயிர் என்றால் கிரியேட்டிவிட்டி என் சுவாசம். இரண்டும் ஒரே கலவையாக கலந்து என் எழுத்து என்பது புத்தகங்கள், அனிமேஷன் படைப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் என பல்வேறு பரிமாணங்கள் எடுத்து என் படைப்புகள் அத்தனையிலும் அடித்தளமாகி வருகின்றன.

இனி வரும் காலத்தில் இ-புத்தகங்கள்தான் ஆட்சி செய்யப் போகின்றன என்பதால் இ-புத்தகங்கள் (E-Book) குறித்த ஒரு கருத்தரங்கை Zoom மீட்டிங் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளேன். ஞாயிறு அன்று நடத்தினால் வேலைக்குச் செல்வோரும் கலந்துகொள்ளலாம் என்பதால் ஞாயிற்றுக்கிழமையை தேர்ந்தெடுத்துள்ளேன். எந்த நேரம், எந்த ஞாயிற்றுக்கிழமை என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் விவரம் கொடுக்கிறேன்.

இ-புத்தகங்கள் குறித்து அறியாதவர்களுக்காக சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு!

  1. பி.டி.எஃப் வாசிப்பதைப் போல மிக மிக சுலபமானதே இ-புத்தகங்களை வாசிப்பதும்.
  2. உங்கள் மொபைல், ஐபேட், டேப்லெட், டெஸ்க்டாப், லேப்டாப் எதில் வேண்டுமானாலும் வாசிக்கலாம். உங்கள் சாதனத்தில் கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்துகொண்டால் போதும். அதுவும் இலவசமே.
  3. தவிர கிண்டில் என்ற சாதனமும் உள்ளது. இ-புத்தகங்களை வாசிப்பதற்காகவே வடிவமைக்கப்பட்ட சாதனம். ஐபேட், டேப்லெட் அளவில்தான் இருக்கும். இதில் வாசிக்கும்போது கண்கள் வலிக்காத வண்ணம் வடிவமைக்கப்படிருக்கும். நிறைய வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் இந்த சாதனத்தை வாங்கிக்கொள்ளலாம்.
  4. புத்தகங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள இடம் இல்லையே என தவிக்க வேண்டாம். எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானாலும் சேமிக்கலாம். உங்கள் இருப்பிடத்தை அடைத்துக்கொள்ளாது.
  5. எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய புத்தகத்தையும் எடுத்துச் செல்லலாம். கையும் வலிக்காது, தோள் பட்டையும் வலிக்காது.
  6. புத்தகத்தை மட்டுமில்லாமல் புத்தக அலமாரியையே எடுத்துச் செல்லலாம்.
  7. விருப்பமான நேரத்தில் விருப்பமான புத்தகத்தை வாசிக்கலாம்.
  8. எழுத்துக்களை சிறியதாக்கி பெரியதாக்கி வாசிக்கலாம்.
  9. படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை பிறகு படிக்கலாம் என நினைத்தால் எந்த இடத்தில் பிறகு தொடரலாம் என நினைக்கிறீர்களோ அந்த இடத்துக்கு புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு தொடரலாம்.
  10. சில இபுத்தகங்கள் வாசித்துக்காட்டும் வசதியையும் கொடுக்கிறது.
  11. நீங்கள் விரும்பினால் புத்தகங்களை பிறருக்கு பரிசாக அனுப்பும் வசதியும் உள்ளது.
  12. அவ்வப்பொழுது இலவசமாக சில புத்தகங்களை விற்பனைக்கு வைப்பார்கள். கட்டணம் இன்றி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
  13. சில புத்தகங்களுக்கு டிஸ்கவுண்ட் விலையும் நிர்ணயித்து விற்பனை செய்வார்கள். அந்த நேரத்தில் புத்தகங்களை வாங்கிக் குவிக்கலாம்.
  14. நீங்கள் வாங்கும் இ-புத்தகங்களை உங்கள் மொபைல் / ஐபேட் / டேப்லெட் / லேப்டாப் என எதில் வேண்டுமானலும் கிண்டில் ஆப்பில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
  15. உங்கள் குடும்ப உறுப்பினர்களும் அவர்கள் சாதனத்தில் அதை படிக்கும் வசதிகளும் உள்ளன. அதாவது ஒரு இ-புத்தகம் வாங்கிவிட்டு உங்கள் வீட்டில் உள்ள 4 நபர்கள் (இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்) ஷேர் செய்து படிக்கலாம்.

விரைவில் கருத்தரங்கு குறித்த முழுவிவரத்துடன் சந்திக்கிறேன். வாழ்த்துகள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 20 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon