ஜம்முனு வாழ காம்கேரின் OTP-38: Fact Vs Problem!


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 38
பிப்ரவரி 7, 2021

Fact-ம் Problem-ம்  ஒன்றல்ல, வெவ்வேறு!

இரவு பெய்த மழையில் தூக்கம் கொஞ்சம் கலைந்ததால் விடியற்காலையில் கண் அயர்ந்துவிட்டாள். காலை நேரங்கள் நொடிப்பொழுது தாமதத்தையும் பிரளயப்படுத்துவதை தவிர்க்க முடிவதில்லை.

குழந்தைகள் இருவரையும் பள்ளிக்குத் தயார் செய்து அரக்கப் பரக்க கிளம்புவதற்குள் உயிர் போய் திரும்பி வந்ததைப் போல் இருந்தது. காரில் வழக்கம்போல மகனுடம் பேசிக்கொண்டே வந்தாள்.

‘சாரிடா கண்ணா… இன்னிக்கு லேட்டானதுக்கு ப்ராப்ளம் நீயும் இல்லை, நானும் இல்லைடா… நேற்றைய மழை, இடியால் தூக்கம் கலைந்ததுதான் ப்ராப்ளாம்…’ – காலையில் கிளம்பும் அவசரத்தில் மகனை கடிந்துகொண்ட குற்ற உணர்ச்சியில் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் பேசினாள்.

“அம்மா… திரும்பத் திரும்ப ‘ப்ராப்ளம் ப்ராப்ளம்’ என்று சொல்லாதேம்மா… இன்னிக்கு லேட்டானதுக்கு பெயர் FACT, ப்ராப்ளம் எனக்கு மட்டும்தான். லேட்டானதால் இன்னிக்கு காலையில் மியூசிக் கிளாஸ் கட் ஆகும்… அதற்குப் பெயர்தான் PROBLEM” – முதிர்ந்த வார்த்தைகளை சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு அன்றைய டெஸ்ட்டுக்குத் தேவையானதை படிக்க ஆரம்பித்த மகனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.

ஒரு நிகழ்வு நடப்பதற்கான காரணத்துக்கும், அந்த நிகழ்வால் உண்டாகும் பிரச்சனைக்கும் உள்ள வித்தியாசத்தை எத்தனை அழகாய் 12 வயது சிறுவனால் புரிந்துகொள்ள முடிகிறது?

நிச்சயமாக இவற்றையெல்லாம் உட்கார வைத்து வகுப்பெடுத்திருக்க முடியாது. உணர வைத்தால் மட்டுமே இத்தனை ஆழமாய் புரியவைக்க முடியும்.

அன்று அலுவலகம் சென்றதும் அம்மாவுக்கு போன் செய்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டாள். ஒரே நாளில் உறவுகளுக்குள் பிரபலமான தன் மகனுக்கு அன்றிரவு திருஷ்டிக் கழித்தாள்.

‘டேய் கண்ணா, அம்மாக்கு Fact பற்றியும், Problem பற்றியும் பாடம் எடுத்தியே அதை பாட்டி, தாத்தா ரொம்ப பாராட்டினார்கள்டா…’

‘அம்மா, அப்படின்னா என் கிளாஸ் முழுக்க பாராட்டனும்மா… இந்த விஷயம் எல்லாம் எல்லோருக்குமே தெரியும்மா…’

வாயைத் திறந்து பேசினாலே முத்தாய் உதிர்க்கும் மகனை அப்படியே கட்டிப் பிடித்து உச்சி முகர்ந்தாள்.

ஒரு செயலுக்குப் பாராட்டுக் கிடைத்தால், அந்தச் செயலை ‘தான்’  செய்யாவிட்டால்கூட அதை ‘தான்’ செய்ததாகச் சொல்லிக்கொண்டு அந்தப் பாராட்டை ‘தன்’ பக்கம் திருப்பிக்கொள்ள விழையும் மக்களிடையே உண்மையிலேயே அவனுடைய செய்கைக்குக் கிடைத்திருக்கும் பாராட்டைக் கூட தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர நினைக்கும் மகனை நினைத்துப் பெருமைப்பட்டாள்.

‘இல்லைடா… எல்லோரும் இப்படி புரிந்துகொள்ள மாட்டர்கள் கண்ணா, உன் புரிதல் அப்படி நன்றாக இருக்குடா’ – என்று அவனுக்குப் புரியவைக்க நினைத்தவள் அந்த வார்த்தைகளை அப்படியே மனதுக்குள் அடக்கிக்கொண்டாள். கள்ளம் கபடம் இல்லாத குழந்தை மனதை கலப்படம் செய்ய விரும்பாமல் அவனை அவனாக வாழ வைக்க முடிவு செய்தாள்.

என்றோ படித்த, உலகம் போற்றும் தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி Fact பற்றியும், Problems பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்த வரிகள் நினைவுக்கு வந்தது. உலகம் அறிந்த தத்துவ மேதை சொல்லிவிட்டுச் சென்றுள்ளதை படிக்கும் வயதைக்கூட எட்டாத மகன் சர்வ சாதாரணமாகச் சொன்னதை நினைத்துப் பெருமைப்படும் அதே நேரத்தில் அவன் இயல்பில் அவனை வளரவிடவும், அவன் வளரவும் எத்தனைப் பிரயத்தனப்படுத்த வேண்டுமோ என்று மலைப்பாகவும் இருந்தது.

குழந்தைகள் உலகம் மிக அழகானது. கள்ளம், கபடம் இல்லாத அற்புத உலகம் அது. நம் காலத்தில் நாம் தெரிந்துகொண்டவற்றை அவர்களுக்குப் புரியவைக்க முயலாமல், அவர்கள் போக்கில் அவர்களை வாழவிடுவோம். அவர்கள் தங்களுக்கானப் பாதையை அமைத்துக்கொள்வார்கள். ஆனால், நம் கவனம் மட்டும் அவர்களைவிட்டு விலகாமல் பார்த்துக்கொள்ள முயல்வோம்!

குறிப்பு: (விஜயபாரதத்தில் நான் தொடர்ச்சியாக 2 வருடங்கள் எழுதி வந்த ‘நல்லதோர் வீணை’ என்ற தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி!)

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 10 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon